வெப்ப அலையில் கருகும் இந்திய தொழிலாளர் வர்க்கம்

வெளிப்புறத்தில் கடின உழைப்பைச் செலுத்தும் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறை சார்ந்த அமைப்பாக்கப்படாத தொழிலாளர்களை இந்த வெப்ப அலை கடுமையான வாழ்வாதார நெருக்கடிக்குத் தள்ளுகிறது என்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஜெர்மனியின் பெர்லின் நகரைச் சேர்ந்த அடெல்ஃபி (Adelphi) அமைப்பு, 2026-ஆம் ஆண்டில் “வெப்பம், ஆரோக்கியம் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு: ஒரு செயல்பாட்டிற்கான அழைப்பு” எனும் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் வெப்பநிலையானது தொழிலாளர்களின் வருமானத்தைக் குறைத்து, மருத்துவச் செலவுகளையும் குடும்பத்தின் பொருளாதாரச் சுமையையும் தீவிரமாக உயர்த்துகிறது என அவ்வறிக்கை எச்சரிக்கிறது.

இந்தியா, வங்கதேசம், பிரேசில், பிரான்ஸ், இந்தோனேசியா, இத்தாலி, நைஜீரியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய எட்டு நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், கடும் வெப்பத்தால் உழைப்பையும் வருமானத்தையும் இழந்து மிக மோசமாகப் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், காலநிலை மாற்றத்தால் வெப்பம் தீவிரமாகி வருவதனால், இந்த ஆண்டு இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிக மோசமான வெப்ப அலைகளை மேற்கண்ட நாடுகள் எதிர்கொண்டுள்ளன.

குறிப்பாக, வெளிப்புறத்தில் கடின உழைப்பைச் செலுத்தும் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறை சார்ந்த அமைப்பாக்கப்படாத தொழிலாளர்களை இந்த வெப்ப அலை கடுமையான வாழ்வாதார நெருக்கடிக்குத் தள்ளுகிறது என்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

கடுமையான வெப்பம் காரணமாக இந்தியா, வங்கதேசம், இந்தோனேசியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் உள்ள விவசாயம் மற்றும் வெளிப்புற கட்டுமானத் துறை தொழிலாளர்கள் ஆண்டுதோறும் சராசரியாக 19 வேலை நாட்களுக்கும் மேலாக இழக்க நேரிடும் என அறிக்கை எச்சரிக்கிறது. திறந்தவெளியிலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் வேலை செய்யும் அமைப்பாக்கப்படாத தினக்கூலித் தொழிலாளர்கள், வெப்பத்தின் தாக்கம் தாங்காமல் அடிக்கடி நீண்ட நேர இடைவேளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். இதனால் அவர்களின் அன்றாட வேலை நேரம் குறைவதோடு, பல நாட்களில் வேலைக்கே செல்ல முடியாத சூழலும் உருவாகிறது. நிலையான மாத ஊதியம் இல்லாத இத்தகைய தினக்கூலி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு, வேலை நாட்கள் குறைவது என்பது அவர்களின் சொற்ப வருமானத்தில் மிகப்பெரிய அடியை ஏற்படுத்துகிறது.


படிக்க: 46° செல்சியஸ் வெப்ப அலை வீச்சினால் கருகும் ‘கிக்’ தொழிலாளர்கள்


பொருளாதார நெருக்கடி ஒருபுறமிருக்க, கடுமையான வெப்ப அலைகளால் அமைப்பாக்கப்படாத தொழிலாளர்கள் சந்திக்கும் உடல்நலப் பாதிப்புகள் மிகவும் கொடூரமானவை. தீவிர நீரிழப்பு, உடல் சோர்வு, பக்கவாதம், சிறுநீரகக் கோளாறுகள், இதயம் மற்றும் இரத்த நாளப் பிரச்சினைகள், தோல் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களுக்கு இவர்கள் எளிதில் ஆளாகின்றனர். வெப்ப நோய்களால் பாதிக்கப்படும் ஒரு சாதாரணத் தொழிலாளி, மீண்டும் உடல்தேறி வேலைக்குத் திரும்ப குறைந்தது இரண்டு வாரங்களுக்கும் மேலாகிறது. இந்தச் சிகிச்சை காலத்தில் வருமானமும் இல்லாமல், மறுபுறம் மருத்துவச் செலவுகளும் அளவுக்கு அதிகமாக உயர்ந்து, தொழிலாளர்களின் குடும்பங்களை மீள முடியாத கடன் வலையில் தள்ளுகிறது என்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அதேசமயம், குறைந்த வருமானம் ஈட்டும் எளிய குடும்பங்கள் கடும் வெப்பநிலைக்கு ஏற்பத் தங்களைத் தகவமைத்துக் கொள்வது பெரும் சவாலாக உள்ளது. வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்ப வீடுகளைக் குளிர்விக்கும் வசதிகளோ அல்லது குளிரூட்டிகளோ (AC / Coolers) அமைப்பது எளிய தொழிலாளர்களின் வருமானத்திற்குச் சாத்தியமற்ற ஒன்றாகும். மின்சாரத்தைப் பயன்படுத்தினாலும், குளிரூட்டும் சாதனங்கள் மின்கட்டணத்தை சுமார் 36 சதவிகிதம் வரை அதிகரிக்கின்றன. இத்தகைய நிதிச்சுமையை அடெல்ஃபி அறிக்கை “வெப்ப வறுமை” (Heat Poverty) எனக் குறிப்பிடுகிறது. வருமான இழப்பு மற்றும் மருத்துவச் செலவுகள் என இருமுனைத் தாக்குதலால், அமைப்பாக்கப்படாத தொழிலாளர்களின் குடும்பங்கள் தீவிர நிதி நெருக்கடிக்கு ஆளாகின்றன.

இனிவரும் காலங்களில் தீவிரமடையக்கூடும் இந்த வெப்ப அலைகளில் இருந்து உழைக்கும் மக்களைக் காப்பாற்ற அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்று அறிக்கை வலியுறுத்துகிறது. காலநிலை மாற்றம், பொதுச்சுகாதாரம் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்துக் கொள்கைகளை உருவாக்குதல்; கடும் வெப்பத்தால் வருமானம் இழக்கும் அமைப்பாக்கப்படாத தொழிலாளர்களுக்குச் சிறப்புச் சமூகப் பாதுகாப்பு நிதியும் நிதி இழப்பீடுகளும் வழங்குதல்; வெப்ப நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையையும் காப்பீட்டுத் திட்ட விரிவாக்கத்தையும் உறுதி செய்தல்; சுட்டெரிக்கும் வெயில் காலங்களில் பணிநேரங்களை மாற்றி அமைப்பதுடன் வேலை தளங்களில் நிழற்கூடங்கள் மற்றும் குடிநீர் வசதிகளைத் தொழிலாளர் சட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்துதல்; மின்சாரக் கட்டணச் சுமையைக் குறைக்க மானிய விலையிலான குளிரூட்டும் சாதனங்கள் மற்றும் வெப்பத்தைக் குறைக்கும் கூரை முறைகளை (Cool Roofs) எளிய மக்களுக்கு அமைத்துத் தருதல் ஆகிய தீர்வுகளை இவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால், இந்தியாவில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாசிச மோடி அரசு, காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான குறைந்தபட்ச நடவடிக்கையை கூட எடுக்காமல் அவர்களை படுகொலை செய்து வருகிறது. கார்ப்பரேட் நலனை மட்டுமே நோக்கமாகக் கொண்ட இத்தொழிலாளர் விரோத மோடி அரசை வீழ்த்தாமல் இந்திய உழைக்கும் மக்களுக்கு வாழ்வில்லை என்பதையே இது நிரூபிக்கிறது. ஆகவே, காலநிலை மாற்ற பாதிப்புகளிலிருந்து தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான திட்டத்தை முன்வைத்து மோடி அரசிற்கு எதிராக போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும்.


அருவி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க