கேரளாவில் கடந்த இரு வாரங்களாக பெரிதும் பேசப்பட்டு வரும் பிரச்சனை கிடெக்ஸ் (kitex) என்ற கார்பரேட் நிறுவனம் கேரளா அரசுடன் போட்டுக் கொண்ட ரூ. 3,500 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொண்டுள்ளது என்பதுதான்.

கிடெக்ஸ் கேரளாவிலிருந்து ஒப்பந்தத்தை விலக்கிக் கொள்ளப் போவதை அறிந்து அண்டை மாநிலங்களான கர்நாடகா, தெலுங்கானா, தமிழ்நாடு என போட்டி போட்டு சலுகை மேல் சலுகை கொடுத்து “நீங்க வந்தா மட்டும்போதும்” என்று அந்நிறுவனத்தை தங்கத் தாம்பூலம் வைத்து வரவேற்கிறார்கள்.

படிக்க :
♦ பெண்களின் உயிரை உறிஞ்சும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் !
♦ ஆயத்த ஆடை தொழிலாளர்கள் – இளமையில் முதுமை, மரணம் ஏன்?

கிடெக்ஸ் என்பது அன்னா கிடெக்ஸ் குரூப் என்ற கார்ப்பரேட் நிறுவனத்தின் ஒரு பிரிவாகும். இந்நிறுவனம் ஆடை நெசவுத் தொழிலில் ஈடுபடும் நிறுவனம் ஆகும்.

அன்னா கிடெக்ஸ் குரூப் என்ற நிறுவனம் 1968-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 1992-ம் ஆண்டில் இதன் மற்றொரு உற்பத்தி நிறுவனமாக கிடெக்ஸ் லிமிடெட், கொச்சியில் உள்ள கிஷக்கம்பலத்தில் ஆடை வடிவமைப்பு, பள்ளி பைகள் தாயரிக்கும் தொழிற்சாலையாக தொடங்கப்பட்டது. அதற்கு பின் டிராவல் பைகள், பேபி ஸ்கூபீ குழந்தைகள் உடைகள், மற்றும் ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கான உள்ளாடைகள் என இந்த நிறுவனம் விரிவடைந்தது.

கிடெக்ஸின் ஆடை தொழிற்சாலை நிறுவப்பட்ட தொடக்க காலத்திலேயே, உள்ளூர் மக்கள் அந்நிறுவனத்திற்கு எதிராக திரண்டு போராட்டம் நடத்தி எதிர்ப்பைக் காட்டியுள்ளனர். இந்நிறுவனம் அபாயகரமான இரசாயனங்கள் மற்றும் கழிவு நீரை, அருகிலுள்ள பள்ளங்கள் மற்றும் பெரியார் பாலம் ஆகியவற்றில்தான் கலக்கிறது.

மேலும், 2012-ம் ஆண்டில் தி இந்து பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட ஒரு செய்தி அறிக்கை கூறுவதாவது :

“ஊடகங்களில் உரையாற்றிய கவுன்சில் உறுப்பினர்கள், கிஷக்கம்பலத்தில் உள்ள சூரகோடு-செல்லக்குளம் பகுதிகளில் வசிப்பவர்கள் கடந்த 100 நாட்களில் நிறுவனம் ஏற்படுத்தியிருக்கும் மாசுபாட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிறுவனம் பெரியார் பள்ளத்தாக்கு கால்வாய் மற்றும் நெல் வயல்களில் கழிவுகளை வெளியேற்றுவதோடு மட்டுமல்லாமல், ஒரு நாளைக்கு எட்டு லட்சம் லிட்டருக்கும் அதிகமான தண்ணீரை உட்கொண்டதாகவும் கவுன்சில் குற்றம் சாட்டியது. ”

இப்படி, தொழிற்சாலைக்கு எதிராக மக்கள் திரண்டு போராடுவதை திசை திருப்பவும் போராட்ட உணர்வை நீர்த்துப் போகச் செய்யவும், தன்னுடைய நாசகர செயல்பாட்டை மூடி மறைக்கவும் “2020” என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கி அதன் வழியாக கிராம மக்களுக்கு சில ‘உதவிகளை’ தொடர்ச்சியாகச் செய்து வந்தனர்.

இதையெல்லாம் தாண்டி இந்த கார்ப்பரேட் நிறுவனம் உள்ளாட்சி தேர்தலிலும் தன்னுடைய கைவரிசையை காட்டத் தொடங்கியது. பணத்தை கொண்டும், தன்னுடைய சேவைகளின் மூலம் உருவாக்கிய பிம்பத்தை பயன்படுத்தியும் 2020-ம் ஆண்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 2020 (twenty twenty) அமைப்பிலிருந்து  19 வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி  18 வார்டுகளில் வென்றது. மேலும், அருகிலுள்ள மஜுவன்னூர், குன்னத்துநாடு, ஐக்காரநாடு என மூன்று பஞ்சாயத்துகளையும் கைப்பற்றியது.

இதன் மூலம் தங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை இல்லாமல் செய்து மக்களின் அனுமதியுடனே தன்னுடைய எல்லா குற்றங்களையும் நிறைவேற்ற முயற்சிக்கிறது. இந்த முறை சட்டமன்ற தேர்தலிலும் தனது வேட்பாளர்களை  நிறுத்தினார்கள். ஆனாலும் இந்த முறை குர்நாடு மற்றும் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் இவர்களின் வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்.

கிடெக்ஸ் நிறுவனம் உருவாக்கிய என்.ஜி.ஓ அமைப்பு

சென்ற முறையே இவர்கள் தோற்ற அந்த ஒரு வார்டு என்பது அந்த நிறுவனம் இருக்கும் பகுதி. இப்படி ஒரு கார்ப்பரேட் நிறுவனம், தன்மீதான எதிர்ப்புகளை ஒடுக்க ஒரு என்.ஜி.ஓ. அமைப்பை தொடங்கி அதைக் கொண்டு சட்டமன்ற தேர்தல் வரை சென்றுள்ளது  கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், கடந்த ஜுன் மாத இறுதியில் கேரள அரசு அதிகாரிகள் கிட்டெக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலைகளில் பரிசோதனை நடத்தினர். இதை பொறுத்து கொள்ள முடியாத கிட்டெக்ஸ் நிறுவனம் “தாங்கள் அரசியல் காரணங்களுக்காக துன்புறுத்தப் படுகிறோம். எங்கள் தொழிற்சாலையின் பல்வேறு இடங்களில் 40 – 50 அரசு அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து எங்கள் ஊழியர்களை துன்புறுத்துகிறார்கள்” என்று குற்றம் சாட்டியது.

இதன் அடுத்த நடவடிக்கையாக, 2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கொச்சியில் கேரள அரசு ஏற்பாடு செய்திருந்த ‘அசென்ட் கேரளா’ (ASCEND KERALA 2020) உலகளாவிய முதலீட்டாளர் கூட்டத்தில், கிடெக்ஸ் கார்மென்ட்ஸ் ஒரு ஆடை பூங்கா மற்றும் கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு ஆகிய இடங்களில் மூன்று தொழில்துறை பூங்காக்களை உருவாக்க ரூ.3,500 கோடி முதலீடு செய்ய முன்மொழிந்தது.

35,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று கூறிக் கொள்ளப்பட்ட இத்திட்டத்திற்காக நிலத்தை கையகப்படுத்த தொடங்கியது அந்நிறுவனம். மேலும், கொச்சியில் அமைக்கப்படவுள்ள ஆடை பூங்காவிற்கான திட்ட அறிக்கையைத் தயாரித்தது, முழு திட்டமும் 2025-ம் ஆண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சாபு ஜேக்கப், இப்போது கேரளாவில் இந்த திட்டத்தை முன்னெடுக்க விரும்பவில்லை என்றும் இதற்கு அதிகாரிகளின் துன்புறுத்தலே காரணம் என்றும் கூறி இத்திட்டத்தில் இருந்து விலகியுள்ளார்.

இதற்கு பதிலளித்த கேரள அரசு, குறைவான ஊதியம் மற்றும் போதிய வசதிகள் இல்லை என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு (என்.எச்.ஆர்.சி) அளிக்கப்பட்ட புகார்கள் காரணமாக கிட்டெக்ஸ் நிறுவனத்தில் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

கடந்த இரு வாரங்களாக இப்பிரச்சனை கேளரா முழுவதும் பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால், கேரள அரசும் கிட்டெக்ஸ் நிறுவனமும் எதிர் எதிர் கோணத்தில் நிற்கவில்லை. ஏனெனில், கிட்டெக்ஸ் நிறுவனம் தொடர்ந்து தொழிற்சாலை அமைக்கப்பட்டு இருக்கும் இடத்தில் கடுமையான சுற்றுசுழல் பாதிப்பை ஏற்படுத்தி வந்துள்ள நிலையிலும், தொழிற்சாலையில் மாசு கட்டுபாட்டு வாரியம் விதித்த முறையான விதிகளை பின்பற்றாமல் நிறுவனம் இயங்கி வரும் நிலையிலும், கேரள அரசு கிடெக்ஸ் நிறுவனம் தங்கள் மாநிலத்திலிருந்து வெளியேறுவதை விரும்பவில்லை. தங்களுடைய முந்தைய ஆட்சி காலங்களில் இதையெல்லாம் கண்டுகொள்ளவும் இல்லை. அந்நிறுவனத்திற்கு எதிரான மக்களுடைய போராட்டங்களையும் ஒடுக்கியே வந்துள்ளது.

நிலைமை இப்படியிருக்க, இந்த நாசகர நிறுவனத்தை அண்டை மாநிலங்களான தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு என பல மாநிலங்கள் சலுகைகளை வாரி இறைத்து இத்தொழிற்சாலையை தங்கள் மாநிலத்திற்கு கொண்டுவர கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதில் முன்னணியிலும் முதன்மையாகவும் இருப்பது தமிழ்நாடு அரசுதான். எந்த மாநிலமும் அதிகாரப் பூர்வமாக அழைப்பதற்கு முன்னதாகவே, அதிகாரப் பூர்வமாகவே சலுகைகளை அள்ளிக் கொடுத்து சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது மு.க.ஸ்டாலின் அரசு.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்நிறுவனம் செய்யும் முதலீட்டில் (ரூ.3,500 கோடி) 49% தொகையை மானியமாக அரசே வழங்கும், ஆலைக்குத் தேவையான நிலத்தை 50% மானிய விலையில் வழங்கும், பத்திர பதிவுக்கான தொகையில் 10% மானியம், ஐந்து வருடங்களுக்கு 5% குறைந்த வட்டியில் கடன், ஆலையைப் பராமரிக்க வேண்டிய சுற்றுச்சூழல் கழிவு மேலாண்மைத் திட்டத்திற்கு 25% மானியம், காப்புரிமை தொடர்பான செலவுகளில் 50% மானியம், பயிற்சித் தொழிலாளிகள் ஒவ்வொருவருக்கும் ரூ.4000 உதவித் தொகையை 6 மாதங்களுக்கு அரசே ஏற்கும், உற்பத்தி பொருள்களுக்கு தரச் சான்றிதழ் பெறுவதற்காக 50% மானியம், ஐந்து வருடங்களுக்கு மானிய விலையில் மின்சாரம், முதலீடு செய்யப்படும் மூலதன சொத்துகளுக்கு 100% ஜி.எஸ்.டி வரிவிலக்கு, தொழிலாளர்களின் சம்பளத்தில் 20% தொகையை தமிழ்நாடு அரசே பத்து வருடங்களுக்கு ஏற்கும், மேலும் SC/ST தொழிலாளர்களுக்கு ரூ.6,000 ஊக்க தொகை  வழங்கப்படும். இவையெல்லாம் தமிழக அரசு கிடெக்ஸ் நிறுவனத்தை வரவேற்று அறிவித்துள்ள சலுகைகள். தமிழ்நாடு அரசு சார்பாக அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளைப் பார்த்தால், குஜராத்தில் மோடி  அரசின் நடவடிக்கைகள் நமது நினைவுக்கு வருகின்றது.

இதற்கு மேல் சலுகையை வழங்க முடியுமா? என்று வாய் பிளக்கும் அளவில் வாரி கொடுத்துள்ளது திமுக அரசு. தன்னுடைய இலாபத்தை பெருக்க, சுற்றுச்சுழலை  நாசமாக்கி, விவசாய நிலங்களை அழித்து, நயவஞ்கமாக மக்களை ஏமாற்றும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு, சுற்றுச்சுழலை பாதுகாப்பதாகவும், விவசாயிகளின் தோழன் எனவும், மக்களின் நலனில் அக்கறை உள்ள அரசாகவும் விளம்பரப்படுத்திக் கொள்ளும் திமுக, இப்படி பல சலுகைகளை அறிவித்திருக்கிறது.

படிக்க :
♦ திமுக-வின் எதிரி ஆர்.எஸ்.எஸ் அல்ல – பாஜக மட்டுமே || ர.முகமது இல்யாஸ்
♦ பெட்ரோல் விலை குறைக்க நிதி இல்லை – பூங்காக்களுக்கு ரூ. 2500 கோடி ஒதுக்கும் திமுக அரசு

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசையே பணியச் செய்யவும், மக்களின் எதிர்ப்பை தமது என்.ஜி.ஓ அரசியல் மூலம் நீர்த்துப் போகச் செய்யவும், அந்த என்..ஜி.ஓ அமைப்பையே தேர்தலில் நிறுத்தி வெற்றிபெறச் செய்வதும் என ஒரு பெரிய ஜனநாயக விரோத சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியிருக்கிறது கிட்டெக்ஸ் நிறுவனம்.

தொழிலாளர்களுக்கு போதுமான சம்பளம் இல்லை, அடிப்படை வசதிகள் இல்லை என்பது போன்ற புகார்களுக்கு செவி சாய்த்து நிறுவனத்தில் ஆய்வு செய்ததையே பகிரங்கமாக கண்டிக்கும் அளவிற்கு, தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டுவதே இரத்தத்தில் ஊறவைக்கப்பட்ட இந்த நிறுவனம் தமிழகத்திற்கு வரப் போகிறதாம்.

இத்தகைய கொடூர கிட்டெக்ஸ் நிறுவனம், தமிழகத்திற்கு வந்தவுடன் தொழிலாளர்கள் மீதான சுரண்டலையும், சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதையும் கைவிட்டு புனிதனாக தம்மை மாற்றிக் கொண்டுவிடுமா ?

வெறும் ரூ. 3500 கோடி முதலீடு போடுபவனுக்கு, அதைவிட அதிகமான மக்களின் வரிப்பணத்தை சலுகைகளாக அள்ளிக் கொடுப்பதே கிரிமினல் குற்றம்தான்.  போதாத குறைக்கு வரவிருக்கும் நிறுவனத்தின் பின்புலமும் பெரும் கிரிமினல்மயமாக இருக்கிறது.

எதிர்க்கட்சிகளாக இருக்கும்போது மக்களின் போராட்டங்களுக்கு வால்பிடித்து, ஸ்டெர்லைட் போன்ற தனியார் நிறுவனங்களை எதிர்ப்பதாகக் காட்டிக் கொண்ட திமுக, தற்போது கிட்டெக்ஸ் நிறுவன விவகாரத்தில் அம்பலமாகியிருக்கிறது.

வெறுமனே அம்பலமாவது மட்டுமல்ல., நமக்கு எச்சரிக்கையையும்  விடுக்கின்றன. கிடெக்ஸ் எனும் நிறுவனத்தின் சுற்றுச் சூழல் விரோத, மக்கள் விரோத, தொழிலாளர் விரோதத்தன்மைக்கு  சிவப்புக் கம்பளம் விரிக்கும் திமுக அரசு, நாளை இதே தன்மையைக் கொண்ட ஸ்டெர்லைட் நிறுவனத்தை அனுமதிக்காதா என்ன?


மா. கார்க்கி
செய்தி ஆதாரம் : The Hindu, Mainstream weekly, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், ஜீலை 03, 2021