உலகைக் குலுக்கிய மே தினம் | படங்கள் !

குண்டடிபட்ட தொழிலாளர்களின் உடலில் இருந்து வடிந்தோடிய இரத்தம், வெள்ளைக் கொடியை சிவப்பாக்கியது. அன்றிலிருந்து, செங்கொடியானது உலகம் முழுவதும் வாழும் உழைக்கும் மக்களின் கொடியானது.

0
துருக்கி தொழிலாளர் கட்சி உறுப்பினர்கள், அதிபர் எர்டோகன் மேற்கொண்டு வரும் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து போராட்டம் நடத்துகின்றனர்.

பேறு காலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு, குறைந்தபட்ச கூலி உயர்வு மற்றும் பணிச்சுமை குறைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே தினத்தன்று உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற போராட்டங்களின் தொகுப்பு ..

உலகெங்கும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வீதிகளில் இறங்கி மே தினம் என்றழைக்கப்படும் அகில உலகத் தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் நாளில் போராட்டங்கள், பேரணி என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

ஹாங்காங் நகரப் பேருந்து ஓட்டுனர்களும், குடும்பப் பணிப் பெண்களும் வாரம் ஒன்றுக்கு 44 மணி நேர வேலை உத்திரவாதத்தை வலியுறுத்தி பேரணி ஒன்றை நடத்தினர். வங்கதேச ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் பேறு காலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு மற்றும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பிலிப்பைன்ஸ் தொழிலாளர்கள் குறைந்த பட்ச ஊதிய உயர்வை வலியுறுத்தி பேரணி நடத்தினர்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : மே தின வரலாறு !
♦ ஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள் | கலையரசன்

இவற்றில் சில அமைதியாகவும், சில வன்முறையிலும் முடிந்தன. துருக்கி, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் கலவரத் தடுப்பு போலீசார் போராட்டக்காரர்களுடன் மோதலில் ஈடுபட்டு, நூற்றுக்கணக்கானவர்களைக் கைது செய்துள்ளனர்.

இன்று நாம் அனுபவிக்கும் சலுகைகளான எட்டு மணிநேர வேலை, ஓய்வு, விடுமுறை போன்றவை, நூறு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்கத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களின் விளைவுகள் என்பது பலருக்குத் தெரியாது. சிக்காகோ நகரில், இரத்தம் சிந்திப் போராடிய தொழிலாளர்கள் தங்களது உரிமைகளைப் பெற்ற நாள்தான் மே தினம்.

சிக்காக்கோ நகரில், ஹே மார்க்கெட் சதுக்கத்தில் கூடிய (May 4, 1886) அமெரிக்க தொழிலாளர்கள், எட்டு மணி நேர வேலை வேண்டுமென போராடினார்கள். அன்றைய நாட்களில், தொழிலாளர்கள் தினசரி பதினைந்து மணிநேரம் வேலை செய்வது சர்வசாதாரணமானது.

எட்டு மணிநேர வேலை செய்யும் உரிமை கோரி, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், சமாதானக் கொடியான வெள்ளைக் கொடி ஏந்திச் சென்றார்கள். அன்று நடந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பல தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். குண்டடிபட்ட தொழிலாளர்களின் உடலில் இருந்து வடிந்தோடிய இரத்தம், வெள்ளைக் கொடியை சிவப்பாக்கியது. அன்றிலிருந்து, செங்கொடியானது உலகம் முழுவதும் வாழும் உழைக்கும் மக்களின் கொடியானது. மே 1, உலகத் தொழிலாளர்களின் தினமாக பிரகடனம் செய்யப்பட்டது.

தைவான் தலைநகர் தாய்பே-யில் ’அதிக விடுமுறை நாட்களும், சமூகப் பாதுகாப்பையும் உறுதி செய்’ என்ற முழக்கத்துடன் மே தினத்தில் போராடும் தொழிலாளர்கள்

கிர்கிஸ்தானிய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் தோழர்கள் லெனின், ஸ்டாலின் ஆகியோரின் உருவப்படங்களை ஏந்தி முழுக்கமிட்டபடி ஊர்வலம் செல்கின்றனர்

இத்தாலியின் தூரின் நகரத் தெருக்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உணவு விநியோக வாகன ஓட்டுனர்கள். ”ஆர்டருக்கான கமிசன் என்பதை மாற்றி, குறைந்தபட்ச மணிநேர ஊதியத்தை உத்திரவாதப்படுத்து” என்ற முழக்கத்துடன் போராடியவர்களைத் தடியடி நடத்திக் கலைக்கும் போலீசு

வங்கதேச பெண் ஆயத்த ஆடை தொழிலாளர்களின் மே தினப் போராட்டம்.  “சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு கொடு, பெண் தொழிலாளர்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்திடு” என்று முழக்கமிடும் பெண்கள்

பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரில் போலீசின் கண்ணீர்ப் புகை குண்டு தாக்குதலை எதிர்கொள்ளும் விதமாக கண்ணாடியும் முகமூடியும் அணிந்து போராடும் தொழிலாளர்கள். பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கொண்டுவந்துள்ள தொழிலாளருக்கெதிரான திட்டங்களைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிலுள்ள செஞ்சதுக்கத்தில் அமைதிப்பேரணியில் ஈடுபட்ட தொழிற்சங்க உறுப்பினர்கள். அரசுக்கெதிராக முழக்கமெழுப்பிய நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்

சம்பள உயர்வு கேட்டு ஊர்வலம் நடத்தும் இந்தோனேசியத் தொழிலாளி வர்க்கத்தை, முன்னேறிச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி வைத்துள்ள போலீசு

பிரெஞ்சு நாட்டு மஞ்சள் ஆடைப் போராட்டக்குழுவினர் தலைநகர் பாரீசில் உள்ள தடுப்பரண் ஒன்றை எரித்துள்ளனர்.  அந்நாட்டு அரசுக்கெதிராக கடந்த பல மாதங்களாகவே தீவிரப் போராட்டத்தில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

துருக்கி தொழிலாளர் கட்சி உறுப்பினர்கள், அதிபர் எர்டோகன் மேற்கொண்டு வரும் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து போராட்டம் நடத்துகின்றனர்.

அல்ஜீரியத் தலைநகரில் அரசுக்கெதிரான முழுக்கங்களை எழுப்பும் தொழிலாளி வர்க்கம். ஆசிரியர்கள், சுரங்கப் பணியாளர்கள் மற்றும் ஆலைத் தொழிலாளர்கள் ஒன்றாகச் சேர்ந்து வேலையின்மையை ஒழித்து மக்களை வறுமை நிலையிலிருந்து மீட்க வேண்டும் என்று போராடுகின்றனர்.

நாங்கள் அடிமைகள் அல்ல; தொழிலாளர்கள் என ஹாங்காங்-கில் பதாகைகளை ஏந்தி நிற்கும் தொழிலாளி வர்க்கம்

கட்டுமானத் துறையில் நிலவிவரும் கடும்போக்கைக் கண்டித்தும், தற்காலிக ஊழியர்களுக்கும் சமவிகித ஊதியம் வேண்டும் என்றும் சியோல் நகரத்தில் போராடும் தென்கொரிய தொழிலாளி வர்க்கம்

பிலிப்பைன்ஸ் அதிபரின் கொடும்பாவியை எரிக்கும் தொழிலாளி. குறைந்தபட்ச ஊதிய உயர்வு அளிக்கக் கோரியும், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு தக்க மரியாதை தரப்பட  வேண்டுமென்பதும் இத்தொழிலாளர்களின் மேதினக் கோரிக்கை

மே தினத்தன்று பாலஸ்தீனிய நகரம் காசாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிராகப் பேரணி நடத்திப் போராடும் மக்கள். அமெரிக்காவால் அளிக்கப்பட்டு வந்த நிவாரண நிதி, டிரம்ப்பின் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டால் இரத்து செய்யப்பட்டுவிட்டதைத் தொடர்ந்து அங்கு பணியாற்றி வந்த ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவின் பொருளாதார மந்தநிலைக்கு எதிர்வினையாகவும், சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் நைஜீரிய தொழிலாளர்கள் நடத்திய பேரணி…

இலண்டன் மே தினப் பேரணியில்  கலந்து கொண்ட ஒரு பெண், வண்ணப் புகையை வெளிப்படுத்தி தனது வர்க்க ஒற்றுமையை பறைசாற்றுகிறார்.


தமிழாக்கம் : வரதன்
நன்றி : vox

 

 

 


இதையும் பாருங்க …

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க