
22.07.2026
தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரும்
கரப்பான் பூச்சி கட்சியினரின் போராட்டம் வெல்லட்டும்!
நாடு முழுவதும் பாசிச மோடி அரசுக்கு எதிரான
மாணவர் போராட்டங்கள் பற்றிப் பரவட்டும்!
பத்திரிகைச் செய்தி
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு காரணமான ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சியினர் அறிவித்த போராட்டமானது பாசிச மோடி அரசால் திட்டமிட்டு ரத்தக் களரிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
அமைதியாகப் போராடிய பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகை கொண்டு தாக்குதல்களும் தடியடிகளும் நடத்தப்பட்டுள்ளன. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். பல நூறு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
நீட் தேர்வு என்பது மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைப்பதற்கானது; அதனை ரத்து செய்ய வேண்டும் என்பது தமிழ்நாட்டின் ஒருமித்த கருத்தாகும். அதற்காக தமிழ்நாடு தொடர்ந்து போராடி உள்ளது.
என்றாலும் விஜய் ஆட்சிக்கு வந்த பின்னர் நீட் தேர்விற்கு எதிராக போராடியவர்கள் மீது தொடர்ந்து போலீசு கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த ஜூன் மாதம் நீட் தேர்வுக்கு எதிராக போராடிய எஸ்.எப்.ஐ. மாணவர்கள் மீது விஜய் அரசின் போலீசு கடுமையான தாக்குதல் தொடுத்தது. அதனால் இரண்டு மாணவர்களின் கைகள் உடைக்கப்பட்டன.
அறவழியில் போராடிய மாணவர்களுக்கு எதிராக துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் வைத்திருக்கும் பாசிச மோடி அரசு வீழ்ந்து போவதற்கான தொடக்கத்தை இப்போராட்டங்கள் அறிவித்து இருக்கின்றன என்றால் அது மிகையல்ல.
நேற்றைய நாள் இரவு கூட தில்லி மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராடிய மாணவர்கள் மீது கடும் தாக்குதலை நடத்தியுள்ளது தமிழ்நாடு போலீசு. பி.ஜே.பி-யை கொள்கை எதிரி என்று அறிவித்துவிட்டு, பாசிச பி.ஜே.பி-க்கு எதிரான போராட்டங்களை கடுமையாக ஒடுக்குவது விஜய் தமிழ்நாட்டுக்கு செய்யும் துரோகமாகும்.
மேலும், பாசிச மோடி அரசின் மாணவர்கள் மீதான தாக்குதலை இதுவரை தமிழ்நாடு அரசு கண்டிக்கவில்லை என்பது இதுவரை தமிழ்நாடு மேற்கொண்ட பின்பற்றி வந்த ஜனநாயக மரபுகளுக்கு எதிரான செயலாகும்.
தில்லி மாணவர் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்ல நாடு முழுவதும் பற்றி படர வேண்டும். எதிர்க்கட்சிகள் மற்றும் இயக்கங்கள் நாடு முழுவதும் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவான போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





