ஃபோக்ஸ்வேகன்: ஆலை மூடலுக்கும் ஆட்குறைப்புக்கும் எதிராக தொழிலாளர்கள் போராட்டம்

இத்தனை ஆண்டுகளாக இலாபம் கொழுத்த போது வாரிச்சுருட்டிக் கொண்ட ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், தொழிலாளர்களுக்கு கூலியை மட்டுமே கொடுத்தது; மாறாக, இலாபத்தை ஒன்றும் பகிர்ந்து கொடுத்து விடவில்லை. ஆனால், இப்போது நெருக்கடி ஏற்பட்டதும் வெள்ளை அறிக்கையை வெளியிட்டு தொழிலாளர்களை நீக்க எத்தனிக்கிறது.

ஜெர்மனியைச் சேர்ந்த “ஃபோக்ஸ்வேகன்” (Volkswagen) ஐரோப்பாவின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனமாகும்.

ஃபோக்ஸ்வேகன் என்ற ஜெர்மன் சொல்லுக்கு “மக்கள் வாகனம்” என்று பொருள். 1938-இல் நாஜி ஆட்சி காலத்தில் குறைந்த விலையில் மக்களுக்கான கார்கள் உருவாக்கப்படுவதாகக் கூறி ஃபோக்ஸ்வேகன் உருவாக்கப்பட்டது. என்றாலும், அது இராணுவத்துக்குத் தேவையான சாலைப் பயண வாகனங்களை உற்பத்தி செய்வதற்காக அரசின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட நிறுவனம் ஆகும். இன்று, அதற்கு நேர் எதிராக சொகுசு கார் உற்பத்தியில் ஃபோக்ஸ்வேகன் முன்னிலை வகிக்கிறது.

ஃபோக்ஸ்வேகன், மெர்சிடெஸ் (Mercedes), மற்றும் பி.எம்.டபுள்யு. (BMW) ஆகிய மூன்றும் உலகப் புகழ்பெற்ற சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களாகும். இவை அனைத்தும் ஜெர்மன் நாட்டை சேர்ந்தவை. ஜெர்மனியில் இந்த வாகன தயாரிப்பு நிறுவனங்களில் மட்டும் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடி ஊழியர்களாகவும் பின்புலப் பணியாளர்களாகவும் (Indirect) பணிபுரிகின்றனர். ஜெர்மன் நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இந்த வாகனத் தயாரிப்பு நிறுவனங்களே திகழ்கின்றன. ஜெர்மனியில் மட்டுமல்லாது ஐரோப்பா முழுவதற்குமே அந்தந்த நாட்டு பொருளாதாரங்களில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தில் மட்டும் 6.5 லட்சம் ஊழியர்கள் பணி புரிகின்றனர். ஆடி (Audi), பென்ட்லி (Bentley), ஸ்கோடா (Skoda), சீயட் (SEAT), குப்ரா (Cupra), லம்பார்க்கினி (Lamborghini) போன்ற உயர்வகையைச் சேர்ந்த பல பிராண்டு சொகுசு கார்களும் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தைச் சேர்ந்தவையே.

நெடுங்காலமாகவே சாலை வாகன உற்பத்தியில் ஐரோப்பா, குறிப்பாக ஜெர்மனிதான் உலக சந்தையில் முதலிடத்தில் இருந்து வந்திருக்கிறது. ஆனால், சீனாவின் பெட்ரோல் மற்றும் மின்சார கார்களின் வருகையால் இவை அனைத்தும் கடுமையான சந்தைப் போட்டியை சந்தித்து பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றன. குறிப்பாக சீன மின்சார கார்கள் ஐரோப்பாவில் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. சீன நிறுவனங்கள் விலையிலோ தரத்திலோ எவரும் போட்டி போட முடியாத அளவில் சிறந்த கார்களை குறைந்த விலையில் விற்பனை செய்கின்றன.

சீனாவின் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் ஆராய்ச்சியின் விளைவாக பேட்டரியின் மின் ஆற்றல் சேமிப்புத்திறன் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதற்கேற்ற வகையில் திறன்மிக்க பேட்டரிகளை கொண்டு ஒருமுறை சார்ஜ் (Charge) செய்து அதிக தூரமும், அதிக நேரமும், உயர் வேகத்திலும் பயணிக்கக் கூடிய நவீன சொகுசு வசதிகளை கொண்ட சீனத்துக் கார்கள் ஐரோப்பிய சந்தையை ஆக்கிரமித்து வருகின்றன.

பத்தாண்டுகளுக்கு முன்புவரை சீனத்து சொகுசுக் கார் சந்தையை தனதாக்கி வைத்திருந்த ஃபோக்ஸ்வேகன் இப்போது ஐரோப்பிய சந்தையையே சீனாவிடம் இழந்து நிற்கிறது. பங்குச் சந்தையில் ஃபோக்ஸ்வேகன் பங்கு மதிப்பு 2021-இல் 250 யூரோவாக இருந்தது; அது 2025-இல் 100 யூரோவுக்கும் கீழே சரிந்துவிட்டது.

சாலை வழி பயணத்துக்கு பெட்ரோல், டீசல், இன்ஜின் கார்களின் இடத்தை இப்போது மின்சார கார்கள் இட்டு நிரப்புகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. இயற்கையின் பாதுகாப்புக்கு மின்சார கார்கள்தான் உகந்தது என்று சுற்றுச்சூழல் அறிஞர்கள் அழுத்தத்துடன் கூறி வருகின்றனர். ஆகையால் இனி மின்சாரக் கார்களின் வருகையை எவரும் தடுத்து நிறுத்த முடியாது.

இதனால்தான், 2015-16-ஆம் ஆண்டுகளில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தமது கார்களில் கார்பன் உமிழ்வை திட்டமிட்டு பொய்யாக குறைத்துக் காட்டி சுற்றுச்சூழலுக்கு இசைவான கார் என்று விளம்பரப்படுத்தி மோசடியாக விற்பனை செய்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மோசடிக்கு நட்ட ஈடாக உலகு தழுவிய அளவில் அதன் தனித்தனி கார் உரிமையாளர்களுக்கு 30 பில்லியன் யூரோ அளவுக்கு இழப்பீடு தந்ததில் பெரும் நெருக்கடியை சந்தித்தது. அத்துடன் அதன் புகழுக்கும் தரம் பற்றிய நற்பெயருக்கும் பெருத்த பங்கம் ஏற்பட்டது.

இன்னொரு புறம், ஐரோப்பிய ஒன்றியம் சீன இறக்குமதி கார்களுக்கு 17.4 முதல் 37.6 சதவிகிதம் வரை இறக்குமதி வரி விதித்திருக்கிறது. ஏற்கெனவே சீன உற்பத்திப் பொருட்கள் அரசு மானியம் பெறுகின்றன என்கிற காரணத்தைக் காட்டி ஜெர்மன் அரசு அனைத்து சீனப் பொருட்களுக்கும் 10 சதவிகித இறக்குமதி வரி விதித்துள்ளது. என்றாலும் சீனத் தயாரிப்புகளுடன் போட்டியிட்டு ஐரோப்பிய சொகுசு கார் சந்தையை அதனால் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. ஐரோப்பாவில் ஓடும் ஐந்து மின்சார கார்களில் ஒன்று சீனத் தயாரிப்பு என்ற நிலையை சீனா அடைந்துள்ளது.

இதுபோன்ற நிலைமைகளை கருத்தில் கொண்டே, 1960-களிலேயே, பலவகைச் சந்தைப் போட்டிகளிலிருந்து வாகன உற்பத்தித் துறையை பாதுகாக்கும் வகையிலும், அதன் தரத்தை மேம்படுத்தி நிலைநிறுத்தவும், நிர்வாகம் மற்றும் தொழிலாளர் உறவில் சிக்கல்கள், உரசல்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலும் ஜெர்மன் அரசாங்கம் சில சிறப்பு சட்டங்களை இயற்றி வைத்திருக்கிறது. இதில் “ஃபோக்ஸ்வேகன் சட்டம்” என்ற ஒரு தனி சட்டமும் அடங்கும். ஆய்வு மற்றும் தர மேம்பாடுகளுக்கு அரசே நிதி உதவியும் அளித்து வருகிறது.

அச்சிறப்பு சட்டங்களின்படியே ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இயக்குநர் குழுவுக்கும் (Board of directors) மேலான அதிகாரம் கொண்டதாக நிர்வாகம், அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள் அடங்கிய மேற்பார்வை குழு (Supervisory board) அமைக்கப்பட்டுள்ளது. நிர்வாகம் சில தொழிற்சாலைகளை மூடவும், விற்பனை செய்துவிடவும், ஆட்குறைப்பு செய்வதற்கும் மேற்பார்வைக் குழுவின் ஒப்புதல் அவசியமாகும்.

தற்போது சந்தை நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கும் ஃபோக்ஸ்வேகனின் எதிர்காலம் குறித்த விரிவான திட்டத்தை அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குழு முன்வைத்திருக்கிறது. அத்திட்டமானது உயர்நிலை மேற்பார்வை குழுவின் பரிசீலனையில் இருப்பதாக ஃபோக்ஸ்வேகன் நிர்வாகத்தின் தலைமை அதிகாரி ஆலிவர் ப்ளூம் கூறுகிறார்.

அத்திட்டம் ஃபோக்ஸ்வேகன் வாகன உற்பத்திக் கட்டமைப்பு முழுவதையும் மறு ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறது. அதன் மையமான முக்கிய உற்பத்தி பிரிவு, உதிரிப்பாக உற்பத்தி பிரிவு மற்றும் தொழில்நுட்ப வணிகம் ஆகியவற்றை தனித்தனியாக பிரித்து இயக்குவது பற்றியும் கூட உயர்நிலை மேற்பார்வைக் குழு பரிசீலித்து வருகிறது.

சில முக்கியப் பிரிவுகளை மொத்தமாக மூடிவிடுவது அல்லது பிற கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்பனை செய்து விடுவது பற்றியும் முடிவெடுக்கத் தேவை ஏற்பட்டிருப்பதாகவும், ஹனோவர், எம்டன், ஸ்விக்காவு, ஆடி காரினுடைய ஒரு கிளையான நெக்கார் சல்ம் ஆகிய நான்கு முக்கிய தொழிற்சாலைகளை மூடிவிடுவதுடன், 50,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களைக் குறைப்பது போன்றவையும் அத்திட்டத்தில், இடம்பெற்றுள்ளதாக தலைமை அதிகாரி ஆலிவர் ப்ளூம் கூறுகிறார்.

தனது வாகனங்களின் விலை குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளத் திட்டமிடுகின்ற ஃபோக்ஸ்வேகன், வரும் 2030-க்குள் ஒரு லட்சம் ஊழியர்களை வெளியேற்றிவிட்டு, இரண்டு அல்லது மூன்று தொழிற்சாலைகளை மூடி விடுவது அல்லது அப்படியே விற்பனை செய்து விடுவது என்று முடிவெடுக்கத் திட்டமிட்டுள்ளது.


படிக்க: வால்மார்ட் தொழிலாளர்களின் முதல் ஒப்பந்தம் வெற்றி


“ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் உயர்நிலை மேற்பார்வை குழுவில் பரிசீலிக்கப்படுகின்ற இத்திட்டம் தொழிலாளர்களுக்கு எதிரான சதித்திட்டம்” என்று சாடுகிறார் தொழிலாளர்களிடத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க ஐ.ஜி.மெட்டால் (IG Metall) தொழிற்சங்கத்தின் தலைவர் கிறிஸ்டைன் பென்னர். “ஃபோக்ஸ்வேகன் நிர்வாகம் சமீப கால தொழில் நட்டங்களுக்கு தொழிலாளர்கள் மீது பழியை போட்டு ஆட்குறைப்பு செய்யவும் ஆலைகளை மூடவும் எத்தனிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அவர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

மேலும், ஃபோக்ஸ்வேகன் நிர்வாகத்தின் முடிவுக்கு எதிராக ஜூலை 9 அன்று பகல் 11.20 முதல் 2 மணி வரையிலும் நாடு முழுவதிலும் 18 இடங்களில், தொழிற்சாலை வாயில்களில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி இருக்கின்றனர். “இப்போராட்டம் தொழிலாளர் உணர்வு நிலை குறித்து நிர்வாகத் தலைமைக்கு தெளிவான சித்திரத்தைக் கொடுத்து எச்சரிக்கை செய்திருக்கிறது” என்று கிறிஸ்டைன் பென்னர் கூறுகிறார்.

ஃபோக்ஸ்வேகனின் முக்கிய தயாரிப்புகளான ஆடி, போர்ஷே போன்ற அதிநவீன ஆடம்பரக் கார்கள் மற்றும் பேருந்துகள், டிரக்குகள் தயாரிக்கும் தொழிற்சாலை வாயில்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. முன்னணித் தொழிலாளர்கள் தொழிற்சாலை வாயில்களில் அணிதிரண்டு நின்று “நமது எதிர்காலத்துக்காக ஒன்றுபட அழைக்கிறோம்” என்ற பதாகையை பிடித்துக் கொண்டு விசில்களை ஊதி சத்தம் எழுப்பி தொழிலாளர்களின் கவனத்தைக் ஈர்த்தனர்.

இந்த நெருக்கடியான நிலையில் தொழிலாளர்கள், ஆலை மூடலுக்கும் ஆட்குறைப்புக்கும் எதிராக போராட முடிவெடுத்துள்ளனர். தொழிற்சங்கங்களும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து தொழிலாளர்களுக்கு உணர்வூட்டி அணி திரட்டி வருகின்றன.

இத்தனை ஆண்டுகளாக இலாபம் கொழுத்த போது வாரிச்சுருட்டிக் கொண்ட ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், தொழிலாளர்களுக்கு கூலியை மட்டுமே கொடுத்தது; மாறாக, இலாபத்தை ஒன்றும் பகிர்ந்து கொடுத்து விடவில்லை. ஆனால், இப்போது நெருக்கடி ஏற்பட்டதும் அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு வெள்ளை அறிக்கையை வெளியிட்டு தொழிலாளர்களை நீக்க எத்தனிக்கிறது.

உண்மையில், இந்தாண்டின் இரண்டாவது காலாண்டில் ஃபோக்ஸ்வேகனின் லாபம் 10 சதவிகிதம் வரை குறைந்துள்ளதே ஒழிய, அந்நிறுவனம் ஒன்றும் நட்டத்தை சந்தித்துவிடவில்லை. எனவே, சந்தையை மீண்டும் கைப்பற்றி தனது லாபத்தை அதிகரிப்பதற்காக தொழிலாளர்களை காவு கொடுக்க துணிந்துள்ளது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்.

“இது என்ன நீதி?” என்று கடுங்கோபத்துடன் கேள்வி எழுப்பும் தொழிலாளர்கள், லாபக் குறைவைக் காரணம் காட்டி தொழிலாளர்களை நட்டாற்றில் விடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதிலும், “நாங்கள்தான் ஃபோக்ஸ்வேகன். நீங்கள் அல்ல.” (We are the Volkswagen – You are Not ) என்று தொழிலாளர்கள் முழங்குகின்றனர்.

ஆம். இதுவே முதலாளிகளுக்கான சரியான பதில். வெல்க! ஜெர்மனியின் ஃபோக்ஸ்வேகன் தொழிலாளர் போராட்டம்!

செய்தி ஆதாரம்: தி கார்டியன்


வானுறை சம்பத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க