சொமாடோ, ஸ்விகி போன்ற  நிறுவனங்கள், ஒரு தொழிலாளிக்கு சராசரியான அடிப்படை ஊதியத்தை நிர்ணயிப்பதில்லை. தொழிலாளர்கள் வேலை செய்யும் பகுதி மற்றும் நகரத்தைப் பொறுத்துதான் டெலிவரிக்கான கூலியை நிர்ணயிக்கின்றன. மொத்த ஊதியத்தில் டெலிவரிக்காக அலையும் நேரம், காத்திருக்கும் நேரம் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. வெறுமனே டெலிவரிக்கான கூலியை மட்டும் நிர்ணயிக்கிறது. அதுவும் அனைவருக்கும் ஒரே மாதிரியாக அது இருப்பதில்லை.
சொமாடோ நிறுவனம் டெலிவரி தொழிலாளர்களுக்கு ஆர்டர்களுக்கான சராசரி ஊதியத்தை கடந்த ஆண்டை விட 20 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகக் கூறுகிறது. தற்போது, 4 கி.மீ டெலிவரி செய்ய ரூ.20 பெறுவதாகவும், அதன்பிறகு 1 கி.மீ ரூ.5 பெறுவதாகவும் சொமாடோ ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு முழுநேர டெலிவரி தொழிலாளி ஒரு நாளைக்கு குறைந்தது 12 மணிநேரம் வேலை செய்கிறார் எனில் அவர் 700 முதல் 1000 வரை (ஊக்கத்தொகை உள்ளிட்டு) சம்பாதிக்கலாம். (மும்பை போன்ற மாநகருக்கு மட்டுமே). ஆனால், இந்தப் பணத்தை சம்பாதிக்க, அவர்கள் பெட்ரோலுக்கு மட்டும் ரூ.400 செலவழிக்க வேண்டும். எனில் அவர்களது வருமானம் என்ன என்பதை கணக்கிட்டுக் கொள்ளலாம். இது போக இருசக்கர வாகன பழுது, பராமரிப்பு ஆகியவற்றிற்கு தனியாகச் செலவு செய்ய வேண்டும்.
படிக்க:
ஸ்விகி பாய்ஸ் போராட்டம் : சம்பளம் மட்டும்தான் பிரச்சினையா ?
வர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து !
ஒரு தொழிலாளிக்கு சொமாடோ குறைந்தபட்சம் ரூ.575 சம்பாதித்தால் அவருக்கு ரூ.200 ஊக்கத்தொகை வழங்கும் என்கிறார்கள், ஒரு பகுதி நேர தொழிலாளிக்கு குறைந்த பட்சம் ரூ.275 சம்பாதிக்க ரூ.100 ஊக்கத்தொகை வழங்குமாம்.
இதனால், டெலிவரி தொழிலில் கணிசமாக பணம் சம்பாதிக்க முடியும் என்ற எண்ணத்தில் பல இளைஞர்கள் சொமாடோ மற்றும் ஸ்விகியில் இணைகிறார்கள். ஆனால், சம்பாதிப்பதை விட செலவுதான் அதிகம் இருக்கும் என்பது அவர்களுக்கு போகப்போகத்தான் தெரியவரும்.
டெலிவரித் தொழிலாளர்கள் தங்கள் சொந்த பைக்குகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். அந்த பைக்குகளுக்கான பெட்ரோல், பழுது பார்ப்பது, பராமரிப்பது, டெலிவரிக்கான தங்கள் தொலைபேசியையே பயன்படுத்துவது மேலும் நிறுவனத்தால் வழங்கப்படும் டி-ஷட்டுகள், போன் ஸ்டாண்டுகள், போன் கவர்கள் என அனைத்துக்கும் தொழிலாளர்கள் தங்கள் பணத்தைத் தான் செலவழிக்க வேண்டும்.
swiggy
ஒரு நாளைக்கான ஆர்டர்களுக்கு உத்திரவாதம் கிடையாது. மும்பை நகரில் ஒரு தொழிலாளி 20 ஆர்டர்களை பெறுகிறார் என்றால், அதுவே அகமதாபாத் நகரில் ஒரு தொழிலாளி 5 ஆர்டர்கள்தான் பெறுகிறார்.
இந்த அவல நிலையில் சில நேரம் ஊதியங்கள் குறைக்கப்படுவதும் உண்டு. அதை எதிர்த்து போராடினால், ஊக்கதொகை குறைக்கப்படுவது, சம்பளம் குறைக்கப்படுவதும், வேலையை விட்டு நீக்கப்படுவதும் நடக்கும். இவை அனைத்தும் இந்நிறுவனங்களின் முன்னாள் டெலிவரி தொழிலாளர்கள் கூறும் அவலநிலை. இதனாலேயே பல டெலிவரி தொழிலாளர்கள் போராட முன்வருவதில்லை. ஊதியம் சராசரியாக இல்லாமையால் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாகவும் இல்லை.
“ஒரு டெலிவரிக்கு ரூ.20 என்ற அடிப்படையில், 6 கிமீ வரை சென்றால் சராசரியாக ரூ.32 கிடைக்கும். நாங்கள் இதை ரூ.20-க்கு செய்யாவிட்டால், ரூ.15-க்கு டெலிவரி செய்யக் கூடிய ஒருவரை அவர்கள் கண்டுபிடிப்பார்கள்” என்று கூறுகிறார் ஒரு டெலிவரி தொழிலாளி.
“ஒவ்வொரு தொழிலாளியும் வித்தியாசமாக ஊதியம் வழங்கப்பட்டு சுரண்டப்படுகினான். அவர்கள் எங்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பது கிட்டத்தட்ட நகைச்சுவையானது, பயணம் செய்த தூரம் மற்றும் காத்திருக்கும் நேரத்தில் மாற்றம் ஏற்படுவதை வைத்து இந்த ஏமாற்றுதல் வேலை நடக்கிறது” என்று மற்றொரு டெலிவரி தொழிலாளி கூறுகிறார்.
மேலும், “அவர்கள் முதல் கி.மீட்டரிலேயே உங்களை ஏமாற்ற துவங்கி விடுகிறார்கள். சிவப்பு மண்டலத்திற்கு (பல உணவகங்கள் அருகில் இருக்கும் இடங்களுக்கு) செல்லச் சொல்வார்கள். நீங்கள் உங்களது சொத்தச் செலவில் அந்த இடத்திற்குப் போவதற்கான (4 முதல் 5 கி.மீ வரை) பெட்ரோலை செலவழிக்கிறீர்கள். முதல் கி.மீட்டருக்கான ஊதியம் மட்டுமே உங்களுக்கு டெலிவரி நிறுவனம் தர வேண்டும் என்பது நிபந்தனை. எனவே, அவர்கள் உங்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதையும், மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதையும் நீங்கள் வேலைக்கு வந்த முதல் வாரத்திலேயே உணர்ந்து கொள்வீர்கள். இது மிகவும் கொடுமையான சுரண்டல்” என்கிறார்.
“நாங்கள் இதில் செலுத்தும் கடின உழைப்புக்கு மதிப்பு இல்லை, இந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்துவது கடினம்” என்று கவலைப்படுகிறார் மூன்றாண்டுகள் டெலிவரி வேலை செய்யும் ஒரு தொழிலாளி.
படிக்க :
சோசலிசம்: முதலாளிகளின் கொடுங்கனவு ! பாட்டாளிகளின் கலங்கரை விளக்கம் !!
“பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!
பயன்படுத்தும் வரை ஒட்டச் சுரண்டிவிட்டு, பயன்பட்டபின்னர் வீதியில் தூக்கி வீசுவதை எளிமைப்படுத்தியிருக்கிறது சொமாடோ, ஸ்விகி நிறுவனங்கள் பின்பற்றும் இத்தகைய வேலை முறை. இதனை கிக் தொழிலாளர் முறை என்று குறிப்பிடுகின்றனர் முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள்.
தொழிலாளர்களுக்குச் சுதந்திரமான வேலை முறை என்பது போல முன் நிறுத்தப்படும் இந்த வேலைமுறை உண்மையிலேயே நிறுவனங்களின் சுரண்டலை அதிகரித்துக் கொள்வதற்கான முறையாகும். எவ்வித பெரும் மூலதனமும் இன்றி முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கான எளிய வழிமுறைதான் இந்த கிக் பொருளாதாரம். போக்குவரத்து வாகனம் முதல், பெட்ரோல், பராமரிப்பு என அனைத்தும் தொழிலாளியின் பொறுப்பு. அற்ப கூலியைக் கொடுத்துவிட்டு எவ்வித பொறுப்பும் ஏற்கத் தேவையின்றி சுரண்டலை மட்டும் தீவிரமாக நடைமுறைப்படுத்துகிறது.
இந்தியாவில் கிக் தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம், தொழில் பாதுகாப்பு மற்றும் தொழில்துறை உறவுகளை கையாளும் விதிகள், சட்டங்கள் ஏதும் அரசிடம் இல்லை. தமிழகத்தில் சொமாடோ, ஸ்விகி டெலிவரி தொழிலாளர்கள் தாங்கள் சுரண்டப்படுவதற்கும் ஏமாற்றப்படுவதற்கும் எதிராக சங்கமாகத் திரண்டு போராடுகின்றனர். உழைப்புக்கேற்ற ஊதியம் பெறுவதற்கும், இத்தகைய தொழிலாளர்களுக்கான தொழில் பாதுகாப்பு சட்டங்களைக் கொண்டு வருவதற்கும் சங்கமாக திரண்டு போராடுவதை தவிர வேறு வழியில்லை.
சந்துரு
செய்தி ஆதாரம் : Newslaundry

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க