தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கவின் கடந்த ஆண்டு ஜூலை 27 அன்று ஆதிக்கச் சாதி வெறியர்களால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். கவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டது.
ஜூலை 27 காலை 9 மணிக்கு ஆறுமுகமங்கலம் கிராமத்தில் கவின் குடும்பத்தின் சார்பாக முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சியில் மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் குருசாமி, மதுரை மாவட்டச் செயலாளர் தோழர் சிவகாமு, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் தோழர் தாளமுத்து செல்வா மற்றும் மாவட்ட பொருளாளர் தோழர் சந்துரு, தமிழ் வேந்தன் உள்ளிட்ட மக்கள் அதிகாரக் கழக தோழர்கள் திரண்டு முழக்கமிட்டபடி படுகொலை செய்யப்பட்ட கவினுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.
அதன் பின் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தோழர் குருசாமி ஆணவப் படுகொலையைத் தடுப்பதற்கு உடனே தமிழ்நாடு அரசு சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும்; சாதிவெறி சங்கங்களை உடனே தடை செய்ய வேண்டும்; ஆணவப் படுகொலை செய்பவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும்; இதற்கு ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அதேபோல் கவினை இழந்து வாடும் குடும்பத்திற்குப் பக்கபலமாக மக்கள் அதிகாரக் கழகம் எப்போதும் துணை நிற்கும் என்று கூறினார்.
பின்பு தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் பகுதியில் மாலை 5 மணியளவில் மாவட்டச் செயலாளர் தோழர் தாளமுத்து செல்வா அவர்களின் தலைமையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மாவட்டப் பொருளாளர் தோழர் சந்துரு உள்ளிட்ட மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு கவின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள லூர்து நாதன் சிலை அருகில் மாலை 5 மணியளவில் கவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தைத் தலைமையேற்று நடத்திய வழக்கறிஞர் தோழர் கின்ஷன் முழக்கமிட்டு கூட்டத்தைத் தொடங்கினார். அதைத்தொடர்ந்து ஜனநாயக சக்திகள் ஒவ்வொருவரும் கவின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் பங்கேற்ற அனைத்து தோழர்களின் ஒற்றை கோரிக்கையாக ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சிறப்புச் சட்டம் வேண்டும்; சாதி,மதம் அற்றவர்கள் என்று சான்றிதழ் பெற்றவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; ஆதிக்கச் சாதி வெறி சங்கங்களை உடனே தடை செய்ய வேண்டும்; ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல்களை அனைத்து பகுதிகளிலிருந்தும் விரட்டியடிக்க வேண்டும்; ஆணவப் படுகொலை செய்பவர்களின் சொத்துகளை உடனே பறிமுதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. இதை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது.
தமிழ்நாட்டில் இதுபோன்ற சாதி ஆணவ படுகொலைகளைத் தடுப்பதற்குத் தொடர்ந்து ஒன்றிணைந்து களத்தில் நின்று போராடுவோம் என்று உறுதியேற்று நினைவேந்தல் கூட்டம் முடிக்கப்பட்டது.
இந்நிகழ்வை தோழர் தமிழ் வேந்தன் ஒருங்கிணைக்க, கழக வழக்கறிஞர் அணி தோழர் கின்ஷன் தலைமையேற்று நடத்தினார். தமிழ் புலிகள் கட்சியின் மாநில இணைச் செய்தி தொடர்பாளர் நெல்லை தமிழரசு, தமிழ்நாடு இளையோர் விடுதலைக் கழகம் தோழர் நிலவன், வி.சி.க. தோழர் முருகன் கண்ணா ஆகியோர் உரையாற்றினர். மேற்கூறிய அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தோழர்கள், ஷஹீது Dr பழனிபாபா பாசறை தோழர் அப்துல் ஹமீது, தமிழ்த்தேசிய உழவர், உழைப்பாளர் கழகம், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தோழர் திருக்குமரன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு தங்களது உணர்வினை பகிர்ந்து கொண்டனர்.
பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை – தூத்துக்குடி மாவட்டங்கள்.
9385353605
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











