தமிழ்நாடு அரசின் பொது பாடத்திட்டம்: புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியே!

ஏற்கெனவே பள்ளிக்கல்வித்துறையில் புதிய கல்விக் கொள்கையின் திட்டங்களை எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம் என்று வெவ்வேறு பெயர்களில் நுழைத்த திமுக அரசு, தற்போது பொது பாடத்திட்டம் என்ற பெயரில் புதிய கல்விக் கொள்கையின் அம்சத்தை பல்கலைக்கழகங்களில் கொண்டு வந்து அவற்றின் பன்முகத் தன்மையை அழிக்கத் துடிதுடிக்கிறது திமுக.

டந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த தி.மு.க அரசு, ஆட்சியை பிடிப்பதற்கு முன்னர் மோடி அரசு கொண்டுவந்த தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறி வருகிறது. ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைக்க குழு ஒன்றை அமைத்தது.

ஆனால் தேசிய கல்விக் கொள்கையின் “நகல்” அறிக்கையை மாநில கல்விக் கொள்கை என்ற பெயரில் தி.மு.க அமல்படுத்த முயல்கிறது என்பதை அம்பலப்படுத்தி அக்குழுவிலிருந்து வெளியேறினார், குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் ஜகவர் நேசன். இதன் மூலம் தேசிய கல்விக் கொள்கையை திமுக மறைமுகமாக அமல்படுத்தி வருகிறது என்பது மீண்டும் அம்பலப்பட்டு போனது.

இந்நிலையில், தி.மு.க-வின் கார்ப்பரேட் சேவையின் தொடர்ச்சியாக, சமீபத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தன்னாட்சி கல்லூரிகளிலும் “பொதுபாடத்திட்டம்” என்ற ஒற்றை பாடத்திட்டத்தை இந்த கல்வியாண்டிலிருந்தே அமல்படுத்த வேண்டும் என்பதே அந்த அறிக்கையின் சாரம்.

இத்திட்டத்தின்படி அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் “ஒரே கல்வி” திட்டம் திணிக்கப்படுகிறது! தேசிய கல்விக் கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டே அதனை நகல் எடுத்து பொது பாடத்திட்டம் என்று பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி அதிகாரத்தை நசுக்கும் நாசகரத் திட்டத்தை அமல்படுத்துகிறது திமுக அரசு.


படிக்க: NEP பரிந்துரைக்கும் முறைசாரா கல்வியின் ஒரு வடிவமே இல்லம் தேடி கல்வித் திட்டம் || CCCE


ஒவ்வொரு  பல்கலைக்கழகமும் தன்னாட்சி அதிகாரம் கொண்டு ஒவ்வொரு வட்டாரத்தின் தன்மை, சமூக அமைப்பு, கலாச்சாரம் போன்றவற்றை கல்வியில் பிரதிபலிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகவே தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனியாக சட்டம் இயற்றி வெவ்வேறு பகுதிகளில் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் தி.மு.க அமல்படுத்தியுள்ள இந்த பொது பாடத்திட்டம், “ஒற்றைக் கல்விமுறை” என்பதை நுழைத்து பல்வேறு பகுதிகளில் இருக்கும் தனிச்சிறப்பான கல்வி முறையை அழிக்கப்பார்க்கிறது.

உதாரணமாக, கடலோர மாவட்டங்களில் கடல்சார் மற்றும் மீன்வளம் சார்ந்த படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் கைவினை மற்றும் கலை சார்ந்த படிப்புகள் இருக்கின்றன. இதன் மூலம் அங்கு படிக்கும் மாணவர்கள் தங்களின் பாரம்பரியத்தை வரித்துக்கொள்கிறார்கள். இப்படி ஒவ்வொரு புவியியல் அமைப்புக்கும் ஏற்றவாறு பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகள் தங்களுக்கான பாடத் திட்டத்தை தாங்களே தயாரித்துக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

அகில இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் துணைத்தலைவர் வே.ரவி பேசுகையில், “நான் பெரியார் பல்கலைக்கழக தாவரவியல் பாடத்திட்டக்குழு தலைவர். எனது தலைமையில் 12 பேராசிரியர்கள் கொண்ட குழுதான் இதுநாள் வரை எங்களுக்கான பாடத்தைத் தயாரித்தது. நாங்கள் ஆய்வுசெய்தவரை பொதுப் பாடத்திட்டம் காலாவதியானதாகவே இருக்கிறது. சமீபத்திய முன்னேற்றங்கள் எதுவும் அதில் இல்லை. குறிப்பாக செய்முறைப் பாடங்களுக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் கல்லூரிகள் தொடங்கிவிட்டன. ஆனால் பல இடங்களில் புதிய பாடங்கள் நடத்தப்படவே இல்லை. பழைய பாடங்களையே நடத்துகிறார்கள். எங்களுக்கும் புதிய பாடங்களை எப்படி நடத்துவது என்று புரியவில்லை. இந்தப் பாடத்திட்ட வடிவமைப்பு அப்படியே புதிய கல்விக்கொள்கையை ஒத்திருக்கிறது. மாணவர்களை அறிவு-சார்ந்தவர்களாக உருவாக்காமல் திறன்-சார்ந்தவர்களாக மாற்றி நிறுவனங்களுக்கான தொழிலாளர்களாக ஆக்குவதுதான் பொதுப்பாடத் திட்டத்தின் முதன்மையான நோக்கமாக இருக்கிறது” என்று கூறுகிறார்.

‘மூட்டா’ அமைப்பின் பொதுச் செயலாளரான நாகராஜன், “மாநில உயர்கல்வி மன்றம், பொதுப்பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கு முன்வைக்கும் காரணங்கள் மொன்னையாக உள்ளன. ஒன்று ஈக்குவலன்ஸ் (சமநிலை) பிரச்சினை. இன்னொன்று, வெர்ட்டிகல் மொபிலிட்டி. இந்த வாதம் அடிப்படையிலேயே தவறு” என்கிறார்.


படிக்க: சிற்பி திட்டம்-வானவில் மன்றம்: கல்வித்துறையில் கார்ப்பரேட்-ஐ நுழைக்கும் திராவிட மாடல் அரசு!


மேலும், “இந்தச் சமநிலைப் பிரச்சினையை பல்கலைக்கழகங்களே தங்களுக்குள் முடிவு செய்துகொள்ளலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு தெளிவாகச் சொல்லியிருக்கிறது. இது தெரியாமல் உயர்கல்வி மன்றம் குழப்புகிறது. ஒரு மாணவன் ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறான். சில நேரங்களில் இரண்டாமாண்டில் அவன் வேறொரு கல்லூரியில் சேர நேரிடும். இதைத்தான் ‘வெர்ட்டிகல் மொபிலிட்டி’ என்பார்கள். வேறு வேறு பாடத்திட்டங்கள் இருந்தால் இதுமாதிரியான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். பொதுப் பாடத்திட்டம் இருந்தால் சிக்கல் வராது என்கிறார்கள். அதுவும் தவறு. பொதுப் பாடத்திட்டங்களை கல்லூரிகள் தங்கள் விருப்பத்துக்கேற்றவாறு வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள். ஒரு கல்லூரியில் ஒரு பாடம் முதலாமாண்டில் இருந்தால் இன்னொரு கல்லூரியில் மூன்றாமாண்டில் இருக்கும். வெர்ட்டிகல் மொபிலிட்டி பிரச்சினைக்கு பாடத்திட்டம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அடிப்படைக் கட்டுமானங்களை ஒரேமாதிரி வைத்தால் போதும்…” என்று கூறுகிறார்.

இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் 800-க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்களோடு முதலில் இருப்பது தமிழ்நாடு தான். 2022 தேசிய தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டின் 32 நிறுவனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை தன்னாட்சி நிறுவனங்களே. சான்றாக, சென்னை மாநிலக் கல்லூரி அதில் 3-வது இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. நிலவரம் இப்படி இருக்க உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உயர் கல்வித்துறையை மேம்படுத்தத்தான் இந்தத் திட்டத்தை கொண்டு வந்திருப்பதாக கூறுவது பெரிய சதித்திட்டமாகும்.

நாங்கள் பா.ஜ.க-விற்கு நேர் எதிரானவர்கள் என்று கூறிக்கொண்டு பா.ஜ.க-வின் பல அஜெண்டாக்களை நிறைவேற்றி வருகிறது தி.மு.க. ஏற்கெனவே பள்ளிக்கல்வித்துறையில் புதிய கல்விக் கொள்கையின் திட்டங்களை எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம் என்று வெவ்வேறு பெயர்களில் நுழைத்து மாணவர்களுக்கு இந்துத்துவ கொள்கைகளை  கற்றுத்தர வழிவகை செய்துள்ளது திமுக அரசு. தற்போது, பொது பாடத்திட்டம் என்ற பெயரில் புதிய கல்விக் கொள்கையின் அம்சத்தை பல்கலைக்கழகங்களில் கொண்டு வந்து அவற்றின் பன்முகத் தன்மையை அழிக்கத் துடிதுடிக்கிறது திமுக.

இத்திட்டத்தைக் கொண்டு வருவதன் மூலம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்யும் ஒரு அடிமை கூட்டமாக மாணவர்களை உருவாக்க நினைக்கிறது திமுக அரசு. முதலாளித்துவ கார்ப்பரேட் சேவையில் பா.ஜ.க-விற்கு எந்த அளவிலும் தி.மு.க சளைத்தது இல்லை என்பதையே இந்நடவடிக்கை சுட்டிக்காட்டுகிறது.


இராவணன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க