ஸ்விகி தொழிலாளர்கள் போராட்டம் – தேவை ஒரு புதிய அணுகுமுறை

ஸ்விகி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்களும் சரி, ஓலா போன்ற டாக்சி சேவை நிறுவனங்களும் சரி கிளவுட் மென்பொருளை பயன்படுத்தி பெரிய அளவு வேறு முதலீடு இல்லாமல் உழைப்பாளர்களையும் நுகர்வோரையும் இணைத்து லாபம் ஈட்டுகின்றன.

செய்யும் வேலைக்கு நியாயமான கூலி, வேலை நேரம், வேலை நிபந்தனைகள் போன்றவற்றை உறுதி செய்ய யாரிடம் பேசுவது என்பது கூட தெளிவில்லாமல் உழைக்கின்றனர் இந்தத் துறை தொழிலாளர்கள். ஒரு நகரில் மட்டுமின்றி, நாடு தழுவி, உலகில் பல நாடுகளையும் தழுவி இயங்கும் இந்த நிறுவனங்களுக்காக வேலை செய்யும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தமது உரிமைகளை பாதுகாப்பது எப்படி என்பது முக்கியமான சவாலாக எழுந்து நிற்கிறது.

சமீபத்தில் நடந்த ஸ்விகி தொழிலாளர் வேலை நிறுத்த போராட்டம் பற்றி ஒரு தொழிலாளி சொல்லும் விபரங்களில் இருந்து இந்த நெருக்கடியை புரிந்து கொள்ளலாம்.

மாதிரிப் படம்

“வணக்கம் நான் ஸ்விகில ஒர்க் பன்றேன். நான் இந்த வேலைக்கு வர்றதுக்கு முன்னாடி வேற ஒரு கம்பெனில மார்க்கெட்டிங் வேலை பார்த்துட்டு இருந்தேன்” என்று ஸ்விகி போராட்டம் பற்றி நம்மிடம் பேசியவருக்கு வயது சுமார் 26 இருக்கும்.

“ஏற்கனவே பார்த்த மார்க்கெட்டிங் வேலையில் வருமானம் குறைவு. சிட்டிக்கு வெளிலதான் இருக்கோம், இருந்தாலும் அதிகமாகிட்டுவரும் செலவு காரணமா இந்த வேலைக்கு வந்தேன். வேலையில் சேரும்போது எனக்கு என்ன சொன்னாங்கன்னா ஸ்விகில ஜாயின் பண்ணுனா மாதம் 30,000 சம்பாதிக்கலாம் அப்டின்னாங்க.

நான் ஸ்விகில ஜாயின் பண்ணும்போது என்கூட சுமார் 100 பேர் ஜாயின் பண்ணுணாங்க. நான் சேர்ந்த நேரத்தில் வேலை கொஞ்சம் நல்லா போச்சு, வருமானமும் ஓரளவுக்கு நல்லா வந்துச்சு. சொன்னமாதிரி 30,000 வரலைன்னாலும் 20,000-க்கு கூடுதலா வந்துச்சு. ஆனா இப்போ கடந்த ஒரு சில மாதமா வருமானம் குறைஞ்சிருச்சு. நான் சேரும்போது ஆட்கள் கம்மி. இப்போ ஆர்டரும் அதிகமாயிருக்கு, ஆட்களும் ரொம்ப அதிகமா சேத்திருக்காங்க. கம்பேனிக்கு வேலை நல்லாதான் போகுது. ஆனால் எங்களுக்குதான் வருமானம் குறைஞ்சிருச்சு.

ஆரம்பத்துல சேர்ந்த போது குறைஞ்சது இத்தனை ஆர்டர் எடுத்தா இவ்வளவு இன்சன்டிவ் தர்றோம்னு சொன்னாங்க. இப்போ அந்த இன்சன்டிவ் சிஸ்டத்தையும் மாத்திட்டாங்க. அமொண்டுக்கு ஏத்த இன்சன்டிவ்னு சொல்றாங்க. ஆர்டர் குறைஞ்சிருச்சு, குறைஞ்சபட்சமா இருந்த வருமான உத்தரவாதமும் போயிருச்சு. இதுபற்றி ஆபீஸ்ல போய் கேட்டா உங்க நல்லதுக்கு தான் பண்றோம்னு சொல்றாங்க. என்ன நல்லது பன்றுங்கன்னுதான் தெரியல.

படிக்க:
♦ Swiggy டெலிவரி பாய்ஸ் – பசியாற்றப் பறக்கும் இளைஞர்கள் !
♦ சொமேட்டோ ஊழியர் செய்தது தவறா ? பொங்கும் சமூகத்தோடு ஒரு உரையாடல் !

ஆரம்பத்தில எங்களுக்கு காலைல இருந்து இரவு வரைக்கும் ஓடிட்டே இருந்தா ஒரு நாளுக்கு 700 ரூபாய் வரைக்கும் கிடைச்சது. இப்போது ஒரு நாளுக்கு ரூபாய் 500 தான் கிடைக்குது. பெட்ரோல் அதிலேயேதான் போட்டுக்கணும். காலையிலயே வந்துட்டு இரவுதான் வீட்டுக்கு போனேன். சாப்பிடறது எல்லாமே நாங்கள் அதில தான் பார்த்துக்கணும்.

இந்த நிலமைலதான் 2 வாரம் முன்னால ஸ்டிரைக் பண்ணுனோம். ஒரு ஆர்டர் எடுத்தா 36 ரூபாய் கொடுப்பாங்க. ஒரு ஆர்டர் கொடுக்கச் செல்லும்போது பக்கத்தில் உள்ள ஏரியாவுக்கும் சேர்ந்தாப்ல இரண்டு ஆர்டர் டெலிவரி கொடுத்தா முதல் ஆர்டக்கு 36 ரூபாயும் அடுத்த ஆர்டருக்கு 20 ரூபாயும் தந்தாங்க. இப்போ அதை மாத்தி முதல் ஆர்டருக்கு 35 ரூபாயும் இரண்டாவது ஆர்டருக்கு 10 ரூபாயும் தர்றதா சொல்றாங்க. அதோட தூரத்தையும் கூட்டிட்டாங்க. முதல்ல 4 கி.மீ க்கு இருந்தத இப்போ 5 கி.மீ -னு மாத்திட்டாங்க. காசைக் குறைச்சு தூரத்தை கூட்டிருக்காங்க. இந்த சம்பளத்துலதான் பெட்ரோலும் போடணும்னு சொல்லும் போது சிரமமா இருக்கு.

இதுபத்தி எங்க ஆபீஸ்ல முதல்ல நேரா போயி கேட்டோம். சரியான பதில் சொல்லல. திரும்பத் திரும்ப கேட்டோம். அதுக்குபிறகு அவ்வளவுதான் தரமுடியும்னு சொன்னாங்க. நாங்க விவரமா எடுத்துச் சொன்னப்போ உங்களால முடிஞ்சத பாத்துக்கோங்கன்னு மூஞ்சில அடிச்சமாதிரி சொன்னாங்க. அதுக்குப்பிறகுதான் ஸ்டிரைக் ஆரம்பமாச்சு.

ஸ்விக்கி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்.

வடபழனி, அடையார்ல ஆரம்பிச்சு எல்லா பகுதிலயும் ஸ்டிரைக் நடந்துச்சு. ஸ்டிரைக்லாம் பண்ணமாட்டாங்கன்னு நினைச்சிருப்பாங்க போல. ஆனா எல்லா ஏரியாலயும் சப்ளை நின்னுபோச்சு. அதுக்கு பிறகு சீனியர் ஆட்கள் கொஞ்ச பேர தனியா கூப்பிட்டு உங்களுக்கு மட்டும் தர்றோம்னு சொல்லிருக்காங்க. அவங்க மறுத்ததனால ஸ்டிரைக் தொடர்ந்துச்சு. அதுக்கு பிறகு ஒரு மீட்டிங் போட்டு. உடனடியா ஆர்டர் எடுக்கப்போங்க, இத்தனை நாள் ஸ்டிரைக் பண்ணதுக்கு 2,000 தர்றோம். இதை நம்பி எல்லாரும் வேலை செய்ய ஆரம்பிச்சிட்டோம். ஆனால் அந்த இரண்டாயிரம் ரூபாயும் வரல ஸ்கீமையும் மாத்தல.

இது இப்படியிருக்கு, இன்னொரு பக்கம் ஸ்விகி அப்ளிகேசன் பாத்திங்கன்னா நீங்க ஆர்டர் போடும் பக்கத்தில நிறைய சேஞ்சஸ் செய்திருக்காங்க. அதே மாதிரி வேலை செய்ற எங்களுக்கும் அப்ளிகேசன் இருக்கு. அந்த அப்ளிகேசன்ல நிறைய குறைகள் இருக்கு. அதாவது, கி.மீ கணக்குல சம்பளம் தர்றாங்க. டெலிவரி செய்ற இடத்தை வண்டில ஸ்பீடோ மீட்டரையும், வேற அப்ளிகேசனையும், கூகுல் மேப்லையும் வச்சு பார்த்தா ஒரு தூரம் காட்டும். ஸ்விகி ஆப்ல ஒரு தூரம் காட்டும். உதாரணமா ஒரு டெலிவரிக்கு போனா 4.9 கிமீ காட்டும் ஆனா வண்டிலயும் வேற ஆப்லயும் 5.1 கிமீ காட்டும். 5 கி.மீ க்கு மேல போனா அடிசனலா 10 ரூ தரனும். அதுக்காக இப்படி ஏதோ கோல்மால் செய்றாங்க. வேலை பாத்ததுக்கு சம்பளம் அனுப்பும்போதும் ஒரு கணக்கே இருக்காது. திடீர்னு கூடுதலா அனுப்புவாங்க, திடீர்னு குறையா அனுப்புவாங்க. என்னன்னு கேட்டா அதுக்கு ஏதாவது சொல்லி சமாளிப்பாங்க. அடுத்து பணம் போடும்போது எடுத்துப்பாங்க. எங்ககிட்ட ஒரு கணக்கு இருக்கும் அவங்க ஒரு கணக்கு தருவாங்க. நாங்க சரிபார்க்கவும் முடியாது.

இந்த கம்பேனிக்கு நாங்களும் இந்த ஸ்விகி அப்ளிகேசனும்தான் மூலதனம்.

இந்த குறைய சரி செய்யச்சொல்லி பலமுறை கேட்டாச்சு. ஒரே அப்ளிகேசன்தான் ஆனால் கஸ்டமருக்கு ஒரு மாதிரியும் எங்களுக்கு ஒரு மாதிரியும் இருக்கு. நேரடியா சம்பளத்துலயும், இதுபோல மறைமுகமாவும் தில்லுமுல்லு நடக்குது.”

“சரிங்க, இதெல்லாம் உங்க ஓனருக்குத் தெரியுமா”

“ஆபீஸ்ல சொல்றோம்ல அவ்வளவுதான். இந்த கம்பேனிக்கு யார் ஓனர்னே எங்களுக்குத் தெரியாதுங்க”

“பெட்ரோல் செலவு பத்தி சொல்றீங்க அப்படி எவ்வளவு கிமீ வண்டி ஓட்டுவீங்க”

“ஒரு நாளுக்கு சுமார் 100 கிமீ ஓட்டுவோம்”

“வண்டி ஓட்டும்போது குண்டக்கமண்டக்க வண்டி ஓட்டுறீங்கனு உங்கள பத்தி சிலர் கம்பிளைண்ட் பன்றாங்களே”

“உண்மைதான். ஆனால் அதுக்கு முன்னாடி எங்க வேலையை பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கங்க. மேப்ல தான் லொக்கேசன் வச்சு ஆர்டர் பன்றாங்க. அத வச்சுதான் எங்களுக்கு சம்பளம். ஒரு அப்பார்ட்மென்ட்ல ஆர்டர் வந்தா அந்த அப்பார்ட்மென்ட் உள்ள வரைக்கும் போய் கொடுப்போம். ஆனா ஸ்விகி ஆப்ல என்ட்ரன்ஸ் வரைக்கும்தான் தூரம் காட்டும். இன்னொன்னு ஒன்வே மாதிரி இடங்கள சரியா காட்டாது. அதை சுத்தி போனாலும் காசு எங்களுக்கு தான் நஷ்டம். இன்னொன்னு மூன்று வேளை சாப்பிடும் நேரம்தான் எங்களுக்கு வேலை அதிகமா இருக்கும். மத்த நேரம் அப்பப்போதான் ஆர்டர் கிடைக்கும். அந்த பீக் அவர்ஸ்ல ஓடுனாதான் காசும் கிடைக்கும். இன்னொரு பக்கம் இப்படி சம்பளத்தை குறைக்கும் போது வேற வழியும் எங்களுக்கு இல்ல. வேகமா ஓடித்தான் ஆகனும்னு நிலைமை. தப்புதான், அதுக்காக சரின்னு சொல்ல வரல. என்ன காரணம்னு கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்கனு சொல்றேன்.

வண்டி ஓட்டிட்டு ஜாலியான வேலைதானன்னு சிலர் நினைக்கிறாங்க. எனக்கும் வண்டி ஓட்ட பிடிக்கும், ஆனால் ரேஸ்ல போறமாதிரி அந்தந்த நேரத்துல ஓட வேண்டியிருக்கு. ஒரு ஆர்டர் போட்டு அதை டெலிவரி பன்றதுக்கு டைம் இருக்கு. அதுக்குள்ள கொண்டுபோய் கொடுத்தாகனும், கடைல லேட் ஆச்சுனாலும் நாங்கதான் பொறுப்பு. அதுமாதிரி டார்ச்சர்லாம் யோசிச்சாலாம் புரியாது, அனுபவிச்சாதான் புரியும். இப்படி நிலைமை எங்களைத் துறத்துறப்ப நாங்க அதுக்கேத்தா மாதிரி ஓடவேண்டியிருக்கு. சமீபத்துல வருமானம் குறைஞ்சிருக்கது இன்னும் அதிகமா ஓடனும், வேகமா ஓடனும் அப்பதான் இழந்ததை சரிசெய்ய முடியும்ன்ற நிலைமை ஏற்பட்டிருக்கு. பலரும் செய்யிறதுதான். நாங்க ஒன்னும் புதுசா செய்யல. ஆபீஸ்ல ஓவர்டைமும் இதுவும் கிட்டத்தட்ட ஒன்னுதான்.

நேரத்துக்கு சாப்பிடுங்கன்னு வீட்டிலுள்ளவங்களோ, டாக்டரோ எங்களைப்பார்த்து சொல்ல முடியாது. எல்லோருக்கும் உணவைச் சேர்த்துவிட்டுதான் எங்களது உணவு இடைவேளையை துவங்குகிறோம்.

வேற வேலைக்கு போகலாம்னு நானும் பலமுறை யோசிச்சு தேடியும் பாத்துட்டேன் வேற வேலையும் கிடைக்க மாட்டேங்குது. எனக்காத் தெரிஞ்சவரைக்கும் ஸ்விகில நிறையபேர் டிகிரி, டபுள்டிகிரி படிச்சவங்கதான். வேற எங்கயும் கிடைக்கலைனு தான் இங்க வர்றாங்க. மழை வெய்யில் குளிர்லாம் பாத்தா வேலைக்கே ஆகாது. இதுமாதிரி ஏராளமானவை சொல்ல முடியும். என்ன நடந்தாலும் எதைப்பத்தியும் கவலைப்படக்கூடாது. யாராவது அடிபட்டு கிடந்தாலும் ஆர்டர் புக் ஆனா ஓடவேண்டியதுதான்”

*****

ன்பார்ந்த ஸ்விகி ஊழியர்களே!

இப்படியே எவ்வளவு காலம்தான் ஓடிக்கொண்டே இருக்க முடியும். ஸ்விகி நிறுவனம் தனது வாடிக்கையாளருக்கு வாக்குறுதியளிக்கும் நேரம் குறையக்குறைய வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகமாகலாம். ஆனால் அதற்கேற்ப ஓடப்போவது ஸ்விகி ஓனர்களில்லை, நம்மைப்போன்ற தொழிலாளிகள்தான். இவர்களது ஓட்டம் காசாக பணமாக அதன் முதலாளிக்கு கொட்டும் இவர்களுக்கு கிடைக்கும் பணம் இவர்களது எதிர்காலத்துக்கு உதவுமா?

சராசரியாக ஒருநபர் மாதம் முழுதும் விடுப்பின்றி நாளொன்றுக்கு பத்து மணிநேரம் ஓடினாலும் கிடைக்கக்கூடியது சுமார் 18,000 ரூபாய். இதில் பெட்ரோலுக்கு, மதியம் மற்றும் இரவு உணவுக்கு 70 ரூபாய், இடையில் தேனீர் செலவுக்கு 20 ரூபாய், வண்டி மெய்ன்டெய்ன்சுக்கு 30 ரூபாய் , செல்போன் ரீசார்ஜ்க்கு 6 ரூபாய், வண்டி இன்சூரன்ஸ்க்கு 4 ரூபாய், டயர் மாற்றுவது போன்ற பெரிய செலவுக்கு 5 ரூபாய். பெட்ரோலுக்கு 200 ரூபாய் என்று சராசரியாக ஒரு நாளுக்கு 250 லிருந்து 300 ரூபாய் வரை செலவாகும். அதுபோக மீதிதான் குடும்பச் செலவிற்கு.

படிக்க:
♦ தொழிலாளர் உரிமைகளை மீட்க – ஜனவரி 8, 9 அகில இந்திய வேலை நிறுத்தம் : புஜதொமு அறைகூவல்
♦ யமஹா நிர்வாகத்தைப் பணிய வைத்த தொழிலாளர்கள்

இந்த சம்பளத்தை வைத்து அன்றாட வாழ்க்கையை ஓட்டவே தனிச்சிறப்பான பட்ஜெட் போடவேண்டும். அதற்கு மேல் எதிர்காலத்தைப் பற்றியெல்லாம் சிந்திக்கவே வாய்ப்பிருக்காது. இந்த ஓட்டமானது சுமார் 35 வயதுவரை தாங்கும் அதற்குமேல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடும். அதற்கு பிறகுதான் வாழ்க்கைச் செலவுகளே அதிகமாகும். குழந்தை, கல்வி, மருத்துவம், குடும்பச் செலவுகளை எவ்வாறு சமாளிப்பது.

ஸ்விகி தொழிலாளிகளே உங்களது இன்றைய ஓட்டத்தை இன்றைக்கான பொருளாதார தேவை என்பதோடு நிறுத்தி சுருக்கிப் பார்க்காதீர்கள். எதிர்காலம் பற்றியும் கொஞ்சம் சிந்தியுங்கள். அதெல்லாம் பார்த்துக்கலாம் வேற வேலை கிடைக்காமலாப் போய்விடும் என்று நினைக்காதீர்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம். இன்றைக்கே அனைத்து சக்தியையும் இழந்துவிட்டு நாளைய வேலைக்கு என்ன செய்வீர்கள். போராடி உங்களது நிறுவனத்தை இறங்கிவரச் செய்த நீங்கள் உங்களது சக ஊழியர்களை திரட்டி இதுபற்றி பேசுங்கள். சம்பளம் என்ற பொருளாதார தேவையை மட்டும் முன்வைத்து ஓடாதீர்கள். உங்களுக்கென்று ஓர் எதிர்காலம் உள்ளது. குடும்பம் உள்ளது அதையெல்லாம் பற்றி கலந்து பேசுங்கள். டெலிவரி நேரம் பற்றியும், பணிப் பாதுகாப்பு பற்றியும், இ.எஸ்.ஐ., பற்றியும் பேசுங்கள்.

இன்றைக்கு கூட்டமாகத் திரண்டாலும் இது போதாது. இந்திய தொழிலாளர் நலச் சட்டம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். சங்கமாகத் திரளுங்கள். உங்களுக்கென்று ஓர் வரையறையை உருவாக்குங்கள். அதுபோலில்லாத வரை பணப் பிரச்சினை மட்டுமல்ல எந்தப் பிரச்சினையும் தீராது, அதிகமாகிக்கொண்டே போகும். சங்கமாகத் திரள்வதுதான் முதல்படி.

உங்களது கோரிக்கைகள் நிறைவேற வாழ்த்துகிறோம்.

நன்றி : New Democrats

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க