ஆயத்த ஆடைகள் – ஒப்பந்தப் பணிகளும் தொழிலாளர் பற்றாக்குறையும் – 3
மன்மோகன் மற்றும் சிதம்பரம் கோஷ்டியின் தாசானு தாசர்கள் முந்தைய கட்டுரைக்கு பின்வரும் தொனியில் பின்னூட்டத்தை தயாரித்திருப்பார்கள்.
//இந்த முதலாளித்துவத்தால்தான் மக்கள் வாழ்க்கைத்தரம் மேம்பட்டிருக்கிறது. ஆகவேதான் இப்போது எல்லா தொழிலிலும் கடும் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகிறது. //
எனவே தொழிலாளர் பற்றாக்குறை பற்றியும் பேசுவது இங்கே அவசியமாகிறது. தொழிலாளர் பற்றாக்குறை பல காரணங்களை உள்ளடக்கியது, அதற்கான காரணங்களில் இப்போதிருக்கும் உற்பத்தி முறையும் ஒன்று.
திருப்பூர் பொருளாதாரம் ஆட்டம் காணத்துவங்கிய 2010-ம் ஆண்டில் வெளியான ஃபிரண்ட்லைன் இதழின் கட்டுரையொன்றில் இந்தியாவில் அதிகம் தற்கொலைகள் நிகழும் நகரமாக திருப்பூர் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. அந்த தகவல் எனக்கு தெரிந்த பல நிறுவன அதிபர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. ஒரேயொருவர் மட்டும் அந்த கட்டுரையின் நகலை கையில் வைத்துக்கொண்டு பழைய தினமலர் நாளிதழ்களில் இருந்த தற்கொலைச் செய்திகளை திரட்டிக் கொண்டிருந்தார் (உதவிக்கு ஒரு மேலாளரும்). என் கண்களை என்னாலேயே நம்ப இயலவில்லை. நான்கு ஆண்டுகால பழக்கத்தில் அவர் நூல் விலை தவிர்த்த எந்த செய்தியையும் படித்து பார்த்ததில்லை.
அவரது நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள எஸ். ஆலிவர் எனும் ஜெர்மானிய இறக்குமதியாளர், அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சனைகள் உங்கள் தொழிற்சாலையில் இருக்கிறதா எனக் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்கள். அவர் அதற்கான பதிலை தனது நிறுவனத்தில் இருக்கும் தரவுகள் வாயிலாக தேடுவதற்கு பதிலாக தினமலரில் தேடிக் கொண்டிருந்தார்.
ஃபிரண்ட்லைன் கட்டுரையின் சாரம்சம் இதுதான் “அதிகரித்திருக்கும் விலைவாசியை சமாளிக்கும் அளவுக்கு ஊதியம் இல்லை. முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் திருப்பூரில் வேலை குறைவாக இருக்கிறது. இதனால் உருவாகும் குடும்ப மற்றும் பொருளாதார சிக்கல்களை பின்னலாடைத் துறையின் மோசமான பணியிடங்கள் இன்னும் தீவிரமாக்குகின்றன. இதன் காரணமாகவே திருப்பூரில் தற்கொலைகள் அதிகரிக்கின்றன.”
இந்த உள்ளடக்கம் பற்றி அவர் எந்தவிதமான அக்கறையும் கொண்டிருக்கவில்லை. அவர் தமது இறக்குமதியாளருக்கு நிரூபிக்க முயன்றது இதைதான் “இங்கே எல்லா தற்கொலைகளும் வயிற்றுவலி மற்றும் கள்ளக்காதல் காரணமாகவே நிகழ்கின்றன”. அதற்கான ஆதாரங்களைதான் அவர் தினமலரில் திரட்டிக் கொண்டிருந்தார். இதையொத்த பார்வைதான் போதிய வருவாய் சாதாரண தொழிலாளர்களுக்கு கிடைக்கிறது என்பதும், வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை எனும் நிலையை இதற்கான ஆதாரமாக காட்டுவதும்.
2010-ம் ஆண்டு திருப்பூரின் நிலையை பரிசீலிக்கலாம். அந்த ஆண்டில் அங்கே எல்லா இடத்திலும் ஆட்கள் தேவை எனும் அட்டைகள் தொங்க விடப்பட்டிருந்தன. அதே சமயத்தில்தான் திருப்பூரில் இருந்து வெளியேறும் குடும்பங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருந்தது. இந்த முரண்பாட்டிற்கான காரணத்தை அங்கே பணியாற்றியவர்களால் மட்டுமே அவதானிக்க முடியும். அப்போது எங்கள் பார்வை வட்டத்தில் இருந்த பல நிறுவனங்களில் இரவு 8 மணியோடு வேலை நிறுத்தப்பட்டது. சிங்கர் காண்ட்ராக்ட் எனப்படும் ஒரு பிரிவினருக்கு வாரத்தில் சில நாட்கள் வேலையில்லாமல் போனது (சிங்கர் – வீடுகளில் பயன்படுத்தப்படுவதையொத்த சக்தி வாய்ந்த தையல் எந்திரங்களை குறிப்பிடும் பொதுவான சொல். இந்தவகை எந்திர வேலைக்கான கூலி தைக்கும் ஆடைகளின் எண்ணிக்கை அடிப்படையில் தரப்படும்). சிறு தையற்கூடங்களுக்கு தரப்பட்ட உப ஒப்பந்தங்கள் கணிசமாக குறைக்கப்பட்டது.
மேற்சொன்ன காரணங்களால் பெரும்பான்மையான தொழிலாளர்கள் தங்களுக்கு மாதா மாதம் கிடைத்து வந்த சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை இழந்தார்கள். நேரெதிரே வீட்டு வாடகை உள்ளிட்ட விலைவாசி மிக மோசமான வகையில் உயர்ந்தது. இந்த நிலையை சமாளிக்க இயலாத மக்கள் ஊரைக் காலி செய்யும் நிலைக்கு வந்தார்கள். அப்படி இழந்த தொழிலாளர் எண்ணிக்கையை ஈடு கட்டத்தான் புதிய தொழிலாளர்கள் அங்கே தேவைப்பட்டார்கள். அப்போதும் வேலையில்லாமல் தவித்த பல ஒப்பந்தக்காரர்களை எனக்கு தெரியும். இந்தச் சூழல் பற்றிய அறிவும் அக்கறையும் இல்லாமல் அப்போதைய முதலாளிகள் இது நூறுநாள் வேலைத் திட்டத்தால் வந்த வினை என சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆண்டுக்கு அதிக பட்சம் பத்தாயிரம் ரூபாய் சம்பளமும் (100 நாள் வேலையில்) இலவச அரிசியும் கிடைக்கும் என்பதற்காக நம் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு ஓடுகிறார்கள் என்றால் அவர்களது திருப்பூர் வாழ்வு அதனைக் காட்டிலும் மோசமாக இருந்ததா எனும் நியாயமான சிந்தனை ஒருவருக்கும் வரவில்லை.
பெங்களூரை எடுத்துக்கொள்ளலாம், இங்கேயும் தொழிலாளர் பற்றாக்குறை இருக்கிறது. அதிக எண்ணிக்கையில் ஆயத்த ஆடை நிறுவனங்கள் இருக்கும் பொம்மனஹள்ளி வட்டாரத்தில் உள்ள ஜாக்கி நிறுவனம் ஒரு ஆண்டாக தங்கள் கிளையை சும்மா வைத்திருந்தது. வந்த 30 பேரை பேருந்து வைத்து இன்னொரு ஆலைக்கு பணிக்கு கூட்டிச்சென்றார்கள். அதே ஜாக்கியும் ராதாமணி எனும் ஆலையும் தொழிலாளர்களைக் கவர மதிய உணவை இப்போது வழங்குகின்றன. இங்கே சிக்கல் சற்றே வித்தியாசமானது. கடந்த சில ஆண்டுகளாக புதிய ஊழியர்களின் வரவு ஆடைத்துறையில் கணிசமாக குறைந்திருக்கிறது. அதிக அளவில் உருவாகும் பெரிய மற்றும் நடுத்தர அங்காடிகளுக்கான தொழிலாளர் தேவை நேரடியாக ஆயத்த ஆடைத்துறையை பாதிக்கிறது.
பேரங்காடிகளின் சம்பளம் ஆடைத் துறையைவிட அதிகமல்ல. ஆனால் ஆடைத் துறையைப் போன்ற முதுகை ஒடிக்கும் பணிச்சுமை அங்கு கிடையாது. ஒயிட்ஃபீல்ட் வட்டாரத்தில் ஒவ்வொரு பேரங்காடிகள் திறக்கப்படும் போதும் தமது தொழிலாளர் எண்ணிக்கை குறைவதாக சொல்கிறார் ஒரு ஏற்றுமதி நிறுவன மேலாளர். வேலைச் சூழலை சகிக்க இயலாமல் புதியவர்கள் தற்காலிக நிம்மதியை நோக்கி ஓடுவதால் ஏற்படும் வெற்றிடம் இது, அவர்கள் வாழ்கைத்தரம் மேம்பட்டதால் உருவான நிலை என கருதுவது முட்டாளதனமானது. வெறும் மதிய சாப்பாட்டை கூடுதலாகக் கொடுத்து தொழிலாளர்களை தக்க வைக்க முடிகிறதென்றால் இங்கே அவர்களது நிலை எத்தனை பரிதாபகரமாக இருக்கிறது என்பதை சிந்தித்துப்பாருங்கள்.
வேறு சில பொதுவான காரணங்கள் இருக்கின்றன. மிகக்கடுமையான வேலை காரணமாக தொழிலாளர்கள் தங்கள் உடல் வலுவை விரைவாக இழக்கிறார்கள் (2009 வரை நள்ளிரவு 1 மணிவரை வேலையென்பது திருப்பூரில் சாதாரணம். ஞாயிறு என்றால் மாலை 5 மணி வரை. தீபாவளி மற்றும் பொங்கலுக்கு மட்டுமே பாய்லரை நிறுத்திய ஆலைகள் இங்கே அனேகம்). இதனால் வேலைக்கு தகுதியற்றவனாகி வெளியேறும் நிலைக்கு சிலர் தள்ளப்படுகிறார்கள். கூடுதலாக இந்த பணிச்சுமை போதைப் பழக்கத்தை நோக்கி பலரை தள்ளுகிறது. சாராயம் களைப்பை போக்கவும் பான்பராக் தூக்கத்தை விரட்டவும் இங்கே பலருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் வேலைத்திறன் குறைந்து பணியாற்றத் தகுதியற்றவர்களாகிறார்கள் சிலர். இப்போது இதன் தாக்கம் அத்தனை மோசமாக இல்லை என்றாலும் இன்னும் சில ஆண்டுகளில் பூதாகரமாகும் சாத்தியம் பரிபூரணமாக உள்ளது.
இந்தியாவின் தனிநபர் நுகரும் கலோரியின் அளவு குறைந்திருக்கிறது. குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் 4 ரூபாயாக இருக்கும், குடிக்கும் தண்ணீரைக்கூட காசுக்கு வாங்கவேண்டிய நிலையில் உள்ள பெங்களூரில் வாழும் டெய்லரது அதிகபட்ச சம்பளம் 7,500 ரூபாய் தான். உயரும் செலவினங்களை சமாளிக்க அவர்கள் தங்கள் சரிவிகித உணவுக்கான செலவைத்தான் குறைக்கிறார்கள். ஏழைகள் உணவுக்கு செலவிடும் தொகை குறைந்தால் அவர்கள் வேலை செய்யும் திறனும் குறைந்திருக்கிறது. மற்றும் இதில் இருக்கும் சமூகவியல் காரணி, தமிழகத்தில் பிறப்பு விகிதம் குறைந்திருக்கிறது (இரண்டு நபர்களுக்கு இரண்டு பிள்ளைகள் எனும் அளவைவிட குறைவு) அதன் தொடர்ச்சியாக சமூகத்தில் இளைஞர்கள் சதவிகிதம் குறைகிறது. ஆகவே இளைஞர்கள் அதிகமாக தேவைப்படும் ஜவுளித்துறையில் இதன் தாக்கம் எதிரொலிக்கத் துவங்கியிருக்கிறது (சந்தேகமிருப்பின் உங்களுக்கு தெரிந்த சமூகவியல் அல்லது உளவியல் ஆசிரியர்களிடம் ஆலோசிக்கவும்).
மேலை நாடுகளில் உள்ளதுபோல உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கு கௌரவமான ஊதியமோ சமூக அந்தஸ்தோ இங்கு கிடையாது. ஆகவே எல்லா பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் ஒரு அலுவலகப் பணிக்கு செல்பவர்களாக இருக்கும்படியே தயாரிக்கிறார்கள். இதை வைத்துத்தான் ஏழை மக்களிடம் ஆங்கிலப் பள்ளிகள் கல்லா கட்டுகின்றன. இதன் காரணமாக புதியவர்களின் விருப்பத் தெரிவாக தொழிற்சாலைப் பணிகள் இருப்பதில்லை.
இப்படியான பல்வேறு காரணங்களின் கூட்டுப் பங்களிப்புதான் தொழிலாளர் பற்றாக்குறையை உருவாக்குகின்றனவேயன்றி அவர்களது வாழ்கைத்தரம் அல்ல. உலகின் சத்துக்குறைபாடுள்ள குழந்தைகளில் பாதி இந்தியாவில்தான் இருக்கின்றன எனும் செய்தியை தாராளமயத்தின் சுவிசேஷகர் மன்மோகனே ஒத்துக்கொண்டாயிற்று. எனவே தொழிலாளர் பற்றாக்குறையை காரணம் காட்டி அவர்களது வாழ்க்கை தரத்தை மதிப்பிடுவது அவர்கள் உழைப்பை சுரண்டுவதற்கு இணையான மோசடி.
– வில்லவன்
Textile industry in Tamilnadu has attracted workers from Orissa,Bihar,and North Eastern India and if opportunities to work in their home states emerge , then they may not move around and wander in other places. Bangladesh is an example where migrant workers hanged about for some time in the border regions of India and started permanently staying and even got voting rights nowadays. But when labour intensive garment industry flourished by massive orders from buyers abroad as the buyers found out a place of larger masses live and persuaded the government to offer incentives to the industry and made the prices competitive for their buying.
On Tirupur , local people who established the industry have long back became owners of industry from bigger size to smaller size according to their success rate. Those from Theni,Madurri who migrated for work in the initial days of the creation of export markets in the nineties have settled in the city. Other people from Tamilnadu and kerala continued to come in later searching jobs but the worsening markets few years ago made them to weigh up their options to work in the textile industry as alternate jobs were available elsewhere.
The nature of repetitive,tedious,sitting work as tailors,ironers etc were not preferred despite piece rate system was introduced. But work in a process house did not require continuous physical response for an extended time but involved lesser watchful work.
Hence the industry may attract more wages for CMT in future. Now East and North eastern Indian workers outnumber any identity that prevailed some time before.
Thanks for the detailed analysis. It shows how capitalism exploits the poor with the help of Government..