12.12.2024
திருவண்ணாமலை:
பள்ளிக்குச் செல்வது படிக்கவா, பல்லக்குச் சுமக்கவா?
கண்டன அறிக்கை
திருவண்ணாமலை தீபத் திருவிழாவின்போது பள்ளி மாணவர்கள் சீருடையில் பல்லக்குச் சுமந்து சென்ற நிகழ்வு அரங்கேறியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபத் திருவிழாவின் போது 63 நாயன்மார் சிலைகளை, பல்லக்கில் ஏற்றி வீதி வீதியாக பள்ளி மாணவர்கள் சுமந்து செல்வது குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. தமிழ்நாடு அரசும் இந்துசமய அறநிலையத்துறையும் இந்த விமர்சனங்கள் எதையும் பொருட்படுத்தாமல், அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை இதேபோல் நடத்தி வருகின்றன. பஜனை பாட வைப்பதும், பல்லக்குத் தூக்க வைப்பதுமா ‘திராவிட மாடல்’? இதைத்தானே குஜராத்திலும் உ.பி.யிலும், சங்கிகள் வலுவாக இருக்கும் பிற மாநிலங்களிலும் செய்து கொண்டிருக்கிறார்கள். அதே வழியில் பயணிப்பதன் பெயரா பாசிச எதிர்ப்பு?
பள்ளி மாணவர்களை இது போன்ற நிகழ்வுகளில் ஈடுபடுத்தலாமா?
இவையெல்லாம் சாதாரணமான பக்தி நடவடிக்கை தானே என சிலர் கருதலாம். 25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரணமாகத் துவங்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாக்கள் இன்று எப்படி நடக்கின்றன என்பதைப் பரிசீலித்துப் பார்க்க வேண்டும். அவரவர் தெருக்களில் இருந்த மாணவர்கள் – இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சாதாரணமாக நடத்திய விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகளுக்குள், இந்து முன்னணி போன்ற சங்பரிவார கும்பல் நுழைந்த பிறகு ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மதவெறிக் கலவரங்களுக்கான அச்சாரமாக மாற்றப்பட்டு வருவதை கண் முன்னால் பார்க்கிறோமா இல்லையா?
அதைப் போலவே, பள்ளி மாணவர்கள் சாதாரணமாக கோயில் விழாக்களில் பங்கேற்பது என்ற வகையில் பஜனை பாடுவதையும், பல்லக்குத் தூக்குவதையும் நாளை, மதவெறியாக வளர்த்தெடுக்கும் நோக்கில்தான் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் அணுகுகிறது.
மக்கள் ஒருவரை ஒருவர் சமமானவர் என்று நினைப்பதற்கு பதிலாக ஒருவரை வேறுபடுத்தி பார்க்கச் செய்வதும், மதவெறி ஊட்டி மற்றவர்களைத் தாக்கும் மனநிலையை ஏற்படுத்துவதும் எப்படி சரியாகும். இதற்கான இன்னொரு சான்றுதான், கர்நாடகத்தில் உருவாக்கப்பட்ட ஹிஜாப் பிரச்சினை. ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிசக் கும்பல், மாணவர்களின் நெஞ்சில் நஞ்சை விதைப்பதை நாம் அனுமதிக்க முடியுமா?
பள்ளி, கல்லூரிகளில் தொடரும் காவிமயமாக்க நடவடிக்கைகள்
இந்த ஆண்டு மதுரை புத்தகக் கண்காட்சிக்கு 2,000 மாணவிகள் வரை அழைத்து வரப்பட்டிருந்த போது, அங்கு பக்தி பாடல் பாடப்பட்ட நிகழ்வும் அதில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் உணர்ச்சி வசப்பட்டு சாமியாடிய நிகழ்வுகளும் அரங்கேறின. இது குறித்து கல்வியாளர்களும், சமூக அக்கறை உள்ளவர்களும் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தினர். அதன் பிறகு, உள்நோக்கத்துடன் பாடப்படவில்லை, தெரியாமல் நடந்து விட்டது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சமாளித்தது தனிக்கதை.
பழனி முருகன் மாநாட்டில் கந்த சஷ்டி கவச பாராயணத்துக்கு தீர்மானம் போட்டது, மயிலாப்பூர் கோயிலில் பஜனை பாட வைத்தது, மூடநம்பிக்கை பிரச்சாரம் செய்யும் மகாவிஷ்ணுவை பள்ளியில் பேச வைத்தது என பள்ளிக்கல்வித்துறையே காவிச் சாயத்தில் மூழ்கடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிகழ்வுக்கும் கடுமையான கண்டனங்கள் எழுவதும், அரசு தரப்பில் ஏதேனும் செய்து சமாளிப்பதுமாகத்தான் நாட்கள் நகர்கின்றன. பிரச்சினைக்கான ஆணிவேரை கண்டறிந்து களையெடுக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்பதை, அதன் நடவடிக்கைகளே காட்டுகின்றன.
இதுபோன்ற பிரச்சினைகள் நிகழாத வண்ணம் தடுப்பதற்கு கமிட்டி அமைப்பது என்ற பெயரில், பிரச்சினைக்குக் காரணமாக இருக்கும் அதிகாரிகளிடமே மீண்டும் அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறது அரசு. போதாக்குறைக்கு காவல் நிலையத்தையும், உளவுப் பிரிவு போலீசையும் கல்வித்துறையுடன் இணைக்கும் வேலையையும் நைச்சியமாக செய்ய முனைகிறது.
செய்ய வேண்டியது என்ன?
ஆயுத பூசை, சரஸ்வதி பூசை உள்ளிட்ட இந்துமதப் பண்டிகைகளை பள்ளிகளில் கொண்டாடுவது உள்ளிட்ட இந்துத்துவ சார்பு நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கல்வி நிலையங்களுக்கு வெளியே நடத்தப்படும் ‘ஆன்மீக’ நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களை அனுப்புவதையும் தடை செய்ய வேண்டும். அதையும் மீறி இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் பள்ளி, கல்லூரிகளின் தலைமை ஆசிரியர் – முதல்வர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்ய வேண்டும். இவை தற்காலிகமான நடவடிக்கைகளே. மாணவர்களை ஜனநாயகப்பூர்வமாகவும், அறிவியல்பூர்வமாகவும் வளர்த்தெடுப்பதற்கான மாற்றுக் கட்டமைப்பை உருவாக்குவது பற்றிய விவாதத்தை தொடங்க வேண்டும். ஒவ்வொரு கல்வி நிலையத்திலும் ஆசிரியர் – பெற்றோர் – மாணவர்கள் பங்கேற்கும் கமிட்டிகள் அமைப்பதும், அதற்கான களப்போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியதும் இன்றைய அவசரத் தேவையாக உள்ளன.
தோழர். ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
9444836642.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram