இந்தியாவில் அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அந்நிறுவனம் பாதுகாப்பு உபகரணங்களைக் கூட வழங்குவதில்லை என்கிற அதிர்ச்சி தகவல்கள் அல்ஜசீரா செய்தி நிறுவனத்தின் மூலம் வெளியாகியுள்ளது.
ஹரியானா மாநிலத்தின் மானேசர் நகரில் செயல்படும் அமேசான் தொழிற்கிடங்கின் மேலாளர், “குடிநீர் குடிக்கவோ, கழிவறைக்குச் செல்லவோ இடைவேளை எடுக்கமாட்டோம்” என தொழிலாளர்களை வாய்மொழியாக உறுதிமொழி எடுக்க வைத்த அதிர்ச்சி தகவல் கடந்த மே மாதத்தில் வெளியானது
இத்தகவல் வெளி உலகிற்குத் தெரிந்தவுடன் இந்தியாவின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திற்கு ஜூன் மாதம் அமேசான் நிறுவனம் கடிதம் எழுதியது. அக்கடிதத்தில், “உறுதிமொழியை ஏற்க வைத்த மேலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என எல்லா நிறுவனங்களும் சொல்லுகின்ற அதே கதையை எழுதியது.
மேலும், “எங்கள் உள் விசாரணையைத் தொடர்ந்து தனிநபருக்கு (மேலாளர்) எதிரான ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அவர் இனி எங்கள் நிறுவனத்தில் வேலை செய்ய மாட்டார்” என்று அல்ஜசீரா செய்தி ஊடகத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் அறிக்கையில் அமேசான் தெரிவித்தது.
ஆனால், ஹரியானா அரசு கடந்த ஜூன் மாதத்தில் அமேசான் நிறுவனத்தில் விரிவான விசாரணை நடத்தியது. அதன்பிறகு டெல்லி குருகிராமில் உள்ள நீதிமன்றத்தில் அமேசான் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்து, தன்னுடைய தொழிலாளர் ஆய்வு அறிக்கையையும் சமர்ப்பித்தது. ஆனால், நீதிமன்றம் அமேசான் நிறுவனத்திற்கு ஆதரவாக வழக்கு விசாரணையைத் தொடர்ந்து ஒத்திவைத்துவரும் நிலையில், இறுதியாக டிசம்பர் 10-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளது.
படிக்க: அமேசான் நிறுவனத்தைத் திணறடித்த “பிளாக் ஃப்ரைடே” வேலை நிறுத்தப் போராட்டங்கள்
இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக ஹரியானா அரசு சமர்ப்பித்த தொழிலாளர் ஆய்வு அறிக்கையைப் பகுப்பாய்வு செய்த அல்ஜசீரா செய்தி ஊடகம் பல விசயங்களை வெளிக்கொண்டுவந்துள்ளது.
அவ்வறிக்கையின் மூலம், தொழிலாளர்கள் நகரும் இயந்திரங்களுக்கு அருகில் வேலை பார்க்கும் போது இறுக்கமான ஆடைகளை அணிந்திருக்க வேண்டும் என்று தொழிலாளர் சட்டம் உள்ள நிலையில் நிறுவனமானது தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பில்லாத தளர்வான ஆடைகளையே கொடுத்துள்ளது அம்பலமாகியுள்ளது. தொழிற்கிடங்கை பராமரிப்பது முதல் பல விஷயங்களில் தொழிலாளர் சட்டங்கள் மீறப்பட்டுள்ளது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு வேலை செய்வதற்கான அடையாள அட்டை, பாதுகாப்பு உபகரணங்களை அமேசான் நிறுவனம் வழங்குவதில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இவ்வறிக்கை குறித்தான அல்ஜசீரா ஊடக நிறுவனத்தின் கேள்விகளுக்கு மின்னஞ்சல் மூலமாகப் பதிலளித்த அமேசான் செய்தித் தொடர்பாளர், “தொழிலாளர் அறிக்கையின் நகல் தங்களுக்குக் கிடைக்கவில்லை. அதனால் அதுபற்றி கருத்து தெரிவிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
நிறுவனம் கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும் அல்ஜசீரா செய்தி ஊடகம் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் வேலை பார்க்கும் மூன்று தொழிலாளர்களிடம் பேசி நிறுவனத்தில் நடைபெறும் கொடுமைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
தொழிற்கிடங்கின் உட்பிரிவில் வேலை பார்க்கும் சுப்ரியா கூறுகையில், “நின்றுகொண்டே அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். அதனால் உட்காருவதற்குக் கூட நேரம் கிடைக்காது. இடையில் 30 நிமிடம் இடைவேளை கிடைத்தாலும் கழிப்பறையைப் பயன்படுத்துவதற்கும் சாப்பிடுவதற்கும் வரிசையில் நிற்க வேண்டும். இக்காரணங்களால் ஓய்வெடுக்க நேரம் இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “எனது கிடங்கிற்கு வரும் சரக்குகளில் ஒரு மணி நேரத்திற்குள் 150 பொருட்களைச் சேமித்து வைப்பதற்கு எனக்கு அடிக்கடி இலக்கு கொடுக்கப்படுகிறது. அந்த நேரத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்தால் வேலை நேரத்தை கண்காணிக்கும் சிஸ்டம் அதனை வேலை செய்யாத நேரம் என்று பதிவு செய்கிறது” என்று குமுறுகிறார்.
படிக்க: தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சும் அமேசான் நிறுவனம்!
ஏனெனில், ஊழியர்களின் வேலை நேரத்தை மதிப்பாய்வு செய்யும் கருவி (ADAPT) வளர்ந்த நாடுகளில் இருப்பது போன்று அமேசான் நிறுவனத்திலும் பயன்படுத்தப்படுவதால் தொழிலாளர்கள் ஓய்வெடுக்க முடியாமல் பல்வேறு உடல்சார்ந்த நோய்களை எதிர்கொள்கின்றனர். எனவே நிறுவனத்தில் தங்களை கண்காணிக்கும் “அடாப்ட்” முறை ஒழிக்கப்பட வேண்டும், தாங்கள் அனைவரும் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்று அவர் அல்ஜசீரா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
மற்றொரு தொழிலாளியான திர்வான் கூறுகையில், “நான் இங்கு இரண்டு வாரமாக வேலை பார்க்கிறேன். டெலிவரிகள் சரியான நேரத்தில் நடைபெறுகிறதா என்பதை உறுதிசெய்ய நாங்கள் அயராது உழைத்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேற்கூறிய தொழிலாளர்கள் கூறிய தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக (Amazon India Workers Association) அமைப்பாளர் நிதேஷ் குமார் தாஸ் கூறுகையில், “பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்யப்போகிறோம் என்கிற ஆசையில் வேலையில் சேர்கின்றனர். ஆனால், உண்மையில் தொழிலாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட இலக்கை அடைவதற்கு அதிக மன அழுத்தத்தை எதிர்கொள்கிறோம் என்று தன்னிடம் புகார் அளிக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
தனியார்மயம்- தாராளமயம்- உலகமயம் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு அனைத்து தனியார் நிறுவனங்களும் தங்களின் லாபத்திற்காகத் தொழிலாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்காமல், ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப் பூச்சியைப் போல் அவர்களின் உழைப்பை உறிஞ்சுகின்றன. எனவே தனியார்மய கொள்கைக்கு எதிராகவும் தங்களின் உரிமைக்காகவும் அனைத்து நிறுவனங்களின் தொழிலாளர்களும் ஒன்றிணைய வேண்டும். அண்மையில், இந்தியாவில் நடந்த அமேசான் தொழிலாளர்களின் “பிளாக் ஃப்ரைடே” போராட்டம் அதற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது.
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram