மிழக ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களின் நிலைப் பற்றி, தாம்ஸன் ராய்ட்டர்ஸ் நிறுவனம் அங்கு பணிபுரியும் 100 பெண்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது.

உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற இலாப நோக்கத்தின் அடிப்படையில், மாதவிடாய் காலங்களிலும் பெண்கள் விடுப்பு எடுக்காமல் வேலைக்கு வர வேண்டும் என்பதே பல ஆயத்த ஆடை தொழிற்சாலைகளின் தேவையாகும். அதனை பூர்த்தி செய்ய தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு, மருத்துவர்கள் ஆலோசனையின்றி, அங்கீகாரமற்ற மாதவிடாய் வலி நிவாரணி மாத்திரைகளை வழங்கி வந்திருக்கின்றன என்ற உண்மை இந்த ஆய்வின் முடிவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது இலாப நோக்கத்திற்காக முதலாளிகள் எந்த எல்லைக்கும் போவார்கள் என்பதற்கு இதைவிட சான்று எதுவும் இல்லை.

தங்களது தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் எடுக்கும் விடுப்புகளைக் கண்காணிக்கவும் உடல்நிலை சரியில்லை என பொய் சொல்கிறார்களா எனச் சோதிக்கவும் உணவு மற்றும் கழிவறை செல்ல அதிக நேரத்தை செலவிடுகிறார்களா என்பனவற்றைக் கண்காணிக்கவும் மேற்பார்வையாளரையும் நியமித்திருக்கிறது தொழிற்சாலை நிர்வாகம். வேலை செய்யும்போது மாதவிடாய் வலி ஏற்பட்டால் மருத்துவரிடம் காண்பிப்பதோ, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதோ என இல்லாமல், அங்கீகாரமற்ற வலி நிவாரண மாத்திரையை, மேற்பார்வையாளர்கள் முன்னிலையில் பெண்கள் உட்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலும் இந்த ஆய்வின் மூலம் வெளியாகியுள்ளது.

மாதிரிப் படம்

ஆடைத் தொழிற்சாலையில், தனது 17 வயதில் தையல் வேலைக்குச் சேர்ந்த சுதாவிற்கு தற்போது வயது 20. தனது வீட்டுச் சூழ்நிலையால் இந்த வேலைக்கு வந்திருக்கும் இவர், விடுப்பு எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்வார்கள் என அஞ்சி, மாதவிடாய் காலத்திலும், தொழிற்சாலை வழங்கும் மாத்திரைகளை உட்கொண்டு வேலை பார்த்து வந்திருக்கிறார்.

“எனது மாதவிடாய் காலத்தில் தொழிற்சாலை வழங்கிய மாத்திரைகள் என் வலியை குறைத்தது. நான் வலிகளை மறந்து வேலை செய்ய என்னை பழக்கப்படுத்திக் கொண்டேன். ஆனால் இப்போது எனது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது” என்று கூறுகிறார் சுதா.

மருத்துவர்களின் ஆலோசனையின்றி, வழங்கப்பட்ட வலி நிவாரணி மாத்திரையை தொடர்ச்சியாக உட்கொண்டு வந்ததால், அவரின் கருப்பையில் நீர்த்திசுக்கட்டிகள் உருவாகியுள்ளது என மருத்துவச் சோதனையில் தெரிய வந்துள்ளது. விடுப்பு எடுத்தால் சம்பளம் இழக்க நேரிடும் என்று பயந்த அவர், தான் வாங்கும் 6000 ரூபாய் சம்பளத்தில் பாதியை தற்போது மருத்துவத்திற்கு செலவழித்து வருகிறார். மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தியும், தன் வீட்டுக் கடனை அடைக்கவேண்டும் என்பதற்காக ஓய்வெடுக்க வழியின்றி வேலைக்கு சென்று வருகிறார் சுதா.

இதுபோல அங்கீகாரமற்ற மாத்திரையை உட்கொள்ளும் பெண்கள் பலரும், மன அழுத்தம், பதற்றம், சிறுநீர்ப் பாதை நோய் தொற்றுகள், நீர்த்திசுக்கட்டிகள், கருச்சிதைவு போன்றவற்றால் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

சுதாவை போல், தொழிற்சாலையில் வழங்கிய வலி நிவாரணி மாத்திரையை மாதக்கணக்கில் சாப்பிட்டு வந்த, கனகா மாரிமுத்துவிற்கு, மாதவிடாய் நின்றுவிட்டது. இப்போது அவருக்கு வயது 21.

“அப்போது என் முன் இரண்டு வழிகளே இருந்தது. ஒன்று ஊதியத்தை இழப்பது, மற்றொன்று மாத்திரைகளை உட்கொண்டு வேலைகளை பார்ப்பது” என்று கூறிய கனகா, தற்போது உடல்நலக் குறைவால் விடுப்பில் உள்ளார்.

“மாதவிடாய்க்காக தொழிற்சாலையில் வழங்கும் மாத்திரையை, மேற்பார்வையாளர் முன்னிலையில் நாங்கள் கட்டாயமாக விழுங்க வேண்டும். அந்த மாத்திரையின் பெயர், பின் விளைவுகள் எதுவும் எங்களுக்குத் தெரியாது. அதன் நிறம், அளவு மட்டுமே தெரியும்” என தொழிற்சாலையில் பணிபுரியும் 15 முதல் 25 வயதுடைய பெண்கள் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

தொழிற்சாலையில் பணிபுரியும் செல்வி மாதவிடாய் குறித்துப் பேச விரும்பவில்லை. ஏனென்றால், ஒருமுறை தனது மாதவிடாய் வலியைக் குறித்து தன்னுடைய மேற்பார்வையாளரிடம் (ஆண்) கூறியபோது, அவர் கிண்டல் செய்துள்ளார். அதிலிருந்து வலி வந்தாலும் அதனை வெளியில் சொல்லாமல், தொழிற்சாலை வழங்கும் வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார். 6 மாதங்களுக்குப் பின் செல்விக்கு, வயிறு எரிச்சல் அதிகமாகியுள்ளது. அதன் காரணமாக தற்போது 10 நாட்கள் வருமான இழப்புடன் விடுமுறையில் இருக்கிறார்.

இதுகுறித்து தொழிலாளர் உரிமைக்கான மதச்சார்பற்ற சமூக சேவை தொண்டு நிறுவனத் தலைவர் (head of labour rights charity serene secular social service society) ஜேம்ஸ் விக்டர் கூறியதாவது, “இந்தப் பெண்கள் வீட்டில் இருந்தபோது மாதவிடாய் முறையாக இருந்தது, ஆனால், வேலைக்குச் சேர்ந்த பிறகுதான் அவர்களுக்கு உடல்நிலை பிரச்சினைகள் வந்துள்ளது. இந்தப் பிரச்சினைகள் ஆபத்தானவை” என்கிறார். மேலும், “மாதவிடாய் காலத்தில் சானிட்டரி நாப்கின் மற்றும் ஓய்வு வழங்காமல், மாதவிடாய் நிற்க மாத்திரைகளை வழங்கியுள்ளது தொழிற்சாலை. வேலைகள் மெதுவாக செய்தால் அதற்கும் பெண்களை வஞ்சிக்கிறது நிர்வாகம்” என்கிறார்.

மாதவிடாய் காலத்தின்போது தொழிற்சாலையில் தங்களுக்கு வழங்கப்படும் மாத்திரைகளை ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் பெண்கள் காட்டியுள்ளனர். அந்த மாத்திரையில் பிராண்ட் மற்றும் காலாவதி தேதி போன்ற எந்த தகவலும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

பின்னர் பரிசோதனைக்காக அம்மாத்திரைகளை மருத்துவர்களிடம் ஒப்படைத்துள்ளது ராய்ட்டர்ஸ் நிறுவனம். மருத்துவச் சோதனையில், “அம்மருந்துகள் இபுப்ரோஃபென் (Ibuprofen), அட்வில் (Advil) போன்ற வலி நிவாரணி மருந்துகள் போலவே வலியை குறைக்கவல்லது. எனினும் அதனைத் தொடர்சியாக உட்கொண்டு வந்தால், பக்கவிளைவுகள் ஏற்படும்” என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

நிறைய தொழிற்சாலைகளில் கழிப்பறைகளை வேண்டுமென்றே சுத்தப்படுத்துவதில்லை. கழிப்பறை சுத்தமாக இல்லையென்றால் பெண்கள் அதை உயயோகிப்பது குறையும். அதனால் வேலைகள் அதிகமாக நடக்கும் என்பதே அவர்களின் நோக்கம்…

தமிழகத்தில் சுமார் 40,000 ஆயத்த ஆடை மற்றும் நூற்பு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் கிட்டதட்ட 3 இலட்சம் பெண் ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள் என அரசு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதுவன்றி, கணக்கில் வராத முறைசாரா ஊழியர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர்.

குறிப்பாக கிராமப்புறத்தில் இருந்தும், ஏழை எளிய குடும்பத்தில் இருந்தும், கல்வியறிவில்லாத, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்தும் இளம் பெண்கள் ஆயத்த ஆடைத் தொழிற்சாலைக்கு பணிபுரிய வருகிறார்கள்.

பெரிய பெரிய தொழிற்சாலைகள் அதிக உற்பத்தி செய்து, குறைவான விலையில் விற்பதால், நடுத்தர தொழிற்சாலைகள் தங்களது உற்பத்தியை அதிகரிக்கவும், இலாபம் ஈட்ட, தங்களது தொழிற்சாலையில் வேலைப் பார்க்கும் தொழிலாளிகளுக்கு சிறுநீர் கழிக்கக் கூட நேரத்தை வழங்குவதில்லை.

பல தொழிற்சாலைகளில் ஒரு நாளைக்கு 5 நிமிடங்கள் மட்டுமே கழிப்பறைக்கு நேரம் ஒதுக்கும் அவலமும் நிகழ்கிறது. அதுவும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது என 2016-ல் சமூக விழிப்புணர்வு ஆராய்ச்சிக் கல்விக்கான தொண்டு நிறுவனம் (Charity community awareness research education trust) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

படிக்க:
ஆர்.எஸ்.எஸ். கூறும் இந்து ராஷ்டிரத்தின் இறுதி நோக்கம்தான் என்ன ?
கள ஆய்வு : புதுச்சேரி எல் & டி ஆலையில் நவீன கொத்தடிமை தொழிலாளர்கள் !

“பல பெயர்களிலும், பல வடிவங்களிலும் சுரண்டல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. நிறைய தொழிற்சாலைகளில் கழிப்பறைகளை வேண்டுமென்றே சுத்தப்படுத்துவதில்லை. கழிப்பறை சுத்தமாக இல்லையென்றால் பெண்கள் அதை உயயோகிப்பது குறையும். அதனால் வேலைகள் அதிகமாக நடக்கும் என்பதே அவர்களின் நோக்கம்” என பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், பெண்கள் ஆய்வுத் துறையின் தலைவர் மணிமேகலை நடேசன் தெரிவிக்கிறார். இவர், 2011-ல், ஆயத்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களின் நிலையை ஆய்வு செய்து ஆவணப்படுத்தியிருக்கிறார்.

ஆவணப்படுத்தப்பட்டாலும், அவை சட்டத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்டாலும் என்ன பயன்? வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடந்த பெண்கள், குடும்பப் பாரம் போக்க பணிக்குச் சென்றால், அங்கேயும் நரக வேதனைதான்.

கட்டுரையாளர் : அனுராதா நாகராஜ்
சுருக்கப்பட்ட தமிழாக்கம் : சங்கீதா
நன்றி : ஸ்க்ரால்

1 மறுமொழி

  1. தற்போது திருப்பூரில் இந்த கட்டுரையில் வரும் அளவிற்கான சுரண்டல் பெண்கள் மீது இருப்பதாக தெறியவில்லை.
    12-16மணிநேர உழைப்பு தினசரி உண்டு.தொழிலாளிகளின் பொருளாதார தேவையை ஒட்டியே அவர்கள் அதனையும் வலிந்து ஏற்றுக்கொள்கிறார்கள்.

    சாதாரணமாக நடுத்தர நிறுவனங்களில் வாரம் 9சிப்ட் வேலை இருக்கும் அதிகபட்சம் 12சிப்ட்டும் உண்டு.

    கம்பெனி நிர்வாகம் வாரம் 8 சிப்ட் (திங்கள் முதல் சனிவரை) மட்டும் வேலை கொடுத்தால் அந்த தொழிலாளிகள் நிச்சயம் அடுத்தவாரம் வேறு பெரிய கம்பெனிக்கு சென்றுவிடுவார்கள்.

    முதலாளித்துவத்தை ஒழிக்காமல் ,உள்நாட்டுத்தேவைக்கான. உற்பத்தியை பெருக்காமல் பன்னாட்டு தேவைக்காக உற்பத்தி முறை இருக்கும் வரை பெண்களுக்கு மட்டுமல்ல ஆண் தொழிலாளிக்கும் இதே நிலை தான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க