தொழிற்சங்க தலைவர்கள் சடங்கிற்காக அனல் பறக்கும் உரை நிகழ்த்துவதற்கோ அல்லது உழைக்கும் வர்க்கத்தை சாந்தப்படுத்துவதற்காக ஆளும் வர்க்கங்கள் கூறும் வெறும் ஆறுதல் சொற்களுக்காகவோ மட்டுமல்ல மே நாள்.

“எட்டு மணி நேரம் வேலை” உரிமை என்பது ஏதோ ஆளும் வர்க்கங்களாலோ அரசினாலோ மனமிரங்கி கொடுக்கப்பட்டதல்ல. மாறாக உழைக்கும் வர்க்கத்தால் போராடி பெறப்பட்டது என்பதை நினைவுப்படுத்துவதற்கே மே நாள். உள்நாட்டிலும் உலகம் முழுவதிலும் உழைக்கும் வர்க்கத்தின் முன் நிற்கும் சவால்கள் பற்றி ஆழ்ந்து சிந்திக்கவும் இழந்து போன உரிமைகளை மீட்டெடுக்கவும், இருக்கும் ஒன்றிரண்டு உரிமைகளையும் காப்பாற்றிக்கொள்ளவும் தேவைப்படும் உத்தியை வகுக்கும் தருணமும் கூட இந்த மே நாள்தான்.

இந்தியாவில் இந்நாளுக்கான சிறப்பிற்கு பல காரணங்கள் உண்டு. தற்போது, இந்திய உழைக்கும் வர்க்கமும் இதர இந்தியாவும் புதிய ஒன்றிய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் கட்டத்தில் இருக்கின்றனர். வெற்றி பெரும் கட்சியின்(களின்) கொள்கைகள் அவர்களின் கவனத்திற்குரியதாக இருக்கிறது. பெரிய தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களது கோரிக்கைகளை கட்சிகளின் தேர்தலறிக்கையில் இடம் பெற வலியுறுத்தியுள்ளன.

உலக தொழிலாளர் கழகம் தொடங்கப்பட்டு இன்றோடு நூறு ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடுவதையும் இந்நாள் நினைவு கூறுகிறது.

உலக தொழிலாளர் கழகமும் அதன் உறுப்புகளான உலக தொழிலாளர் உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள், உலகளாவிய கோட்பாடுகள் மற்றும் விதிகளை மட்டும் வலியுறுத்தவில்லை. நாடுகள் அளவிலும் அவற்றை அமல்படுத்த உறுதியான அடிப்படைகளை அளிக்கிறது.

படிக்க:
தேர்தல் மாற்றங்கள் தொழிலாளர்களின் நிலையை மாற்றிவிடுமா | சே. வாஞ்சிநாதன்
♦ தொழிலாளர் பிரச்சினை : சங்கமாகத் திரண்டால் மட்டும் போதுமா ?

இந்தியாவிலும் வேலை நேரத்தை முறைப்படுத்தக் கோரியே தொழிலாளர் இயக்கங்கள் தோற்றம் கொண்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய முதலாளிகள் உலகம் முழுதிலும் உள்ள அவர்களது போட்டியாளர்கள் செய்தது போலவே எவ்வளவுக்கெவ்வளவு தொழிலாளர்களை அதிக நேரம் பிழிகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு தங்களது இலாபம் அதிகரிக்கும் என்று எண்ணினார்கள்.

மெட்ராஸ் தொழிலாளர் சங்கம் உட்பட நாட்டின் பல்வேறு தொழிலாளர் அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களின் வேலைத்தன்மையை சற்றே மாற்ற கோரிக்கொண்டிருந்த நிலையில் அன்றைய ஆங்கிலேய காலனி அரசும் தனியார் நிறுவனங்களும் தொழிலாளர் உரிமைகளையும் சங்கமாய் திரளும் உரிமையையும் முற்றிலும் மறுத்தன.

தொடர்ந்து நடந்த பல்வேறு போராட்டங்களினாலும், அரசியல் சூழலாலும் சிற்சில தொழிற்சங்க உரிமைகளுடன் இந்திய தொழிற்சங்கச் சட்டம் – 1926 உருவாக்கப்பட்டது. ஆனால் இச்சட்டத்தின்படி தொழிற்சங்கங்களை தனியார் நிறுவனங்கள் கட்டாயம் அங்கீகரிக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் தொழிலாளர் சார்பாக தங்களுடன் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை செய்வதையும் அவர்கள் அங்கீகரிக்கவில்லை.

நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில் சங்கம் கட்டும் உரிமை மற்றும் கூட்டமாக சேரும் உரிமை போன்ற ஐநா உடன்படிக்கைகளில் இந்திய அரசு கையெழுத்திடவில்லை. இந்திய அரசு, சங்கம் கட்டும் உரிமையை அடிப்படை உரிமையாக 19(1)(c) சட்ட பிரிவின் கீழ் அங்கீகரித்திருக்கிறது. ஆயினும் இந்த உடன்படிக்கைகளில் கையெழுத்திடுவது என்பது வேலை நிறுத்தம் செய்யும் உரிமை உட்பட ஒட்டுமொத்த உரிமையையும் கொடுக்க வேண்டி வரும் என்ற காலனியாதிக்க கால சிந்தனையாகும்.

விடுதலைக்கு பிறகு ஊதிய உயர்வுக் கோரிக்கைகளையும் வேலை நிறுத்தங்களையும் குறைத்துக்கொள்ளுமாறு உழைக்கும் வர்க்கத்திடம் இந்திய அரசு அறிவுறுத்தியது. இதன் மூலம் மூலதனம் பெருகுமென்றும் அது தொழிற்துறை வளர்ச்சிக்கு தேவை என்றும் மேலும் நீண்ட கால நோக்கில் தொழிலாளர் வர்க்கத்திற்கு நன்மை பயக்கும் என்றும் கூறியது.

மேலும் தன்னுடைய தொழிலாளர் நிறுவனங்களின் மூலம் தொழிற்துறையில் நேரடியாக தலையிட்டு தொழிலாளர் இயக்கங்களை அரசு கட்டுப்படுத்தியது. ஆயினும் தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியம், ஒப்பந்த முறையை ஒழித்தல், ஊக்கத்தொகை, பேறுகால சலுகைகளை உள்ளிட்ட சமூக பாதுகாப்புத்திட்டங்கள் மற்றும் நிரந்தர வேலை ஆகியவற்றைக் கோரி தீவிரமான போராட்டங்களில் ஈடுபட்டனர்.

உலகமயமாக்கமும் தொழிலாளர் போராட்டமும்

வேலைவாய்ப்பு குறைந்து போனதற்கு தொழிலாளர் நலச்சட்டங்கள் மற்றும் தொழிலாளர்கள் அமைப்புகளின் போராட்டங்களையே காரணமாக நவ தாராளவாத பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர். தொழிலாளர் வேலை பறிப்பு, உற்பத்தியை நிறுத்துதல், தொழிற்சாலைகளை மூடுதல் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் தாக்குதல்களால் பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்திருப்பது பற்றி அவர்களுக்கு கவலையில்லை.

மறுபுறத்தில் தொழிற்துறையின் மூடிய மற்றும் அதிகாரத்துவ பொருளாதார கட்டமைப்பில் சிக்கலிருப்பதாக தொழிற்துறை பொருளாதார நிபுணர்கள் கண்டனர். அரசு நேரடி தலையீட்டின் கீழ் அனைவராலும் அனைவர்க்கும் வளர்ச்சி என்ற நேருவின் பொருளாதார கொள்கை முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இது அனைத்தும் சேர்ந்து மீண்டுமொரு பொருளாதார சீர்திருத்தத்திற்கு வித்திட்டது.

1990-களுக்குப் பிறகு உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், பன்னாட்டு பெருநிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு மூலதனம் ஆகியவை பெரும் வர்த்தக சீர்திருத்தம் செய்வதற்கு பெரும் அளவிலான தொழிலாளர் நலச்சட்டம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை வலியுறுத்தின. அதாவது அதுவரை தொழிலாளர் வர்க்கம் பாடுபட்டு போராடிப் பெற்ற அனைத்து உரிமைகளையும் நீர்த்து போகச் செய்வதுதான் அவர்களது கோரிக்கை.

தொழிலாளர் நலச்சட்ட சீர்திருத்தங்களை கொண்டு வருவதில் பெஸ்லே மற்றும் பர்கீஸ் (Besley and Burgess – BB) என்ற வெளிநாட்டு முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களின் ஆய்வுக்கட்டுரை முதன்மையாக பங்காற்றியது எனலாம். தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்கள்தான் தொழிற்துறை வளர்ச்சி இன்மைக்கும், வேலை வாய்ப்புகள் அதிகரிக்காததிற்கும், ஏழ்மைக்கும் காரணம் என்று கூறினர்.

தவறான வழிமுறைகளால் உருவாக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கை பொதுமக்கள் மற்றும் அரசியல் ஆளுமைகளின்பால் தாக்கம் செலுத்தியது. இதன் விளைவாக ஆள் எடுத்தல் – தூக்குதல், குறைந்த கூலி, தொழிலாளர் சட்டங்களின் வலுவைக் குறைத்தல், சமூக பாதுகாப்பை வலுவிழக்கச் செய்தல் மற்றும் தொழிற்சாலை கண்காணிப்புகள் குறைப்பு உள்ளிட்ட பாரிய அளவிலான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தியாவில் நவ தாராளவாத உலகமயமாக்கத்திற்குப் பிறகு சிறுபான்மை தொழிளார்களுக்காவது இருந்த நலச்சட்டங்கள் கூட கடுமையான பதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. சமீபத்தில் வெளிவந்த BB ஆய்வறிக்கை அவர்களது ஆய்வடிப்படையிலான சீர்திருத்தங்கள் தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறியிருக்கிறது.

அதே நேரத்தில் பல்வேறு அரசியலமைப்பு வழிகாட்டுதலின் படி தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு தீர்ப்புகளை கொடுத்து வந்த நீதித்துறையும் உலகமயமாக்கத்தின் அலைக்கு தப்பவில்லை. சட்டங்களிலும் நீதித்துறையிலும் பல்வேறு சீர்திருந்தங்கள் கொண்டு வரப்பட்டன. இது செயில் (SAIL) தீர்ப்பிலும், தமிழ்நாடு அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த உரிமைக்கு எதிரான தீர்ப்பிலும், உமாதேவி எதிர் கர்நாடக அரசு என்ற தீர்ப்பிலும் வெளிப்பட்டுள்ளது.

சமத்துவமின்மையும் கடுமையான போராட்டமும்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் என இரு பிரிவினருக்கும் நிலைமைகள் ஒன்று போலவே இருந்தன. ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியும் பொருளாதார சீர்திருத்தங்களும் இன்று அவர்களை அமைப்புசார் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் இருவரது வாழ்நிலைகளிலும் பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

இது தொழிலாளர் சந்தையில் ஏற்றத்தாழ்வை கடுமையாக அதிகரித்துவிட்டது. அரசு நிர்வாகத்தின் மீதான உழைக்கும் வர்க்கத்தின் கோபத்தையும் தூண்டி விட்டிருக்கிறது. புதிதாக உருவான படித்த நடுத்தர வர்க்கத்தின் தனிநபர் கனவுகள் மூலம் மென்மேலும் இது பரவலாகியிருக்கிறது.

படிக்க:
மனித குலத்தை எச்சரிக்கிறது மேதின வரலாறு ! பத்திரிக்கைச் செய்தி
♦ உலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் !

இந்த ஏற்றத்தாழ்வுகள் பிரிக்காலிலிருந்து மாருதி சுசூகி வரை இரத்தமயமான போராட்டங்களுக்கு வித்திட்டது மட்டுமல்லாமல் தொழிற்துறை வன்முறைக்கும் இட்டுச்சென்றது. அதே நேரத்தில் உலகமய உத்திக்கு பொருத்தமான நவீன இணைய வர்த்தக பொருளாதாரம் தற்பொருளாதாரவாத “தொழில்முனைவோர்” என்ற புதிய ஒரு வகுப்பினை உருவாக்கியது.

மறைந்துள்ள மூலதனத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பு நெருக்கடிக்குள் இவர்கள் மெதுவாக தள்ளப்படுகிறார்கள். அது அவர்களை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உடைந்து போக செய்கிறது.

இன்றைய சிக்கல் என்னவெனில் நிறுவனத்தின் தவறான முடிவோ அல்லது சீரமைப்போ கூட முதலில் தொழிலாளர்களின் வயிற்றில்தான் விழுகிறது. அதாவது தொழிலாளர்தான் அனைத்து சிக்கல்களையும் சுமக்க வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தேசிய ஊதியத்தில் தொழிலாளர்களது பங்களிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பது வர்க்க அடிப்படையிலான தர்க்கத்துக்கு வலு சேர்கிறது.

அமைப்புசார் தொழிற்சாலைகளில் ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 1992-93 களில் 12 விழுக்காட்டிலிருந்து 2016 -ல் 30 விழுக்காடாக அதிகரித்துவிட்டது. தொழிற்சாலையின் மதிப்பில் கூலியின் பங்கு என்பது கடந்த முப்பதாண்டுகளில் குறைந்து கொண்டே வருகிறது. தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் உண்மையான கூலி உயராமலே இருக்கிறது. அது கிராமப்புறங்களில் எதிர்மறைக்கு சரிந்திருகிறது. இது பரவலாகி வரும் ஏற்றத்தாழ்வை காட்டுகிறது. பணியிடங்களில் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் குன்றி வருகிறது. குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்களில் அடிக்கடி விபத்து நிகழ்கிறது.

பழைய தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கவும் புதிதாக உரிமைகளைப் பெறவும் தொழிலாளர் உரிமைகளை நீர்த்து போக செய்யும் பல்வேறு நடவடிக்கைகளை எதிர்த்தும் தொழிற்சங்க கூட்டமைப்புகளால் இதுவரை 17 முறை இந்திய அளவில் வேலை நிறுத்தங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவில் தொழிற்சங்க இயக்கங்களில் நண்பன் – எதிரி என்ற அரசியல் சங்கமத்தால் பிரிவினைகள் பல நடந்துள்ளதை ஆய்வுகள் சுட்டுகின்றன.

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை மையப்படுத்துகின்றன. ஆனால் பிற அரசு சாரா நிறுவனங்கள் தொழிற்சங்கங்கள் போராடி பெற்ற உரிமைகளை பறிபோகச் செய்வதாக தொழிசங்கங்கள் சந்தேகிக்கின்றன. அதே சமயத்தில் பெரும்பான்மையான அமைப்புசாரா தொழிலாளர்களை தொழிற்சங்கங்கள் கண்டுகொள்ளவில்லை என்று தொழிற்சங்கங்களை குடிமை சமூக அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

தொழிலாளர் உரிமைகள் காலியாகி கொண்டிருக்கும் இந்நேரத்தில் இந்த அமைப்புகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன. எப்படி இருப்பினும் தொழிலாளர் அமைப்புகள்தான் தொழிலாளர்களுக்கானவை. தொழிலாளர் உரிமைகளை பாதுகாத்திட குறைந்தது தொழிலாளர் ஐக்கியப்பாடு இன்றியமையாதது என்பதை தொழிலாளர் அமைப்புகளுக்கு உணர்திடவே மே நாள்.

உலகின் பல்வேறு சக்திகள் உலகத் தொழிலாளர் கழகத்தினை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டினாலும் 100 ஆண்டுகளாக இது நிலைத்திருக்கிறது. இது தொடர்ந்து “நல்ல உலகமயமாக்கத்திற்கும், நிறுவனமயப்படுத்தப்பட்ட மக்களாட்சிக்காகவும் நாகரீகமான வேலைசூழலுக்காகவும்” பரிந்துரைத்து வருகிறது. மோசமான ஆனால் முற்றிலும் நம்பிக்கையற்று போகாத உலக சூழலில் அதை புத்தாக்கம் செய்வதற்கான நாளே மே நாள்.

ஐக்கியநாடுகள் சபையின் உலக தொழிலாளர் கழகம் பரிந்துரைக்கும் நல்ல உலக மயமாக்கமோ, நல்ல நிறுவனமயப்படுத்தப்பட்ட மக்களாட்சியுமோ வெறும் கானல்நீர் என்பதுதான் யதார்த்தம். தொழிலாளி வர்க்க விடுதலை என்பது முதலாளித்துவத்தை வீழ்த்தியெறியும் வர்க்கப் போராட்டத்தில்தான் சாத்தியம்.

 


கட்டுரையாளர்:
தமிழாக்கம் : சுகுமார்
நன்றி : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க