கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்கள் படிப்படியாக செயல்படத் தொடங்கியிருக்கிறன. நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலுமான பள்ளிகளையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில், கொரோனா காலத்தில் முறையான பள்ளிப்படிப்பைப் பெற முடியாத எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கல்வி இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கான ஆறு மாதகாலத் திட்டம் ஒன்றையும் நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளது.
‘‘இல்லம் தேடிவரும் கல்வி’’ என்றும் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம் மூலம், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மாலை ஐந்து முதல் ஏழு மணி வரை குறைந்தபட்சம் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரத்துக்கு, பள்ளி செல்லாத காலத்தில் விடுபட்ட பாடங்களை நடத்துவது, தற்போது பள்ளியில் படிக்கும் பாடங்களுக்கான இடைவெளியை நிரப்புவது என்பதை நோக்கமாக அறிவித்துள்ளது தமிழக அரசு.
இத்திட்டம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது. ஒன்றிய அளவில் இரண்டு ஆசிரியர்கள் மேற்பார்வையிடுவது, கல்வித்துறை அதிகாரிகள் இத்திட்டத்தை ஒருங்கிணைக்கவும், சோதிக்கவும் பொறுப்பேற்பது என்ற வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் அதிகாரிகளே மாநில அளவில் தலைமை தாங்குவார்கள் எனவும், இத்திட்டத்திற்கென 200 கோடி ரூபாயை மாநில அரசே ஒதுக்கும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. வாரந்தோறும் குறைந்தது ஆறு மணிநேரம் கற்பித்தல் பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை, சான்றிதழ் மற்றும் விருதுகள் கொடுக்கவிருப்பதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.
படிக்க :
மராட்டியம் : வரலாறு பாடநூல்கள் காவி மயமாக்கப்பட்ட வரலாறு !
புதிய கல்விக் கொள்கையை கமுக்கமாக அனுமதிக்கும் தி.மு.க !
புதிய கல்விக்கொள்கையைப் புறவழியாகத் திணித்து பள்ளிக்கல்வியைப் பலவீனப்படுத்தும் திட்டம், ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஊடுருவ வாய்ப்பளிக்கும் திட்டம் என்ற விமர்சனங்களை மாணவர் அமைப்புகள், கல்வியாளர்கள் இத்திட்டத்தின் மீது முன்வைத்துள்ளனர். ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு ‘சமூகநீதி’ சான்றிதழ் வழங்கி வந்த திராவிடர் கழகத் தலைவர் வீரமணியும் கூட, ‘‘ஆர்.எஸ்.எஸ் அபாயம் கொண்ட திட்டம்’’, ‘‘புதிய கல்விக் கொள்கையைத் துண்டு துண்டாக நடைமுறைபடுத்தும் திட்டம்’’ என்று விமர்சித்திருக்கிறார்.
000
2020 மார்ச் இறுதியில் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலம் முதல் 2021 அக்டோபர் முடியும் வரை, பள்ளி மாணவர்கள் தமது இயல்பான பள்ளிக்கூட படிப்பை இழந்து விட்டனர். ஒட்டுமொத்த மாணவர் சமூகத்திற்குமே இக்காலகட்டம் பெரிய இழப்பு மட்டுமல்ல, பாடம் பயிலும் மனநிலையில் பெரும் பாதிப்பு, வேலைகளுக்குச் செல்ல வேண்டிய குடும்பச்சூழல் போன்ற நெருக்கடிகள் உருவாகியுள்ளன என்பதை எவரும் மறுக்கவியலாது.
இந்தச் சிக்கல்களை எதிர்கொள்ளவும், மாணவர்களை பள்ளிச்சூழலுக்கு மீண்டும் தயார்படுத்தவும், ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், எதிர்க்கட்சிகளும் இதுநாள் வரை எந்தவிதமான ஆலோசனைகளையும் முன்வைக்கவில்லை. அதே நேரத்தில், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தொடர்ந்து இப்பிரச்சினைக்கான தீர்வுகளை முன்வைத்து வந்தது.
குறிப்பாக, கொரோனா இரண்டாம் அலை பரவிய காலகட்டத்தில், 2021 மே மாதம் முதலே, பள்ளி ஆசிரியர்கள் தலைமையில், பட்டதாரி இளைஞர்களைக் கொண்ட குழுக்களை உருவாக்கி, குடியிருப்புப் பகுதிகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தும் திட்டத்தை பு.மா.இ.மு முன்வைத்தது. இதன் மூலம், மாணவர்களை பள்ளிச்சூழலுக்குத் தயார்படுத்த வேண்டுமென வலியுறுத்தியது. சில கல்வியாளர்களும் இப்பிரச்சினை குறித்து பேசியிருக்கின்றனர். அப்போதெல்லாம் காதுகொடுக்காத தமிழக அரசு, நிலைமை சீராகிவிட்ட பின்னர், பள்ளிகள் எல்லாம் திறக்கப்பட்ட பின்னர், இல்லம் தேடி கல்வி இயக்கத்தை அறிவித்திருப்பது எதற்காக?
கொரோனா ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டு இலட்சம் மாணவர்களுக்கு மேல் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு புதிதாக இவ்வாண்டு வந்துள்ளதாக தமிழக அரசே கூறியிருக்கிறது. அப்படியெனில், மாணவர்களின் கற்றல் இடைவெளியை நிரப்புவதில் ‘அக்கறை’ கொண்ட அரசு செய்ய வேண்டிய உடனடிக் கடமைகள் என்ன?
தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஓராசிரியர், ஈராசிரியர் தொடக்கப்பள்ளிகளில், வகுப்புக்கு ஓர் ஆசிரியரை நியமித்திருக்க வேண்டும். ஆசிரியர், வகுப்பறைகள், குடிநீர், கழிவறை, ஆய்வகம் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த போர்க்கால அடிப்படையில் செயல்பட்டிருக்க வேண்டும். மாறாக, தமிழக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?
பள்ளிக்கல்வியைப் பலவீனப்படுத்தும் வகையில், புதிய கல்விக்கொள்கை அடிப்படையில், பள்ளிக்கு வெளியே தன்னார்வலர் மூலம் கற்பித்தல் முறையைத் திணித்திருக்கிறது. இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும் நிலையில், ஆறு மாதங்களுக்குப் பிறகும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
மோடி அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுப்பதாகவும், தமிழகத்திற்கென புதிய கல்விக்கொள்கையை உருவாக்க உயர்மட்ட வல்லுநர் குழு அமைக்கப்படும் எனவும் சொல்லிக் கொண்டே, கொல்லைப்புற வழியாக புதிய கல்விக்கொள்கையைத் திணிக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு. அதனால்தான், தி.மு.க.வின் கழக ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று சதாசர்வகாலமும் பேசிவரும் பார்ப்பன தினமலர் பத்திரிகை ‘‘புதிய கல்வி கொள்கைக்கு செயல் வடிவம் − இல்லம் தேடி கல்வி’’ என இத்திட்டத்தைப் பாராட்டுகிறது; பா.ஜ.க.வோ திமுக அரசின் இத்திட்டத்தை வரவேற்கிறது.
புதிய ஜனநாயகம் மாத இதழ் சந்தா :
‘‘இல்லம் தேடி கல்வி’’ இயக்க அறிவிப்பு வந்துள்ள அதே நேரத்தில்தான், ஆர்.எஸ்.எஸ்.சின் துணை அமைப்பான வித்யா பாரதி, ‘‘கல்வித்துறையில் சேவைபுரியும் ஆர்.எஸ்.எஸ்−ன் துணை அமைப்பான வித்யா பாரதி அமைப்பின் கீழ், நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு, பாரதிய பண்பாட்டு வகுப்பு என்பது பள்ளியிலும் பொது தளத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பாரதிய பண்பாட்டு வகுப்பில், வளரும் நமது குழந்தைகளுக்குத் தேவையான ஹிந்து சமய கதைகள், ஆன்மிக பெரியோர் வரலாறு, ஹிந்து வாழ்வியல் நெறிமுறை, பாரத நாட்டின் வீர வரலாறு, பண்புக் கதைகள் போன்றவை கற்றுக்கொடுக்கப்படுகின்றன.
இந்த வகுப்பை தங்கள் பகுதியில் நடத்த ஆர்வம் உள்ள கல்லூரி மாணவர்கள், குடும்பத் தலைவர்கள், இல்லத்தரசிகள், ஓய்வு பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்ட சமூக சேவை எண்ணம் கொண்ட தன்னார்வலர்கள் தேவை…’’ என்ற அறிவிப்பைச் செய்துள்ளது. இதே வகையிலான தன்னார்வலர்களைத்தான் இல்லம் தேடி கல்வி இயக்கமும் தேடிக் கொண்டிருக்கிறது.
இதனாலேயே இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம், காவி கும்பலின் இலக்குப் பகுதிகளான கொங்கு மண்டலம், தென் தமிழகம் ஆகியவற்றில், பள்ளிக்குழந்தைகளின் பிஞ்சு மனதில் இந்த காவி கும்பல் இந்துமதவெறி நஞ்சை விதைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த உண்மையை திமுக அரசு நன்கு உணர்ந்திருந்தும், காவி கும்பலின் ‘சமூக’ சேவை அமைப்புகளுக்கு இந்தத் திட்டத்தில் இடமில்லை என்று அறிவிக்கவில்லை. இதுதான், ‘‘சமூக நீதி’’, ‘‘மத நல்லிணக்கம்’’, ‘‘பாசிச எதிர்ப்பு’’ பேசி ஆட்சியைப் பிடித்த தி.மு.க.வின் உண்மை முகம்.
இந்தத் திட்டம் மட்டுமல்ல, 3, 5, 8, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திறனறித் தேர்வை, ‘‘கரோனா தொற்றால் மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் குறைபாட்டைக் கண்டறியும் இந்தத் தேர்வு நவம்பர் 12−ம் தேதி நடைபெற உள்ளது’’ என மத்திய அரசு அறிவித்ததை, தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது திமுக அரசு. ஏற்கெனவே, 2018−19 கல்வியாண்டு முதல் 5, 8 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என புதிய கல்விக் கொள்கையை அதிமுக அரசு திணிக்க முயற்சி செய்தபோது, அதைக் கடுமையாகச் சாடியது திமுக. இப்போதோ, ‘அடிமை’ எடப்பாடி வழியில் வீறுநடை போடுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் புதிய கல்விக்கொள்கையை மட்டுமல்ல சமஸ்கிருதத் திணிப்புக்கும் வழிவகை செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு. பார்ப்பனிய கலை வடிவங்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற கலைவிழாக்களை, ‘கலா உத்சவ் – 2021’ என்ற பெயரில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகள் மட்டத்தில் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவும் அடிமை அதிமுக ஆட்சிக் காலத்தில் இருந்தே நடத்தப்படுவது தான் என சில ‘திடீர்’ உடன் பிறப்புக்கள் திமுக−வுக்கு முட்டுக் கொடுக்கக்கூடும்.
படிக்க :
மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் : விவசாயிகளின் வெற்றி நிலையானதா ?
புதிய ஜனநாயகம் நவம்பர் – 2021 அச்சு இதழ் !
புதிய கல்விக்கொள்கையை நிராகரிப்பதாக தமிழக முதல்வர் மேடையில் பேசிவிட்டு இறங்கும் நேரத்திலேயே, அதற்கு எதிரான அறிவிப்பு ஒன்றை கல்வித்துறை அறிவிப்பது வாடிக்கையாகி வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம், ‘‘தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான கலை மற்றும் கலாச்சாரம் குறித்த பயிற்சி அளிக்கப்படவிருப்பதாக’’ தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது எட்டுக் கட்ட பயிற்சி என்றும், அதன் முதல்கட்டம் வருகின்ற நவம்பர் 15 முதல் 7 வரை இணையவழியில் பயிற்சிப் பட்டறை நடக்கவிருப்பதாகவும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின் தொழிற்கல்வி இணை இயக்குனர் 12 மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்தப் பயிற்சியை தில்லியைச் சேர்ந்த கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம் (Centre for Cultural Resources and Training) அளிக்கவுள்ளது. அதாவது, புதிய கல்விக்கொள்கையை நடைமுறைப் படுத்துபவர்கள் மூலமாகவே, இந்த கலை மற்றும் கலாச்சாரப் பயிற்சியை நடத்த உத்தரவு போடுகிறது திமுக அரசு.
தொகுப்பாக சொன்னால், காவிகளால் இந்த நாட்டுக்கு ஆபத்து என்றும், தாங்கள்தான் சமூக நீதிக் காவலர்கள் என்றும் பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடித்தது திமுக. மாணவர் விரோத புதிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்றும், மாற்றுக் கல்விக்கொள்கை உருவாக்கவிருப்பதாகவும் சொன்னார் முதல்வர் ஸ்டாலின். அதே கட்சி, அதே முதல்வர்தான், இப்போது புதிய கல்விக் கொள்கையை வெவ்வேறு பெயர்கள், வடிவங்களில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கல்வித்துறையை காவி–கார்ப்பரேட் கும்பலுக்குத் திறந்து விடும் ‘கரசேவை’யை, ‘‘கல்வியில் நடக்கும் மாபெரும் புரட்சி’’, ‘‘மறுமலர்ச்சி’’ என வர்ணிக்கிறார் முதலமைச்சர்.
சமூகநீதி, திராவிடம் ஆகியவற்றின் எல்லை எதுவென காட்டிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. திமுக ஆட்சிக்கு வந்தால், ‘கேப்பையில் நெய் வடியும்’ என சத்தியம் செய்தவர்கள், தி.மு.க.வின் வெற்றிக்குப் பாடுபட்டவர்கள், தி.மு.க. அரசு கல்வியில் செய்துவரும் ‘கரசேவைக்’ குறித்து மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.
புதிய ஜனநாயகம்

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க