வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் நாகாலாந்தில் ஜலை 18 மற்றும் 19 தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் அசாம் மாநிலத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைகள் உடைந்தன. ஊருக்குள் புகுந்த வெள்ளத்தில் சிக்கி 75 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்; 4.45 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாகாலாந்தின் வோகா, மோகோக்சுங் மற்றும் மோன் ஆகிய மூன்று மாவட்டங்களிலும், அசாமின் அடிவார மாவட்டமான சராய்டியோவிலும் கனமழை பெய்தது. இவற்றில் சராய்டியோவில் 436 சதவீதம், மோகோக்சுங்கில் 493 சதவீதம் கூடுதலான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்தது. ஏற்கெனவே நிரம்பி வழியும் பிரம்மபுத்திரா நதியால் இந்தத் துணை நதிகளின் நீரை உள்வாங்க முடியாமல் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைகள் உடைந்தன.
இதனால் கிராமங்கள் முழுவதும் நீரில் மூழ்கின. உயிருக்குப் பயந்த மக்கள் வீட்டின் கூரைகளின் மீதும் நெடுஞ்சாலைகளில் திறந்தவெளியில் உணவு சமைத்துச் சாப்பிட்டு ஆபத்தான முறையில் அங்கேயே உறங்கி வருகின்றனர். மழை பெய்யும் போது மட்டும் அருகிலுள்ள தேயிலைத் தோட்டங்களிலும், ரயில் பெட்டிகளிலும் தஞ்சம் அடைகின்ற அவல நிலைக்கு அம்மக்களைத் தள்ளியுள்ளது பாசிச பா.ஜ.க அரசு.
குறிப்பாக சராடியோ, திப்ருகர், கோலாகாட், ஜோர்ஹாட், நாகோன் மற்றும் சிவசாகர் ஆகிய ஆறு மாவட்டங்களில் 6,54,800 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மிக மோசமாக சிவசாகர் மாவட்டத்தில் 2,90,777 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து சராய்டியோவில் 1,88,404 மக்களும் ஜோர்ஹாட்டில் 1,31,948 மக்களும் வெள்ளத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக மாநில அரசால் 274 நிவாரண முகாம்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் விநியோக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்த 18,902 மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பா.ஜ.க அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக ஹெலிகாப்டரில் கொண்டு சென்ற உணவுகளை அம்மக்களின் கைகளில் வழங்காமல் சாக்கடை நீர் கலந்த வெள்ள நீரில் வீசி விட்டுச் செல்கின்றது. அதாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் கூட தன்னுடைய பாசிசத்தை வெளிக்காட்டுகிறது.
பாதிக்கப்பட்ட பல இடங்களை மீட்புக் குழுவினரால் அடையமுடியாததால் மாநிலத்தின் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 25 வருவாய் வட்டங்களில் உள்ள 810 கிராமங்கள் தற்போது வரை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அங்குள்ள மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்களின் வாழ்வாதாரமாக உள்ள 34,970.8 ஹெக்டேர் நெற்பயிர்கள் மற்றும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளன. மேலும் 4,54,071 கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கோழிகள், மாடுகள் உட்பட 3,021 கால்நடைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
இந்த பேரிடரால் பல்வேறு இடங்களில் உள்ள ஆற்றின் தடுப்புச் சுவர்கள், பிரதான சாலைகள், பாலங்கள் மற்றும் பிற பொது உள்கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளன.
படிக்க: எல் நினோ வெப்பத்தால் பலியாகும் உழைக்கும் வர்க்கம்!
முக்கியமாக அசாம் மாநிலம் என்பதே சமவெளிப் பகுதியாகும். மலைப்பிரதேசங்களான அருணாசலப்பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா மற்றும் மணிப்பூரில் பெய்யக்கூடிய கனமழையினால் நீர் கீழ்நோக்கி வருகிறது. இதனால் ஏற்படுகின்ற வெள்ளத்தில் ஒவ்வொரு ஆண்டும் அசாம் மக்கள் தங்களின் உடைமைகள், கால்நடைகளைப் பறிகொடுத்து கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற வக்கற்ற பா.ஜ.க. அரசு நாகாலாந்து மாநிலத்தில் மோன் மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் 430 சதவீதம் அளவிலான கனமழையால் தான் வெள்ளம் ஏற்பட்டது என்று இயற்கை மீது பழிசுமத்தித் தப்பித்துக் கொள்கிறது. ஆனால் இந்திய வானிலை ஆய்வு மையம் மேகவெடிப்பு என்பதை ஒரு மணி நேரத்திற்குள் 100 மி.மீ-க்கு அதிகமான மழைப்பொழிவு என்று வரையறுத்துள்ளது.
ஆனால் அன்றைய தினம் (ஜூலை 18) 8 – 9 மணி நேரத்தில் 137 மி.மீ கணமழை பதிவாகியுள்ளது. இது மோன் மாவட்டத்தில் நிலச்சரிவுகளை ஏற்படுத்தி 9 உயிரைப் பலிகொண்டுள்ளது என்று கோஹிமா வானிலை மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் பா.ஜ.க. அரசின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.
பொதுவாக, பருவநிலை மாற்றத்தால் ஒரே நாளில் 50 மி.மீ அல்லது 100 மி.மீ-க்கு மேல் பெய்யும் அதிதீவிர மழைப்பொழிவு நிகழ்வுகள் அதிகரித்து வருவதாகவும், வரும் ஆண்டுகளில் இது மேலும் அதிகரிக்கும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில் வெள்ளம் ஏற்பட்டதற்கு பல்வேறு துறையைச் சேர்ந்த நபர்களால் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் தற்போதைய வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வரும் கவுகாத்தி பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் த்ருபஜோதி சஹாரியா “ஆறுகள் பாய்ந்து வரும் பள்ளத்தாக்குகளின் சரிவுப் பகுதிகளில் கட்டுப்பாடாற்ற முறையில் சுரங்கப் பணிகளுக்காக நிலங்கள் தோண்டப்பட்டுள்ளன. இதனால் அதிக அளவிலான களிமண்ணும் சகதியும் நீரோடு அடித்து வரப்பட்டு, ஆற்றின் ஆழத்தைக் குறைத்துவிட்டன” என்று தெரிவித்துள்ளார். இதனைச் செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
நீர்வளம் மற்றும் ஆற்றுப் பொறியியல் துறையில் நிபுணரான ஐ.ஐ.டி. ரூர்க்கியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் நயன் சர்மா கூறுகையில் “அடர்ந்த காடுகள் உள்ள பகுதிகளில் கனமழை பெய்யும்போது, தண்ணீர் நிலத்திற்குள் உறிஞ்சப்படுவதற்கான நேரம் கிடைக்கிறது. ஆனால் நிலம் மரங்களின்றி வெட்டவெளியாக இருக்கும்போது, தண்ணீருக்கு நிலத்திற்குள் செல்ல நேரம் கிடைப்பதில்லை. அது அதிவேகமாக மலையிலிருந்து கீழே இறங்கி, பெருமளவில் வண்டல் மண்ணையும் அடித்துக்கொண்டு வருகிறது. இந்த உபரி வண்டல் மண் ஆற்றின் படுகையை உயர்த்தி, அதன் நீரைச் சுமக்கும் கொள்ளளவைக் குறைக்கிறது”என்று தெரிவித்துள்ளார்.
மேலும் “நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மரங்களை நட்டு காடுகளை உருவாக்க வேண்டும். உலகளாவிய மழைப்பொழிவு கண்காணிப்பு அமைப்புகளைப் பயன்படுத்தித் துல்லியமாகக் கணித்திருந்தால் இந்த அளவிலான அழிவைத் தடுத்திருக்க முடியும்” என்றும் பாசிச கும்பலின் கையாலாகாத்தனத்தை கிழித்தெறிந்துள்ளார்.
மேற்கூறப்பட்டவை அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கனிமவள கொள்ளைக்கைகாவும், முதலாளிகளின் லாபத்திற்காகவும் பாசிச பா.ஜ.க. அரசால் இயற்கை வளங்களைக் கட்டற்ற முறையில் சூறையாடப்பட்டு வருவதையே காட்டுகிறது. இவைதான் பேரழிவின் பாதிப்பைத் தீவிரப்படுத்துகின்றன. இதிலிருந்து பாசிஸ்ட்கள் கார்ப்பரேட்களின் நலன்களுக்காகத்தான் செயல்படுவார்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.
![]()
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











