மெரிக்க தொழிலாளர்களுக்கு சங்கம் அமைக்கும் சட்ட உரிமைகள் கிடைத்து நூற்றாண்டுக்கும் மேல் ஆனாலும் தொழிற்சங்க இயக்கம் தொடர்ந்து பலம் இழந்து வருகிறது. 2020-இல் 10.8 சதவிகிதமாக இருந்த தொழிலாளர் சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை, 2021-இல் 10.3 சதவிகிதமாகக் குறைந்தது. அதாவது, 2௦21-ஆம் ஆண்டில் அமெரிக்கத் தொழிலாளர்களில் நூற்றுக்கு பத்து பேர் மட்டுமே தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர்.
எனவே, அமேசான் நிறுவனத்தில் தொழிலாளர்கள் அமைத்துள்ள புதிய சங்கம் அமெரிக்கத் தொழிலாளர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது. பழமையான மையப்படுத்தப்பட்ட தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் மத்தியில் செல்வாக்கு இழந்து வரும் வேளையில், அமேசான் நிறுவனத்தில் அமைக்கப்பட்ட இந்த சங்கம் புதிய முறையில் புதிய ஊக்கத்துடன் ஜனநாயக முறைப்படி பெருவாரியான தொழிலாளர்களைத் திரட்டி சங்கம் அமைத்துள்ளது.
உலகெங்கும் 175-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டு வணிகம் செய்யும் அமேசான் நிறுவனத்தில் ஆண்டுக்கு 16 லட்சம் பேர் வேலைக்கு சேர்கிறார்கள். ஆனாலும் எங்குமே இதுவரை தொழிற்சங்கம் அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவின் பணக்கார நகரான நியூயார்க் நகரில் உள்ள அமேசான் கிடங்கில் (warehouse) வேலை செய்யும் தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் சங்கம் அமைக்க வேண்டும் என்று வாக்களித்துள்ளனர். இந்நிறுவனத்தின் அதிகாரிகள் நடத்திய பலம் வாய்ந்த எதிர்ப் பிரச்சாரத்தை முறியடித்து சங்கம் அமைக்கப்பட வேண்டும் என்று தொழிலாளர்கள் பெருவாரியாக வாக்களித்து தொழிலாளர் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் அமெரிக்க தேசிய தொழிலாளர் வாரியம் (NLRB) ஏற்பாடு செய்து நடத்தியது. “சங்கமே தேவையில்லை”, “இங்கே அமைக்கக் கூடாது” என்று பெரும் முயற்சி செய்து வந்த அமேசான் நிறுவன அதிகாரிகள் மண்ணை கவ்வியுள்ளனர். தொழிலாளர் வாரியம் நடத்திய இந்த தேர்தலில் சங்கம் அமைப்பதைத் தடுக்கும் முயற்சியில் பல கோடி பணம் செலவு செய்தும் அமேசான் நிறுவனம் சங்கம் அமைப்பதைத் தடுக்க முடியவில்லை. முயற்சியில் தோல்வியுற்ற நிறுவனம், தொழிலாளர்களுக்கு கஞ்சா வாங்கிக் கொடுத்து சங்கத்தினர் வெற்றிப் பெற்றதாகப் பொய் குற்றச்சாட்டைப் பரப்பியது.
படிக்க :
♦ நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் !
♦ தொழிலாளர் வாழ்க்கை : அமேசான் தொழிலாளர் வேலை நிறுத்தம் !
இந்தச் சங்கத் தேர்தல் குறித்து, அமெரிக்காவில் வெளியாகும் பிரபலமான இடதுசாரி பத்திரிகையான ஜேகொபின்மாக் இதழ் (Jacobinmag) அமேசான் தொழிற்சங்கத் தலைவர் பிரிமா சில்லா (Bryma Sylla) அவர்களுடன் நேர்காணல் நடத்தியது. அந்நேர்காணலை புதிய ஜனநாயகம் வாசகர்களுக்காக தமிழாக்கம் செய்துள்ளோம்.
அமேசான் நிறுவனத்தில் அமைக்கப்பட்ட முதல் தொழிற்சங்கம்
நியூயார்க் நகரிலுள்ள ஸ்டேட்டன் தீவில் புதியதாக அமேசான் தொழிலாளர் சங்கம் அமைக்கப்பட்டது. இதன் வெற்றி அமெரிக்கா முழுவதும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளது. இங்கே சங்கம் அமைத்து வெற்றிபெற்றதென்பது, கிறித்தவ வேதத்தில் வரும் ‘கோலியாத் என்ற பலம் வாய்ந்த கொடியவனை, சிறுவன் தாவீது கவண் கொண்டு கல் எறிந்து வீழ்த்தியது போன்ற வெற்றி’ என்று நியூயார்க் தொழிலாளர்கள் வியக்கிறார்கள்.
நியூயார்க் நகரமானது பெரும்பகுதி புலம்பெயர் தொழிலாளர்களைக் கொண்டதைப் போல, நகரின் மையப் பகுதியான ஸ்டேட்டன் தீவில் (Staten Island) உள்ள ஜே.எஃப்.கே-8 (JFK-8) அமேசான் பொருள் சேமிப்புக் கிடங்கில் வேலை செய்யும் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். தொழிற்சங்கங்களில் சேர்ந்து இயங்குவது என்பது அனைவருக்கும் அச்சம் அளிக்கக்கூடிய ஒன்றே. அதிலும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு இது இரட்டிப்பு பயம் தரக்கூடியதாகும். அவர்களது துணிச்சலும் புத்திக் கூர்மையும் அவர்கள் பெற்றிருக்கும் வெற்றியும், ஹாலிவுட் படங்களில் இடம்பெறும் மயிர்க்கூச்செறியும் காட்சியைப் போன்றது.
அமேசான் தொழிற்சங்க முன்னணியாளர் பிரிமா சில்லா (வலது), தனது சக தொழிற்சங்க தோழருடன்.
இந்த முயற்சியின் நாயகமாக இருப்பவர் காலை ஷிப்டில் சரக்குகளைப் பொட்டலம் கட்டும் வேலை செய்யும் ஐம்பத்தைந்து லைபீரியக் குடியேறியான பிரிமா சில்லா. இவர் அமேசான் தொழிலாளர் சங்கத்தின்கீழ் (Amazon Labour Union – ALU) அர்ப்பணிப்புமிக்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சேர்ப்பதற்காக, அனைவரது முயற்சிகளையும் ஒருங்கிணைப்பதில் முன்னிலை வகித்தவர். தமது அனுபவத்திலிருந்து அமெரிக்கா முழுவதும் உள்ள அமேசான் தொழிலாளர்கள் என்ன கற்றுக்கொள்ளவேண்டும் என்பதை ஜேக்கபின் பத்திரிக்கைக்கு நேர்காணல் கொடுத்துள்ளார். அவரது பேட்டி கீழே:
000
பத்திரிகையாளர் எரிக் : அமேசானில் நீங்கள் எப்படி வேலைக்கு சேர்ந்தீர்கள்?
பிரிமா: நான் ஸ்டேட்டன் தீவில் உள்ள ஒரு சிறிய தனியார் பள்ளியில் பத்து வருடங்களாக உயர்நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணி புரிந்தேன். ஆனால் கோவிட் பெருந்தொற்று தொடங்கியவுடன் பள்ளிகள் மூடப்பட்டன. அதன் பிறகு, நியூயார்க் வாசிகளுக்கு கோவிட் பரிசோதனையை மேற்கொள்ளும் டெஸ்ட் அண்ட் ட்ரேஸிங் (Test and Tracing) நிறுவனத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பணியாற்றினேன். நான் வால்டன் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கையில் முனைவர் பட்டம் ( Ph.D in Public Policy) பெற்றுள்ளேன். வேலை தேடி என்னுடைய விண்ணப்பங்களைத் தொடர்ந்து அனுப்பி வந்தேன். ஆனால் தொற்றுநோய் பரவலின்போது பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து போனதால் எங்கும் வேலை கிடைக்கவில்லை. அதனால் நான் அமேசான் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்.
பத்திரிகையாளர் எரிக்: அமேசான் நிறுவனத்தில் வேலை நிலைமைகள் எப்படி இருக்கும்?
பிரிமா: அமேசான் எங்களை மனிதர்களைப் போல நடத்துவதில்லை; இயந்திரங்களைப் போலவே நடத்துகிறது. ஷிப்ட் நேரம் பன்னிரெண்டு மணிநேரம் என்பதால், நீண்ட நேரம் நின்றுகொண்டே இருக்க வேண்டும் – இது உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கிறது. ஒரு ஷிப்ட் முடித்து வெளியே வருகையில், யாரோ நம்மை அடித்துப் போட்டதுபோல இருக்கும். மீண்டும் அந்த வேலைக்குத் திரும்பிச் செல்லவேண்டும் என்று நினைத்தாலே காலையில் எழுந்திருக்கும் நினைப்பே நமக்கு வராது.
வேலையின்பொழுது, கழிப்பறைக்குச் செல்லும் இடைவேளை போன்ற அடிப்படை விசயங்களில்கூட நிர்வாகத்தினால் மோசமாக நடத்தப்படுகிறோம். நீங்கள் பணியில் இருக்கும்போது உங்களது நேரத்தையும் உங்களது உழைப்பையும் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதில் மட்டும்தான் அவர்கள் கவனம் செலுத்துவார்கள்; புகார் செய்தால் அதனைக் கண்டுகொள்வதில்லை. இது மனிதாபிமானம் அல்ல – உண்மையைச் சொல்வதானால், இது ஒரு உண்மையான மலைத்தோட்ட வேலையைப் போன்றது.
இங்கு கொடுக்கப்படும் ஊதியமும் போதுமானதாக இல்லை. என் மனைவி ஒரு முதியோர் இல்லத்தில் வேலை செய்கிறார். எங்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். உலகிலேயே மிகுந்த செலவு பிடிக்கும் நகரமான நியூயார்க்கில் ஒரு குடும்பம் ஒரு மணி நேரத்திற்கு 18 டாலர் சம்பாதிக்கும் எங்களைப் போன்றவர்களால் வாழவே முடியாது.
பத்திரிகையாளர் எரிக் : தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சியில் நீங்கள் எப்படி இறங்கினீர்கள்?
பிரிமா: தொழிற்சங்கத்தை ஒழித்துக்கட்டும் நோக்கம் கொண்ட நிர்வாகத்தின் எடுபிடிகள் நடத்திய கூட்டம் ஒன்றில் நான் கலந்து கொண்டேன். அவர்கள் எங்களிடம் கூறிய பொய்களை அமேசான் தொழிற்சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவரான காசியோ அம்பலப்படுத்திக் கொண்டிருந்தார். அதற்காக அவர் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு நான் அவருடன் பேசினேன். தொழிற்சங்கம் அமைப்பதைப் பற்றியும் அதன் பலன்கள் என்ன என்றும் அவர் நிறைய விசயங்களைச் சொன்னார். “இது சரியான போராட்டம்தான். நான் ஒரு பார்வையாளராக வேடிக்கை பார்க்க விரும்பவில்லை. இதில் நான் பங்கேற்க விரும்புகிறேன்” என்று அப்போது எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன்.
நியூயார்க்கில் வசிப்பதால், தொழிற்சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களின் நலன்களைப் பாதுகாக்கும் சக்தி வாய்ந்த கருவிகள் என்பதை நான் அறிவேன். நியூயார்க் நகரச் சுரங்க ரயில்வே தொழிலாளர்கள், நியூயார்க் நகர தீயணைப்பு படை வீரர்கள், துப்புரவுத் பணியாளர்கள் மற்றும் நியூயார்க் நகர காவல்துறை பணியாளர்களைப் பாருங்கள். அவர்கள் அமைப்பாக்கப்பட்டவர்கள். எனவே அமைப்பாளர் காசியோ அவர்களிடம், இந்தப் பணிகளில் நானும் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன் என்று கூறினேன்.
வாரந்தோறும் புதன் கிழமைகளில் நடக்கும் கூட்டங்களுக்கு அவர் என்னை அழைத்துச் செல்வார். அங்கு நான் நிறையக் கற்றுக்கொள்ளவும், சங்கம் அமைப்பது பற்றிய நூல்களைப் பெறவும் முடிந்தது. அந்தக் கமிட்டிக் கூட்டங்களில், நாங்கள் எப்படியிருக்கிறோம் என்பதை ஆராய்ந்து, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிப் பேசினோம். நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் அமைந்துள்ள “உள்ளூர் தொழிலாளர்கள் ஒன்றுபடுவோம்” [UNITE HERE Local 100] என்ற சங்கத் தலைமையகத்திற்கு நான் செல்ல ஆரம்பித்தேன்.
நவீன கொத்தடிமைகளைப் போல, பன்னிரண்டு மணிநேரம் நின்று கொண்டே வேலைபார்க்கும் அமேசான் தொழிலாளர்கள்.
தொழிற்சங்கம் தொடங்கும் முயற்சியில் இறங்குவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டேன். இதற்கு முன்பு நான் ஒருபோதும் தொழிற்சங்கத்தில் இணைந்து செயல்பட்டது இல்லை. இருந்தாலும் ஸ்டேட்டன் தீவில் வாழும் ஆப்பிரிக்கர்கள் நலனுக்காகச் செயல்படும் ஆப்பிரிக்கச் சமூகக் கூட்டணியின் (ACASI) பொதுச் செயலாளராக இருப்பதால் மக்களை அமைப்பாக்குவதில் எனக்கு நிறைய அனுபவம் இருந்தது.
நான் சமூக ஊடகங்களில் ஆங்கிலத்தில் எழுதுவது மட்டுமல்லாது, பிற மொழிகளிலும் திறன் பெற்றுள்ளேன். எனக்கு பிரெஞ்சு, அரபு, ஆங்கிலம் மற்றும் மூன்று ஆப்பிரிக்க மொழிகள் பேசத் தெரியும். அதனால் அமேசான் கட்டிடத்தில் வேலை பார்க்கும் புலம்பெயர் தொழிலாளர்களுடன் தொடர்புகொள்வது எனக்கு மிகவும் எளிதாக இருந்தது. அமேசான் நிறுவனத்தில் செனகல், நைஜீரியா, லைபீரியா, கானா, அல்ஜீரியா, எகிப்து, லெபனான், பாகிஸ்தான், அல்பேனியா, போலந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா மற்றும் தென் அமெரிக்கர்கள் என பல நாட்டைச் சேர்ந்தவர்கள் வேலை செய்கிறோம்.
நாங்கள் மதிய உணவு நேரத்திலோ அல்லது பிற இடைவேளைகளிலோ, அல்லது சில சமயங்களில் வேலையை விட்டு வெளியேறும் நேரத்திலோ ஒருவரை ஒருவர் அடிக்கடி பார்த்துப் பேசிக்கொள்வோம். வேலைக்கு வருபவர்கள் நிறைய புகார் செய்வதுடன் நின்றுகொண்டார்கள். ஆனால் அதைத் தீர்க்கும் வழியில் அவர்கள் ஈடுபடவில்லை. உண்மையைச் சொல்வதென்றால், தொழிற்சங்கத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் இங்குள்ள நிறைய தொழிலாளர்கள் ஆரம்பத்தில் ஈடுபாடுகாட்டவில்லை. அவர்கள் வேலை முடிந்தவுடன் வீட்டிற்குச் செல்லவே விரும்பினர்.
பத்திரிகையாளர் எரிக்: அதற்கு காரணம் பயமா?
பிரிமா: நிச்சயமாக பயம்தான். பலர் பழிவாங்கப்படுவோம் என்று பயந்தார்கள். ஏன் நானேகூட பயந்தேன். புலம்பெயர்ந்தவர்களாகிய நாங்கள் இந்த நாட்டில் வாழ்வதற்காக மிகக் கடினமாக உழைக்கிறோம். எங்கள் பிழைப்பை நாங்கள் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அதனால் நானும் ஆரம்பத்தில் மிகவும் கவனமாக இருந்தேன். அமேசான் தொழிற்சங்கம் பெயர் பதித்த சட்டையைக்கூட அணியலாமா வேண்டாமா என்பது எனக்கு யோசனையாகத்தான் இருந்தது. பிறகுதான், ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியதும் நான் அந்தச் சட்டையை அணிய ஆரம்பித்தேன்.
இறுதியில் நான் மிகவும் தைரியமாக மாறிவிட்டேன். எனக்கு நேரும் அபாயங்களைப் பற்றி அதிகம் கவலைப்படுவதை நிறுத்திவிட்டேன். சங்கம் அமைக்கப்பட வேண்டுமானால், நம்மில் சிலர் முன்னணியில் நிற்க வேண்டும் என்பதை உணர்ந்தேன்.
பத்திரிகையாளர் எரிக்: உங்கள் சங்கத்தவர்கள் வெற்றிபெற என்ன வகையான நடவடிக்கைகளை எடுத்தீர்கள்?
பிரிமா: கட்டிடத்திற்கு வெளியே இருக்கும் ஓய்வு அறையில் நான் நிறைய தொழிலாளர்களைச் சந்துத்து பேசினேன். பல சமயங்களில் ஆப்பிரிக்கத் தொழிலாளர்களைக் கூட்டமாகப் பார்ப்பேன், எப்போதும் அவர்களிடம் நானாகவே சென்றுப் பேசுவேன். “பார் தம்பி, நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் குடும்பம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், உங்கள் வேலை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், நீங்கள் அமேசான் தொழிலாளர் சங்கத்திற்கு வாக்களிக்க வேண்டும். அப்படித்தான் அமெரிக்க கனவை நாம் வெல்ல முடியும். அமேசானில் பணிபுரிபவர்கள் கோடீஸ்வரர்கள் அல்ல. உழைக்கும் வர்க்கம்” என்பேன், “நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு முப்பது டாலர்கள் சம்பாதிக்க விரும்புகிறீர்களா?” என்று நான் கேட்டால் அவர்கள் நிச்சயமாக ஆம் என்றுதான் கூறுவார்கள்.
நான் ஆப்பிரிக்கர்கள், சீனர்கள், போலந்து என அனைத்து நாட்டுத் தொழிலாளர்களுடனும் பேசினேன். ஒரு போலந்துத் தொழிலாளியிடம், அவருக்கு கால்பந்து விளையாட்டு பிடிக்கும் என்று தெரிந்துகொண்டு நான் அதைப் பற்றிப் பேச ஆரம்பித்தேன். நாங்கள் உரையாடினோம், இறுதியில் அமேசானில் வேலை செய்வதுப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டேன்: சம்பளம் மிகக் குறைவாக இருப்பதாகவும், வயதான பெற்றோரைக் கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதால் தற்போது பெறும் 18 டாலரில் இதையெல்லாம் சமாளிப்பது மிகவும் கடினமாக இருப்பதாகவும் சொன்னார். மேலும் அவர் தொழிற்சங்கத்திற்கு வாக்களிப்பேன் என என்னிடம் சொன்னபோது, எல்லோரும் தொழிற்சங்கம் அமைப்பதற்கு ஆதரவாக இருப்பதை உணர்ந்தேன்.
இந்த மாதிரியான உரையாடல்கள் பயனுள்ளது என்றுதான் சொல்லவேண்டும். எங்களிடம் மறைப்பதற்குரிய விஷயம் எதுவும் இல்லை என்று தொழிலாளர்களும் புரிந்து கொள்ளத் தொடங்கினர். தேர்தல் நெருங்கிய நேரத்தில், இங்கு பணிபுரியும் ஏராளமான தொழிலாளர்கள் சங்கத்தின் பெயர் தாங்கிய சட்டைகளை அணியத் தொடங்கிவிட்டனர். இதில் வெள்ளையினத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து தேசிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் இருந்தனர்.
பத்திரிகையாளர் எரிக்: இதன் தொடர்ச்சியாக, நீங்கள் மற்ற ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளை எடுத்தீர்களா?
பிரிமா: என்னுடைய ஒரு முன்முயற்சி என்னவென்றால், அனைவரின் கைகளிலும் அதிகமான விபரங்களைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான். இதுகுறித்து காசியோ மற்றும் இதர முன்னணியாளர்களிடம் பேசினேன். எங்கள் கட்டிடத்தில் நான்கு ஷிப்டுகள் வேலை நடக்கும். ஒவ்வொரு ஷிப்ட் முடியும்போதும், தொழிலாளர்கள் வேலைக்கு வருவதும் போவதுமாக இருப்பார்கள். அப்போது கட்டிடத்தின் நுழைவாயிலில் இருமொழிகளில் அச்சிடப்பட்ட தொழிற்சங்கத் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து, அவர்களுடன் நேரடியாகப் பேச வேண்டும் என்று சொன்னேன். அதனால் நானும், கேசியோ, டிரிஸ்டன் போன்ற முன்னணியாளர்களும் பிரச்சாரத்தைச் செய்யத் தொடங்கினோம். பிற முன்னணி ஊழியர்களும் இதைச் செய்யத் தொடங்கினர்.
தொழிற்சங்கம் அமைக்கும் பணியை சீர்குலைக்க முற்படும், நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்து பிரச்சாரம் செய்யும் அமேசான் தொழிற்சங்க உறுப்பினர்கள்.
அமேசானில் தொழிலாளர்கள் அதிகம் இருப்பதால், நிறைய வேலைகள் செய்ய வேண்டி இருந்தது. எனவே, நாங்கள் சங்கத்திற்காக அதிக நேரம் செலவிட்டோம். இந்த முறை தொழிற்சங்கப் பிரச்சாரம் வெற்றியடைந்ததற்கு முக்கிய காரணம், எங்கள் செயலில் முழு நம்பிக்கை கொண்ட, சிறந்த, கடினமாக உழைக்கக்கூடிய ஒருங்கிணைப்புக் குழு இருந்ததுதான் என நினைக்கிறேன்.
அனைவருக்கும் செய்தியைக் கொண்டு செல்ல, இங்கு பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களைக் கொண்டு வாட்ஸ்அப் குழுக்களை அமைத்தேன். சமூக ஊடகங்கள் எனக்குப் புதிதல்ல; ஆப்பிரிக்கச் சமூக அமைப்பின் பொதுச் செயலாளராக என் பணிகளில் ஒன்று, வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி நடத்தி வருவதும்கூட. அதனால் அதில் எனக்கு அனுபவம் உள்ளது. எனவே நான் “ஆப்பிரிக்கர்களின் வாக்கு அமேசான் தொழிற்சங்கத்திற்கு – African votes 4 ALU ” என்ற குழுவையும், “புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்கு அமேசான் தொழிற்சங்கத்திற்கு – Immigrants 4 ALU ” குழுவையும் உருவாக்கினேன். விரைவில் கரீபியன், லத்தீன் மற்றும் ஆசிய இனத்தவர்களுக்கான தனித்தனியான வாட்ஸ்அப் குழுக்களையும் உருவாக்கினேன்.
கேசியோ மற்றும் கரேன் ஆகியோர் தென் அமெரிக்கர்களுடன் வேலை செய்ய முன்வந்தனர். இது மிகவும் முக்கியமானது, ஏனெனில் இங்கு பணிபுரியும் பல தொழிலாளர்கள் ஸ்பானிஷ் மொழி மட்டுமே பேசக்கூடியவர்கள். அமேசானில், இந்த வாட்ஸ்அப் குழுக்கள் தொழிலாளர்களுடன் சங்கம் தொடர்புகொள்வதற்கான சிறந்த வழியாக மாறியது. அனைவரும் கேள்விகளைக் கேட்கலாம், கருத்துத் தெரிவிக்கலாம். சங்கத்தின் அறிவிப்புகளைத் தொழிலாளர்களிடம் கொண்டுசெல்ல இம்முறை எளிதாக இருந்தது.
நான் யாரைச் சந்தித்தாலும், அவர்களிடம் செல்பேசி எண்களைக் கேட்பேன். அவர்களும் நம்பி எண்களைக் கொடுப்பார்கள். அவர்களை வாட்ஸ்அப் குழுவில் சேர்த்து, அவர்களது நண்பர்களுக்கும் செய்திகளைப் பரப்பும்படி சொல்வேன். சில நேரங்களில் அவர்கள் தங்கள் நண்பர்களை நேரடியாகவே வாட்ஸ்அப் குழுவில் சேர்த்து விடுவார்கள்.
என் அண்ணியின் மகளும் இங்கு வேலை செய்கிறார் என்று தெரிந்தவுடன், அவரை சந்தித்துப் பேசி, வாட்ஸ்அப் குழுவில் சேர்த்தேன். அவருடன் பணிபுரியும் சுமார் இருபது நண்பர்களின் செல்பேசி எங்களைக் கொடுத்தார். அவர்களில் ஆப்பிரிக்கர்கள் மட்டுமல்ல, வெள்ளையர்களும்கூட இருந்தார்கள்.
சங்கம் அமைப்பதற்கான தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து உற்சாகத்துடன் பேட்டியளிக்கும் தொழிற்சங்க அமைப்பாளர் கிரிஸ்டின் ஸ்மால்ஸ்.
தொழிற்சங்கத்திற்காக நான் செய்த மிகச் சமீபத்திய விசயம், வாக்கு எண்ணும் பணியில் ஒரு பார்வையாளராகச் செயல்பட்டதுதான். நான் ஒரு ஆப்பிரிக்கன். அதிகாரத்தில் இருப்பவர்கள் வாக்குகளில் எப்படியெல்லாம் ஊழல் செய்வார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன். எனவே அது மீண்டும் இங்கு நடக்காமல் பார்த்துக்கொள்ள விரும்பினேன்.
பத்திரிகையாளர் எரிக்: நீங்கள் சங்கத் தேர்தலில் வென்றுவிட்டீர்கள் என்று கேள்விப்பட்டபோது எப்படி உணர்ந்தீர்கள்?
பிரிமா: ‘என்னால் நம்பவே முடியவில்லை’ – அதை விவரிப்பதே மிகவும் கடினம். இதோ நாங்கள் வெற்றி பெற்ற நாளில், என் சகதொழிலாளிக்கு “அதிகாரம் மக்களுக்கே” (Power to People) என்று குறுஞ்செய்தி அனுப்பினேன்.
அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்திருந்தார்:
நான் எனது தொழிற்சங்க உடுப்பை அணிந்திருந்தேன். ஜும்மா தொழுகைக்கு முடித்துவிட்டு மசூதிக்கு வெளியே வந்தவர்கள் என்னைப் பார்த்து கை அசைப்பதைக் கவனித்தேன். அதில் ஒருவர் “ஆக, நீங்கள் வெற்றிப் பெற்றுவிட்டீர்களல்லவா“ என்று கூறினார். அனைவரது பார்வைகளும் என்மீது விழுந்தன. இவ்வெற்றி எப்படி சாத்தியமானதென அனைவரும் அறிய விரும்புவதை எண்ணி நான் மகிழ்ச்சியில் திளைத்தேன். நமக்கு ஆதரவாக அல்லது எதிராக வாக்களித்த அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவி பிரிமா; அமேசானின் அனைத்து கிளைகளின் பணிச்சூழலும் மேம்படுத்துவதை நாம் எதிர்நோக்குகிறோம்.
படிக்க :
♦ இந்தியாவில் அமேசான் நம்பர் 1 ஆனது எப்படி ? ஐரோப்பிய தொழிலாளியைக் கேளுங்கள் !
♦ அமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் !
பத்திரிகையாளர் எரிக்: இத்தகைய வெற்றியால் ஈர்க்கப்பட்ட, நாடுமுழுவதும் உள்ள மற்ற அமேசான் தொழிலாளர்களுக்கு நீங்கள் என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்?
பிரிமா: நாங்கள் அவர்களுக்கு நிச்சயமாக உதவப் போகிறோம். இம்மாத இறுதியில் தேர்தலைச் சந்திக்கவிருக்கிற ஸ்டேட்டன் தீவின் மற்றொரு சரக்குக் கிடங்கு, அதைத்தொடர்ந்து புரூக்ளின், மான்ஹாட்டனில் உள்ள கிடங்குகள் மற்றும் நாட்டின் அனைத்து முனைகளில் உள்ள தொழிலாளர்களிடமும் எங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு அவர்கள் வெற்றிக்கு உதவப் போகிறோம்.
பிரிமா பராமரிக்கக்கூடிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வாட்சப் குழு. அத்தொழிலாளர்களின் தாய்மொழியிலேயே தொழிற்சங்கத் தகவல்கள் அனுப்பப்படுகின்றன.
நாங்கள் மற்ற தொழிற்சங்கங்களிடமிருந்து நிறையவே கற்றுக்கொண்டோம், அனுபவம் வாய்ந்த தொழிற்சங்க அமைப்பாளர்களிடமிருந்து கற்றுக்கொண்டோம். எங்களுக்கு ஆதரவளிக்க ஒரு தொழிற்சங்கம் தங்கள் அலுவலகத்தைப் பயன்படுத்த அனுமதி தந்தது. இப்போது எல்லா இடங்களிலும் உள்ள அமேசான் தொழிலாளர்களுக்கும் இதைப் போன்ற உதவிகளைச் செய்வது எங்கள் கடமையாகும்.
நமது வாழ்வை மேம்படுத்தும் சக்தி நம்மிடம் உள்ளது என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன். அதைத்தான் நாங்கள் செய்யப் போகிறோம். தொழிற்சங்கம் நிறுவப்பட்டுள்ள அமேசான் நிறுவனத்தை முன்புபோல ஷிப்ட் முடிந்தவுடனே பூச்சாண்டி துரத்துவதைப் போல தப்பியோடும் நிலைமை இல்லாத – வேலை செய்ய உகந்ததும் வசதியானதுமான இடமாக மாறும். இக்கணத்தில் நீங்கள் வேலைசெய்தால்தான் பிழைக்க (Survive) முடியும் என்ற இடமாகவே அமேசான் உள்ளது. ஆனால் நம்மால் அதை மாற்ற முடியும்.

மொழியாக்கம்: புவனா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க