
27.07.2026
ஜூலை 27: கவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அறிக்கை
பத்திரிகைச் செய்தி
கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் நாள் நெல்லை கே.டி.சி நகரில் மென்பொறியாளர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை வழக்கில் சுர்ஜித், அவனது தந்தை எஸ்.ஐ சரவணன், உறவினர் ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் 10 மாத இழுபறிக்குப் பின் சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரி கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதிமன்றத்தில் சரவணனுக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், ஜூன் 2026-இல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பிணை வழங்கப்பட்டது.
ஆணவப் படுகொலை குற்றவாளி எஸ்.ஐ சரவணனுக்கு பிணை வழங்கியதை அன்றே மக்கள் அதிகாரக் கழகம் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் கண்டித்தன.
அதே சமயம் தாராபுரத்தைச் சேர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எல். முருகானந்தம் 2025-ஆம் ஆண்டு ஜூலை 28 அன்று அவரது சொந்தச் சித்தப்பா தண்டபாணி என்பவருடன் ஏற்பட்ட சொத்துத் தகராறு மற்றும் பள்ளி ஆக்கிரமிப்பு வழக்குகளின் முன்விரோதம் காரணமாக கூலிப்படையினரால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இக்கொலை வழக்கில் தண்டபாணி உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றுவரும் சூழலில் முக்கிய குற்றவாளியாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தண்டபாணி, தற்போது பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த ஆண்டு ஜூலை 7 அன்று தாராபுரம் கணபதி பாளையத்தைச் சேர்ந்த இந்த வழக்கின் முதல் தகவல்தாரரும் (Complainant), கொலையை நேரில் கண்ட சாட்சியுமான தங்கவேல் என்பவரை, கேரளாவைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட கூலிப்படை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்ய முயன்றது. இதில் அவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
தங்கவேலை கொலை செய்ய சிறையில் சதித்திட்டம் தீட்டப்பட்டதும், இதில் கவின் ஆணவப்படுகொலை குற்றவாளியான எஸ்.ஐ சரவணன் மூளையாக இருந்து செயல்பட்டதும் அம்பலமாகி தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த எஸ்.ஐ. சரவணன், அதே சிறையிலிருந்த முருகானந்தம் கொலை வழக்கு குற்றவாளி தண்டபாணியுடன் நட்பு ரீதியாகப் பழகியுள்ளார்.
ஜூன் மாதம் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த எஸ்.ஐ. சரவணன், சிறையிலிருந்த தண்டபாணிக்காக வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கூலிப்படையினரை ஒருங்கிணைத்து சாட்சி தங்கவேலை கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளார்.
இந்த கொலை முயற்சி தொடர்பாக தண்டபாணியின் மனைவி சரஸ்வதி, உறவினர் ஹேமா மற்றும் கேரளா, நாகர்கோவிலைச் சேர்ந்த கூலிப்படையினர் என 7 பேர் முதலில் கைதாயினர். இதனைத் தொடர்ந்து, இந்த சதியின் பின்னணியில் இருந்த எஸ்.ஐ. சரவணனை 29-வது குற்றவாளியாக, தாராபுரம் தனிப்படை போலீஸார் கடந்த ஜூலை 20 அன்று கைது செய்தனர்.
அவரது கைது, வழக்கின் விசாரணையை புதிய திருப்பத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. தங்கவேல் மீதான கொடூரத் தாக்குதலுக்குப் பிறகு, முருகானந்தத்தின் தாயார் சுமித்ரா தேவி, அவரது மாமா மற்றும் கண்ணால் பார்த்த மற்றொரு முக்கிய சாட்சியான குருசாமி ஆகியோருக்குத் தீவிர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தங்கவேல் மீதான கொலை முயற்சித் தாக்குதலைத் தொடர்ந்து, சாட்சிகளின் பாதுகாப்பைக் கருதி இவ்வழக்கு திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்திலிருந்து திருச்செங்கோடு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் முக்கியக் குற்றவாளிகள் அனைவரும் சிறையில் இருந்தாலும், சாட்சிகள் இன்னும் அச்சத்திலேயே வாழ்ந்து வருவதாக வழக்கறிஞர்கள் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தர, மொத்தம் 133 அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட உள்ளனர். தங்கவேலை கொலை செய்ய கேரளக் கூலிப்படைக்கு பணம் கொடுத்தது மற்றும் சதித்திட்டம் தீட்டிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 29-ஆக உயர்ந்துள்ளது.
இதில் தமிழ்நாடு, கேரளா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கூலிப்படையினரை வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் ஒருங்கிணைத்து, தேவைக்கேற்ப செயல்படக்கூடிய பெரிய நெட்வொர்க்கை எஸ்.ஐ சரவணன் உருவாக்கியிருந்ததாகவும், சம்பவத்தின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டதாகவும், அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு ஒப்பந்தக் கொலைக்கும் கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டதாகவும், அந்த பணத்தை குழுவினருக்குப் பிரித்து வழங்கும் பொறுப்பையும் சரவணனே மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
வழக்கறிஞர் முருகானந்தம் கொலை வழக்கின் முக்கிய நேரடி சாட்சிகளை மட்டுமல்லாமல், முருகானந்தத்தின் தாயார் சுமித்ரா மற்றும் அவரது உறவினர்களையும் கொலை செய்யும் நோக்கில், மேலும் இரண்டு கூலிப்படையினரை தயார் செய்து வைத்திருந்ததாக சரவணன் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
29-வது குற்றவாளியான சரவணன் கைது செய்யப்பட்டிருந்தாலும், தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கூலிப்படை தாக்குதல்கள் தொடரும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். இதனால், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிகாரப்பூர்வமாக ஊடகங்கள் மூலம் வழக்கின் தற்போதைய நிலை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதற்கிடையில், இந்த வழக்கில் தொடர்புடைய சில முக்கிய குற்றவாளிகளின் புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்கள் பத்திரிகையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களிடம் வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அதேபோல், குற்றவாளிகளுக்கு ஆதரவாக சில போலீஸ் அதிகாரிகள் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், தற்போதைய விசாரணை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, நேர்மையான அதிகாரிகளை நியமித்து விசாரணையை நடத்த வேண்டும் என முருகானந்தத்தின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கவின் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கூட்டுச்சதியாலோசனை மற்றும் ஆதாரங்களை மறைக்க உதவியது ஆகிய காரணங்களால் கைது செய்யப்பட்ட கொலையாளி சுர்ஜித்தின் தந்தையான எஸ்.ஐ சரவணன், முருகானந்தம் கொலை வழக்கில் மூளையாக இருந்து செயல்பட்டுள்ளார்.
அதுமட்டுமல்ல கூலிப்படை கும்பல்களை ஒருங்கிணைப்பது, பேரம் பேசி பணப்பட்டுவாடா செய்யும் கூலிப்படை தலைவனாகவும் செயல்பட்டுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது.
சிறையில் இருந்து கொண்டே கவின் கொலைக்குற்றவாளி எஸ்.ஐ சரவணன், முருகானந்தத்தை கொலை செய்த தண்டபாணி ஆகிய இரண்டு கொலைக் குற்றவாளிகள் சந்தித்து அடுத்த கொலைக்கான சதியாலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு கொலைக் குற்றவாளிகள் மற்றொரு கொலைக்கு சதியாலோசனை செய்து கொள்ளுமளவுக்கு சிறையில் வசதி செய்து தரப்பட்டுள்ளது என்றால் அதிகார வர்க்கத்தின் துணையின்றி இது சாத்தியமல்ல.
இதில் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளான தங்கவேல் சாதாரண நபரல்ல. முருகானந்தம் கொலையைக் கண்ணால் கண்ட அரசுத் தரப்பு சாட்சி அவர். அவரையும் இதர சாட்சிகளையும் கொலை செய்ய ஒருவர் திட்டமிட்டுக் கொடுக்கிறார் என்றால் அவர் ஒரு கைதேர்ந்த கிரிமினலாகத்தான் இருப்பார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரளா, பீகார் வரை கூலிப்படை கும்பலுடன் எஸ்.ஐ சரவணனுக்கு தொடர்பு இருக்கிறது என்றால் தனது பணிக்காலத்தில் இதுபோன்ற கூலிப்படை மற்றும் கொலைகாரக் கும்பல்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கவும், அவர்களைத் தனது நோக்கத்திற்குப் பயன்படுத்தியிருக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இத்தகைய குற்றவாளிகளை அவர்களின் குற்றங்களில் இருந்து தப்பிக்க வைத்திருக்கவும் வாய்ப்புள்ளது.
இப்படியான கூலிப்படை கும்பலை கையாள்வது என்றால் கூலிப்படை நெட்வோர்க் கிரிமினலாகவோ அல்லது போலீஸ் உதவியுடனோதான் இதை உருவாக்கியிருக்க முடியும். அப்படியெனில் எஸ்.ஐ சரவணனுக்கு பின்னாலிருந்த போலீஸ்காரர்கள் யார் எனவும் விசாரிக்க வேண்டும்.
கவின் கொலை நடந்ததும் பாளையங்கோட்டை ஆய்வாளர் காசிப்பாண்டியன், கவின் கொலைக்கு உடந்தையாக இருந்தார் மற்றும் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டார் என்றும், கவின் தரப்பில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், காசிப்பாண்டியன் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் இந்த புகார் பற்றி முறையான விசாரனை நடத்தப்படாமலேயே மீண்டும் அவர் பணியமர்த்தப்பட்டார். மேலும் அவர் இந்த குற்ற வழக்கில் சேர்க்கப்படவில்லை.
எஸ்.ஐ சரவணனும், காசிப்பாண்டியனும் தேவர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல நெல்லையைச் சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸ் மற்றும் உளவுத்துறையினர் என பெரும்பாலும் தேவர் சாதி பின்புலத்தை உடையவர்கள் பணிக்கு அமர்த்தப்படுவது தற்செயலானதல்ல. அது சாதிய கண்ணோட்டத்தோடு தொடர்புடையதாகவும் உள்ளது.
அதுமட்டுமல்ல, தென்மாவட்டங்களில் தொடர்ச்சியாக தலித் மக்கள் மீதான தாக்குதல்கள், கொலைகள் அதிகரித்தபடி இருப்பதற்கு போலீசும், அரசும் முக்கியமான காரணம். புல்லுக்கட்டு மேலே பட்டுவிட்டது என்பதற்காகப் படுகொலை செய்யப்பட்ட DYFI தோழர் அசோக், நன்றாகப் படித்ததற்காக வெட்டப்பட்ட நாங்குநேரி சின்னதுரை, எந்த முன் பகையும் இல்லாமல் கொல்லப்பட்ட கீழக்கரை ராஜாமணி, கபடி போட்டியில் வெற்றி பெற்றதற்காகவே வெட்டப்பட்ட தேவேந்திர ராஜா, பார்த்துப் போங்கள் என்று கூறியதற்காகவே வீடு புகுந்து வெட்டப்பட்ட மேலப்பாட்டம் மனோஜ், தலித்துகள் என்பதற்காகவே நிர்வாணப்படுத்தித் தாக்கப்பட்ட மணீமூர்த்திஸ்வரம் மாரியப்பன், மனோஜ், தூங்கிக் கொண்டிருந்த போது மணக்கரை பாயாசம் என்கிற பரமசிவம் என்கிற கூலிப்படை ரவுடி கும்பலால் படுகொலை செய்யப்பட்ட மணக்கரை மணி, நாங்குநேரி பெரும்பத்து, இந்திரா காலனி, ஆலங்குளம் நெட்டூர் சாதி கொலைவெறித் தாக்குதல்கள்…
இவ்வாறு நடைபெற்ற குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் தொடர் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். சொல்லப் போனால் சிறையிலிருந்து வெளியே வந்த பின்னால்தான் பெரும்பாலும் அவர்கள் தொடர் குற்றவாளிகளாகலோ, கூலிப்படையினராகவோ மாறுகிறார்கள். சிறையில்தான் அந்தந்த சாதி சார்ந்த மற்றும் கூலிப்படை வலைப் பின்னல்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. குறிப்பாக பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் சாதி ரீதியான மோதல்களைத் தவிர்ப்பதற்கு என்று, அந்தந்த சாதிரியதியாக குற்றவாளிகள் பிரித்து அடைக்கப்படுகின்றனர். இந்த குற்ற வலைப் பின்னல்கள் நெருக்கமாகப் பின்னப்படுவதற்கு இது உகந்ததாகவும் அமைகிறது. முக்கியமாக ஆதிக்கச்சாதி மனநிலை கொண்ட அதிகார வர்க்கம் இந்த சாதியக் கட்டமைப்பு கலைந்து விடாதபடி, இறுக்கமாக அதனைப் பாதுகாக்கிறது. சில குறிப்பிட்ட படுகொலைகள் போலீஸ் மற்றும் உளவுத்துறையினருக்கு முன்கூட்டியே தெரிந்தே செய்யப்பட்டவை என்பதும், அதற்கு அவர்கள் உடந்தையாகச் செயல்பட்டனர் என்பதும் வெளியே கசிந்த உண்மையாக இன்றும் உலா வருகிறது. இதை வைத்துப் பார்க்கும்போது தொடர் குற்றங்கள் நடப்பதையும், தொடர் குற்றவாளிகள் உருவாவதையும் இந்த கட்டமைப்பின் வழியாகத் தடுத்து நிறுத்த முடியாது என்பதே கண்கூடான உண்மை.
இந்த வழக்கில் எஸ்.ஐ சரவணன் அகப்படாமல் இருந்திருந்தால் முருகானந்ததின் உறவினர்கள், அரசு தரப்பு சாட்சிகள் உள்ளிட்ட பல படுகொலைகள் அடுத்தடுத்து நடந்திருக்க வாய்ப்புகள் இருந்திருக்கும். அதுமட்டுமல்ல, கூலிப்படைகளின் அட்டூழியங்கள் வளர்ந்து திருப்பூர் பகுதி சுடுகாடாகியிருக்கும்.
ஆகவே,
- குற்றத்தின் தன்மை கருதி உடனடி நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
- தொடர் கொலைக் குற்றவாளி எஸ்.ஐ சரவணனுக்கு வழங்கப்பட்ட பிணையை உடனே இரத்து செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
- முருகானந்தம் கொலை வழக்கு தவிர வேறு எந்தெந்த கொலைக் குற்றங்களில் எஸ்.ஐ சரவணன் சம்மந்தப்பட்டுள்ளார் என்று தீர விசாரிக்க வேண்டும்.
- எஸ்.ஐ சரவணனுக்கு உடந்தையாக இருந்த போலீசார் அனைவரையும் விசாரித்து பணிநீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட வேண்டும்.
- முருகானந்தம் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கூலிப்படைகள், குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.
- தொடர்ச்சியாக நடைபெறும் ஆணவப் படுகொலைகளுக்குக் காரணமாக இருக்கும் ஆதிக்கச்சாதி வெறி சங்கங்களையும், அதனை பின்னாலிருந்து இயக்கும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிச கும்பல்களைத் தடை செய்ய வேண்டும்.
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





