Saturday, April 1, 2023
முகப்புஉலகம்அமெரிக்காஅமேசான் வழங்கும் கறுப்பு வெள்ளி !

அமேசான் வழங்கும் கறுப்பு வெள்ளி !

-

ரு பொருள் வேண்டும் என்று நீங்கள் நினைத்து முடிப்பதற்குள் அலாவுதின் அற்புத விளக்குபோல் அதை உங்கள்முன் தோன்றச் செய்ய என்ன செய்யவேண்டும்? அமேசானின் கவலையெல்லாம் இது ஒன்றுதான். வேகமாக, இன்னும் வேகமாக, மேலும் வேகமாக வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விரும்பியதைக் கொண்டுபோய் சேர்ப்பதில்தான் தங்களுடைய வெற்றி அடங்கியிருக்கிறது என்பது அமேசானுக்குத் தெரியும். எனவே அவர்கள் வேகத்தைக் கூட்டிக்கொண்டே போகிறார்கள். வேகத்தைக் கூட்டக்கூட்ட வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது. அதன்மூலம் லாபமும் பெருகிக்கொண்டே இருக்கிறது. ஓரிடத்திலிருந்து ஒரு பண்டத்தை இன்னோரிடத்துக்குக் கொண்டுசெல்லும் ஒரு எளிய நிறுவனமாகத் தொடங்கிய அமேசான் இன்று உலகையே தன் உள்ளங்கைக்குள் கொண்டு வந்துவிடத் துடித்துக்கொண்டிருக்கிறது.

நவீன தொழில்நுட்பமே அமேசானின் பிரமாண்டமான வெற்றிக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இது மேல் பார்வைக்கு சரிதான் என்றுகூட நமக்குத் தோன்றும். நம் கண்களுக்கு அமேசானின் மொபைல் ஆப் மட்டுமே தெரிகிறது என்பதால் இப்படி முடிவு கட்டிவிடுகிறோம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்துக்குப் பின்னால் இருப்பவர்கள் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்தாம். ஆனால், இவர்கள் நம் பார்வைக்கு தெரிவதில்லை..

உலகம் முழுக்க பல்லாயிரம் தொழிலாளர்கள் சரக்கு அறைகளில் அமர்ந்து நமக்கான பண்டங்களைத் தனித்தனியே பிரிக்கிறார்கள். மனிதர்கள்தான் பாக்கிங் வேலையையும் செய்யவேண்டியிருக்கிறது. முகவரியைச் சரி பார்த்து பார்சலில் ஒட்டுவதும் தொழில்நுட்பம் அல்ல, மனிதர்கள். எது எங்கே போகவேண்டும் என்பதையும் எப்போது போகவேண்டும் என்பதையும் மனிதர்களே முடிவு செய்கிறார்கள். மனிதர்களே பார்சல்களை வண்டிகளில் போட்டு அனுப்புகிறார்கள். மனிதர்களே நமக்கு டெலிவரியும் செய்கிறார்கள். மிஞ்சி மிஞ்சி போனால் நாம் இவர்களை மட்டுமே நேரடியாகப் பார்க்கிறோம். மற்றவர்களின் முகம், பெயர் நமக்குத் தெரியாது. அமேசான்தான் நமக்குத் தெரிந்த ஒரே முகம். அந்த முகத்தை நாம் மொபைலில்தான் பெரும்பாலும் பார்க்கிறோம் என்பதால் தொழிலாளிகள் குறித்து நாம் சிந்திப்பதில்லை.

நாம் மட்டுமல்ல அமேசானும்கூடத் தொழிலாளர்கள் குறித்து அக்கறையுடன் சிந்திக்கவில்லை. ஏனென்றால் தொழிலாளர்கள் எவரையும் அமேசான் தன்னுடைய தொழிலாளர்களாக பொறுப்பெடுத்துக் கொள்வதில்லை. தன்னுடையை தேவையை செய்து முடிக்கும் பொருட்டு, உலகின் எந்த ஒரு மூலையிலும், எந்த ஒரு நிறுவனத்தையும் வேலைக்கு அமர்த்திக் கொள்ள முடியும். இவர்களுக்கு வேலைநிரந்தரம் கிடையாது; உழைப்புக்கேற்ற ஊதியமும் கிடையாது. மேற்படி நிறுவனம் தனது தொழிலை வேறு ஊருக்கு மாற்றிவிட்டாலோ, வேறு ஒரு இடத்தில் இதைவிட மலிவான ஊதியத்துக்கு ஆள் கிடைத்துவிட்டாலோ இந்த தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பிவிடும். இதனை அவுட் சோர்சிங், அதாவது அயல்பணி என்கின்றன, பன்னாட்டுக் கம்பெனிகள்.

தொழில்நுட்பத்துக்குப் பின்னால் இருப்பவர்கள் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்தாம். ஆனால், இவர்கள் நம் பார்வைக்கு தெரிவதில்லை..

அமேசான் உள்ளிட்ட பன்னாட்டுக் கம்பெனிகள் உலகெங்கும் தங்களது கிளைகளை வேர்பிடிக்க வைக்க அயல்பணி தொழிலாளர்களையே பயன்படுத்திக் கொண்டு வருகின்றன. இவ்வாறு இத்தாலியிலும் ஜெர்மனியிலும் அயல்பணி வேலைமுறையில் ஈடுபடுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இரு மாதங்களுக்குமுன்பு வேலை நிறுத்தத்தில் இறங்கினர். காரணம் என்ன? இங்கே தீபாவளி, பொங்கல் போல் அமெரிக்காவில் நன்றியறிதல் நாள் என்பது ஒரு மிகப் பெரிய கொண்டாட்ட தினம். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் நான்காம் வியாழன் அன்று இந்த நிகழ்வு கொண்டாடப்படுகிறது. ஆபிரஹாம் லிங்கன் ஆரம்பித்து வைத்த வழக்கம் இது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு போல் இதையும் அமெரிக்கர்கள் விமரிசையாக வரவேற்று மகிழ்வது வழக்கம்.

இந்த நன்றியறிதல் முடிந்த மறுதினமான வெள்ளிக்கிழமையை ”கறுப்பு வெள்ளிக்கிழமை” என்று அழைக்கிறார்கள். இதற்கு இன்னொரு பெயர், பிரம்மாண்டமான ஷாப்பிங் தினம் என்பதாகும். இந்தத் தினத்தின்போது உள்ளூர் பெட்டிக்கடை தொடங்கி வானுயர்ந்த மால்கள்வரை எல்லாவிடங்களிலும் மாபெரும் கழிவுகள் கொடுத்து வாடிக்கையாளர்களை ஈர்ப்பார்கள். நள்ளிரவில்கூட கடைகளைத் திறந்து வைத்து விற்பனை செய்வார்கள். மக்கள் வரிசையில் நின்று வாங்கிச் செல்வார்கள். கடைகளிலும் மால்களிலும் பணியாற்றும் தொழிலாளர்கள் பல நாள்களுக்கு அல்லது வாரங்களுக்கு முன்பே இதற்குத் தயாராக ஆரம்பித்துவிடுவார்கள். வழக்கமான பணிநேரத்தைக் காட்டிலும் அதிக நேரம் பணியாற்றும்படி இவர்கள் நிர்பந்திக்கப்படுவார்கள். டார்கெட் அச்சுறுத்தல்களும் பலருக்கு இருக்கும். அவசரம் என்றால்கூட விடுமுறை கிடையாது. பக்கத்து கடையைவிட அல்லது போட்டி நிறுவனத்தைவிட அதிக லாபம் ஈட்டவேண்டும் என்பதில் மட்டும்தான் நிறுவனங்கள் அக்கறை கொண்டிருக்கும் என்பதால் தொழிலாளர்களின் நிலை குறித்து யோசிப்பதற்குக்கூட அவர்களுக்கு அவகாசம் இருக்காது.

அமேசானிலும் இதே நிலைமைதான். அமேசான் என்னவோ ஆன்லைன் நிறுவனம்தான். ஆனால் உலகம் முழுக்க பல நாடுகளில் பெரிய பெரிய சரக்கு கிடங்குகளை வாடகைக்குப் பிடித்து வைத்து அங்கே பணியாளர்களை நியமித்து அவர்கள் வாயிலாகவே உலகம் முழுக்க பண்டங்களை அனுப்பிக்கொண்டிருக்கிறது அமேசான். நேரடியாகக் கடைகளுக்குச் சென்று வாங்கும் வாடிக்கையாளர்களையும் தம் பக்கம் இழுப்பதே அமோசானின் நோக்கம். பொருள் என்றாலே ஆன்லைன்தான் என்று மக்கள் மாறவேண்டும் என்பதுதான் அதன் கனவும்கூட. அதனால் நேரடி விற்பனை விலையைக் காட்டிலும் பல மடங்கு அதிரடியாக விலையைக் குறைத்து, தொடக்கத்தில் இழப்பு வந்தாலும் பரவாயில்லை என்று கருதி வாடிக்கையாளர்களை மடக்கி வைத்திருக்கிறது அமேசான். தற்போது நடந்திருப்பதும் அதுதான். பிளாக் ஃபிரைடே தினத்தின்போது மக்கள் அமேசானைக் கைவிடக்கூடாது என்பதற்காக போட்டிப்போட்டுக்கொண்டு பல டெலிவரிகளை மின்னல் வேகத்தில் நடத்திக்காட்ட விரும்பியது அமேசான்.

தொழில்நுட்பம் வருவதற்கு முன்பே உழைப்பு இருந்திருக்கிறது. உழைப்பாளிகள் இருந்திருக்கிறார்கள்.

இந்த இலக்கை நிறைவேற்றும் பொறுப்பை மேற்படி அயல்பணி தொழிலாளர்கள் தான் சுமக்கவேண்டும். பண்டிகை காலங்கள் வந்துவிட்டாலே இவர்களுடைய பாடு திண்டாட்டம்தான். வேகம், இன்னும் வேகம், இன்னும் வேகம் என்று சாட்டையைச் சொடுக்காத குறையாக மேலாளர்கள் முதுகில் ஏறி அமர்ந்து விரட்டத் தொடங்கிவிடுவார்கள். இரண்டு நாளில் முடிக்கவேண்டிய ஒரு டெலிவரியை ஒரே நாளில் முடி. ஒரு நாளில் முடிக்கவேண்டியதைச் சில மணி நேரங்களுக்குள் முடிக்கப் பார். சில மணி நேரம் ஆகவேண்டியதை அரை மணி நேரத்தில் ஏன் முடிக்க முடியாது? வீடு, குடும்பம், குழந்தைகளை எல்லாவற்றையும் மறந்துவிட்டு அமேசானே கதி என்று கிடந்தால்கூட அவர்கள் நிர்ணயிக்கும் டார்கெட்டுகளைச் சரியாக முடிப்பதற்குள் முழி பிதுங்கிவிடும்.

இத்தாலியில் உள்ள மிலான் பகுதியில் பணியாற்றும் 500 தொழிலாளர்கள் முதல்முறையாக அமேசான் கொடுக்கும் அதீத அழுத்தத்துக்கு எதிராக வேலை நிறுத்தத்தில் குதித்திருக்கிறார்கள். இது போக, ஊதிய உயர்வும் அவர்களுடைய முக்கியமான கோரிக்கைளில் ஒன்றாக இருக்கிறது. கூடுதல் பணி நேரத்துக்கு ஏற்ப கூடுதல் ஊதியம் என்பதையும் அமோசான் பல இடங்களில் சரியாக அமல்படுத்தவில்லை. அதற்கு எதிராகவும் தொழிலாளர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

ஜெர்மனியில் 2,500 தொழிலாளர்கள் அமேசானுக்கு எதிரான வேலைநிறுத்தத்தில் பங்கேற்று உலகின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறார்கள். சரக்குக்கிடங்குகளில் பணியாற்றும் பலருக்கு அடிப்படை ஊதியம்கூட மிகக்குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது தொழிலாளர்களின் கோபத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. இப்போது உயர்த்துவார்கள், பிறகு உயர்த்துவார்கள் என்று நம்பி காத்திருந்ததுதான் மிச்சம். ஊதிய உயர்வு கேட்கும் ஒவ்வொரு முறையும் ஏதேனும் சாக்கு சொல்லி தட்டிக்கழிப்பதையே நிர்வாகிகள் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அது போதாதென்று, கறுப்பு வெள்ளி தினத்துக்குக் கூடுதலாக உழைக்கவேண்டும், டார்கெட்டை முடிக்கவேண்டும், தவறுகள் இருக்கக்கூடாது, விடுமுறைகள் எடுக்கக்கூடாது, ஒரு நொடி தாமதமாக வந்தாலும் நடடிவக்கை என்றெல்லாம் அடுக்கடுக்காக பல நிபந்தனைகளையும் தொழிலாளர்கள்மீது விதித்து அவர்களுடைய வேதனையை அதிகப்படுத்தியிருக்கிறது அமேசான்.

இந்த வெள்ளி மட்டுமல்ல எங்களுக்கு எல்லா நாள்களுமே கறுப்பு தினங்கள்தான் என்று வெகுண்டெழுந்த தொழிலாளர்கள், எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலைக்குத் திரும்பமாட்டோம் என்று அறிவித்து வீதியில் திரண்டுவிட்டார்கள். மலையளவு லாபம் சம்பாதித்து, உலகமெங்கும் கிளைகளைப் பரப்பிக்கொண்டிருக்கும் அமேசான், அதன் வெற்றிக்காக உழைப்பைச் செலுத்தும் எங்களை மட்டும்தொடர்ந்து புறக்கணித்துவருவது சரிதானா என்று கேள்வி எழுப்புகிறார்கள் தொழிலாளர்கள்.

உலகெங்கும் தொழிலை பரப்புவதற்கு தகவல் தொழில்நுட்பம் உதவலாம். ஆனால், அதுவே உழைப்பாளிக்கு மாற்றாக முடியாது. தொழில்நுட்பம் வருவதற்கு முன்பே உழைப்பு இருந்திருக்கிறது. உழைப்பாளிகள் இருந்திருக்கிறார்கள். அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியில் அவர்களுடைய பங்களிப்பு திடமானது, மறுக்கமுடியாதது. இதை அமேசான் உள்ளிட்ட எந்த நிறுவனமும் உணரப்போவதில்லை. ஆனாலும், அதை உணர்த்தவேண்டியது நம் கடமை. வேலைநிறுத்தப் போராட்டத்தால் தான் தொழிலாளர்களுடைய உரிமையை நிலைநாட்ட முடியும் என்பதை உலக முதலாளிகள் மீண்டும், மீண்டும் சொல்லித்தருகின்றனர்.

– மருதன்
புதிய தொழிலாளி, ஜனவரி 2018
New Democratic Labour Front I.T. Employees Wing

 

 1. அமேசானின் இந்திய தொழிலாளர்கள் பற்றிய செய்திகளை குறிப்பாக சென்னை தொழிலாளர்கள் பற்றிய செய்திகளை சேர்த்து வெளியிட்டு இருக்கலாமே வினவு….மும்பையில் இருந்து கூட புத்தகங்களை 36-48 மணி நேரங்களில் கொண்டுவந்து சேர்க்கும் அமேசான் தொழிலாளர்களுக்கு நன்றி… அமேசான் தன் வாடிகையாளர்களை சிறப்பாக கவனிப்பது போன்றே அதன் தொழிலாளர்களின் நலனிலும் கண்டிப்பாக அக்கறை செலுத்தும்…

  அதற்கு நாமும் அமேசானின் மின்னஞ்சளுக்கு சில ஆயிரகணக்கான கடிதங்களை அனுப்பி அழுத்தம் கொடுக்கலாம்…

  ” Care Your Team as Your team care me ”

  இந்த செய்தியை அமேசான் இந்திய தலைமைக்கு அனுப்பி அவர்களை யோசிக்க செய்யலாம்…

  • திருத்தம் : அமேசான் தன் வாடிகையாளர்களை சிறப்பாக கவனிப்பது போன்றே அதன் தொழிலாளர்களின் நலனிலும் கண்டிப்பாக அக்கறை “செலுத்தவேண்டும்”

   • அமேசானுக்கு ஆயிரம் பேர் இன்னிக்கி ராத்திரியோட ராத்திரியா இந்த விசயத்தில் மெயில் அனுப்பி பாருங்க! அமேசான்இந்திய நிர்வாகம் ஆடிபோயிடுவாணுங்க….இந்த விசயத்தில் சமுக வளைய தளங்கள் மூலமாக அதிகம் நாம் அமேசானை மிரட்டி அதன் தொழிலாளர்களுக்கு சாதகமாக நாம் சாதிக்கலாம்… முடியும்!

 2. மிஸ்டர் குமார்…

  இதையே ஏன் நாமும் நம்மை ஆளும் மோடிக்கும் தெரிவிக்க கூடாது.

  அன்புள்ள மோடி அவர்களுக்கு,
  இந்த முஸ்லிம்கள் சென்னை வெள்ளத்தில் தத்தளித்த போது சோறு கொடுத்து பாதுகாத்தார்கள். அவர்களை இந்த ஆர்.எஸ்.எஸ் காலிகளிடம் இருந்து காத்திரும்.

  மீனவர்கள் நமக்கு மீன் அள்ளி வந்து கொடுத்தார்கள். அவர்களை டெட்பாடியிடம் இருந்தும் இலங்கை கடற்படையிடம் இருந்தும் காத்திரும்.

  தமிழ் மொழி மிகவும் தொன்மையானது. செத்த மொழிக்கு கொடுக்கும் மரியாதையை எங்களது இனிமையான தமிழ் மொழிக்கும் கொடுக்குமாறு ஜெயேந்திரனுக்கு அறிவுறுத்துங்கள்.

  ஊழியர்களை வேலையை விட்டு வெளியேற்ற வேண்டாம் என்று மென்பொருள் நிறுவனங்களிடம் மன்றாடுங்கள்.

  .
  .
  .
  .
  கடைசியாக நம் அரசியல்வாதிகள் மிகவும் நல்லவர்கள். அவர்களிடம் ஊழல் செய்யாதீர்கள். ஒட்டு போட்ட மக்களுக்கு நல்லது செய்யுங்கள் என்று மன்றாடுவோமாக……..

  • அமேசான் தொழிலாளர்கள் தங்கள் பிரச்சனைக்கு போராடுறாங்க என்றால் அது தொழ்ல்நுட்ப்த்தை அதிகம் சார்ந்த அந்த நிறுவனத்தின் மீது அவர்கள் அளிக்கும் சிறிய அழுத்தம் தான் …., அதே நேரத்தில் அமேசான் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் அழுத்தம் இருக்கே அங்கே தான் விசயமே இருக்கு…! இந்திய அளவில் பத்து சதவிதம் அமேசான் வாடிக்கையாளர்கள் அமேசான் தொழிலாளர்களுக்கு ஆதரவா குரல் எழுப்பினால் அதன் விளைவுகளே நாம் அளவிட முடியாத அளவுக்கும் .தொழிலாளர்களுக்கு சாதகமாகவும் இருக்கு செல்வம்..

   (என்னுடைய கருத்து பேருந்து தொழிலாளர்கள் போராடும் பொது அதற்கு பேருந்துகளின் வாடிக்கையாளர்களான பொதுமக்கள் ஆதரவு தரனும் என்ற கருத்தின் அடிப்டையில் ஆனது தானே தவிர இதில் புதிய சிந்தனைஎதுமில்லைங்க)

 3. ஆக இந்த கசக்கி பிழியப்பட்ட உழைப்பே ஜெப் பிசாசின்..பெசொசின் நூறு பில்லியன் டாலர் அமேசானின் வருமான சாதனை மற்றும் உலக பணக்கார வரிசை முதலிடம்?

  கிங்க்ஸ்மென் படத்தில் ஒரு வசனம் வரும்-

  திறமை,குறிக்கோள், இரக்கம் இன்மை,அடுத்தவர் துயர் உணர்தல் இன்மை, செயற்கை கவர்ச்சி என்பன ஒருசேர இருவரிடம் தான் இருக்கும் ஒரு சைக்கோவிடம் அல்லது ஒரு கார்பரேட்டின் தலைமை செயலர்!

  இன்று ‘வெற்றி’ பெற்றதாக கூறப்படும் கார்பரேட்டுகளின் ஊழியர் நிலையும் இதே போல்தான்.
  அமேசான் அப்பில் கூகிள் பேஸ்புக் ..என எதுவென்றாலும். அமேசானின் கடை நிலை ஊழியர் என்றில்லாமல் ‘வெள்ளை காலர்’ பதுமைகளும் கசக்கி பிழியபடுகிறார்கள்.
  ‘மகிழ்ச்சியான ஊழியர்கள்- அதிக உற்பத்தி’ என பீற்றும் கார்பரேடுகள் உண்மையில் அதற்கு எதிர்மாறாக ஊழியர் வாழ்கையே நாசபடுத்துகின்றன.

  ஜெர்மனியனுக்கே அந்த நிலைமை, இதில் இந்திய தொழிலாளர்களை கவனிக்கும் என எண்ணி கருணாநிதியை போல் கடிதம் அனுப்ப சொல்கிறார் ஒருவர். என்னே ஒரு ‘அன்ன ஹசாரே நம்பிக்கை’!!!

  • அட கொடுமையே ..! அமேசான் தொழிலாளர்களின் நலனுக்கு ஆதரவாக அதன் வாடிக்கையாளர்கள் குரல் எழுப்புவது கூட இவருக்கு…..!ஹ ஹா…. சரி சரி கிறுக்கு பிடித்தவருக்கு நாம் எப்படி விளக்கம் கொடுப்பது?

   • குமார்
    எனக்கு கிறுக்கு பட்டம் கொடுப்பதில் தங்கள் அமேசான் கார்பரேட் பாசம் கட்டுப்படுத்த முடியாமல் பொங்கி வழிந்து (//”தொழிலாளர்களின் நலனிலும் கண்டிப்பாக அக்கறை செலுத்தும்”//) பிறகு ஓவரா கொண்டை தெரியுதே என அவசரமாக பட்ச் போட்டு ஒட்டியும் (//கண்டிப்பாக அக்கறை “செலுத்தவேண்டும்”//) லீக் ஆகுதுங்க.

    கட்டுரை என்னத்தை பேசுகிறது?? அமேசான் என்னும் பகாசுர கம்பனியின் கொடுமையை எதிர்த்து தொழிலாளர்களே வேலை நிறுத்தம் செய்யும்போது ,உங்களை போல் இமெயில் அனுப்பி உருவிவிட்டால் அமேசான் வழிக்கு வருமா? உண்மையிலேயே அக்கறை இருந்தால் அனைவரும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அமேசான் சேவையை பயன்படுத்தாமல் புறக்கணிக்க வேண்டும்.
    இதற்கும் தந்தியடித்த கருணாநிதிக்கும் என்ன வித்தியாசம் ? எதாவது வழிக்கு வந்ததா??

    அப்படியானதொரு முறை இருக்கும் போது அமேசானுக்கு எந்த அலுங்கல் குலுங்கல் இல்லாத கடுதாசி போட்டு கெஞ்ச சொல்கிறீர்? தொழிலாளர் உரிமையை இரந்துபெற சொல்லும் உங்கள் ஆபாசம் குத்தவில்லையா உங்கள் தடித்த புத்தியில்??

    • சந்தேக புத்தியின் ஊற்று கண்ணாக சின்னாவின் சிந்தனை முறை…. கருத்தை வெளியிடும் போது அதில் தவறு ஏற்பட்டால் திருத்திக்கொள்பவன் குமார்…. தன் தவற்றிலேயே நீச்சல் அடிபவர் சின்னா….

     வாடிகையாளர்களையும் அவர்களின் உணர்வுகளையும் அமேசான் புறக்கணிக்கும் எனில் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவோம்… பொருட்ட்களை ஆடர் செய்து விட்டு அவற்றை அவர்கள் டெலிவரி செய்யும் தருணத்தில் புறகணிப்போம்…. அவர்களின் இணைய தளத்தை இருநாட்களுக்கு நம் கணினி திறமையை கொண்டு முடக்குவோம்… இன்னும் எவ்வளவோ முறைகளில் அமேசானை அடிபணியவைக்க முடியும்…

     என்ன செய்ய இவைகள் எல்லாம் சின்னாவின் சிந்தனையில் வராது தானே? ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என்பதும் சந்தேக புத்தி காரனுக்கு தோழ்ன்மை கிடையாது என்பதும் உண்மை தானே!

    • சின்னா ,உங்க புத்தியில், சிந்தனையில் தான் ஆபாசம் பொங்கி வழிகின்றது…ஒரு கருத்தை வெளியிடும் போது அதில் உள்ள சாதக பாதகங்களை ஆய்வு செய்ய ஒரு நடுநிலையான மனம் இல்லாமல்………….. ! கம்போடிய நாட்டில் ஒரு ஆபாச பாசிசவாதி கம்யுனிசத்தின் பெயரால் ஆட்சியை பிடித்து நாட்டின் தலைநகரை மனிதர்களின் மண்டையோடுகளின் கல்லறை நகராக மாற்றினான். அவனை போன்றவர் தான் நீங்கள் போலும்… கம்ம்யுநிசந்தின் பெயரில் ஆட்சி உங்கள் கைகளில் கிடைத்தால் எதிர் வருபவர் எவரையும் கடித்து குதறும்…….!

     • நண்பரே,
      நீர் முதலில் சஜெஸ்ட் பண்ணிய வகையான கடுதாசி போட்டு கெஞ்சுவது, மெழுகுவர்த்தி புடிச்சி எதிர்க்கிறது, கேஸ்டேக் போட்டு போராடுறது எல்லாம் சம்பந்தப்பட்ட எதிராளிகள் (கார்பரேட்களோ /அரசாங்கமோ) நமுட்டு சிரிப்பு சிரிக்கும் செயல்கள் என உமக்கும் தெரியும்.
      அதிலும் தங்கள் ‘வாடிக்கையாளர் உணர்வு’ ஈமெயில்களை ‘தங்கள் வேண்டுகோளை அமேசான் நிச்சயம் பரிசீலிக்கும்’ என தேனொழுக பதிலளிக்கும் எக்ஸ்ட்ரா வேலைப்பளுவும் அந்த தொழிலாளர்களுக்கே என்பது முரண்நகை. அப்படி கார்பரேட்டுகள் அளிக்கும் வாக்குறுதிகள் கூட என்னவாகும் என்பதும் உமக்கு தெரியும்.

      எது எப்படியோ விரும்பியோ விரும்பாமலோ சந்தேகபுத்தி சின்னாவின் கேள்வியால் தாங்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த கூடிய, அமேசானின் அடிமடியில் கைவைக்கும் புறக்கணிப்பு செய்யலாம் என ஒத்து கொண்டது மகிழ்ச்சியே. ஆம் இமெயில் அனுப்பாமல் நேரடியாக அவனுங்களின் மூச்சான வருமானத்தை பாதிக்கும் படி அடிமடியில் கை வைக்க வேண்டும்.
      இப்படி நேரடியான செயலை விடுத்து, இமெயில் அனுப்புவது நடவடிக்கை எடுக்கும் என நம்புவது எல்லாம் வேலைநிறுத்தம் என இறுதி ஆயுதத்தை கையில் எடுத்திருக்கும் தொழிலாளர் போராட்டத்தை மொன்னையாக்குவது போல் தோன்றவில்லையா? காட்டிகொடுப்பது போல் இல்லையா?? நேர்மையாக சிந்தியுங்கள்.

      • சின்னாவுக்கு தொழிலாளர்கள் தங்கள் பிரச்சனைகளுக்காக எப்படி போடாடுவாங்க என்ற முறைமைகள் பற்றிய அறிவு சிறிதும் இல்லை என்ற உண்மை மேல் உள்ள பின்னுட்டம் மூலமாக புலப்படுகிறது…

       எந்த பிரச்சனையாக இருந்தாலும் தொழிலாளர்கள் உடனே வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்க மாட்டார்கள் என்ற எளிய உண்மையை கண்டு பிடிக்க சின்னா போன்ற வரட்டு மொடுமுட்டி கம்யுனிஸ்டாக இருக்கனும் என்ற அவசியல் எல்லாம் இல்ல… சாதாரணமாக ஒரு தொழில் சங்கத்தில் உறுபினராக இருந்தாலே போதுமே!

       முதலில் தொழிலாளர்கள் தங்கள் பிரச்சனை தொடர்பாக நிருவாகத்துக்கு கோரிக்கை மனுவை தான் வைப்பார்கள் என்ற மயிரளவு உண்மை கூட வரட்டு கம்ம்யுநிடு சின்னாவுக்கு தெரியவில்லையே….

       நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு வந்தால் தொழிலாளர்கள் பேசிப்பார்பார்கள்… இறுதியில் தான் வேலைநிறுத்த போராட்டம்…

       யாராவது இவர் சார்ந்த அமைப்புஇவருக்கு வெளக்கமாக எடுத்து சொல்லுங்க….

       • குமார்
        நீங்க என்ன கம்மென்ட் போட்டீங்க என ஒருவாட்டி படிச்சு பாத்துட்டு மறுபடி பதில் போடுவது நல்லது.

        தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை அது இது எல்லாம் முடியாமல் தான் வேலைநிறுத்தம் செய்வார்கள் என்பது நீங்கதான் சொல்லனுமா? அமேசான் தொழிலாளர்களும் அப்படிதானே.

        இப்போ, உங்கள் யோசனை என்னவாக இருந்தது ? “வாடிக்கையாளர்கள்’ என்ற ரீதியில் தானே அந்த இமெயில் அனுப்பும் யோசனை சொன்னிர்கள்?? அதற்குதானே எனது மேம்படுத்த பட்ட ‘புறக்கணிக்கும்’ யோசனையும் இருந்தது??? இதில் தொழிலாளர் போராடும் முறை பற்றி யார் பேசியது???? வாடிக்கையாளர் என்ற ரீதியில் என்ன செய்யலாம் என்று தானே நீரும் நானும் பேசிகொண்டோம்?????

        இவனை பதிலுக்கு ஏதாச்சும் திட்டிடனும் என்று இப்படி பச்சையாக தடம் மாறி பேசுகிறீர்!

        • இந்த அளவுக்கு அறிவிழந்து போயிட்டிங்களே சின்னானானா….! ஹஹா… தொழிலாளர்கள் அவர்கள் பிரச்சனைகளுக்காக முதலில் கோரிக்கை மனுவை தான் அவர்களின் நிர்வாகத்திடம் கொடுப்பார்கள் என்றால் …. அவர்களுக்காக ஆதரவு தந்து பேசிகிட்டு இருக்கும் நான் அது போன்றே அமேசான் நிர்வாகத்திடம் அதன் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோரிக்கையை முதலில் எழுப்ப வேண்டும் தானே? இந்த அடிபடை கூட தெரியாமல் நீங்கள் என்ன மாதரியான கம்ம்யுநிடு? மிக்சர் தின்னும் கம்ம்யுநிடு! பொறிஉருண்டை தின்னும் கம்ம்யுநிடு! தொழிலாளர் பிரச்சனைகளை அணுக தெரியாத நீர் அப்ப போலி கம்ம்யுநிடு தானே?

         • இப்ப உண்மையிலேயே பல்லை காட்டிணீங்களா? இல்லை உரிய பதில் இல்லாமல் பல்லை நெறுமிணீங்களா?

          //பிரச்சனைகளுக்காக முதலில் கோரிக்கை மனுவை தான் அவர்களின் நிர்வாகத்திடம் கொடுப்பார்கள் என்றால்..//

          பதிவை படிக்கவில்லையா அல்லது அமேசான் பாசம் கண்ணை மறைக்கிறதா?? உங்களுக்காக நானே தூக்கி போட்டு தொலைக்கிறேன் –

          பதிவில் இருந்து –

          ‘இப்போது உயர்த்துவார்கள், பிறகு உயர்த்துவார்கள் என்று நம்பி காத்திருந்ததுதான் மிச்சம். ஊதிய உயர்வு கேட்கும் ஒவ்வொரு முறையும் ஏதேனும் சாக்கு சொல்லி தட்டிக்கழிப்பதையே நிர்வாகிகள் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்’
          ‘கூடுதல் பணி நேரத்துக்கு ஏற்ப கூடுதல் ஊதியம் என்பதையும் அமோசான் பல இடங்களில் சரியாக அமல்படுத்தவில்லை’

          இறுதியில் பதிவர் கூட’
          ‘..எந்த நிறுவனமும் உணரப்போவதில்லை. ஆனாலும், அதை உணர்த்தவேண்டியது நம் கடமை. வேலைநிறுத்தப் போராட்டத்தால் தான் தொழிலாளர்களுடைய உரிமையை நிலைநாட்ட முடியும்’

          என இறுதிஆயுதமாக வேலைநிறுத்தம் செய்து கொண்டிருக்கும் போது,
          கோரிக்கை வைக்கும் அளவுகூட அவகாசம் கொடுக்காமல் துரத்தும் நிர்வாகத்திடம்

          இங்கே ஒருவர், இல்லை இல்லை தொழிலாளர் முறைப்படி மனு தான் கொடுத்து கொண்டிருப்பர், அதனால் நாமும் கடிதம் தான் கொடுக்க வேண்டும் என நகைச்சுவை செய்கிறார். அதை சுட்டிகாட்டினால் அதற்குள்ளும் மிச்சர்தின்னும் கம்யூனிஸ்ட் என ஆசைக்கு வசவு.

          போடும் பின்னூட்டம் பிரச்சினை சார்ந்து உளபூர்வமாக சிந்தித்து போடவேண்டும் அல்லது கார்பரேட்டுகளுக்கு சாமரம் வீசுவது என்றால் இந்தளவு வெளிப்படையாக பேசக்கூடாது. இனிமேலாச்சும் பாத்து பேசுங்க.

          • அட அறிவு கொழுந்தே சின்னா , என்னுடைய பின்னுட்டம் ஒன்றில் இந்திய அமேசான் தொழிலாளர்களை பற்றி இன்னும் குறிப்பாக சென்னை சார்ந்த அமேசான் தொழிலாளர்களை பற்றி எழுதி இருக்கேன் என்று தெரிந்தும் தெரியாத மாதரியே நீர் நடிப்பது தகுமா?

           மேலும் அமேசானுக்கு ஆயிரம் பேர் இன்னிக்கி ராத்திரியோட ராத்திரியா இந்த விசயத்தில் மெயில் அனுப்பி பாருங்க! “””அமேசான்இந்திய நிர்வாகம் ஆடிபோயிடுவாணுங்க….”””‘இந்த விசயத்தில் சமுக வளைய தளங்கள் மூலமாக அதிகம் நாம் அமேசானை மிரட்டி அதன் தொழிலாளர்களுக்கு சாதகமாக நாம் சாதிக்கலாம்… முடியும்!

           இதுவெல்லாம் உமது கண்களுக்கும் மூளைக்கும் உரைக்கவே இல்லையா? இல்ல எல்லமே நடிப்பா? இந்த மாதரியான திரித்தல் வேலைகளை செய்வதற்கு பதிலாக ரெபெக்கா மேரி போன்றே நீரும் பதில் அளிக்காமல் மவுனம் காப்பதே சிறப்பு என்று நினகின்ன்றேன்…..சரி சரி ஏதாவது ஒப்பேத்த எழுதிகிட்டு இருமையா நீர்!

          • ஏன் பதற்றம் நண்பரே,
           அமேசான் என்பது என்ன ??ஒரு பன்னாட்டு கம்பனி, அதில் ஒரு நாட்டின் ‘அயல் பணி’ தொழிலாளர்களே அதுவும் (‘முதலாம்’ உலக நாட்டு) சந்திக்கும் அநீதி குறித்து வேலை நிறுத்தம் செய்கிறார்கள், என்றால் இந்தியாவில் அந்த கம்பனி என்ன செய்யும்?? இங்கு ஏன் ஒரு சத்தமும் இல்லை?? ஏனென்றால் சத்தம் போடாமல் இருக்கவே பழக்க பட்டவர்கள். இதில் துணிச்சல் வந்து ‘மனு’ கொடுத்தாலும் ஜேர்மன், இத்தாலி தொழிலாளர்களுக்கே செவிசாய்க்காத அமேசான் என அக்கறை ‘செலுத்தும்’ ‘செலுத்த வேண்டும்’ என சதிராடும் குமாருக்கும் நன்கு தெரியும், தெரிந்தும் கார்பரேட் பாசமோ என்னவோ அவரை ஈமெயிலே அனுப்ப சொல்கிறது.

           இன்னும் விளக்கமாக,
           வழமையாக உரிய சம்பளம், ஓய்வுகள் என பெறக்கூடிய நிரந்தர தொழிலாளர்கள் இல்லாமல் அவுட்சோர்சிங் மூலம் எந்த நேரமும் வீட்டுக்கு அனுப்ப பட கூடிய தொழிலாளர்கள் அதுவும் ஒப்பீட்டளவில் உயர் ஊதியம் பெறும் ஜேர்மன் இத்தாலி போன்ற நாட்டு தொளிலலர்கள்ளே வேலைநிறுத்தம் செய்கிறார்கள். இதில் இந்தியாவில் தொழிலாளர்கள் நிலை எப்படி இருக்கும், அதுவும் அடிமையாகவே பழக்கப்பட்ட நாடு.

           அப்படியே இந்திய தொழிலாளர்கள் ‘ஹசாரே குமார்’ சஜெஸ்ட் பண்ணும் ‘கருணை மனு’ கொடுத்தாலும் அதை பீயை துடைத்து விட்டு போடும் அமேசான் நிர்வாகம் என்பனவும் ஆத்திரக்கொழு ந்து தங்களுக்கு நன்கு தெரியும். அப்படி இருந்தும் நான் முன்னைய பதில்களில் குறிப்பட்ட இப்படியான சொத்தை ஈமயில் அனுப்புவது சமூக வலைதளத்தில் போராடுவது போன்றவற்றை அவசர அவசரமாக சஜெஸ்ட் பண்ணுவது ஏன்? விளைவு தெரிந்தும் நேரடியாக புறக்கணிப்பு செய்யலாம் தானே? அமேசானை பாவிக்காதீர்கள் என சொல்லுவதட்ட்கு எது உங்களை தடுக்கிறது? அவ்வாறு புறக்கணிப்பு செய்வது ஏற்கனவே வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் பக்க பலமாக இருக்குமே? இந்தியாவில் ஈமயில் அனுப்பி கேட்கிறார்களாம் என்றால் அவர்கள் சிரிக்க மாட்டார்கள்?? அல்லது குமாருக்கு இந்திய தொழிலாளர்கள் மட்டும் தான் தொழிலாளர்களா???

           ரேபெக்கவை ஏன் இங்கு தேவையில்லாமல் இழுக்கிறீர்கள். நீங்களே இழுத்ததால் சொல்கிறேன், நான் கூட அவர் ‘தாரதரம்’ ‘வருவான் போவான்’ என எதோ மேட்டிமைதனத்தில் பதிலளிக்க மறுக்கிறார் என எண்ணிவிட்டேன். இந்த
           பதில்களில் புரிகிறது ‘தராதரம்’ என்பது அறியாமல் கூறியிருந்தால் திருத்துவது சரியான யோசனையை ஏற்று கொள்வது, ஆனால் தங்களிடம் இருப்பதோ அமேசானுக்கு எந்த பாதிப்பும் வராமல் ஈமெயில் அனுப்ப சொல்லும் அதே காந்தி பாணி ‘முதலாளிகளுக்கு’ பாதிக்காமல் போராடும் ‘அரிதாரமே’!

         • நண்பர் சின்னா , நண்பர் குமாரின் யோசனை படி மின்னஞ்சல் செய்தால் ஒரு சிறிய பொறியை கூட உண்டாக்க முடியாதா என்ன . இன்றைய இணைய உலகில் சிறிய பொறியையும் காட்டு தீ போல் பரவ விடமுடியுமே. இதில் தவறு ஏதும் இல்லை என்றே நினைக்கிறேன்.

 4. பழைய கட்டுரை .

  புதிய குற்றசாட்டுகள் இங்கே …

  கழிவறை செல்ல கூடாது என்று டயப்பர் போட்டு வேலை செய்யும் படி நிர்பந்த படுத்தப்படுகிறார்கள்

  அடுத்து கைகளில் கண்காணிப்பு கருவி பொருத்தி , கை அசைவை அளக்க போகிறார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க