டந்த 22.09.2018 முதல் நடந்துவந்த யமஹா தொழிலாளர்களின் போராட்டமானது ஐம்பது நாட்களைக் கடந்து தற்போது ஒரு முடிவை எட்டியுள்ளது.

நவம்பர் 9 அன்று மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் யமஹா பிரச்சனை குறித்த சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. தண்டனையாக, இடைநீக்கம் செய்யப்பட்ட இரண்டு தொழிலாளர்களையும் இடைநீக்க நிலைக்கு மாற்றி உள் விசாரணை நடத்துவதென்று நிர்வாகம் நிலையெடுத்ததாகவும், ஆனால், யூனியன் அமைக்கும் முயற்சிக்காக தண்டனை நடவடிக்கைக்கு ஆளான தொழிலாளர்களை எந்த தண்டனையும் இன்றி வேலைக்கு அனுமதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தொழிலாளர்கள் உறுதியாக நின்றனர்.

அடுத்த கூட்டம் நவம்பர் 14 அன்று நடந்தது. இடைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் அளிப்பதாகவும், அவர்களுக்கான உள் விசாரணையின் முடிவில் அவர்கள் மீது தண்டனை நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்றும் நிலையெடுத்த யமஹா நிர்வாகம், வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை இடைநீக்கம் செய்யப்பட்டவர்களாக மாற்றுவோம் என்று உறுதியாக நின்றது. இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் உள் விசாரணை முடிந்த பின்னர் ஆலை பணிக்கு திரும்புவர். மேலும், பெரும்பான்மை சங்கத்துடன் தொழில் பிரச்சனைகள் குறித்துப் பேசுவதாகவும், வேலைநிறுத்தம் செய்தமைக்காக தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்றும் நிர்வாகம் ஒப்புக்கொண்டது. நவம்பர் 16 அன்று தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினார்கள்.

இந்தப் போராட்டமானது முழு வெற்றியடையவில்லை என்றாலும் குறிப்பிட்ட அளவுக்கு யமஹா நிர்வாகத்தை தொழிலாளிகள் பணிய வைத்திருக்கின்றனர். இந்த போராட்டத்தின் சிறப்பம்சம் என்பது தொழிலாளிகள் இறுதிவரை உறுதியாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடினர்.

தங்களது அடிப்படை உரிமைகளை மறுக்கப் படுப்பது, திறன்மிக்க தொழிலாளிகளை கழிவறையை சுத்தம் செய்யவைப்பது, சிறு தவறுகளுக்குக் கூட அவர்களை அவமானப்படுத்தி கூனிக்குறுக வைப்பது. ஆகிய கொடுமைகளுக்கெதிராக, சி.ஐ.டி.யு தலைமையில் தொழிற்சங்கம் துவங்கினர் யமஹா தொழிலாளிகள்.

அதன் விளைவாக தொழிற்சங்க நிர்வாகிகளான இரண்டு தொழிலாளிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். சகதொழிலாளிகள் அநியாயமாக டிஸ்மிஸ் செய்யப்பட்டதைக் கண்டித்து அவர்கள் தங்கள் போராட்டத்தைத் துவங்கினர். இது குறித்து ஏற்கனவே கட்டுரை வெளியிட்டுள்ளோம்.

படிக்க:
ஆலை நடத்துறாங்களா ? ஸ்கூல் நடத்துறாங்களா ? யமஹா தொழிலாளர் போராட்டம்
தொழிற்சங்க உரிமையைப் பறிக்கும் யமஹா – என்ஃபீல்டு – எம்.எஸ்.ஐ : புஜதொமு ஆர்ப்பாட்டம்

அதன் பின்னர் தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தைப் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்தனர். மேலும் அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள், கட்சிகள் என அனைத்து தரப்பில் இருந்தும் ஆதரவு பெருக ஆரம்பித்தது.

ஒரு பக்கம் மக்கள் மத்தியில் போராட்டங்கள் நிகழ்ந்துகொண்டிருந்த அதே நேரத்தில் சி.ஐ.டி.யு சங்கத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தொழிலாளர் நல ஆணையத்தில் பேச்சுவார்த்தை நடத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

டி.எம்.எஸ். வளாகத்தில் தொழிலாளர் நலத்துறை துணை ஆணையாளர் முன்னிலையில் நடைபெற்ற பல்வேறுகட்ட பேச்சுவார்த்தையின் போது ஆலை நிர்வாகம் தனது தரப்பில் இருந்து முறையாக அதிகாரிகள் யாரையும் அனுப்பாமல் தொடர்ந்து ஏமாற்றி வந்தனர். அதன் பின்னர் தொழிலாளர் நலத்துறையின் தொடர் வற்புறுத்தலின் காரணமாக யமஹா தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கு மனிதவளத்துறை அதிகாரிகள் வந்தனர்.

பேச்சுவார்த்தைக்கு வருகின்ற மனிதவள அதிகாரி பிடி கொடுக்காது இருப்பதும், பதில் கூறாமல் இழுத்தடிப்பதுமாக செயல்பட்டுள்ளார். அதையும் தாண்டி சமரசம் செய்துகொள்ளலாம் என போகிற போக்கில் தெரிவிப்பது. அதன் பின்னர் நான் மட்டும் முடிவு செய்ய முடியாது நிர்வாகத்திடம் பேச வேண்டும் என பேச்சுவார்த்தையை இழுத்தடிக்கும் வேலையை மட்டுமே செய்துவந்துள்ளார்.

இடையில் அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி தொழிலாளர்கள் பணிக்கு மீண்டும் செல்லலாம், என தொழிலாளர் துறை அதிகாரி அறிவித்தார், அதனடிப்படையில் வேலைக்கு சென்ற தொழிலாளர்களை மன்னிப்புக் கடிதம் எழுதித் தந்தால் தான் பணியில் சேர்த்துக் கொள்வோம் என தெரிவித்தது நிர்வாகம்.

தங்கள் உரிமையைக் கேட்டதைத் தவிர வேறு எந்த குற்றமும் செய்யாத தொழிலாளிகள் நாங்கள் ஏன் மன்னிப்புக் கடிதம் எழுதித் தரவேண்டும் என கேட்டுள்ளனர். பின்னர் அவர்களை போலீசைக் கொண்டு அப்புறப்படுத்தியது ஆலை நிர்வாகம். கார்ப்பரேட்டுகளுக்காக காவிகள் நடத்தும் ஆட்சியில் உரிமை கேட்பது குற்றம்தான்.

இவ்வாறு தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர்  தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்ந்து முடிவு எட்டப்படாத நிலையில் மீண்டும், அக்டோபர் 10-அன்று தாம்பரம்  வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது நிர்வாகத் தரப்பில் இருந்து வந்த மனிதவள அதிகாரி கிளிப்பிள்ளை மாதிரி மீண்டும், “யமஹா-வின் உலகளாவிய நிர்வாகிகளுடன் பேசிதான் முடிவு செய்ய வேண்டும்” என்று கூறி இரண்டுநாள் அவகாசம் கேட்டார். அதற்கு அரசுத்தரப்பில் இருந்து அவகாசம் வழங்கப்பட்டது.

அதன் பின்னர் நடந்த பல்வேறு பேச்சுவார்த்தை முயற்சிகளும் தோல்வியை அடைந்தன. இந்நிலையில் யமஹா தொழிலாளர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தலைமையில் காஞ்சிபுரத்தில் அக், 30, 2018 அன்று அனைத்துக் கட்சிகள் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் விளைவாகப் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தாம்பரம் நகராட்சி அரங்கில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், 31.10.2018 அன்று ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர், தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள், சி.ஐ.டி.யு. தலைவர்கள் மற்றும் யமஹா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு தொடர்ந்து மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தை என தொழிலாளர்கள் இழுத்தடிக்கப்பட்டனர். இந்த இழுத்தடிப்பு நடவடிக்கை என்பது தொழிலாளர்களின் போராட்ட உறுதியை குலைக்கும் என யமஹா நிர்வாகம் கருதியிருக்கலாம். ஆனால் தொழிலாளர்களின் உறுதி குலையாது தொடர்ந்து தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

அதன் விளைவாக இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரவேண்டிய கட்டாயம் ஏற்பட்ட சூழலில் மீண்டும் 14.11.2018 அன்று பேச்சுவார்த்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

அதில் தொழிலாளர்களின் கோரிக்கையான தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை யமஹா தரப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்ட்து.

மேலும் இரு தொழிற்சங்க நிர்வாகிகளின் டிஸ்மிஸ் உத்திரவை ரத்து செய்து அவர்களை இரண்டுமாதம் தற்காலிக பணி நீக்கத்துக்கு பிறகு பணியில் சேர்த்துக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளனர். மேலும் இந்த காலத்தில் அவர்களுக்கு இழப்பீடாக இரண்டுமாத சம்பளம் வழங்கப்படும் எனவும் அறிவித்தனர். அந்த வகையில் தற்போது தொழிலாளிகள் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர்.

யமஹா தொழிலாளர்களின் இந்த போராட்டமானது ஒரகடம் பகுதி முழுக்க உள்ள தொழிலாளிகள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க