ஆகாஷ் கொட்டடிப் படுகொலையின் 100-வது நாள்: புரட்சிகர அமைப்புகளின் வலுவானதொரு கண்டனம்!

தலித் மக்களிடமும், முன்னேறிய உற்பத்தி சக்திகளிடமும் ஏற்பட்டிருக்கும் சமூக எழுச்சியின் ஓர் அங்கமாக ஆகாஷ் அமைந்துள்ளார். உள்ளூரில் காணும் அநீதிகளைத் தட்டிக் கேட்பது, ஆதிக்கச் சாதிவெறியர்களுடன் துணிந்து நேருக்கு நேர் மோதுவது என அவர் செயல்பட்டுள்ளார். சாதி கடந்து காதலித்த தலித் இளைஞர் கவின் ஒரு பக்கம் என்றால், சாதிவெறியர்களுக்கு எதிராக களத்தில் மோதிய ஆகாஷ் இன்னொரு பக்கம்.

டந்த தி.மு.க. ஆட்சியில் மார்ச் 8, 2026 அன்று மானாமதுரை போலீசால் ஆகாஷ் டெலிசன் என்ற தலித் இளைஞர் கொட்டடிப் படுகொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய 16 போலீசு மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்யக் கோரி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்களும் பொதுமக்களும் 100 நாட்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில் தொடர் போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாட்டில், கொல்லப்பட்ட ஒருவரின் உடலை வாங்க மறுத்து 100 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடந்தது என்றால், அது மானாமதுரை தலித் இளைஞர் ஆகாஷ் டெலிசனின் மரணத்திற்கு நீதி கேட்ட போராட்டம்தான்.

இந்நிலையில், ஆகாஷ் படுகொலை செய்யப்பட்ட 100-வது நாளான ஜூன் 15 அன்று, 16 போலீசு குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, “மக்கள் அதிகாரக் கழகம்” சார்பாக தமிழ்நாடு முழுவதுமுள்ள ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து, 32 மாவட்டங்களின் ஆட்சியர் அலுவலகங்களில் மனு அளிக்கப்பட்டது. இப்பிரச்சினையைத் தமிழ்நாடு முழுவதுமுள்ள மக்களிடம் கொண்டு சேர்ப்பதையும், ஆகாஷ் படுகொலைக்கு நீதி கேட்டு மக்களைக் குரல் கொடுக்க வைப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த மனு கொடுக்கும் இயக்கம் முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் அதிகாரக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் தோழர்களும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஜனநாயக கட்சிகள், அமைப்புகளின் தோழர்களும் இந்த மனு அளிக்கும் இயக்கத்தில் பங்கேற்றனர். தோழர் அரங்க குணசேகரன் தலைமையிலான தமிழக மக்கள் புரட்சிக் கழகத் தோழர்கள், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு அளித்தனர்.

இந்த மனு அளிக்கும் இயக்கம், தமிழ்நாடு அரசுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் ஒரு வலுவான கண்டனத்தைப் பதிவு செய்வதாக அமைந்தது. பெரும்பான்மையான ஊடகங்கள் ஆகாஷ் கொட்டடிப் படுகொலை குறித்துக் கள்ளமௌனம் சாதித்து வந்த நிலையில், இவ்வியக்கத்தின் மூலம் சமூக ஊடகங்கள் வாயிலாக இலட்சக்கணக்கான மக்களிடம் ஆகாஷிற்கு நேர்ந்த அநீதி குறித்து கொண்டு சேர்க்கப்பட்டது.

இதற்கிடையே, மக்களின் போராட்டத்தைக் கண்டு அஞ்சிய தற்போதைய த.வெ.க., நீதிமன்றத்தின் மூலம் ஆகாஷின் உடலை அடக்கம் செய்வதற்கான உத்தரவை பெற்றது. தமிழ்நாடு போலீசு, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி ஆகாஷின் உடலை அடாவடித்தனமாக எரித்தது.

ஆகாஷ் படுகொலை என்பது போலீசு கொட்டடிக் கொலை என்பதுடன், அது அப்பட்டமான ஆதிக்கச் சாதிவெறியோடு நடத்தப்பட்ட படுகொலையாகும். தென் மாவட்டங்களில் அரங்கேறி வரும் சாதிவெறியாட்டங்கள் மற்றும் ஆதிக்கச் சாதி வன்முறைகளின் தொடர்ச்சியாகவே ஆகாஷின் கொலையை நாம் பார்க்க வேண்டும்.

தலித் இளைஞர்கள் கல்வி கற்று உயர்வதற்கும், பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கும் எதிராக உள்ளூர் ஆதிக்க சக்திகளால் தங்களது பழைய ஆதிக்க நிலையைத் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. இந்த ஆதிக்கத்தின் மறுவடிவமாகவே இத்தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

தலித் மக்களிடமும், முன்னேறிய உற்பத்தி சக்திகளிடமும் ஏற்பட்டிருக்கும் சமூக எழுச்சியின் ஓர் அங்கமாக ஆகாஷ் அமைந்துள்ளார். உள்ளூரில் காணும் அநீதிகளைத் தட்டிக் கேட்பது, ஆதிக்கச் சாதிவெறியர்களுடன் துணிந்து நேருக்கு நேர் மோதுவது என அவர் செயல்பட்டுள்ளார். சாதி கடந்து காதலித்த தலித் இளைஞர் கவின் ஒரு பக்கம் என்றால், சாதிவெறியர்களுக்கு எதிராக களத்தில் மோதிய ஆகாஷ் இன்னொரு பக்கம்.

இவை, தன்மானம், சுதந்திரம், சமத்துவத்தை விரும்புகின்ற தலித் இளைஞர்களின் எழுச்சிக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளாகும். சமூகத்தில் ஏற்பட்டுள்ள பண்பாட்டு எழுச்சிக்கு எதிராக ஆதிக்கச் சாதிவெறியர்களால் ஆணவப் படுகொலைகள் நடத்தப்படுவதைப் போல, ஜனநாயகம் மற்றும் சமத்துவத்திற்கான சமூக எழுச்சிக்கு எதிராக இந்தச் சாதிவெறியாட்டங்களும் போலீசு நிலையப் படுகொலைகளும் நடத்தப்படுகின்றன.

அதைப்போல், ஜெயராஜ் – பெனிக்ஸ் மற்றும் அஜித்குமார் ஆகியோரைக் கொன்ற குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதற்கு முதன்மையான காரணம் மக்கள் போராட்டங்களே ஆகும். ஆனால், ஆகாஷ் கொலை நடந்த போது அதற்கான நீதி கேட்டுப் பெருமளவில் மக்கள் போராட்டங்கள் வெடிக்காததே, குற்றவாளிகளான 16 போலீசுகாரர்கள் இன்னும் கைது செய்யப்படாததற்குக் காரணமாகும்.

எனவே, போலீசுக்கு வழங்கும் நிதியையும் அதிகாரத்தையும் குறைக்க வேண்டும்; சாதிவெறி கொட்டடிக் கொலைகளில் ஈடுபடும் போலீசு மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட வேண்டும்; சாதிவெறி கொட்டடிக் கொலைகள் நடக்கும் போலீசு நிலையங்களில் பணிபுரியும் போலீகாரர்கள் அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட வேண்டும்; ஆதிக்கச் சாதிவெறி சங்கங்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க., இந்து முன்னணி சங்கப் பரிவார அமைப்புகள் தடை செய்யப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மக்களை திரட்டி, ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து களமிறங்கும் போதுதான் கொட்டடிக் கொலைகளை தடுத்து நிறுத்தி, ஜனநாயகத்திற்கான கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும்.


ஆசிரியர் குழு, புதிய ஜனநாயகம்.

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க