லகின் மிகப்பெரிய இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் முதன் முறையாக பிளிப்கார்ட்டை மொத்த வர்த்தக மதிப்பில் (Gross merchandise value) முந்தியிருக்கிறது. அமேசானின் மொத்த வர்த்தக மதிப்பு 52 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் சற்று அதிகம். பிளிப்கார்ட்டின் மொத்த வர்த்தக மதிப்பு 43 ஆயிரம் கோடிக்கும் சற்று அதிகமாக இருந்தது. கடந்த 2017 நிதியாண்டின் முடிவில் பிளிப்கார்ட் நிறுவனத்துடன் கடும் போட்டியில் இருந்த அமேசான், இந்தியாவிற்குள் நுழைந்த ஐந்து ஆண்டுகளுக்குள் பிளிப்கார்டை பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. மேலும் 2018 நிதியாண்டில், வருமானத்திலும் பிளிப்கார்ட்டை பின்னுக்குத்தள்ளி விடும் என்று பார்க்லேஸ் (Barclays) அறிக்கை கூறுகிறது.

அதே நேரத்தில் வருமானத்தை பொறுத்தவரையில் பிளிப்கார்ட் நிறுவனம் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. பிளிப்கார்ட்டின் 77 விழுக்காடு பங்குகளை 2018 ஆண்டின் தொடக்கத்தில் அமேசானின் போட்டியாளரான வால்மார்ட் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

பிளிப்கார்ட் நிறுவனத்தின் வருவாய் 26 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருந்தது. அமேசானின் வருவாய் 22 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் சற்று அதிகமாக இருந்தது. ஆனால் அமேசானின் வளர்ச்சி 82 விழுக்காடாகவும் பிளிப்கார்ட்டின் வளர்ச்சி 47 விழுக்காடாகவும் இருப்பதால் அடுத்த நிதியாண்டில் அமேசான் முன்னிலைக்கு வந்து விடும் என்று அமெரிக்காவை சேர்ந்த பார்க்லேஸ் நிறுவனத்தின் ஆய்வாளர்களான ரோஸ் சாண்ட்லர், கெரன் சார்ட் மற்றும் தீபக் மதிவாணனும் கூறுகின்றனர்.

ஆயினும் இந்த அறிக்கை குறித்து கேட்கப்பட்டபோது அமேசான் செய்தித் தொடர்பாளர் கருத்து எதுவும் சொல்ல இயலாது என்று கூறினார். பிளிப்கார்ட்டின் செய்தி தொடர்பாளரோ “பிக் பில்லியன் நாள்கள் (The Big Billion Days)” ஐந்து நாட்கள் சலுகையின் போது 70 விழுக்காடு சந்தையை பிளிப்கார்ட் வசப்படுத்தி இருந்ததால் கேள்விக்கிடமின்றி பிளிப்கார்ட்தான் முன்னணி நிறுவனம் என்று கூறினார்.

இப்படி பிளிப்கார்ட்டுடன் சந்தையை கைப்பற்றுவதில் இந்தியாவில் சண்டையிட்டு கொண்டிருக்கும் அதே வேளையில் ஐரோப்பாவெங்கிலும் பணிச்சுமை காரணமாக “நாங்கள் என்ன ரோபோக்களா?” என்று கூறி அமேசானின் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“கருப்பு வெள்ளிக்கிழமை” சலுகை விற்பனை நாளில் தங்கள் மீது அந்நிறுவனம் அதிகரித்திருக்கும் பணிச்சுமையை எதிர்த்து அமேசானின் ஐரோப்பிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்பெயின், இங்கிலாந்து , ஜெர்மனி மற்றும் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பா கண்டம் முழுவதும் அமேசான் ஊழியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அமேசானுக்கான சந்தை ஐரோப்பாவில் பெரியது.

அமேசான் பிரைம் டே விளம்பரம்

மாட்ரிட் நகருக்கு அருகில் உள்ள அந்நிறுவனத்தின் சரக்கு போக்குவரத்து மையத்தின் 90 விழுக்காடு ஊழியர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டதாக தொழிற்சங்கங்கள் கூறின. சரக்கேற்றும் துறைமுகப் பகுதியில் வெறுமனே இரண்டு தொழிலாளர்கள் மட்டுமே வேலையில் ஈடுபட்டதாக CCOO தொழிற்சங்க கூட்டமைப்பை சேர்ந்த டக்லஸ் ஹார்பர் கூறினார். இங்கிலாந்தில் ஐந்து இடங்களில் நூற்றுக்கணக்கில் அமேசானின் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தொழிற்சங்க தலைவர்கள் கூறினார்கள்.

“இப்புவியின் மிகப்பெரிய பணக்காரரான அமேசான் நிறுவனர் ஜேபி பெசோஸ் நினைத்தால் இப்பிரச்சினைக்கு வழிவகை செய்ய முடியும்” என்று GMB தொழிற்சங்கத்தின் பொது செயலாளரான டிம் ரோச்சே கூறினார்.

“வேலை செய்யும் இடம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தால், ஊழியர்கள் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும்  நிலை ஏற்படாது. இதுவே தொழிலாளர்கள் அனைவரின் விருப்பமும். ஆனால் இச்சிக்கல்களை சரி செய்வதற்கு தொழிற்சங்கங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அமேசான் நிறுவனத்திற்கு விருப்பம் இல்லை” என்று மேலும் அவர் கூறினார்.

இது குறித்து அந்நிறுவனத்தின் ஐரோப்பிய செய்தித்தொடர்பாளர் ஸ்டூவர்ட் ஜேக்சன் கூறுகையில், ”அமேசான் ஒரு பொறுப்புள்ள நிறுவனம். எங்களது ஊழியர்களுடன் நேரடியான மற்றும் வெளிப்படையான உரையாடலை நாங்கள் தொடர்கிறோம். கடந்த 2010-ம் ஆண்டிலிருந்து ஐரோப்பாவில் 75,000 நிலையான வேலை வாய்ப்பினை கொடுப்பதற்காக 27 பில்லியன் யூரோ (2 இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம்) முதலீடு செய்திருக்கிறோம்” என்று கூறினார்.

படிக்க:
சாணி விற்கும் அமேசான் ! இதுதாண்டா மேக்-இன்-இந்தியா !!
இறைச்சித் தொழிலை அழிக்கும் பாஜக ! இறைச்சி சங்கத்தின் அன்வர் பாஷா நேர்காணல்

ஆனால் அமேசானின் சந்தை ஆதிக்கமும் மோசமான ஊதியம் கொடுக்கும் வழக்கமும் அமெரிக்காவில் கடுமையாக எதிர்க்கப்பட்டது. தொடர்ந்து குறைந்தபட்ச மணிநேர ஊதியமாக 15 டாலர்(1,046 ரூபாய்) கொடுப்பதாக அக்டோபரில் அந்நிறுவனம் அறிவித்தது. அதே நேரத்தில் ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு ஊக்கத்தொகைகளையும் நீக்கிவிட்டது.

தொழிலாளர்களுக்கு ஆதரவான பல்வேறு நலத்திட்டங்களை சட்டங்களையும் கொண்டதாக வியந்தோதப்படும் ஐரோப்பிய நாடுகளுக்கே இந்த கதி என்றால் இந்தியாவில் அமேசான் ஊழியர்களது கதியை நினைத்து பாருங்கள். எட்டிப் பிடித்த முதலிடத்தை தக்க வைக்க அமேசான் உறிஞ்சப் போவது இந்தியத் தொழிலாளர்களின் இரத்தத்தைத் தானே ?

செய்தி ஆதாரம்:
Amazon’s European workers go on strike for Black Friday
Amazon overtakes Flipkart with $7.5 billion GMV 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க