24.11.2023

பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலங்களை
கையகப்படுத்த தமிழ்நாடு அரசு  ஒப்புதல்!
திராவிட மாடல் என்பதும் கார்ப்பரேட் மாடலே!

பத்திரிகைச் செய்தி

நேற்றைய தினம் (23.11.2023) பரந்தூர் விமான நிலையத்திற்காக 20 கிராமங்களில் உள்ள 5,746 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது தமிழ்நாடு அரசு. மேலும், கையகப்படுத்துவதற்கு ரூ19.24 கோடியை ஒதுக்கியுள்ளது.

பரந்தூர் விமான நிலையத்துக்காக தங்களது நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று பல மாதங்களாக அப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை சந்திப்பதற்கு பலருக்கும் அனுமதியை மறுத்து ஆயிரக்கணக்கில் போலீஸை குவித்து மக்களை அச்சுறுத்தி வந்தது தமிழ்நாடு அரசு.

படிக்க : எமிஸ் தகவல் சேகரிப்பு: பள்ளிக் கல்வித்துறையை கார்ப்பரேட்மயமாக்கும் மற்றொரு நடவடிக்கை!

விவசாய நிலங்களை அழித்து விமான நிலையம் அமைப்பதற்கான அவசியம் என்ன? அதற்கு மாற்றாக இராணுவத்துக்கு சொந்தமான நிலம் அதே அளவில் இருப்பதையும் அதை கையகப்படுத்தலாம் என்றும் பலரும் கருத்து தெரிவித்தபோதும் அதை கொஞ்சமும் கேட்காமல் மக்கள் நிலங்களை கையகப்படுத்துவதன் மூலம் திராவிட மாடலும் கார்ப்பரேட் மாடலே என்பதை நிரூபித்துள்ளது திமுக அரசு.

தமிழ்நாடு அரசு, பரந்தூர் விமான நிலையத்திற்காக தங்களது நிலங்களை கையகப்படுத்த ஒப்புதல் அளித்ததை எதிர்த்து கோரிக்கை மனு அளிக்க சென்றவர்களையும் போலீசு கைது செய்திருக்கிறது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், எட்டு வழி சாலை எதிர்ப்பு போராட்டம் போன்ற கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை தங்களுக்கு வாக்கு வங்கியாக பயன்படுத்திக் கொண்ட திமுக, அதே கார்ப்பரேட் வழியில் சென்று தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறது.

படிக்க : வரலாறு பாடத்தில் இராமாயணம், மகாபாரதம்: கல்வியில் காவிக் குப்பைகள்!

இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் பரந்தூர் விமான நிலையத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் தமிழ்நாடு அரசின் ஒப்புதலை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான மக்களின் போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் ஆதரவளிப்பதுடன் தமிழ்நாடு மக்களும் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் மருது,
செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
தொடர்புக்கு:- 9962366321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க