தமிழ்நாட்டில் கடந்த ஐந்து வாரங்களில் நான்கு கொட்டடிப் படுகொலைகள் அரங்கேறியிருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் ‘மாற்றம்’ என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த த.வெ.க. தலைவர் விஜய்யும் அமைச்சர்களும் கொட்டடிப் படுகொலைகள் குறித்து வாய் திறக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் (35). இவர் தன்னுடைய வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். அவருடைய கடையில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் இருந்ததாகக் கூறி தென்தாமரைக்குளம் போலீசு ஜூலை 9 ஆம் தேதி அவரைக் கைது செய்துள்ளது.

நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சபரிவர்மனை மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் கொடூரமான முறையில் போலீசு அடித்து படுகொலை செய்துள்ளது. ஜூலை 13 ஆம் தேதி அன்று உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டதாக குடும்பத்திற்கு போலீசு தகவல் தெரிவித்துள்ளது. உடனடியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பதறியடித்துக் கொண்டு சென்ற குடும்பத்தினர் சபரிவர்மனின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அத்துடன் இது கொட்டடிப் படுகொலை என்றும் போலீசார் கொன்றுவிட்டதாகக் கூறியும் மருத்துவமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மாவட்ட நீதிபதி முன்னிலையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் உடலில் 19 இடங்களில் கொடூரக் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. குறைபாடு உடைய வலது கையில் மூன்று எலும்பு முறிவுகள், மணிக்கட்டில் ரத்தக்கட்டுகள், கால், தலை, நெஞ்சு மற்றும் பின் கழுத்து போன்ற இடங்களில் கொடூர காயங்களும் ரத்தக்கட்டுகளும் இருந்துள்ளன. கட்டி வைத்து அடித்ததற்கான தழும்புகள் உடலில் இருப்பதாக அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே சபரிவர்மன் கொட்டடிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்துகிறது.
இதன் பிறகே நேசமணி நகர் போலீசார் சந்தேக வழக்கை கொலை வழக்காக மாற்றி நாகர்கோவில் தலைமை சிறை வார்டன் சுரேஷ் என்ற திருமலைநம்பி, சிறை வார்டன்கள் ஜெகன் சிவகுமார் மற்றும் எட்டு கைதிகள் என மொத்தம் 11 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சபரிவர்மன் படுகொலை செய்யப்பட்ட வடுக்கள் மறைவதற்குள் தூத்துக்குடியில் அருணாச்சலம் என்ற இளைஞர் கொட்டடிப் படுகொலை செய்யப்பட்டது தமிழ்நாட்டையே உலுக்கியது.
தூத்துக்குடி மாவட்டம் அமுதா நகரைச் சேர்ந்த அருணாச்சலம் மதுபான பாரில் வேலை செய்து வந்துள்ளார். இவர் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்றதாகக் கூறி தென்பாகம் போலீசு ஜூலை 17 ஆம் தேதி கைது செய்துள்ளது.

இதன் பிறகு நான்கு போலீசார் இணைந்து அருணாச்சலத்தை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். குறிப்பாக தலையில் கொடூரமாகத் தாக்கியதால் சிறையிலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனால் அச்சமடைந்த போலீசு நரித்தனமாக வலிப்பு வந்து மயங்கிவிட்டதாகக் கூறி ஸ்டேஷன் பெயில் கொடுத்து குடும்பத்தினருடன் அனுப்பி வைத்துள்ளது.
அருணாச்சலத்தின் தலை உள்ளிட்டு உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பதைக் கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஒரு வாரமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜூலை 23 ஆம் தேதி அன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முக்கியமாக அருணாச்சலத்திற்கு ஸ்டேஷன் பெயில் கொடுத்து வீட்டிற்கு அனுப்பியது மற்றும் உயிரிழப்பதற்கு முன்பாக நான்கு போலீசார் சேர்ந்து தன்னை தலையில் தாக்கியதாக அருணாச்சலம் மரண வாக்குமூலம் அளித்திருப்பது இது கொட்டடிப் படுகொலை என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஜூலை 12 ஆம் தேதி புகையிலைப் பொருட்களைக் கடத்தியதற்காக பி. பாலாஜி என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜூலை 15 ஆம் தேதி அவரை அடித்து படுகொலை செய்துவிட்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார் என்று நாடகமாடியுள்ளது போலீசு.
கடந்த ஜூன் 8 ஆம் தேதி சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்த ஓட்டுநரான வெங்கடேசன் (28) குடிபோதையில் தகராறு செய்ததாக போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிச் சென்று அவரைத் தாக்கி போலீசு படுகொலை செய்துள்ளது.

குறிப்பாக அ.தி.மு.க. ஆட்சியில் தூத்துக்குடி சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ், தி.மு.க. ஆட்சியில் மடப்புரம் அஜித் குமார், மானாமதுரை ஆகாஷ், த.வெ.க. ஆட்சியில் சபரிவர்மன் தொடங்கி அருணாச்சலம் வரை நான்கு கொட்டடிப் படுகொலைகள் என கொலைகள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டேதான் இருக்கின்றன.
ஒவ்வொரு கட்சியும் கொட்டடிப் படுகொலைகளை தங்களுடைய அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்கின்றன. இதற்கு விஜய் கட்சியும் விதிவிலக்கல்ல.
தி.மு.க. ஆட்சியில் கொட்டடிப் படுகொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஜூலை 12, 2025 அன்று பனையூரில் வைத்துச் சந்தித்த விஜய் அவர்களுக்கு இழப்பீடும் வழங்கினார்.
ஆனால் முதல்வரான விஜய் கொட்டடிக் கொலைகள் குறித்து வாய் திறக்க மறுத்து வருகிறார். மானாமதுரையில் போலீசால் கொட்டடிப் படுகொலை செய்யப்பட்ட ஆகாஷின் உடலை பெற்றோரின் சம்மதமின்றி அடாவடித்தனமாக எரித்தது என்பது இதுவரை தமிழ்நாடு பார்த்திராத கொடூரமாகும். கொட்டடிப் படுகொலைகள் மீதான த.வெ.க. அரசின் அணுகுமுறை இதன்மூலம் அம்பலமாகியுள்ளது.
மேலும், போராடும் ஜனநாயக சக்திகளைக் கைது செய்து ஒடுக்குவது, பாதிக்கப்பட்டோரின் உடலை போலீசைக் கொண்டு அடக்கம் செய்வது என த.வெ.க. அரசு போலீசு ஆட்சிக்கான கூறுகளை வெளிப்படுத்தி வருகிறது. ஆகவே, த.வெ.க. ஆட்சியில் கொட்டடிப் படுகொலைகள் பன்மடங்கு அதிகரிப்பதற்கான அபாயமும் உள்ளது.
எனவே கொட்டடி படுகொலைகளைத் தடுப்பதற்கு போலீசு நிர்வாகம் மக்கள் கண்காணிப்பில் கொண்டு வரப்பட வேண்டும். போலீஸ் தேர்வுக்குத் தயாராகும் ஊழியர்கள் முன்னரே மக்களுக்குச் சேவை செய்வதிலும், சமூக நலப் பணிகளிலும் கட்டாயமாக ஈடுபட வேண்டும். அதற்கான சான்றிதழையும் பெற்றிருக்க வேண்டும். இந்த அடிப்படையிலான தகுதிகளைக் கொண்டு போலீசு பணிக்கு ஊழியர்களைத் தேர்வு செய்ய வேண்டும். இத்தகைய நடவடிக்கையே போலீசு என்ற கட்டமைப்பை ஜனநாயக விழுமியங்கள் கொண்டதாக மாற்றும். இதன் மூலமாகத்தான் கொட்டடிப் படுகொலைகளைத் தடுக்க முடியும்.
ஆனால் இந்த அரசு கட்டமைப்பிற்குள் மேற்குறிப்பிட்டவற்றை நடைமுறைப்படுத்த முடியாது. ஏனென்றால் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும், அவர்களின் கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராகவும் போராடக் கூடிய மக்களை ஒடுக்குவதற்கான ஒடுக்குமுறை கருவியாகத்தான் போலீசு துறை பயன்படுத்தப்படுகிறது.
எனவே மக்களுக்கு அதிகாரம் வழங்கும் அரசியலைப்பு சட்டத்தைக் கொண்ட பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு என்ற மாற்றுக் கட்டமைப்பில் தான் இந்த மறுசீரமைப்பைச் செய்ய முடியும். அதனை நோக்கிய போராட்டங்களைக் கட்டியமைப்போம்.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











