தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கடந்த ஜூலை 20 அன்று டெல்லியில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் நாடாளுமன்ற முற்றுகைப் பேரணி நடத்தினர். அமைதி வழியில் போராடிய இம்மாணவர்கள் மீது போலீசு மற்றும் துணை ராணுவப் படை மூலம் பாசிச மோடி அரசு மிருகத்தனமான தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டது.
இதில் பல நூற்றுக்கணக்கான மாணவர்களின் கை, கால்கள், தலை, கழுத்து உடைக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் காஷ்மீர், காசா போன்ற இடங்களில் மக்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்படும் பெல்லட் துப்பாக்கியைக் கொண்டு மாணவர்கள் மீது மோடி அரசு தாக்குதல் நடத்தியிருப்பது ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது.
ஹரியானாவின் குருகிராமைச் சேர்ந்த 25 வயதான ஷேக் இர்ஷாத் என்ற இளைஞர் நாடாளுமன்ற முற்றுகைப் பேரணியில் தனது நண்பருடன் பங்கேற்றுள்ளார். அப்போது கன்னாட் பிளேஸில் உள்ள பாலிகா பஜார் அருகே சுமார் 40-50 மீட்டர் தொலைவில் இருந்த அதிவிரைவுப் படை போலீசு ஒருவன் பெல்லட் துப்பாக்கியால் சுட்டுள்ளான். அதில் இர்ஷாத்தின் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் 30 முதல் 40 பெல்லட் குண்டுகள் துளைத்து பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
உடனடியாக இர்ஷாத்தை அவரது நண்பர் டெல்லியில் உள்ள லேடி ஹார்டிங்கே மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு இர்ஷாத்திற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், அவரது தோள்பட்டைக்கு கீழும் தொண்டைப் பகுதியிலும் மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
உடலில் உள்ள குண்டுகளை அகற்றுவதற்காக ஜூலை 21 அன்று இர்ஷாத்திற்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதற்கு முன்பாக, கண்ணிற்குக் கீழே உள்ள காயத்தால் இர்ஷாத்திற்கு பார்வையிழப்பு ஏற்படக்கூடும் என்றும் அதற்கு மருத்துவர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு இர்ஷாத்தின் நண்பரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.
மூன்று மணி நேர அறுவைச் சிகிச்சைக்கு பிறகு, “கண்களுக்குக் கீழே இருந்த பெல்லட் குண்டுகள் அகற்றப்பட்டன. ஆனால், அவரது கழுத்தில் உள்ள ஒரு பெல்லட் குண்டு இரத்த நாளத்திற்கு அருகில் இருப்பதால் அதை அகற்ற முடியவில்லை. அதற்கு அவருக்கு இன்னொரு அறுவை சிகிச்சை தேவைப்படலாம்” என்று மருத்துவமனைத் தரப்பு தெரிவித்துள்ளது.
படிக்க: தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரும் சி.ஜே.பி. போராட்டம் வெல்லட்டும்! | ம.அ.க.
இர்ஷாத்தை போலவே, பஞ்சாப்பை சேர்ந்த 19 வயதான டெல்லி பல்கலைக்கழக மாணவர் சாஹில் லோச்சாப் என்பவரும் பெல்லட் குண்டுகளால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இவரது முகம், கழுத்து, மார்பு, தோள்பட்டை மற்றும் வலது நுரையீரல் ஆகிய பகுதிகளில் பல பெல்லட் குண்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன. இவரது வலது கண்ணில் கருவிழி துளை ஏற்பட்டுள்ளதால் அக்கண்ணில் பார்வை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதைப்போல், “அவுட்லுக்” (Outlook) பத்திரிகையின் ஊடகவியலாளரும் பெல்லட் குண்டால் தாக்கப்பட்டுள்ளார்.
பெல்லட் துப்பாக்கிகள் என்பன தோல்களுக்குள் ஆழமாக ஊடுருவி இரத்த நாளங்களை பாதிக்கக் கூடிய, கண்பார்வையை பறிக்கக் கூடிய கொடூர ஆயுதமாகும். இதனைக் கொண்டே காசாவில் பாலஸ்தீன குழந்தைகள், மக்களை இனவெறி இஸ்ரேல் அரசு படுகொலை செய்து வருகிறது.
2016-இல் காஷ்மீர் மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்காக பாசிச மோடி அரசு அம்மக்கள் மீது நடத்திய பெல்லட் துப்பாக்கிச்சூட்டில் ஏராளமான மக்கள் பகுதியளவும், முழுமையாகவும் கண்பார்வையை இழந்தனர். அதைப்போல், மணிப்பூரில் குக்கி பழங்குடியின மக்கள் மீதான இன அழிப்பின் போதும் பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன. 2024-ஆம் ஆண்டு டெல்லிக்கு பேரணியாகச் சென்ற விவசாயிகளை தடுப்பதற்காக, ஹரியானாவின் ஷம்பு – கானெளரி எல்லையில் பெல்லட் துப்பாக்கியைப் பயன்படுத்திக் கொடூரத் தாக்குதல் நடத்தியது பாசிச பா.ஜ.க. அரசு. இதன் நீட்சியாகத்தான் டெல்லியில் போராடிய மாணவர்கள் மீதும் பாசிச மோடி அரசு பெல்லட் துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தியுள்ளது.
தவிர, போராடிய மாணவர்கள் மீது மின்சார அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய ஷாக் லத்திகளை கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) கலவரத் தடுப்புப் பிரிவான அதிவிரைவுப் படையினர் பெண்களை ஷாக் லத்திகளால் தாக்குகின்ற காணொளிகள் வெளியாகி பாசிச மோடி அரசின் குரூரத்தை வெளிப்படுத்தின. இத்தாக்குதலில் பலத்த காயமடைந்த 21 வயதான சாட்சி என்ற பெண், ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இக்கொடூரத் தாக்குதல்களானது போராடும் மாணவர்களை ஒடுக்கி, அச்சுறுத்தி அவர்களை போராட்டக் களத்தை விட்டு விரட்டியடிப்பதற்காகவே திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டுள்ளன. ஆனால், மண்டை உடைந்து இரத்தம் கொட்டிய போதும் மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேறியதும், கொலைகார போலீசு – இராணுவப் படையை எதிர்த்து நின்றதும் மாணவர்களின் தீரத்தையும் கோரிக்கைகள் மீதான அவர்களின் உறுதிப்பாட்டையும் காட்டுகிறது. மாணவர்களின் இந்த உறுதிப்பாடானது தங்களுக்கு எதிராக அநீதியாக துப்பாக்கி ஏந்திய பாசிச மோடி அரசை வீழ்த்துவதை நோக்கி முன்னேறும்!
![]()
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











