சிவகங்கை போலீசு முதல் திருவள்ளூர் குழந்தை வரை: தீவிரமடையும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்!

விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு பால் குடிக்கும் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரை பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஜூன் 14-ஆம் தேதி அன்று மட்டும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஐந்து சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

0

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப்படை பெண் போலீசு ஒருவர் கடந்த ஜூன் 12 அன்று இரவு தனது நண்பர் உட்பட மூன்று பேரால் சிவகங்கை அருகே உள்ள காட்டுப்பகுதியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் காமக்கொடூரன்களிடமிருந்து தப்பித்த பெண் போலீசு, போலீசு கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து, சிவகங்கை நகர போலீசால் அவர் மீட்கப்பட்டார். கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மூன்று கொடூரர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதாகக் காட்டிக்கொண்ட விஜய், மக்களின் எதிர்ப்பை அறுவடை செய்துகொண்டு தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார். ஆனால், விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு பால் குடிக்கும் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரை பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஜூன் 14-ஆம் தேதி அன்று மட்டும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஐந்து சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அவற்றில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் மூன்று வயது குழந்தையை வடமாநில இளைஞன் மஞ்சி என்பவன் பாலியல் வன்கொடுமை செய்து முட்புதரில் வீசியுள்ளான். நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு மீட்கப்பட்ட குழந்தை உயிருக்குப் போராடும் நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. ஆனால், அதிக இரத்தப்போக்கினால் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியுள்ளது.

இதில் ஈடுபட்ட காமக்கொடூரன் மஞ்சி என்பவனை போலீசு கைது செய்துள்ளது. ஆனால், இது கூட்டுப்பாலியல் வன்கொடுமை என்றும் இதில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், போலீசு இது கூட்டுப் பாலியல் வன்கொடுமை அல்ல என்று மறுத்துள்ளது.


படிக்க: கோவை: பத்து வயது சிறுமி பாலியல் வன்கொலைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரம்!


இக்கொடூரங்களைப் போன்று ஒவ்வொரு நாளும் பெண் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் போதைக் கலாச்சாரமே ஆகும். கும்மிடிப்பூண்டியில் சம்பவம் நடந்த பகுதியிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்குள் மூன்று டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஜூன் 9-ஆம் தேதி அன்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கிவைத்த முதல்வர் விஜய், “சமூக ஒழுக்கத்துடன் தனிமனிதன் ஒழுக்கமாக இருந்தால் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கட்டுப்படுத்தலாம்” என்று பேசியுள்ளார்.

அதாவது ஒட்டுமொத்த சமூகத்தையும் சீரழித்துக் கொண்டிருக்கின்ற டாஸ்மாக் உள்ளிட்ட போதைக் கலாச்சாரத்தையும் ஆபாச இணையதளங்களையும் தடை செய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை; நீங்களே உங்கள் குழந்தைகளையும் உங்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று தன்னுடைய பொறுப்பை மக்கள் மீது சுமத்துகின்ற அரசின் அலட்சியத்தின் வெளிப்பாடே இது.

குறிப்பாக, கோவை சிறுமி பாலியல் வன்கொடுமைமையின் போது அவருடைய அம்மா சரியில்லை; அதனால்தான் குழந்தை பாலியல் வன்கொலை செய்யப்பட்டது என்று த.வெ.க-வினர் குழந்தையின் தாயின் மீது தனிமனிதத் தாக்குதலை நடத்தினர். முதல்வர் விஜய் தனிமனித ஒழுக்கம் பற்றி பேசுகிறார். இரண்டிற்கும் பெரிய வேறுபாடு ஏதுமில்லை.

மேலும், தமிழ்நாட்டில் ஏற்கெனவே பல ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ள அம்மா ரோந்து வாகனங்கள் (Amma patrol), பெண்களுக்கான சிறப்பு ரோந்துப் பிரிவுகள் (Pink patrol / Women helpline patrol) ஆகியவற்றிற்கு சிங்கப்பெண் அதிரடிப் படை என பெயர் மாற்றம் செய்து, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தடுக்கப்படும் என த.வெ.க. அரசு மக்களை ஏய்க்கிறது. ஆனால், பெண் போலீசு ஒருவரே கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து த.வெ.க. அரசும் விஜய்யும் தற்போதுவரை வாய்திறக்கவில்லை.

எனவே, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்கு, டாஸ்மாக்கை மூடு!; கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப் பொருட்களையும் தடை செய்!; பெண்களை பாலியல் பண்டமாகச் சித்தரிக்கும் ஆபாச இணையதளங்கள், விளம்பரங்கள், திரைப்படங்கள், புராண இதிகாசங்கள் மதம் சார்ந்த புத்தகங்களைத் தடை செய்! உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க