NEP பரிந்துரைக்கும் முறைசாரா கல்வியின் ஒரு வடிவமே இல்லம் தேடி கல்வித் திட்டம் || CCCE
மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரிசெய்ய பல வழிமுறைகள் இருப்பினும் தன்னார்வலர்களைக் கொண்டு கற்றல் இடைவெளியை சரி செய்யும் திட்டத்தினை அமல்படுத்த வேண்டிய காரணமென்ன?
NEP பரிந்துரைக்கும் முறைசாரா கல்வியின் ஒரு வடிவமே இல்லம் தேடி கல்வித் திட்டம்
இல்லம் தேடி கல்வித் திட்டம், ரூ.200 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசால் கடந்த மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது மதுரை, கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிற்து. இதன் விளைவை பொறுத்து தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இத்திட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கமாக ‘கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பள்ளிகளில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்புகளை சரி செய்தல்.’ என்று திட்ட அறிக்கை கூறுகிறது.
இத்திட்டத்தின் படி தன்னார்வலர்கள் தினசரி பள்ளிக்கு வெளியே மாலை 5 மணி முதல் 7 மணிக்குள்ளாக 1 முதல் 1½ மணி நேரம் என வாரத்திற்கு சுமார் 6 மணி நேரம் மாணவர்களுக்கு பாடங்களை சொல்லிக் கொடுப்பதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவார்கள் என அறிக்கை கூறுகிறது.
ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பெருந்தொற்று பரவலால் பள்ளிக் குழந்தைகளின் கற்றல் செயல்பாடுகள் பாதிப்படைந்துள்ளது என்பது உண்மையே. அதற்கு தீர்வாக ஆளும்வர்க்கத்தால் முன்வைக்கப்பட்ட இணையவழி கல்வி முறையும் எதிர்பார்த்த பலனை தரவில்லை என்பதோடு மட்டுமில்லாமல் எதிர்மறை விளைவாக, மாணவர்களை பள்ளிக் கல்வியிலிருந்தே வெளியேற்றியுள்ளதை அரசின் புள்ளிவிவரங்கள் நமக்கு காட்டுகின்றன.
கொரோனா ஊரடங்கினால் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை சரிசெய்ய பல்வேறு ஆலோசனைகளை கல்வியாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரி செய்து அவர்களை ஆர்வத்துடன் கல்வி செயல்பாடுகளில் ஈடுபட வைப்பதற்காக இல்லம் தேடிக் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டதாக தமிழக அரசு கூறுகிறது. ஆனால், இத்திட்டத்தினை புதிய கல்விகொள்கையின் அம்சம் என்றும், அரசு பள்ளிகளை பலவீனமாக்கும் தந்திரம் என்றும் ஆர்.எஸ்.எஸ். ன் கொள்கையை மாணவர்களிடையே திணிப்பதற்கு இத்திட்டம் வழிவகுக்கும் என்றும் கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
தமிழக அரசோ இத்திட்டம் புதிய கல்விக் கொள்கையின் அம்சமோ, பள்ளிக் கல்வியை பலவீனப்படுத்தக் கூடியாதோ அல்ல என்றும் மாறாக பள்ளிக் கல்வியை பலப்படுத்தக் கூடியது என்றும் விளக்கம் தந்துள்ளது. ஆரம்பத்தில் இத்திட்டத்தினை எதிர்த்த பலர் தமிழக அரசின் இந்த விளக்கத்திணை ஏற்றுக்கொண்டு இத்திட்டத்தினை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர். கூடவே இத்திட்டத்தினை ஆதரிக்கும் கல்வியாளர்களில் ஒரு பிரிவினர், இத்திட்டம் அரசுப்பள்ளிகளை வலுப்படுத்தும் என்கின்றனர். NEP-ன் பரிந்துரைகள் நேரடியாக/மறைமுக வழிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்நிலையில் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து விரிவாக பார்க்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
இத்திட்டம் அரசு பள்ளி நிறுவனத்தை வலுப்படுத்தும் அற்புதமான திட்டம் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். அதற்கு காரணமாக பள்ளி மேலாண்மைக் குழுவை காட்டுகிறார்கள். இல்லம் தேடி கல்வி திட்டத்தை அமல்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள நான்கு அடுக்கு கண்காணிப்பில் பள்ளி அளவில் அதனை கண்காணிக்கப்போவது பள்ளி மேலாண்மைக் குழுவே. இதில் ஆசிரியர், உள்ளாட்சி உறுப்பினர் பெற்றோர் ஆகியோர் உறுப்பினர்கள். இவர்கள் மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் தங்களை இணைத்துக்கொண்டு பள்ளியின் தேவைகளை அறிந்து கூட்டாக திட்டமிட்டு சமுதாய அக்கறையுடன் செயலாற்றுவார்கள் என்கிறார்கள் இத்திட்டத்தினை ஆதரிக்கும் கல்வியாளர்கள்.
அரசு பள்ளிகளை வலுவிழக்கச் செய்வதற்கும் தனியார் பள்ளிகளை பலப்படுத்துவதற்காகவும் கொண்டு வரப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்தில்(RTE) அரசுப்பள்ளிகளை நிர்வகிப்பது குறித்து சொல்லப்பட்டுள்ள ஒரு பரிந்துரைதான் பள்ளி மேலாண்மைக் குழு. ஆனால் இக்குழு அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டில் பெரியளவிலான பங்களிப்பைச் செய்யவில்லை மாறாக ஒரு நிர்வாகச் சடங்காக மட்டுமே உள்ளது என இத்திட்டத்தினை ஆதரிக்கும் கல்வியாளர்களே ஒப்புக் கொள்கின்றனர். இல்லம் தேடி கல்வி திட்டத்தை அமல்படுத்த கல்வி உரிமைச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக் குழுவை பயன்படுத்திக் கொள்கிறது மாநில அரசு அவ்வளவுதான்.
ஒரு சட்டத்தின் ஒட்டுமொத்த உள்ளடக்கமுமே தனியார்மயத்தை ஊக்குவிப்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கும்போது அதன் ஒரு சில நல்ல கூறுகளை எடுத்து வைத்துக் கொண்டு அதன் மூலம் அரசு பள்ளிகளை பாதுகாத்திட முடியுமென பிரச்சாரம் செய்வது ஆளும்வர்க்கம் தனது நோக்கத்தினை நிறைவேற்றிக் கொள்வதற்கு மட்டுமே பயன்படும்.
இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய இந்துத்துவா கொள்கைகளை குழந்தைகளிடையே விதைப்பதற்கான வாய்ப்புள்ளதாக பல்வேறு அமைப்புகளும் அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர். ஆனால், திட்ட அறிக்கைப்படி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இத்திட்டதிற்கான பாடத் திட்டங்களை வகுத்துக்கொடுக்கிறது. இப்பாடத்தினையே தன்னார்வலர்கள் மாலை வகுப்புகளில் கற்றுத் தர வேண்டும். இத்திட்டத்தை நடைமுறைபடுத்த மாவட்ட ஆட்சியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், அரசு அதிகாரிகள், பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கிய நான்கு அடுக்கு (மாநில, மாவட்ட,ஒன்றிய அளவில் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு) உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுக்களே தன்னார்வலர்களுக்கு பயிற்சி கொடுக்கவும் மாலை வகுப்புகளை கண்காணிக்கவும் செய்கிறது. எனவே இத்திட்டத்தின் மூலமாக நேரடியாக ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை திணிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவே. இவ்விரண்டையும் தவிர்த்து இத்திட்டமானது, நேரடியாக NEP பரிந்துரைக்கின்ற முறைசார கல்வியின் ஒருவடிவமாகும்.
முறைசாரக் கல்வியை ஊக்குவிக்கும் திட்டம்:
கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாரிய கற்றல் இடைவெளியை சரிசெய்ய ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியறிவு பரவலாக சென்றடைய விரிவான திட்டங்களை உருவாக்க வேண்டுமென்று ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு வழிகாட்டியுள்ளதாக ஆங்கில இந்து இணைய செய்தி(19.08.2020) தெரிவிக்கிறது. ஒன்றிய அரசாங்கம் பெருந்தொற்றில் மாணவர்களின் கல்வி நலனுக்காக உருப்படியாக இதுவரை ஒன்றும் செய்யவில்லை. இந்த பெருந்தொற்றையே வாய்ப்பாகப் பயன்படுத்தி நிதிமூலதனத்தால் ஊட்டிவளர்க்கப்படும் கல்விதொழில்நுட்ப நிறுவனங்களின் நலன்களுக்காக புதிய கல்விக் கொள்கையின் அம்சமாக உள்ள இணையவழிக் கல்வியை நாடு முழுவதும் அமல்படுத்துவதில் தீவிரம் காட்டிவருகிறது.
அதையோட்டி தமிழக அரசாங்கமும் கல்வி தொலைக்காட்சி, இணையவழி கல்வி என்பதன் மூலமே கற்றல் செயல்பாட்டை தொடர பள்ளிகளுக்கு வழிகாட்டி நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆனால், ஒருபுறம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இணையவழி கட்டமை வசதிகள் இல்லை. மறுபுறமோ பெற்றோர்களின் பொருளாதார நிலைமை திறன்பேசிகள் வாங்கவோ, கணினி, இணைய இணைப்பு ஆகியவற்றுக்கு செலவு செய்யும் அளவிற்கு இல்லை. இந்நிலையில் இணையவழியில் கற்றல்-கற்பித்தலை நடத்த அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இதன் விளைவாக கடந்த இரண்டாண்டுகளாக மாணவர்களின் தற்கொலைகளும், கற்றல் இடைநிற்றலும், முற்றிலும் கற்றல் செயல்பாடுகளிலிருந்து மாணவர்கள் துண்டித்துக் கொண்டதும் நடந்துள்ளன.
கொரோனா பெருந்தொற்றால் உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 160 மில்லியனாக உயர்ந்துள்ளதாகவும் கூடுதலாக பல லட்சம் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர் நிலையை நோக்கித் தள்ளப்படுவார்கள் என்றும் UNICEF மற்றும் ILO (சர்வதேச தொழிலாளர் அமைப்பு) அமைப்புகள் கூறுகின்றன. இந்தியாவிலும் கொரோனா ஊரடங்கு அதையொட்டிய மத்திய மாநில அரசுகளின் கையாளாகாத செயல்பாடுகளினால் குழந்தைகள் தங்களின் பள்ளிக்கனவை பாதியிலேயே புதைத்துவிட்டு குழந்தைத் தொழிலாளர்களாக மாறியிருப்பதும் கணிசமான மாணவர்கள் கற்றல் செயல்பாடுகளில் முற்றிலுமாக பங்கெடுக்காமல் இருப்பதையும் பல்வேறு ஆய்வு அறிக்கைகள் வெளிக்கொணர்ந்துள்ளன.
உதாரணமாக சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த School Report அறிக்கையின் படி கொரானா ஊரடங்கு காலத்தில் கிராமப்புற மாணவர்களில் 8% மாணவர்கள் மட்டுமே இணைய வழி கற்றலை தடையின்றி தொடந்துள்ளனர். மேலும் 37% கிராமப்புற மாணவர்கள் எவ்வித கற்றல் செயல்பாடுகளிலும் பங்கெடுக்கவில்லை. தமிழகத்தில் நடப்பு (2021-2022) கல்வியாண்டில் இடைநின்ற மாணவர்களை(6 முதல் 19 வயதிற்குள்) கண்டறிய அரசு பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 2 இலட்சம் மாணவர்கள் தங்களது பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கூலித் தொழிலாளர்களாக மாறியுள்ளதாக கண்டறிப்பட்டுள்ளது. இது வழக்கமான அளவைவிட மிக அதிகமாகும். 2020-ல் சென்னை மாநகராட்சி சார்பில் அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் மட்டும் 315 மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. இவையெல்லாம் ஒருசில உதாரணங்கள் மட்டுமே. கொரானா ஊரடங்கினால் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த இந்தியா முழுமைக்குமான கருத்துக் கேட்பு நடத்தப்பட்டால் அதன் முடிவுகள் எதிர்பார்த்ததை விட மிகவும் மோசமானதாக இருக்கும் என்பதே எதார்த்தம்.
ஏறத்தாழ இரண்டாண்டுகளாக பள்ளிகள் இயங்காததின் காரணமாக கற்றல் செயல்பாடுகளிலிருந்து பங்குபெறாத கணிசமான மாணவர்கள் மற்றும் இடைநிற்றலுக்கு ஆளான மாணவர்களை மீண்டும் முறையான கற்றல்-கற்பித்தல் முறைக்குள் (Formal Education) கொண்டுவருவது மிகப்பெரிய சவாலானதே. பள்ளி செயல்பாடுகளில் பங்கெடுக்காத மற்றும் குடுப்பச்சூழல் காரணமாக ஏதாவதொரு வேலைகளில் ஈடுபட்டிருந்த மாணவர்களை பள்ளிக்குள் கொண்டுவர மாணவர்களுக்கு தடையாக உள்ள காரணிகளைக் கண்டறிந்து அதனை களைவது, பள்ளிக் கட்டமைப்பை மேம்படுத்துவது, இணையம்-கணினி போன்றவைகள் கிடைக்க செய்வது, மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது, ஏற்கனவே அமலிலுள்ள திட்டங்களை கூடுதல் கவனத்தோடு அமல்படுத்துவது இன்னும் பிறவற்றின் மூலமே மாணவர்களை பள்ளியை நோக்கி ஈர்க்க முடியும். ஆனால் அரசோ பள்ளிக்கு வெளியே சில நடவடிக்கைகளின் மூலம் இப்பிரசனையை சரிசெய்ய முடியும் எனக் கருதுகிறது.
மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரிசெய்ய பல வழிமுறைகள் இருப்பினும் தன்னார்வலர்களைக் கொண்டு கற்றல் இடைவெளியை சரி செய்யும் திட்டத்தினை அமல்படுத்த வேண்டிய காரணமென்ன?
தேசிய கல்விக்கொள்கை 2020 வரைவறிக்கையில் குழந்தைகள் கல்வி கற்றலில் ஏற்படும் இடைவெளி/நெருக்கடியை பற்றி “அடிப்படை எழுத்தறிவும் எண்ணறிவும்: கற்றலுக்கு தேவையான அவசர மற்றும் அவசியமான முன் நிபந்தனைகள்” மற்றும் “இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல் மற்றும் அனைவருக்குமான கல்வியை உறுதி செய்தல்” ஆகிய தலைப்புகளில் சொல்லப்பட்டுள்ள வழிக்காட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டே தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தலைப்பு 2.7 ல் ”தற்போதைய கற்றல் நெருக்கடி அளவீட்டில் அனைவருக்குமான அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு இயக்கத்தில் ஆசிரியர்களுக்கு துணைபுரியும் அனைத்து சாத்தியமான கற்பித்தல் முறைகளும் கண்டுபிடிக்கப்படும் ……….. உள்ளூர் சமூகம் மற்றும் பிறரும் பயிற்சி பெற்ற தன்னார்வலர்களும் பங்கேற்க நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும்.” என்கிறது.
தலைப்பு 3.5 ல் “அனைத்து மாணவர்களுக்கும் கற்றலை எளிதாக்குவதற்கு சமூக பொருளாதார் ரீதியாக பிதங்கிய குழுக்கழுக்கு (SEDGs) முக்கியத்துவம் அளிக்க முறைசார் மற்றும் முறைசாரா கல்வி முறைகள் என பல வழிகளில் கற்றலை எளிதாக்கும் வகையில் பள்ளிக் கல்வியை விரிவாக்குவதும் அவசியம்.” என்றும்,
தலைப்பு 3.7 ல் “கற்றலை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் தன்னார்வ சமூகம் மற்றும் முன்னாள் மாணவர்களைப் பள்ளிகளில் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக ஆரோக்கியமான பழைய மாணவர்கள் உள்ளூர் சமூக உறுப்பினர்கள் போன்றவர்கள் தகுந்த முறையில் ஒன்றிணைக்கப்படுவார்கள்” என்று வழிகாட்டப்பட்டுள்ளது.
இல்லம் தேடி கல்வி திட்ட அறிக்கையில் “பள்ளி வளாகங்களுக்கு வெளியே மற்றும் மாணவர்கள் வசிப்பிடம் அருகே சிறிய குழுக்கள் மூலம் தன்னார்வலர்களின் பங்கேற்புடன் மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்பை வழங்குதல் எனவும், தன்னார்வலரை பயன்படுத்துவதற்கான அனைத்து நிலைகளையும் எளிதாக்கும் பொருட்டு இல்லம் தேடி கல்வி இணையதளம் உருவாக்கபட்டுள்ளது. இவற்றைப் பயன்படுத்தி பள்ளி – மாணவர்- தன்னார்வலர் – கிராமத் தொடர்பு தடையின்றி நடக்கும்” என்று உள்ளது.
கடந்தாண்டு(2020) ஜூலையில் தேசியக் கல்விக் கொள்கைக்கு மோடி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதிலிருந்து இன்றுவரை மத்திய கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் அனைத்தும் NEP-2020 ன் அடிப்படையிலேயே உள்ளது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை சரிசெய்ய ஒவ்வொரு குழந்தைகளுக்கும் கல்வியறிவு பரவலாக சென்றடைய விரிவான திட்டங்களை உருவாக்க வேண்டுமென்று மாநில அரசுகளுக்கு கடந்தாண்டு ஆகஸ்டில் மத்திய அரசு வழிகாட்டியிருந்ததென்று மேலே குறிப்பிட்டிருந்தோம். தன்னார்வலர்களை பள்ளிக் கல்வியில் பயன்படுத்தச் சொல்லும் மோடி அரசு, இதனை தமிழ்நாடும் ஒரிசாவும் நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளதாக தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. இதிலிருந்து இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு பின்னால் NEP ன் வழிகாட்டுதல் உள்ளதென்பதை புரிந்துக் கொள்ள முடியும்.
கற்றல் நெருக்கடியை தீர்க்கவும், எழுத்தறிவு எண்ணறிவை போதிக்கவும், கற்றல் திறனை மேம்படுத்த தன்னார்வலர்களை நியமித்தல் மற்றும் பொருளாதார ரீதியில் பின் தங்கிய குழுக்களுக்கு முறைசார் மற்றும் முறைசாரா வழிகளில் கல்வியை விரிவுபடுத்துதல், தொண்டு நிறுவனங்களை கொண்டு பாடம் கற்பித்தல் போன்ற வழிகாட்டுதல்களின் பொருள் என்ன? அனைத்து குழந்தைகளுக்கும் வழமையான கல்வி முறையின் மூலம் (Formal Education) கல்வி வழங்குவதற்கு பதிலாக சமூக-பொருளாதார நிலைமைகளில் பின்தங்கிய நிலையிலிருந்து வரும் மாணவர்கள், பள்ளிக்கல்வியை தொடர முடியாத மாணவர்களுக்கு பள்ளிக்கு வெளியே (Informal Education) தன்னார்வலர்களையும் தொண்டு நிறுவனங்களையும் கொண்டு எழுத்தறிவும் எண்ணறிவும் வழங்கப்படும் என்பதே இதன் பொருள்.
இதனடிப்படையிலேயே, கொரோனாவினால் ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பு ஈடுகட்ட தன்னார்வலர்களைக் கொண்டு இல்லம் தேடி கல்வி திட்டம் உறுவாக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து இத்திட்டமானது எழுத்தறிவையும் எண்ணறிவையும் போதிக்கின்ற முறைசார கல்வியின் ஒரு வடிவம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைப்பது தான் உண்மையான நோக்கமெனில் அதற்காக மாநில அரசு பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை உடனடியாக அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் மத்திய மாநில அரசுகள் செய்திருப்பது என்ன?
கொரோனா பெருந்தொற்றில் மருத்துவ செலவீனங்களை தாக்குபிடிக்க முடியாமல் இந்திய நடுத்தர வர்க்கத்தினரில் 23 கோடி இந்தியர்கள் ஏழ்மை நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வு அறிக்கை கூறுகிறது. ஏழை, நடுத்தர வர்க்கத்தினரின் பொருளாதார வீழ்ச்சியானது லட்சக்கணக்கான மாணவர்களை தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளை நோக்கித் தள்ளியுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி 2021-2022 நடப்பு கல்வியாண்டில் மட்டும் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் சுமார் 6 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும் இதில் தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2.5 லட்சம் எனவும் கூறப்படுகிறது. இந்திய அளவிலோ, கடந்த ஆண்டில் மட்டும் அரசு பள்ளிகளின் சேர்க்கை விகிதம் 65.8% லிருந்து 70.3% மாக உயர்ந்துள்ளது. தனியார் பள்ளிகளின் சேர்க்கை விகிதமோ 30% லிருந்து 24.4% மாக குறைந்துள்ளது(ASER Report). ஆக அதிகமான மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்திருப்பதை மேற்கண்ட புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றனர்.
இந்நிலையில் அதிகமான மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்திருப்பதை சமாளிப்பதற்கும் ஏற்கனவே படிக்கும் மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரிசெய்வதற்கும் பள்ளி கல்விக்கென கூடுதல் நிதியையோ அல்லது புதிய திட்டங்களையோ மத்திய மாநில அரசுகள் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. மத்திய அரசோ ஒருபடி மேலே சென்று கல்விக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் 6% த்தை வெட்டியுள்ளது (Indian Express_19-11-2021). அதேவேளையில் இணையவழி கற்றல்-கற்பித்தலுக்கு முன்னுரிமை, ஒப்பந்த ஆசிரியர்களைக் கொண்டு சமாளிப்பது, கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளில் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களை அனுமதிப்பது, தன்னார்வலர்களைக் கொண்டு பாடம் நடத்துவது ஆகியவற்றின் மூலம் கற்றல் இடைவெளியை சமாளிக்க முயல்கின்றது மத்திய மாநில அரசுகள். மேலும் மேற்குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் கல்வியில் தனியார்மயத்தை தீவிரப்படுத்துவதற்கான திட்டங்களாகும்.
கொரோனாவால் மாணவர்களுக்கு கற்றலிழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஒப்பாரி வைக்கும் ஆளும் வர்க்கம் அதற்கு தீர்வாக இணையவழிக் கற்றலையும், தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை கொண்டு பாடம் நடத்துவதையும் முன்வைக்கின்றன. பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளிக்கும் இடைநிற்றலுக்கும் கொரோனாதான் காரணம் என்பது வடிகட்டியப்பொய். கொரோனாவிற்கு முன்பே கற்றல் இடைவெளி (5 ம் வகுப்பு மாணவன் 2ம் வகுப்பு கூட்டல் கணக்கை போடத்தெரியாமல் இருப்பது) அதிகரித்து வந்தது மறுக்க முடியாத உண்மை.
தனியார்மயம் தாராளமயம் புகுத்தப்பட்ட கடந்த முப்பதாண்டுகளில் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி படிப்படியாக குறைக்கப்பட்டு அரசு பள்ளிகளை பலவீனப்படுத்தி அவ்விடத்தில் தனியார் கல்வி நிறுவனங்களை வளர்ச்சியடையச் செய்துள்ளது இந்திய ஆளும் வர்க்கம். தற்போது மோடி அரசு நேரடியாக அந்நிய முதலீடுகளின் பிடியில் கல்வியை கொண்டு செல்வதற்கான வேலையை செய்துவருகிறது. இதன் மூலம் கல்வி வழங்குகின்ற கடமையிலிருந்து அரசு தன்னை படிப்படியாக விலக்கிக் கொண்டு பணம் உள்ளவனுக்கே தரமானக் கல்வி என்பதை யதார்த்தமாக்கியுள்ளது. இதுவே கற்றல் இடைவெளி உருவாவதற்கான பிரதான காரணமாகும்.
பல ஆண்டுகளாக வளர்ந்து வந்த பிரச்சினையை கொரோனா ஊரடங்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. கொரோனா காலத்தில் நிலவும் அசாதாரண சூழலையே சாதகமாக்கிக் கொண்டு NEP-யும் குறிப்பாக இணையவழிக் கற்றல்-கற்பித்தல் மற்றும் தொண்டு நிறுவனங்களையும் தன்னார்வலர்களையும் கல்வியில் அனுமதிப்பது ஆகிவற்றை மோடி அரசு செய்துவருகிறது. அதன் வெளிப்பாடுதான் இணையவழிக் கல்வி, கலவை கற்றல்-கற்பித்தல் முறை, இல்லம் தேடி கல்வி திட்டம், மதிப்பீட்டுத் தேர்வுகள் ஆகியவை.
தேர்தலுக்கு முன்பு NEP -ஐ எதிர்த்த தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய அரசின் கல்வி நடவடிக்கைகள் குறித்து மௌனம் காக்கிறது. NEP-ன் சில பரிந்துரைகளுக்கு மறைமுக ஆதரவளித்து வருவதுடன் அதில் உள்ள நல்லவற்றை எடுத்துக் கொள்வோம் என்கிறார் பள்ளிகல்வித் துறை அமைச்சர்.
கல்வியை கார்பரேட்மயமாக்குவதையும் காவிமயமாக்குவதையும் அடிப்படையாகக் கொண்டது NEP-2020 அறிக்கை. அதன் பரிந்துரைகள் பெரும்பான்மை மக்களுக்கு எதிரானவை. இப்பரிந்துரைகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நடைமுறைப்படுத்துவதை முறியடிக்க வேண்டியது நமது கடமை. இதற்கு மாணவர்களும் பெற்றோர்களும் மாணவர் அமைப்புகளும் கல்வியாளர்களும் ஒன்றாக இணைந்து செயல்படுவது மிக அவசியமாகும்.
முத்துச்சாமி பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்நாடு