கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள தனியார் தொண்டு நிறுவனத்துக்கு அனுமதி !
பின்வாசல் வழியாக புதிய கல்விக் கொள்கையை அனுமதிக்கும் தி.மு.க அரசு !
யிரக்கணக்கான ஏழை மக்களின் கல்வியுரிமையைப் பறித்து, அவர்களைத் தற்குறிகளாக்கி, இந்தியாவின் மொத்தக் கல்விச் சந்தையையும் கார்ப்பரேட்டுகளிடம் தூக்கிக் கொடுப்பதையும் இருக்கும் கொஞ்சநஞ்ச அறிவியல் பூர்வமான கல்வியையும் ஒழித்து காவிமயத்தை கல்வியில் புகுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட “புதிய கல்விக் கொள்கை 2020”-ஐ கடந்த ஜீலை மாதம் மோடி அரசு நிறைவேற்றியது.
தற்போது நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடக மாநிலத்தில் அக்கல்விக் கொள்கை அமல்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்துப் பேசிய கர்நாடக முதல்வர் பசுவராஜ் பொம்மை “மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாணவர்களுக்கும் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு சேர்ப்பதே அதன் வெற்றி” என்று கூறியுள்ளார். கர்நாடக அரசின் இந்த அறிவிப்புக்குப் பின், அதன் கூட்டணி ஆட்சியுள்ள புதுச்சேரியிலும் கூட புதிய கல்விக் கொள்கை 2020-ஐ அமல்படுத்துவதைப் பற்றிய ஆலோசனை நடந்து வருகின்றது.
படிக்க :
‘சிங்காரச் சென்னை’ : ஆர்.கே நகர் வீடுகளை இடித்த திமுக அரசு !
நாசகர கிடெக்ஸ் நிறுவனத்துக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் திமுக அரசு !
அதேபோல, “சமூக நீதியின் மண்” என்று திராவிட இயக்கத்தினர் பெருமைப்பட்டுக் கொள்ளும் தமிழ்நாட்டிலும் இது படிப்படியாக அமுலுக்கு வரவிருப்பதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன. தேர்தலுக்கு முன்பிருந்தே தி.மு.க., சமூக நீதி பறிபோகிறது, மாநில உரிமை பறிபோகிறது, இந்தி, சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது, குலக்கல்வி முறை அமுலுக்கு வருகிறது போன்ற அளவில் மட்டுமே புதிய கல்விக் கொள்கையை எதிர்த்துப் பேசியது.
அக்கொள்கையிலிருக்கும் கார்ப்பரேட் நலன்களையும், அது எப்படி இந்து ராஷ்டிரத்துக்கான கல்விக் கொள்கையாக இருக்கிறது என்பதையும் முழுமையாக மக்களிடம் அம்பலப்படுத்தவோ, பேசவோ இல்லை. தி.மு.க கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் கட்சி தான் என்பது ஏற்கெனவே வெளிப்படையாகத் தெரிந்தாலும், காவிகளுடன் சமரசம் செய்து கொள்ளும் போக்கு இப்போது அதிகரித்து வருகிறது, என்பதை இடைக்குறிப்பாக இங்கே சொல்லலாம்.
அகஸ்தியா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கை
கடந்த மே மாதம் தி.மு.க ஆட்சி அமைந்ததிலிருந்து புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதில் அது உறுதியாக இருப்பதாக எல்லா ஊடகங்களிலும் செய்திகள் பரவின. ஆனால், அது முழு உண்மையல்ல. அதற்குச் சில உதாரணங்களைப் பார்ப்போம்.
மே 17-ம் தேதி, அப்போதைய ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு ‘கலந்து கொள்ளாததைப்’ பற்றிப் பேட்டியளித்த தமிழ்நாட்டின் கல்வியமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “இது புறக்கணிப்பல்ல” “கலந்துகொள்ளாமைதான்” “இதை (புதிய கல்விக் கொள்கை) வைத்து நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை, அவர்களுடன் (ஒன்றிய அரசுடன்) நாங்கள் சண்டையிட விரும்பவில்லை” என்று கூறியுள்ளார். மேலும் அதே பேட்டியில், புதிய கல்விக் கொள்கையில் “திருத்தம் வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.
ஏராளமான மக்கள் விரோதச் சட்டங்களை மூர்க்கமாக அமலாக்கி வரும் ஒன்றிய அரசுடன் சண்டையிடாமல் புதிய கல்விக் கொள்கையை மட்டும் எப்படி முறியடிக்க முடியும்? புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று ஒருபுறம் முழங்கும் தி.மு.க., “திருத்த”த்தைப் பற்றிப் ஏன் பேச வேண்டும்? ஒருபுறம் மோடி அரசைக் கடுமையாக எதிர்ப்பதுபோலக் காட்டிக் கொண்டு அதனுடன் இணக்கமாக நடந்து கொள்ளும் தி.மு.க-வின் இந்தச் சமரசப் போக்குதான் தமிழக மக்கள் மனதில் இருக்கும் பா.ஜ.க எதிர்ப்புணர்வை மழுங்கடிக்கிறது என்பதை இங்கே நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
அகஸ்தியா பன்னாடுத் தொண்டு நிறுவனத்தின் தலைவர் ராம்ஜி ராகவன்
கல்வியில் அரசின் பாத்திரத்தை ஒழித்துக்கட்டும் நோக்கில், “கற்றல், கற்பித்தல் பணிகளில் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்த வேண்டும்” என்று புதிய கல்விக் கொள்கை கூறுகிறது. அந்த அடிப்படையில் கடந்த ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில், அகஸ்தியா என்ற பன்னாட்டுத் தொண்டு நிறுவனம் (Agastya International Foundation)12 மாவட்டங்களில் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது. இதற்கு அப்போது கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க-வும் இதை எதிர்த்தது.
தற்போது தி.மு.க அரசோ, அதே அகஸ்தியா நிறுவனத்திற்கு 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பாடங்களை இணையவழியில் பாடம் நடத்த அனுமதி வழங்கியுள்ளதோடு, அந்நிறுனத்திற்கு “ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” என்று மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு உத்திரவிட்டு சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளது. மேலும், 18 மாவட்டங்களில் அறிவியல் ஆய்வு மையங்களை அமைக்கவும் அந்நிறுவனத்திற்கு அனுமதியளித்துள்ளது.
இன்னொருபுறம், இந்த அகஸ்தியா தொண்டு நிறுவனத்தின் தலைவர் ராம்ஜி ராகவன் என்பவர் ஒன்றிய மோடி அரசின் கல்விக்குழு உறுப்பினராகவும், பிரதமரின் அறிவியல் ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்தவர். இப்படிப்பட்ட, ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்ட இந்த அமைப்புக்கு ‘திராவிட’ தி.மு.க அனுமதியளித்துவிட்டு, இதை எதிர்த்து சட்டப்பேரவையில் கடந்த வியாழன் அன்று (26.08.2021) கேள்வியெழுந்தபோது, “மாணவர்களிடத்தில் அவர்கள் கொள்கையை திணிப்பதை அனுமதிக்க மாட்டோம்” என்று பதிலளித்துள்ளார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. ஆர்.எஸ்.எஸ் சார்பு கல்வி நிறுவனத்துக்கு அனுமதியளிப்பார்களாம், ஆனால் அவர்கள் கொள்கையைத் திணிப்பதைத் தடுப்பார்களாம். இந்த வெட்கக் கேட்டை என்னவென்று சொல்வது?
படிக்க :
♦ திமுக-வின் எதிரி ஆர்.எஸ்.எஸ் அல்ல – பாஜக மட்டுமே || ர.முகமது இல்யாஸ்
♦ ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் நிகழ்ச்சிநிரலுக்கு பின் செல்லும் திமுக || மக்கள் அதிகாரம்
ஏழை மக்களின் கல்வியுரிமை மீதான கொடிய தாக்குதலான புதிய கல்விக் கொள்கையை அமலாக்கும் நோக்கில், கல்வியை அரசு கைகழுவுவதற்கான முதல்படிதான் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைக் கொண்டு கற்பித்தல் பணிகளை மேற்கொள்வது. இதற்காகத்தான் கற்றல், கற்பித்தல் பணிகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை 20-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் கடந்த ஆண்டிலிருந்து ஈடுபடுத்தி வருகின்றன. எனவே, திமுக அரசின் இந்த நடவடிக்கை என்பது புதிய கல்வி கொள்கை 2020-ஐ பின்வாசல் வழியாக அனுமதிப்பதன் தொடக்கமே அன்றி வேறொன்றுமில்லை.
தேர்தலின்போது நீட் எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, தமிழ்நாட்டுக்குத் தனிக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் – என்று தி.மு.க வாய் கிழியப் பேசியதெல்லாம் வெறும் ஓட்டுப் பொறுக்கத்தான் என்பது அடுத்தடுத்து நிரூபணமாகி வருகிறது.
பாசிச எதிர்ப்பு என்பது வெறும் பாஜக எதிர்ப்பு அல்ல; மாறாக, கல்வி, மருத்துவம், ஆட்சி அதிகாரம், கலாச்சாரம் ஆகிய துறைகளில் சங்க பரிவார பாசிச கும்பலின் மறைமுகமான ஆதிக்கத்தை முறியடித்தும் தான். இந்தப் பணிதான் முக்கியமானதும் கூட !!

துலிபா
செய்தி ஆதாரம் : இந்து தமிழ்