தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சும் அமேசான் நிறுவனம்!

கிடங்கின் குறுக்கே உள்ள பல்வேறு அடுக்குகளில் இருந்து குறிப்பிட்ட பொட்டலங்களைக் கண்டறிந்து மீட்டெடுக்க வேண்டியது நிஷாவின் பணி. பணியின்போது அவர் ஓய்வின்றித் தொடர்ந்து ஒன்பது மணி நேரம் நடக்க வேண்டும்.

0

டந்த ஜூன் 23 அன்று, அமெரிக்க இ-காமர்ஸ் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனமான அமேசான், இந்தியாவில் அடுத்த ஏழு ஆண்டுகளில் கூடுதலாக 15 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாகவும் அதனால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் உறுதியளித்தது. இதன்மூலம் அனைத்துத் தொழில்களிலும் அந்நிறுவனத்தின் மொத்த இந்திய முதலீடு 26 பில்லியன் டாலராக உயரும்.

எத்தனை வேலைகளை உருவாக்குகிறது என்பதைவிட தன்னிடம் பணிபுரியும் தொழிலாளர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதைத்தான் நாம் இங்கு கவனிக்க வேண்டும். அமேசான் தனது தொழிலாளர்களை, குறிப்பாக அதன் கிடங்குத் தொழிலாளர்களை (warehouse workers), எவ்வாறு கசக்கிப் பிழிகிறது என்பதற்கு டெல்லியில் உள்ள அமேசான் கிடங்குத் தொழிலாளர்களின் அவல நிலையே சான்று.

அமேசான் இந்தியா அதன் கிடங்குத் தொழிலாளர்களை ’அசோசியேட்ஸ்’ என்று குறிப்பிடுகிறது. டெல்லி அமேசான் கிடங்குத் தொழிலாளர்கள் அங்கு நிலவும் பணிச் சூழலால் மிகுந்த உடல் சோர்வுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள்.

”கொளுத்தும் வெயிலில் பெரிய கிடங்கில் முன்னும் பின்னுமாக நடந்து சென்றது என் தோலின் வெளிப்புற அடுக்கை உரித்துவிட்டது. நான் நிர்வாகத்திடம் சென்று விடுப்புக் கோரினேன். எனக்குக் கிடைத்த பதில் என்ன தெரியுமா? அவர்கள் என்னை ராஜினாமா செய்யச் சொன்னார்கள். அமேசான் இந்தியா கிடங்குகளில் இதுபோன்ற பிரச்சினைகளின்போது வழக்கமாகக் கையாளப்படும் நடைமுறை இதுதான்”. இது 21 வயதான கிடங்குத் தொழிலாளியான நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரின் அனுபவம்.

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அவர், ஐந்து சகோதரிகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது மகளாகப் பிறந்தவர். ஒரு வருடத்திற்கு முன்பு, தனது சொந்த மாவட்டத்தில் தீன் தயாள் உபாத்யாய் கிராமீன் கவுசல்யா யோஜனா (Deen Dayal Upadhyay Grameen Kaushalya Yojana) திட்டத்தில் பதிவுசெய்து கொண்டார். அவரது ஒரே நோக்கம் அவரது குடும்பத்திற்கு நிதி ஆதரவு அளிப்பதாக இருந்தது.

ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால்  (Ministry of Rural Development) இத்திட்டம் தொடங்கப்பட்டது. பல்வேறு திறன் கற்பித்தல் திட்டங்கள் மூலம் விளிம்புநிலை கிராமப்புற இளைஞர்களுக்கு நிலையான வேலைவாய்ப்பை வழங்குவதற்காக  இத்திட்டம் தொடங்கப்பட்டதாக அரசால் கூறப்படுகிறது. வேலை தேடிப் புலம் பெயர்ந்து செல்லும் நபர்களுக்கு இந்தத் திட்டம் பயனுள்ளதாக அமையும் என்றும் அரசு கூறுகிறது.

அமேசான் இந்தியாவின் மானேசரில் உள்ள கிடங்கில் ”தேர்வு” (picking) துறையில் சேர்ந்த நிஷா, உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும் பணி ஒன்றில் மூழ்கடிக்கப்பட்டார். கிடங்கின் குறுக்கே உள்ள பல்வேறு அடுக்குகளில் இருந்து குறிப்பிட்ட பொட்டலங்களைக் கண்டறிந்து மீட்டெடுக்க வேண்டியது அவரது பணி. பணியின்போது அவர் ஓய்வின்றித் தொடர்ந்து ஒன்பது மணி நேரம் நடக்க வேண்டும்.

”நான் ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட 25-30 கிலோமீட்டர் நடக்க நேரிடுகிறது. நான் உணர்விழந்து போனதுபோல் உணர்கிறேன். வேலையின் இடையே அரை மணி நேரம் இரண்டு இடைவேளைகள் வழங்கப்படும்; ஆனால் அதனையடுத்து நான் 4-5 மணி நேரம் தொடர்ந்து நடக்க வேண்டும்” என்று நிஷா கூறினார்.

நிஷா தாங்க முடியாத கால் வலியால் அவதிப்பட்டாலும் அவரால் விடுப்புப் பெற இயலவில்லை. ஒரு நாள் விடுப்பு எடுக்கவேண்டும் என்றாலே அவர் ராஜினாமா தான் செய்ய வேண்டும். நிறுவனத்திலிருந்து அவரது அடையாள அட்டை தடை (block) செய்யப்படும். அமேசான் இந்தியாவின் கொள்கையின்படி, தொழிலாளர்களுக்குப் பெயரளவில் ஆண்டுக்கு 14 விடுப்புகள் வழங்கப்படும்; ஏழு மருத்துவ விடுப்புகள் (sick leaves) மற்றும் ஏழு தற்செயல் விடுப்புகள் (casual leaves). உடல்நலப் பிரச்சினைகள் காரணமாகக் கூடுதல் விடுப்பு எடுத்துவிட்டால் கிடங்கில் அவர்களின் வேலையே கேள்விக்குறியாகிவிடும் என்று தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“குளிரூட்டும் இயந்திரங்கள் இல்லாததால், சுட்டெரிக்கும் வெயிலின் வெப்பத்தின் காரணமாகக் கிடங்கில் வேலை செய்பவர்களுக்கு மயக்கம் மற்றும் சோர்வு ஏற்படுவது பொதுவான நிகழ்வாகிவிட்டது. யாராவது சோர்வு குறித்துப் புகார் செய்தால், அவர்களுக்கு ஒரு வலி நிவாரணி கொடுக்கப்பட்டு 10-15 நிமிடங்கள் ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. நீண்ட நேரம் கெஞ்சினால், இ.எஸ்.ஐ மருத்துவமனைக்குச் செல்ல நிர்வாகம் தொழிலாளர்களை அனுமதிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில் கூட விடுப்பு என்பது அனுமதிக்கப்படுவதில்லை” என்று நிஷா மேலும் கூறினார்.


படிக்க: 10000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருக்கும் அமேசான் நிறுவனம்!


இது தொடர்பாக அமேசான் கிடங்குத் தொழிலாளர்கள் 8 பேரிடம் நியூஸ் கிளிக் பேசியபோது, அமேசான் நிறுவனத்தால் தாங்களும் கசக்கிப் பிழியப்படுவதாகத் தெரிவித்தனர். இதன் விளைவாக அவர்களின் உடல்நலமும் மோசமடைந்துள்ளது. அமேசானுக்கு உலகம் முழுவதும் 175 கிடங்குகள் உள்ளன; அவற்றில் 20 கிடங்குகள் இந்தியாவில் உள்ளன.

டெல்லியைச் சேர்ந்த 23 வயதான சினேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ’பேக்கேஜிங்’ துறையில் பணியாற்றிய தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். அவரது வேலை அவரை 4-5 மணி நேரம் நிற்கச் செய்கிறது. இது முதுகு மற்றும் கால் தசை வலிக்கு வழிவகுக்கிறது.

”வலி என்னை அடிக்கடி மருத்துவர்களைச் சந்திக்க வைத்தது. சோர்வு ஏற்பட்டால் ஓய்வெடுக்கத் தரையில் உட்காரும் வசதி கூட இல்லை. கழிவறையைப் பயன்படுத்தக் கூட சரியான இடைவெளி கிடைப்பதில்லை. ஓய்வு நேரம் (idle time) ஐந்து நிமிடங்களைக் கடந்து விட்டால், பி.ஏ (Process Assistant) தொழிலாளியை நோக்கிக் கத்தத் தொடங்கிவிடுவார்,” என்று அவர் கூறினார்.

உலகெங்கிலும் அமேசான் நிறுவனத்தில் நிலவும் வேலை நிலைமைகள் குறித்து தொழிலாளர் உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்தியாவில் அமேசான் கிடங்குத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அமேசான் இந்தியா தொழிலாளர் சங்கம் (Amazon India Workers’ Association – ஏ.டபிள்யூ.ஏ) கடந்த மே மாதம் டெல்லியில் உள்ள அரசியலமைப்பு சங்கத்தில் (Constitution Club) ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்தது.

இந்த கருத்தரங்கில் கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழிலாளர் உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமேசானின் கிடங்குத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், அமேசான் கிடங்குகளில் நிலவும் வேலை நிலைமைகளுக்கு அந்நிறுவனத்தைப் பொறுப்பேற்கச் செய்வதற்காக தொழிற்சங்கங்களை உருவாக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தனர். கருத்தரங்கில் ”மேக் அமேசான் பே” (Make Amazon Pay) என்ற பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் செயற்பாட்டாளர் நிக் ருடிகாஃப் (Nick Rudicoff) கலந்து கொண்டார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அமேசானின் தொழிலாளர் சட்ட மீறல்களுக்கு எதிரான போராட்டங்களின் நிகழ்வுகளை அவர் பகிர்ந்து கொண்டார்.

”இந்த வெற்றிகரமான பிரச்சாரத்தின் விளைவாக, தொழிற்சங்கம் உருவாகக்கூடாது என்பதற்காகப் பல மில்லியன் டாலர் செலவு செய்து அமேசான் மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்து, அமேசானின் முதல் தொழிற்சங்கத்தை உருவாக்கும் உரிமையைத் தொழிலாளர்கள் பெற்றனர். இது ஒரு வரலாற்று வெற்றி. தொழிற்சங்கம், தொழிலாளர்களுக்குப் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரத்தை வழங்கியது மட்டுமல்லாமல், அமேசானில் நடைபெறும் தொழிலாளர் உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை நோக்கி ஐரோப்பிய ஒன்றியம் போன்ற சக்திகளின் கவனத்தையும் ஈர்த்தது” என்று ருடிகாஃப் கூறினார்.


படிக்க: அமேசானில் உதயமானது தொழிற்சங்கம் : நியூயார்க் நகர தொழிலாளர்கள் வென்றது எப்படி – ஓர் அனுபவ பகிர்வு!


அமேசான் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் (ஏ.டபிள்யூ.ஏ) கூற்றுப்படி அமேசான் இந்தியா அதன் மானேசர் மையத்தில் சுமார் 1,400 ஊழியர்களைப் பணிக்கமர்த்தியுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்தவர்கள்; சுமார் 70 சதவிகிதத்தினர் இளம் பெண்கள்.

ஏ.டபிள்யூ.ஏ-உடன் நெருக்கமான தொடர்புடையவரான தர்மேந்திர குமார் ”கிராமப்புறம் மற்றும் சிறிய நகரங்களில் கண்ணியமான வேலைகள் இல்லாதது இளைஞர்களை கடினமான பணிச்சூழல்களைக் கொண்ட வேலைகளை நோக்கித் தள்ளுகிறது. அமேசான் வேலை தரநிலைகளைக் (working standards) குறைத்துள்ளது. இந்த மோசமான பணிச்சூழலில் பணிபுரிய அமேசான் நிறுவனம் வேலை தேடும் இளம் பெண்கள் மற்றும் ஆண்களைத் தேர்வு செய்கிறது” என்று கூறினார்.

இந்தக் கூற்றை மானேசரில் உள்ள அமேசான் இந்தியாவின் மையத்திற்கு அருகில் வசிக்கும் இரண்டு இளம் பெண் தொழிலாளர்கள் உறுதிப்படுத்தினர். இளம்தொழிலாளர்களான திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் குர்பிரீத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோர் தங்கள் வீட்டில் உள்ள நிதி நெருக்கடி குறித்துப் பகிர்ந்து கொண்டனர். அதன் காரணமாகத்தான் அவர்கள் இந்த வேலையைத் தேர்ந்தெடுக்க நேர்ந்தது என்றும் கூறினர்.

ராஜஸ்தானைச் சேர்ந்த திவ்யா (22), நான்கு உடன்பிறப்புகளில் மூத்தவர். வீட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக பி.டி.இ ஆசிரியராக வேண்டும் என்ற தனது லட்சியத்தைக் கைவிட வேண்டியிருந்தது. இவரது தந்தை ஒரு விவசாயி; தாய் ஒரு கைவினைஞர். தான் பள்ளியில் படித்த காலம் முதலே தனது குடும்பம் வாழ்க்கையை நடத்துவதற்கே சிரமப்பட்டு வந்ததாக அவர் கூறினார்.

”பட்டப்படிப்பை முடித்ததும், பி.டி.இ (PTE) ஆசிரியராக விரும்பினேன். ஆனால் பி.எட் படிப்புக்கான கட்டணம் ஆண்டுக்கு ₹28,000 ஆகும். அதைச் செலுத்தும் நிலையில் எங்கள் குடும்பம் இல்லை” என்று அவர் மேலும் கூறினார்.

குர்பிரீத்தின் (19) கதையும் இதே போன்றதுதான். ஹரியானா மாநிலம் ஜிந்தில் உள்ள தீன் தயாள் உபாத்யாயா கிராமீன் கவுஷல் யோஜனா திட்டத்தில் அவர் பயிற்சி பெற்றார். தந்தையை இழந்த அவருக்கு இப்பயிற்சித் திட்டத்தில் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

”பயிற்சித் திட்டத்தில், அவர்கள் அமேசான் கிடங்குகளில் உள்ள வேலைகளைப் பற்றி எங்களுக்குக் கற்பித்தனர். பிற திறன் தொகுப்புத் திட்டங்களும் இருந்தன; ஆனால் பயிற்சித் திட்டத்தின் பெரும்பகுதி கிடங்கு வேலைகளில் கவனம் செலுத்துவதாய் இருந்தது”, என்று குர்பிரீத் கூறினார்.

சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் வேலை நிலைமைகள் மற்றும் நல்வாழ்வைக் கருத்தில் கொள்ளாமல், பெரு நிறுவனங்களுக்கு மலிவான கிராமப்புற தொழிலாளர்களை வழங்குவதில் அரசாங்கம் முன்முயற்சியோடு செயல்பட்டிருப்பதை குர்பிரீத்தின் கூற்று அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

கிடங்குகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு எந்த ஒரு சாதாரண மனிதராலும் நிறைவேற்ற இயலாத அளவுக்கு மிக அதிகமாக இலக்குகள் (targets) நிர்ணயிக்கப்படுகின்றன. அந்த இலக்குகளை நிறைவேற்ற பி.ஏ மூலம் அதிக அழுத்தம் தரப்படுகிறது. இலக்குகளை நிறைவேற்ற முடியாதபோது நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடுகிறது.


படிக்க: தொழிலாளர் வாழ்க்கை : அமேசான் தொழிலாளர் வேலை நிறுத்தம் !


தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (NFHS-5) தரவுகளின்படி இந்திய மக்கள் தொகையில் 52 சதவிகிதத்தினர் 30 வயதுக்கும் கீழானவர்கள். ஆனால், வேலையில்லாத் திண்டாட்டமோ முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதனால் இளைஞர்கள் அமேசான் கிடங்கு வேலை போன்ற இரத்தத்தை உறிஞ்சும் வேலைகளில் இணைய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர். அரசாங்கமும் தனது பல்வேறு திட்டங்களின்மூலம் இளைஞர்களை இதற்குத் தயார் செய்கிறது.

பாசிச மோடி அரசு மறுகாலனியாக்கக் கொள்கைகளான தனியார்மய – தாராளமய – உலகமய கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்திவருவதால் நமது தொழிலாளர்கள் அவலமான நிலைகளுக்குத் தள்ளப்படுகின்றனர். படித்த வேலையில்லாத இளைஞர்கள் (cheap labour) அதிக அளவில் இருப்பதாலும், அமெரிக்கா – சீனா மேலாதிக்கப் போட்டியினால் ஏற்பட்டுள்ள புதிய நிலைமைகளாலும் ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி நகர்ந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ‘வளர்ச்சி நாயகன்’ மோடியும் சிவப்புக் கம்பளத்துடன் தயாராக உள்ளார்.

இது தற்போது இருப்பதைவிட கார்ப்பரேட் சுரண்டலை மேலும் தீவிரமடையச் செய்யும். எனவே, பாசிச மோடி அரசையும், மறுகாலனியாக்கக் கொள்கைகளையும் எதிர்த்துப் போராடாமல் தொழிலாளர்களுக்கு விடிவு இல்லை.


பொம்மி
செய்தி ஆதாரம்: நியூஸ் கிளிக்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க