அமேசான் நிறுவனத்தைத் திணறடித்த “பிளாக் ஃப்ரைடே” வேலை நிறுத்தப் போராட்டங்கள்

அமெரிக்காவில் உள்ள பல மாநிலங்களிலும் பல்வேறு கிளைகளிலும் இந்த வேலை நிறுத்தமும் ஆர்ப்பாட்டங்களும் நடந்திருக்கின்றன. தொடர்ச்சியாக 5 ஆண்டுகளாக இப்போராட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேசான் நிறுவனம் 11 லட்சம் ஊழியர்களைக் கொண்டு இயங்கும் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய தொழில் நிறுவனமாகும்.

அமேசான் தொழில் போட்டியில் வெற்றி ஈட்டுவதும் வளர்வதும் மற்ற பிற நிறுவனங்களைப் போல அல்ல. தொழிலாளர் உரிமைகளை நசுக்கி தொழிற்சங்கத்தை மறுத்து ஜனநாயகத்தையே அழிப்பதன் மூலம் தான் தனது லாபத்தைப் பெருக்குகிறது என்று குற்றம் சுமத்துகிறார் யு. என். ஐ. குளோபல் யூனியன் பொதுச் செயலாளர் கிறிஸ்டி ஹாஃப்மேன். (Christy Haffman).

அங்கே தொழிலாளர்களின் சாதாரண அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுகின்றன என்பது பலருக்கும் ஆச்சரியமாகக் கூட இருக்கலாம். கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் கூட சட்ட நிமித்தமாக மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது என்பதுதான் நிலைமை. தொழிலாளர்களுக்குக் கடுமையான வேலை என்பதுடன் இடைநேர ஓய்வு என்பது ஏறக்குறைய இல்லை என்பதே நிலைமை. அமேசானின் பொருள் கிடங்குகளில் தொழிலாளர்களுக்கு நேரும் விபத்துகள் அமெரிக்காவின் மொத்த சராசரியை விட இரண்டு மடங்கு அதிகம் என்பதிலிருந்து அங்கு தொழிலாளர் பாதுகாப்புக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

கருப்பு வெள்ளி (பிளாக் ஃப்ரைடே) போராட்டம்

அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் நான்காவது வியாழனை நன்றி தெரிவிக்கும் நாளாக (Thanksgiving Day) கடைப்பிடிக்கப்படுகிறது. அமெரிக்காவில் அன்று நாடு முழுவதும் விடுமுறை விடப்படுகிறது.

அதற்கு அடுத்த நாள் கருப்பு வெள்ளி (பிளாக் ஃப்ரைடே) எனப்படுகிறது. அன்று நாடு முழுவதும் பொருட்களை வாங்குவதற்கான நாளாக, கிறிஸ்மஸ் தினத்துக்கான வணிகத்தின் தொடக்க நாளாகக் கருதப்படுகிறது. அன்றைய நாளில் வணிக நிறுவனங்கள் தங்கள் பொருட்களுக்குப் பலவகை தள்ளுபடிகளை வழங்கி விற்றுத் தீர்க்கும் நாளாக கருப்பு வெள்ளி இருந்து வருகிறது. ஆண்டு முழுவதும் இந்த நாளுக்காகக் காத்திருக்கும் மக்கள் கூட்டம் அன்று எல்லா வணிக நிறுவனங்களிலும் நிரம்பி வழியும்.

அந்த நாளை அதாவது கருப்பு வெள்ளியை அமேசான் தொழிலாளர்கள் தங்களின் போராட்ட நாளாக மாற்றி இருக்கிறார்கள். அமேசான் தொழிலாளர்கள் தங்களின் ஊதிய உயர்வுக்காகவும் பலபல உரிமை பிரச்சனைகளுக்காகவும் போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றனர். 2021 முதல் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த கருப்பு வெள்ளி வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நவம்பர் 28 அன்று அமேசான் தொழிற் கிளைகளில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

தொழிற்சங்கங்கள், தன்னார்வ நிறுவனங்கள், சூழலியல் ஆர்வலர்கள் உள்ளிட்டு 80 அமைப்புகள் இப்போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கியுள்ளன. அமெரிக்காவில் உள்ள பல மாநிலங்களிலும் பல்வேறு கிளைகளிலும் இந்த வேலை நிறுத்தமும் ஆர்ப்பாட்டங்களும் நடந்திருக்கின்றன. தொடர்ச்சியாக 5 ஆண்டுகளாக இப்போராட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

விற்பனை ஊழியர்களுடன் பொருட்கிடங்கு தொழிலாளர்கள், இணைய சேவை ஊழியர்கள், வாகன ஓட்டுநர்கள் என அனைவரும் இணைந்து 20 நாடுகளில் இப்போராட்டங்கள் நடைபெற்றிருக்கிறன.


படிக்க: தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சும் அமேசான் நிறுவனம்!


அமேசான் போன்று இதே துறையில் இருக்கும் ஸ்டார் பக் (Star buck) நிறுவனத்திலும் கருப்பு வெள்ளியன்று 100 இடங்களில் வேலை நிறுத்தம் நடைபெற்றுள்ளது.

ஐரோப்பாவில் பிரிட்டன், ஜெர்மனி, மற்றும் லக்சம்பர்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஏன் இந்தியாவிலும் கூட இப்போராட்டம் நடந்திருக்கின்றது. இந்திய அமேசான் தொழிலாளர்கள் சங்கம் (Amazon Indian Workers Union) மற்றும் யூனி குளோபல் யூனியன் ஆகிய சங்கங்கள் தலைமை ஏற்றுப் போராட்டத்தை நடத்தி இருக்கின்றன.

இந்தியாவில் நடைபெற்ற அமேசான் “பிளாக் ஃப்ரைடே” வேலை நிறுத்தப் போராட்டம்

இன்று உலகில் அமேசான் மிக மோசமான ஒரு பிற்போக்கான நிறுவனமாக இருந்து வருகிறது. அது ஜனநாயகத்தை விரும்புவதில்லை என்பது மட்டுமல்ல மத்தியகாலச் சுரண்டல் முறையை விரும்புகிறது. தொழிலாளர்கள் சங்கமாய் மாறுவதைத் தடுத்துவிடும் நோக்கத்தில் இயன்ற எல்லா எதிர் வேலைகளையும் செய்கின்றது என்று குற்றம் சுமத்துகின்றனர் தொழிற்சங்க தலைவர்கள்.

உலகில் ஜனநாயகத்தை அழிக்கும் நிறுவனங்களில் முதன்மையான நிறுவனம் அமேசான் என்று கூறுகிறது சர்வதேச தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (The International Trade Union Federation). போட்டியாளர்களை ஒழித்துக் கட்டுவது தொழிலாளர் உரிமைகளை நசுக்குவது தொழில் சங்கங்களைக் கலைப்பது இவற்றுக்காக பல நூறு கோடிகளைச் செலவழிப்பது போன்றவற்றை எதிர்காலத்திற்கான மூலதனமாகப் பார்க்கிறது அமேசான் நிறுவனம்.

கனடா நாட்டின் 3.1 லட்சம் தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட பல துறைகளில் இயங்கும் யூனிஃபார் (UNIFOR) தொழிற்சங்கத்தின் தலைவர் திருமதி. லானா பைனே (Lana Pyne) பிற தொழில் நிறுவனங்களிலிருந்து அமேசானை வேறுபடுத்துவது அதன் தொழிலாளர் விரோத தொழிற்சங்க விரோத நடவடிக்கைகள் தான் என்கிறார்.

சட்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் தொழிலாளர் உரிமைகளை மறுத்து எப்போதும் ஏதாவது ஒரு சட்டச் சிக்கலைக் கிளப்பிக் கொண்டே இருப்பது, தொழில் தகராறுகளைக் கையாளும் தேசியத் தொழிலாளர் உறவுகளுக்கான வாரியத்தில் (National Labour Relations Board) தொடர்ந்து கேள்வி எழுப்பும் மனுக்களைப் போட்டு அந்த அமைப்பின் செயல்பாட்டையே முடக்குவது என்பன போன்ற அயோக்கியத்தனங்கள் தான் அமேசானின் தொழிலாளர் கொள்கை என்கிறார் அவர்.

அமேசானின் தொழிலாளர் விரோத சட்ட விரோத நடவடிக்கைகள் என்று 500 நடைமுறைகளைப் பட்டியலிட்டு தேசியத் தொழில் உறவு வாரியத்தில் 69 வெவ்வேறு புகார்களைத் தொழிற்சங்கங்கள் பதிவு செய்துள்ளன.


படிக்க: அமேசானில் உதயமானது தொழிற்சங்கம் : நியூயார்க் நகர தொழிலாளர்கள் வென்றது எப்படி – ஓர் அனுபவ பகிர்வு!


இன்று வெள்ளை மாளிகைக்கு டிரம்ப் வெற்றி பெற்று வந்தவுடன் அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் (Jeff Bezos) தன்னுடைய வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் மூலம் டிரம்புக்கு வாழ்த்துப் பாடத் தொடங்கி இருக்கிறார். இதற்கு முன்பு வாஷிங்டன் போஸ்ட் ஜோ பைடனுக்கு ஆதரவாக எழுதி வந்தது. எப்போதும் ஆளும் கும்பலுக்கு ஆதரவாக இருந்து கொண்டு தனது தொழிலை பெருக்கிக் கொள்வதையே ஒரே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது அமேசான்.

இன்றைய நிலையில் அமேசானின் தொழிலாளர் விரோத பிற்போக்குத்தனங்களை எதிர்கொள்ளவேண்டிப் பல நாடுகளில் தனிச் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதிலிருந்து அமேசானின் அடாவடித்தனங்களை எவரும் புரிந்து கொள்ள முடியும்.

இங்கிலாந்து நாட்டில் தொழிற்சங்க பதிவை எளிமையாக்கவும் தொழிற்சங்க தலைமைகள் பழிவாங்கப்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் ஊழியர்கள் உரிமைச் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டிருக்கிறது (Employees’ Rights Bill).

அமெரிக்காவில் வாஷிங்டன் நியூயார்க் உள்ளிட்ட பல மாநிலங்கள் அமேசான் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கென்று பொருள் கிடங்குகள் பாதுகாப்பு மசோதா (Ware house Protection Law) என்கிற சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர்.

இது போன்ற சட்டங்களை அரசுகள் கொண்டு வந்தாலும் தொழிற்சங்க தலைமைகள் முன்னின்று போராடவில்லை என்றால் எந்த பலனும் இருக்கப் போவதில்லை என்கிறார் யு.என்.ஐ. குளோபல் யூனியன் கிருஸ்ட்டி ஹாஃப்மேன். அந்த பாதையில் தொடர்ந்தும் அமெரிக்க தொழிலாளர்கள் பல துறைகளிலும் முன்னெப்போதும் இல்லாத அளவில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஆனால் அமேசான் தலைமை செய்தி தொடர்பாளர் எய்லீன் ஹார்ட்ஸ் (Eileen Hards) “இவை அனைத்தும் ஒரு கும்பல் பரப்பும் அவதூறுகள்” என்று ஒரே வரியில் மறுத்துள்ளார். “அமேசான் அதன் தொழிலாளர்களுக்கு நல்ல ஊதியத்தையும் வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தந்திருக்கிறது” என்கிறார். அமேசான் போன்ற பாசிச ஆதரவு நிறுவனங்களிடம் வேறு எதை நாம் எதிர்பார்க்க முடியும்.


ஆதி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க