பற்றி பரவும் போராட்டத் தீ பாசிஸ்டுகளின் கோட்டையை சுட்டெறிக்கட்டும்!

எந்தவித சமரசமுமின்றி பாசிச கும்பலை நேருக்கு நேர் எதிர்த்து நிற்கும் இத்தகைய மக்கள் போராட்டங்களே பாசிச எதிப்பில் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்கின்றன.

ந்துராஷ்டிரக் கொடுங்கனவுடன் நம் நாட்டை 12 ஆண்டுகாலமாக ஆட்சி செய்து வருகிறது பாசிச மோடி அரசு. பாசிச வழிமுறைகள் மூலம் மாநிலத் தேர்தல்களில் பெறும் வெற்றிகளை ஊதிப்பெருக்கி, மக்களுக்குப் பீதியூட்ட இக்கும்பல் முயல்கிறது. ஆனால், களத்தில் நாளுக்குநாள் தீவிரமடைந்துவரும் மக்கள் போராட்டங்கள் இந்த பாசிச மோடி அரசுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

குறிப்பாக, கடந்த மே 3 அன்று நடந்த நீட் தேர்வில் நடந்த மோசடிகள் அம்பலமானதையடுத்து, தேசியத் தேர்வு முகமை (NTA) அத்தேர்வை இரத்துச் செய்து மாற்றுத் தேதியை அறிவித்தது. இத்தேர்வு குளறுபடிகளால் ஏற்பட்ட மன உளைச்சலால் ஐந்து மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட அவலம், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், மே மாதத்தில் வெளியான சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகளின் குளறுபடிகளும் மாணவர்களின் கோபத்தை அதிகரித்துள்ளன.

இதனையடுத்து, கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென சி.ஜே.பி (CJP – Cockroach Janata Party) முன்னெடுத்தப் பிரச்சாரம் இளைஞர்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றது. இக்கோரிக்கையை முன்வைத்து ஜூன் 6 அன்று ஜந்தர் மந்தரில் நடத்தப்பட்ட போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் திரண்டு மோடி அரசிற்கு கிலியூட்டினர்.

மறுபுறம், குறைந்தபட்ச ஊதிய உயர்வு, பாதுகாப்பான பணிச்சூழல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தரப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஒடுக்குமுறைகளை முறியடித்துப் போராடும் இத்தொழிலாளர்களின் போராட்டத்திற்கு முன்னால், அம்மாநில பா.ஜ.க அரசுகள் அடிபணிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டலுக்குப் அடிபணிந்து அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு இந்தியச் சந்தையைத் திறந்துவிட முயலும் மோடி அரசுக்கு எதிராக விவசாயச் சங்கங்கள் வீரியத்துடன் போராடி வருகின்றன. அதானி, வேதாந்தா போன்ற கார்ப்பரேட் கும்பலுக்காகவும், அமெரிக்க ஏகபோக நிறுவனங்களுக்காகவும் இந்தியாவின் கனிம வளங்களைச் சூறையாடத் துடிக்கும் பாசிச மோடி அரசுக்கு எதிராக பழங்குடியின மற்றும் பூர்வகுடி மக்கள் உறுதியுடன் களம் கண்டுள்ளனர்; மணிப்பூர், சத்தீஸ்கர், ஒடிசா, தமிழ்நாடு என பல மாநிலங்களில் இப்போராட்டங்கள் நடந்து வருகின்றன.

எந்தவித சமரசமுமின்றி பாசிச கும்பலை நேருக்கு நேர் எதிர்த்து நிற்கும் இத்தகைய மக்கள் போராட்டங்களே பாசிச எதிப்பில் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்கின்றன. மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என போராடிவரும் பல வர்க்கங்களை சேர்ந்த மக்களை பாசிச எதிர்ப்பில் ஒன்றிணைத்து, பாசிச கும்பலை வீழ்த்துவதை நோக்கி முன்னேறுவது புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – ஜூன் 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க