ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில் அனைத்து மாநில அரசுகளும், “கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு” (EMIS – எமிஸ்) என்ற செயலியில் (ஆப்) அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தொடர்பான விவரங்களை ஆசிரியர்களைக் கொண்டு பதிவேற்றம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், “எமிஸ்” பணிகளில் இருந்து விடுவிப்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக “டிட்டோஜாக்” ஆசிரியர் சங்கம் அறிவித்திருந்தது. இதனையடுத்து சங்கத்தினருடன் நடத்திய பேச்சுவார்த்தையில், எமிஸ் பணிகளில் இருந்து விடுவிப்பது உள்ளிட்ட 11 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதியளித்துள்ளார்.
அண்மையில், சென்னையில் நடைபெற்ற பகுதி நேர, இடைநிலை, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தாலும் போலீசைக் கொண்டு போராடிய ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை ஏவி போராட்டத்தைக் கலைத்ததாலும் தி.மு.க. அரசின் மீது மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இந்நிலையில், “டிட்டோஜாக்” அமைப்பினரின் போராட்டம் அதிருப்தியை மேலும் வளர்த்தெடுக்கும் என்பதால், போராட்டத்தை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காகவே, அமைச்சர் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகக் கூறியுள்ளார்.
எனினும், மாணவர்களின் தகவல்களை சேகரிப்பது, கற்பிக்கும் பணியில் இருந்து ஆசிரியர்களை அப்புறப்படுத்துவது போன்றவற்றை உள்ளடக்கியிருக்கும் இந்த எமிஸ் செயலி உருவாக்கம் என்பது பள்ளிக் கல்வித்துறையை கார்ப்பரேட்மயமாக்கும் விரிந்த சிலந்திவலை போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளின் ஒரு அங்கமாகும். அந்தவகையில், எமிஸ் பதிவேற்றம் குறித்து அறிந்து கொள்வதும், அதற்கு எதிராக எச்சரிக்கையாக இருந்து போராடுவதும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடமையாகும்.
பிரம்மாண்ட தகவல் சேகரிப்பு
2010-களிலேயே வெவ்வேறு வடிவங்களில் தொடங்கப்பட்ட மாணவர்களின் தகவல்களை சேகரிக்கும் முறையானது, புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான “எமிஸ்” ஆக முழுவடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின் கீழ் ஒவ்வொரு மாநில அரசும் இதனை நடைமுறைப்படுத்தி வருகின்றன. தமிழ்நாட்டில், இத்திட்டம் கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது தி.மு.க. ஆட்சியில் இது மேலும் தீவிரப்படுத்தப்பட்டு, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அடையாள எண்கள் கொடுக்கப்பட்டு விரிவான அளவில் தகவல் சேகரிக்கப்படுகின்றது.
தொடக்கத்தில், மாணவர்கள் படிக்கும் பாடம், அவர்களது மதிப்பெண்கள் போன்றவை மட்டுமே பதிவேற்றப்பட்டு வந்த இந்த முறையில், தற்போது மாணவர்களின் அனைத்து நடவடிக்கைகளும் தகவல்களாக சேகரிக்கப்படுகின்றன.
படிக்க: தமிழ்நாடு அரசின் பொது பாடத்திட்டம்: புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியே!
ஒவ்வொரு மாணவருக்கும் கொடுக்கப்பட்ட எண்ணில் மாணவர்களின் வருகைப் பதிவு, தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள், நூலகப் பயன்பாடு, மாணவர்கள் படிக்கின்ற புத்தகங்களின் தலைப்பு, அதை அவர்கள் பயன்படுத்திய விதம், மாணவர்களின் பார்வைக் குறைபாடு, எடை, உயரம் போன்ற உடல்நலம் சார்ந்த விவரங்கள் என ஏறக்குறைய மாணவர்களைப் பற்றிய அனைத்து விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன.
மாதந்தோறும் மாணவர்கள் பங்கேற்கும் அறிவியல் மன்றம், சுற்றுச்சூழல் மன்றம் போன்ற மன்ற செயல்பாடுகளையும், கவிதை, கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல் போன்ற போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் பற்றிய விவரங்களும், வெற்றி-தோல்விகள், வாங்கிய புள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களும் இச்செயலியில் சேகரிக்கப்படுகின்றன.
இவ்வாறு தொலைபேசி செயலிகளில் மாணவர்கள் குறித்த விவரங்களை அரசு சேகரிப்பதற்கான காரணங்கள் என்ன? இவை கல்வியை மேம்படுத்துவதில் என்ன பங்களிப்பு செலுத்துகிறது? என்ற எந்த கேள்விகளையும் இன்றைய ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர் சங்கங்கள் எழுப்பவில்லை என்பது கவலைக்குரிய விசயமாகும்.
பள்ளிக் கல்வித்துறையை கார்ப்பரேட்மயமாக்குவது என்பது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஒரு மக்கள் விரோத நடவடிக்கையாகும். அந்தவகையில், வானவில் திட்டம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், எண்ணும் எழுத்தும் கல்வித் திட்டம், மணற்கேனி செயலி, நம்ம ஸ்கூல் திட்டம் போன்றவை அனைத்தும் கல்வியை கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கையின் அங்கங்களாகும். அந்த வரிசையில்தான், மாணவர்களின் தகவல்களைச் சேகரிக்கும் அயோக்கியத்தனமான இந்த எமிஸ் செயலி முறையும் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆசியர்களைக் கற்பித்தல் பணியிலிருந்து அகற்றும் சதித்திட்டம்
பள்ளிக் கல்வியைக் கார்ப்பரேட்மயமாக்கும் மேற்கண்ட பெரும்பாலான நடவடிக்கைகள் ஆசிரியர்களைக் கற்பித்தல் பணியில் இருந்து அகற்றும் நடவடிக்கைகளாக அமைந்துள்ளதைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்துள்ளோம். தனியார் பள்ளிகளிலும் எமிஸ் செயலியில் மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றப்பட்டாலும் அவை மிகக் குறைவான தகவல்கள் மட்டுமே; அப்பதிவேற்றத்தை செய்வதற்கும் தனியார் பள்ளிகளில் தனியாக ஊழியர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், அரசுப் பள்ளிகளில் பதிவேற்றப்படும் விவரங்கள் மிகமிக அதிகமானவை; இப்பணி முழுவதும் ஆசிரியர்கள் மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது. அதையும் குறிப்பிட்ட கால அளவிற்குள் செய்யவேண்டும். இந்தப் பதிவேற்றப் பணியை ஆசிரியர்கள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டுமெனக் கூறி கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக நிர்பந்தித்து வருகின்றனர்.
இதன் விளைவாக ஆசிரியர்கள், கற்பித்தல் பணிகளை விட எமிஸ் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து முடிக்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்; ஏற்கெனவே, ஆசிரியர்கள் தங்களுடைய வேலைநேரத்தில் கற்பித்தல் சாராத பிற பணிகளுக்கே (வாக்காளர் கணக்கெடுப்பு உள்ளிட்டவை) அதிகப்படியான நேரத்தை செலவழிக்கிறார்கள்; இந்நிலையில், இது போன்ற திட்டங்களின் மூலம் வகுப்பறைகளில் மாணவர்களுடன் உரையாடி அன்பு செலுத்தி கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டு நல்லதொரு கல்வியை வழங்க வேண்டிய ஆசிரியர்கள், கற்பித்தல் பணியிலிருந்து படிப்படியாக விலக்கி வைக்கப்படுகிறார்கள்.
“தங்கள் 99 சதவிகித நேரத்தை தொலைபேசிகளுடனேயே, எமிஸ் செயலியைப் பயன்படுத்துவதிலேயே, ஆசிரியர்கள் கழிக்க வேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலையால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்” என்று தன்னுடைய பத்திரிகை செய்தியில் கூறியுள்ளது, அகில இந்தியக் கல்வி பாதுகாப்புக் கமிட்டி.
எமிஸ் பதிவேற்றம் போன்ற கற்பித்தல் சாராத பணிகளாலும் அதிகாரிகளின் அழுத்தத்தாலும் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்கு அதிகப்படியான நேரம் ஒதுக்க முடியவில்லையே என்ற வேதனையாலும் ஆசிரியர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர். திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியத்தில் பணியாற்றிய அன்னாள் ஜெயமேரி என்ற ஆசிரியை, எமிஸ் செயலியில் பதிவேற்றம் செய்வதில் இருந்த சிக்கலால் ஏற்பட்ட மன உளைச்சலில் வகுப்பறையில் நாற்காலியில் அமர்ந்தபடியே உயிரிழந்தது அதற்குச் சான்றாகும்.
பள்ளிக் கல்வித்துறை கார்ப்பரேட்மயம்
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றிய இத்தரவுகள் எந்த பாதுகாப்புமற்ற வகையிலேயே பராமரிக்கப்படுகின்றன. இந்தாண்டு மார்ச் மாதத்தில் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்களின் தகவல்கள் உயர்கல்வி நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தது, பள்ளிக் கல்வித்துறை. அதைப்போல, கடந்த 2021-ஆம் ஆண்டு, மாணவர்களின் எமிஸ் தரவுகள் அடிக்கடி திருடப்படுவதாக தனியார் பள்ளிகள் குற்றஞ்சாட்டின.
ஒருபக்கம், எமிஸ் பதிவேற்றம், மன்ற போட்டிகள் போன்ற பணிகள் மூலம் ஆசிரியர்களை கற்பித்தல் பணியிலிருந்து அப்புறப்படுத்தும் தி.மு.க. அரசானது, மறுபக்கத்தில், தன்னார்வலர்கள் மற்றும் டிஜிட்டல் கல்விமுறையின் மூலம் கற்பித்தல் பணியை மேற்கொண்டு வருகிறது. இவ்விரு முறைகளும் பள்ளிக் கல்வித்துறையில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை நிறுவும் நடவடிக்கைகளாகும்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 420 அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பன்முகத் திறன்களை மேம்படுத்துவது என்ற பெயரில் 33 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் சென்னை மாநகராட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதும், ‘வளர்ச்சி’ திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்ட வானவில் மன்ற திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான கற்பித்தல் பணிகளைத் தன்னார்வலர்களை வைத்து மேற்கொண்டு வருவதும் அதற்குச் சான்றுகளாகும்.
இந்தத் தன்னார்வலர்கள் எந்த கார்ப்பரேட் நிறுவனத்தின் பின்னணி கொண்டவர்கள் என்பது பற்றிய விவரங்களையும் அரசு வெளியிடுவதில்லை. “ஆஹா குரு”, “பரிஷன்”, “எய்ட் இந்தியா” மற்றும் “சுடர்” போன்ற அமைப்புகளின் அடையாளக் குறிகள் (லோகோ) தான் வானவில் மன்ற செயல்திட்ட முகப்பில் இடம்பெற்றுள்ளதாக திட்டம் தொடங்கப்பட்டபோதே குற்றஞ்சாட்டினார், “அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்” கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ஆசிரியர் உமாமகேஸ்வரி.
மாணவர்களுக்கு, காணொளி வடிவில் பாடங்களை வழங்கும் செயலிகளை அறிமுகப்படுத்துவது, திறனறித் தேர்வு போன்ற தேர்வுகளை இணையவழியில் நடத்துவது, கல்வித் தொலைக்காட்சி, ஆன்லைன் வகுப்புகள் போன்ற பல வழிமுறைகளில் ஆசிரியர்-மாணவர்கள் இடையிலான நேரடிக் கற்பித்தல் முறையை ஒழித்துக்கட்டி மாணவர்கள் மத்தியில் டிஜிட்டல் கல்விமுறையை ஊக்குவிப்பதுப் போன்ற வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது, தி.மு.க அரசு.
கடந்த ஜூலை மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாடங்களைக் காணொளி வடிவில் வழங்கும் “மணற்கேணி” என்ற செயலியை அறிமுகப்படுத்தி இருக்கிறது, தி.மு.க. அரசு. மணற்கேணி செயலியை பயன்படுத்தி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எளிமையாகப் புரியும்படி பாடங்களை நடத்தலாம் எனக் கவர்ச்சிகரமாக தெரிவித்துள்ளது. இச்செயலியில் 12-ஆம் வகுப்பின் முதல் பருவப் பாடங்கள் மற்றும் 6 முதல் 11-ஆம் வகுப்புகளுக்கான பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. விரைவில் இச்செயலி தொடக்கக்கல்வி வரை விரிவுபடுத்தப்பட உள்ளது.
மாணவர்கள் மணற்கேணி செயலியை தங்களுடைய அறிதிறன்பேசியில் (ஸ்மார்ட்போன்) உள்ள கூகுள் ப்ளே-ஸ்டோரிலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். இதன்விளைவாக, ஆசிரியர்கள் கற்பித்தல் சாராத பணிகளால் மாணவர்களுக்குப் பாடங்களை நடத்த முடியாத சூழ்நிலையில், வீடுகளில் மணற்கேணி செயலியில் பாடங்களைப் பயின்று கொள்ளுமாறு வழிகாட்டுதல்களை வழங்கி, டிஜிட்டல் கல்விமுறையை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது, தி.மு.க. அரசு.
படிக்க: பள்ளி மாணவர்களுக்கு ஒரே அடையாள எண் (APAAR): திறந்தவெளி பாசிச சிறைச்சாலையாக மாறும் நாடு!
மேலும், தி.மு.க அரசானது, ஒன்றாம் வகுப்பில் இருந்தே மாணவர்களை டிஜிட்டல் கல்விமுறைக்கு பழக்கப்படுத்தி வருகிறது. அண்மையில், தமிழக அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட முதல் பருவத் தேர்வை இணையவழியில் நடத்தியது. இணையவழியில் தேர்வு நடத்துவதை மறுபரிசீலனை செய்ய பெற்றோர்கள் வலியுறுத்திய போதும் தேர்வை இணையவழியிலேயே நடத்தி முடித்தது.
இவ்வாறு பள்ளிக் கல்வித்துறையில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்குத் தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறது, தி.மு.க. அரசு. தற்காலிக ஒப்பந்த ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி, ஆசிரியர் சங்கங்கள் எத்தகைய போராட்டங்களை நடத்தினாலும் தி.மு.க. அரசு அவர்களை பணிநிரந்தரம் செய்யாமல் இருப்பதையும் சொற்ப அளவில் ஒப்பந்த ஆசிரியர்களை நியமித்து வருவதையும் கல்வித்துறையை கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கை என்ற கண்ணோட்டத்தில் இருந்தே நாம் பார்க்க வேண்டும்.
கார்ப்பரேட்மயமாக்கம் என்பதே பெரும்பான்மையான ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வியை எட்டாக்கனியாக்கும் பயங்கரவாத நடவடிக்கையாகும். மாணவர்கள், ஆசிரியர்கள் என ஒட்டுமொத்த சமூகத்தையே பேரழிவுக்குத் தள்ளும் அபாயம் மிக்கதாகும். எனவே, எமிஸ் பதிவேற்றம் போன்ற கற்பித்தல் சாராத பணிகளுக்கு எதிராக போராடிவரும் ஆசிரியர்களோடு மாணவர்கள், பெற்றோர்களாகிய நாமும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அப்போராட்டங்களை, கல்வித்துறையில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை முறியடிக்கும் வகையில் வளர்த்தெடுக்க வேண்டும்.
அதேவேளையில், எமிஸ் செயலியில் பதிவேற்றம் செய்யும் வேலையில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதை எதிர்த்துப் போராடும் ஆசிரியர் சங்கங்கள், எமிஸ் செயலியைத் தடை செய்ய வேண்டும் என்று போராடுவதுதான் முதன்மையான விசயமாகும். மேலும், எமிஸ் செயலி மூலம் அரசுப் பள்ளிக் கல்வித்துறை கார்ப்பரேட் மயமாக்கத்திற்கான களம் செப்பனிடப்படும் அபாயத்தை, அநீதியை மக்களுக்கு எடுத்துக் கூறவேண்டும்.
கதிர்
(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2023 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube