வால்மார்ட் தொழிலாளர்களின் முதல் ஒப்பந்தம் வெற்றி

பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமேசானில் யூனிஃபோருக்கு கிடைத்த தொழிற்சங்க அங்கீகாரம் ஒரு முக்கியமான முதல் படியாக இருந்தாலும், மிசிசாகா வால்மார்ட்டில் கிடைத்த கூட்டு ஒப்பந்த வெற்றி அதைவிட ஒரு படி மேலான சாதனையாகும். தற்போது, கூட்டு பேச்சுவார்த்தை மூலம் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு தொழிலாளர்களிடம் ஒரு நடைமுறை எடுத்துக்காட்டு உள்ளது.

ல பத்தாண்டுகளாக, வால்மார்ட் (Walmart) வட அமெரிக்காவில் தொழிற்சங்கங்களை மிகவும் கடுமையாக எதிர்த்த நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த மாபெரும் சில்லறை வணிக நிறுவனம், குறைந்த விலை, நவீன மற்றும் திறமையான விநியோக (லாஜிஸ்டிக்ஸ்) அமைப்பு, மேலும் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைப்பதை தீவிரமாக எதிர்த்து இத்துறையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. வால்மார்ட் கடைகளில் தொழிற்சங்கம் அமைக்க தொழிலாளர்கள் பலமுறை முயற்சி செய்த போதும், நிறுவனத்தின் கடுமையான எதிர்ப்பு, சட்டப் போராட்டங்கள் மற்றும் சில சமயங்களில் கடைகளையே மூடும் நடவடிக்கைகள் காரணமாக அந்த முயற்சிகள் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்தன.

அதனால்தான், சமீபத்தில் கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், மிசிசாகாவில் (Mississauga) உள்ள வால்மார்ட் விநியோக மையத் தொழிலாளர்கள் பெற்றுள்ள கூட்டு ஒப்பந்த வெற்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மே மாதத்தில், யூனிஃபோர் லோக்கல் 252 (Unifor Local 252) தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், வட அமெரிக்காவில் வால்மார்ட்டுடன் பேச்சுவார்த்தை மூலம் எட்டப்பட்ட முதல் கூட்டு தொழிலாளர் ஒப்பந்தத்தை அங்கீகரித்தனர். 2024-ஆம் ஆண்டு தொழிலாளர்கள் தொழிற்சங்க அங்கீகாரத்தை வெற்றிகரமாகப் பெற்றதைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட தொழிற்சங்க அமைப்பு மற்றும் கூட்டு பேச்சுவார்த்தை முயற்சியின் விளைவாக உருவான இந்த ஒப்பந்தத்திற்கு, உறுப்பினர்களில் 93 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால், இந்த வெற்றி ஒரு உள்ளூர் அளவிலான தொழிலாளர் ஒப்பந்த வெற்றியை விட மிகப் பெரிய அர்த்தம் கொண்டது. இது நவீன பொருளாதாரத்தின் மிகவும் முக்கியமான துறைகளில் ஒன்றான கிடங்கு (Warehousing), விநியோகம் (Distribution) மற்றும் லாஜிஸ்டிக்ஸ் (Logistics) துறையில் ஒரு முக்கிய திருப்புமுனையை குறிக்கிறது.

இன்று வால்மார்ட், அமேசான் போன்ற பெருநிறுவனங்கள் பொருட்களை விநியோகிக்க பரந்த கிடங்கு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மையங்களின் வலையமைப்பை அதிகமாகச் சார்ந்துள்ள நிலையில், மிசிசாகா தொழிலாளர்கள் உலகின் மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்களைக்கூட தொழிற்சங்கத்தின் மூலம் ஒருங்கிணைத்து, பேச்சுவார்த்தை நடத்த வைக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.

தரநிலைகளை உயர்த்தும் ஒப்பந்தம்

புதிய இரண்டு ஆண்டு கால கூட்டு ஒப்பந்தம், வால்மார்ட்டில் தொழிற்சங்கத்திற்குக் கிடைத்த ஓர் ஆரம்ப வெற்றி மட்டுமல்ல; அது தொழிலாளர்களுக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார நன்மைகளையும் வழங்குகிறது.

யூனிஃபோர் லோக்கல் 252 சங்கத்தின் உறுப்பினர்கள், ஒப்பந்தத்தின் முதல் ஆண்டில் ஒரு மணிநேரத்திற்கு அதிகபட்சமாக 5 கனடிய டாலர் வரை ஊதிய உயர்வைப் பெற்றனர். அதனைத் தொடர்ந்து, இரண்டாவது ஆண்டில் கூடுதலாக 3 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் “சமமான சலுகை” (Me Too) பிரிவும் இடம்பெற்றுள்ளது. இதன்படி, தொழிற்சங்கத்தைத் தவிர்க்கும் நோக்கில் வால்மார்ட் மற்ற இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கினால், தொழிற்சங்க உறுப்பினர்களும் அதே அளவிலான நன்மைகளைப் பெறுவதை இது உறுதி செய்கிறது.

இதுகுறித்து யூனிஃபோரின் தேசிய அமைப்பாளர் ஜஸ்டின் க்னிபோஸ்கி (Justin Gniposky) கூறுகையில், “இந்த “மீ டூ” விதி, இனிமேல் வலிமையான நிலையில் இருந்து தொழிலாளர்களை ஒருங்கிணைக்கவும், கூட்டு பேச்சுவார்த்தை நடத்தவும் எங்களுக்கு பெரும் ஆதாரமாக அமைந்துள்ளது.” என்றார்.

மேலும், மிசிசாகாவில் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, வால்மார்ட், மற்ற கிடங்கு தொழிலாளர்களுக்கு நிறுவனம் முழுவதும் ஊதிய உயர்வு வழங்கியதால் ஏற்பட்ட நியாயமற்ற தொழிலாளர் நடைமுறை (Unfair Labour Practice) தொடர்பான சர்ச்சைக்கும் இந்த ஒப்பந்தம் தீர்வு வழங்குகிறது.

இந்த சமரசத்தின் அடிப்படையில், தொழிற்சங்க உறுப்பினர்கள் 4,250 முதல் 8,750 கனேடிய டாலர் வரை ஒருமுறை வழங்கப்படும் தொகையை (Lump-sum payment) பெறுவார்கள்.

அதேபோல், தற்காலிக மற்றும் நிரந்தரமற்ற வேலைவாய்ப்புகள் மூலம் தொழிலாளர்களைப் பிரித்து, வேலை முறையை சீர்குலைக்கும் நிறுவனத்தின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் முக்கிய விதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.


படிக்க: எலான் மஸ்க் ட்ரில்லியனியராம்! பொருளாதாரம் யாருடையது?


குறிப்பாக, குறுகிய கால ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர்களைப் பயன்படுத்துவதற்கு நிறுவனங்களுக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை, நிரந்தர முழுநேர வேலைவாய்ப்புகளையும், நிரந்தர ஊழியர்களுக்கான கூடுதல் நேர (Overtime) பணிவாய்ப்புகளையும் குறைத்து வந்தது.

எனவே, இந்த ஒப்பந்தம் வெறும் ஊதிய உயர்வு அல்லது சில பாதுகாப்பு அம்சங்களை  மட்டும் உள்ளடக்கியதல்ல. கனடாவின் முக்கிய சந்தைகளில் ஒன்றிற்கு சேவை செய்யும் இந்த விநியோக மையத்தில், பணியிட தரநிலைகள், பணிநேர அட்டவணை மற்றும் வேலைப் பாதுகாப்பு ஆகியவற்றில் தொழிலாளர்களுக்கு அதிக அதிகாரத்தையும் செல்வாக்கையும் வழங்கும் ஒரு முக்கிய முன்னேற்றமாக இது அமைந்துள்ளது.

யூனிஃபோரின் தேசியத் தலைவர் லானா பெய்ன் (Lana Payne) கூறியதுபோல், “இந்த ஒப்பந்தத்தின் மூலம், பணியிடத்தில் உரிமைகளை பெறுவதில் தொழிலாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.”

வால்மார்ட்டுக்கு சவால் விடுத்த தொழிலாளர்கள்

மிசிசாகாவில் யூனிஃபோர் (Unifor) பெற்ற வெற்றியின் உண்மையான முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள, நீண்ட காலமாக கனடாவிலும் வட அமெரிக்காவிலும் வால்மார்ட் நிறுவனம் தொழிற்சங்கங்களுக்கு எதிராக செயல்பட்ட வரலாற்றை அறிந்திருக்க வேண்டும்.

பல ஆண்டுகளாக, வால்மார்ட் இந்தக் கண்டத்திலேயே தொழிற்சங்கங்களை மிகவும் கடுமையாக எதிர்க்கும் நிறுவனங்களில் ஒன்றாக பெயர் பெற்றது. கனடா மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள பல வால்மார்ட் கிளைகளில் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை அமைக்க முயன்ற போதெல்லாம், இந்நிறுவனத்தின் திட்டமிட்ட மற்றும் கடுமையான எதிர்ப்பை அவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது.

கனடாவில், வால்மார்ட்டின் மிகவும் பிரபலமான தொழிற்சங்க மோதல் கியூபெக் மாகாணத்தின் ஜோன்கியர் (Jonquière) நகரில் நடைபெற்றது. 2004-ஆம் ஆண்டு, சில்லறை வணிகத் தொழிலாளர்கள் “ஐக்கிய உணவு மற்றும் வர்த்தக தொழிலாளர்கள்” (UFCW) தொழிற்சங்கத்தில் வெற்றிகரமாக இணைந்தனர். அதற்கு பதிலடியாக, வால்மார்ட் அந்தக் கடையையே மூடி, நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வேலைகளை நீக்கியது.

இதனைத் தொடர்ந்து பல ஆண்டுகள் நீதிமன்ற வழக்குகள் நடைபெற்றன. இறுதியில், கனடா உச்சநீதிமன்றம், தொழிலாளர்களின் கூட்டு பேச்சுவார்த்தை நடத்தும் உரிமையை வால்மார்ட் மீறியுள்ளது என்று தீர்ப்பளித்தது.

அதேபோல், கியூபெக்கின் காட்டினோ (Gatineau) நகரில் தொழிற்சங்கம் அமைக்கப்பட்ட மற்றொரு வால்மார்ட் கடையிலும், நடுவர் மூலம் ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்ட பிறகு, அந்த தொழிற்சங்கத்தின் அங்கீகாரம் பின்னர் இரத்து செய்யப்பட்டது. இந்த நிகழ்வு, தொழிற்சங்க ஒப்பந்தத்தைத் தவிர்க்க வால்மார்ட் எந்த அளவிற்கும் செல்லும் என்பதை மேலும் வலுப்படுத்தியது.

இதுகுறித்து ஜஸ்டின் க்னிபோஸ்கி கூறியதாவது:

கடந்த காலத்தில் தொழிற்சங்கம் அமைந்த வால்மார்ட் கடைகளுக்கு எதிராக நிறுவனம் எடுத்த நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, இவ்வளவு அர்த்தமுள்ள முதல் கூட்டு ஒப்பந்தத்தை நாங்கள் நிச்சயமாகப் பெறுவோம் என்று எனக்குத் தெரியும் என்று சொன்னால் அது உண்மையாக இருக்காது.

இந்த வெற்றிக்கு முழு காரணமும் தொழிலாளர்களே என்று அவர் கூறினார். “இது நூறு சதவீதம் இந்தத் தொழிலாளர்களின் உறுதிப்பாட்டுக்கான சான்றாகும். ஆரம்பத்திலிருந்தே அவர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டனர். அதனால்தான் இந்த மையத்தில் எங்களால் கவனம் செலுத்த முடிந்தது. உறுப்பினர் அட்டைகளில் கையெழுத்து சேகரிக்கும் இயக்கம் சுமார் ஒன்பது மாதங்கள் நீடித்தது. அதன் பிறகு நாங்கள் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றோம்; பின்னர் கூட்டு பேச்சுவார்த்தையைத் தொடங்கினோம். கிடங்கு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறையே எங்கள் முக்கிய இலக்கு என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்.” என்று கூறினார்.

மேலும், இந்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தை மேசையிலேயே வெற்றிகரமாக எட்டப்பட்டது என்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

“எங்களிடம் வலுவான பேச்சுவார்த்தைக் குழுவும், தெளிவான திட்டமும் இருந்தது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக நேரம் எடுத்துக் கொண்டாலும், இறுதியில் வெற்றி பெற்றோம். கட்டாய நடுவர் தீர்ப்பை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையை வால்மார்ட்டுக்கு ஏற்படுத்தினோம். ஆனால் அதற்கு முன்பே, தொழிலாளர்களே பேச்சுவார்த்தையின் மூலம் இந்த ஒப்பந்தத்தை வென்றனர். இனி இந்த வெற்றியை அடித்தளமாகக் கொண்டு அடுத்த கட்டத்தை உருவாக்கப் போகிறோம்.”

ஒரு தனி சில்லறை விற்பனைக் கடையை விட, அதிக அளவில் பொருட்கள் கையாளப்படும் ஒரு பெரிய கிடங்கு (Warehouse) மையத்தை மாற்றுவதோ அல்லது வேறு இடத்துக்கு மாற்றுவதோ மிகவும் கடினமானது. குறிப்பாக, கிரேட்டர் டொராண்டோ பகுதி போன்ற மிகப்பெரிய சந்தைக்கு சேவை செய்யும் கிடங்குகளில் இது இன்னும் சிக்கலானதாகும். இந்த மூலோபாய முக்கியத்துவமே தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கத்திற்கும், முந்தைய தொழிற்சங்க முயற்சிகளில் இல்லாத அளவுக்கு வலுவான பேச்சுவார்த்தை அதிகாரத்தை வழங்கியது.

பல தொழிலாளர் ஆய்வாளர்கள் கூறுவதுபோல், உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியின் முக்கிய “சோக் பாயிண்ட்” (Chokepoints) எனப்படும் இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கே அதிக பொருளாதார சக்தி உள்ளது. இன்றைய டிஜிட்டல் பொருளாதாரத்தில், அந்த முக்கிய மையங்களாக லாஜிஸ்டிக்ஸ் மற்றும் கிடங்கு மையங்கள் மாறிவிட்டன என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து க்னிபோஸ்கி கூறியதாவது:

“எதிர்காலத்திலும் மறையாமல் தொடரும் சில துறைகள் உள்ளன; அவற்றில் கிடங்கு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறை முக்கியமானது. எங்கள் தொழிற்சங்கம் உட்பட பல தொழிற்சங்கங்கள் இதை இப்போது தெளிவாக உணரத் தொடங்கியுள்ளன.”

கிடங்கு தொழிலாளர்கள் ஒன்றிணைவோம்!

மிசிசாகா வால்மார்ட் தொழிலாளர்களின் இந்த வெற்றி தனிப்பட்ட ஒரு நிகழ்வு அல்ல. மாறாக, “கிடங்கு தொழிலாளர்கள் ஒன்றிணைவோம்!(Warehouse Workers Unite) என்ற இயக்கத்தின் மூலம் கிடங்கு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களை தொழிற்சங்கத்தில் ஒருங்கிணைக்கும் யூனிஃபோரின் (Unifor) விரிவான முயற்சியின் ஒரு பகுதியாகும்.

2021-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இயக்கம், கிடங்கு துறையில் நிலவும் அவசரமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.

குறிப்பாக, இடைவிடாத உற்பத்தித் திறன் அழுத்தம், உடல்நலம் மற்றும் பணியிடப் பாதுகாப்பு சிக்கல்கள், குறைந்த ஊதியம், பாதுகாப்பற்ற வேலைவாய்ப்புகள், தொழிலாளர்கள் மீது அதிகரித்து வரும் கண்காணிப்பு (Surveillance) ஆகியவற்றை எதிர்கொள்வதுடன், தொழிலாளர்களின் ஒற்றுமையையும், தொழிற்சங்க வலிமையையும் உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த இயக்கம், கனடாவின் பொருளாதாரத்தில் கிடங்கு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறை மிக முக்கியமான போராட்டக் களமாக மாறிவிட்டது என்ற யூனிஃபோரின் மதிப்பீட்டையும் பிரதிபலிக்கிறது.

யூனிஃபோர் மேற்கொண்ட ஆய்வுகளின்படி, கடந்த சில பத்தாண்டுகளாக மின்னணு வணிகம் (E-commerce), ஆன்லைன் சில்லறை விற்பனை, மற்றும் மிகவும் சிக்கலான விநியோகச் சங்கிலிகள் (Supply Chains) வளர்ந்ததன் காரணமாக, கிடங்கு துறையில் வேலைவாய்ப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளன.

பெரிய கிடங்கு மையங்கள் கிரேட்டர் டொராண்டோ பகுதி (Greater Toronto Area), மெட்ரோ வான்கூவர் (Metro Vancouver) மற்றும் மாண்ட்ரியல் (Montreal) போன்ற மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் உருவாகியுள்ளன.

குறிப்பாக, மிசிசாகா மற்றும் பிராம்ப்டன் நகரங்கள், பெரும்பாலும் சிறுபான்மையினரும் குடியேறிய தொழிலாளர்களும் பணிபுரியும் முக்கிய லாஜிஸ்டிக்ஸ் மையங்களாக வளர்ந்துள்ளன.

ஜஸ்டின் க்னிபோஸ்கியின் கூற்றுப்படி, இந்த மாற்றங்களுக்கு ஏற்ப யூனிஃபோர் தனது தொழிற்சங்க அமைப்பு முறைகளையும் மாற்றியுள்ளது. பல மொழிகளில் தொழிற்சங்க தகவல்களை வழங்குதல், தொழிலாளர்களின் தனிப்பட்ட சமூக வலையமைப்புகளை பயன்படுத்தி நம்பிக்கையையும் ஆதரவையும் உருவாக்குதல் போன்ற புதிய அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இருப்பினும், கிடங்கு துறை வேகமாக வளர்ந்திருந்தாலும், தொழிற்சங்க உறுப்பினர் விகிதம் 14.2 சதவீதம் மட்டுமே உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் நிறுவனங்களின் கடுமையான எதிர்ப்பாகும்.

பல நிறுவனங்கள் துணை ஒப்பந்த (Subcontracting) முறை, தற்காலிக வேலைவாய்ப்பு முகமைகள் (Temporary Staffing Agencies), மற்றும் ஒப்பந்தங்களை அடிக்கடி மாற்றும் (Contract Flipping) நடைமுறைகளைப் பயன்படுத்துகின்றன. இவை வேலைவாய்ப்பின் தரத்தை குறைப்பதுடன், தொழிலாளர்களை பிரித்து தொழிற்சங்கம் அமைப்பதையும் மிகவும் கடினமாக்குகின்றன.

யூனிஃபோரின் பார்வையில், கிடங்கு துறையில் தொழிற்சங்க உறுப்பினர் எண்ணிக்கையையும் தொழிலாளர்களின் அதிகாரத்தையும் அதிகரிப்பது, தனிப்பட்ட பணியிடங்களில் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்துவது அல்ல. மாறாக, முழுத் துறையையும் சீர்திருத்தி, பாதுகாப்பற்ற வேலைகளை நிலையான, நல்ல ஊதியம் வழங்கும், தொழிற்சங்கப் பாதுகாப்புள்ள வேலைவாய்ப்புகளாக மாற்றக்கூடிய துறைமட்ட தரநிலைகளை உருவாக்குவதே அதன் நோக்கமாகும்.

“வர்க்கப் போராட்டம்” (Class Struggl)e இதழுக்கு அளித்த பேட்டியில் ஜஸ்டின் க்னிபோஸ்கி கூறியதாவது:

இந்த வெற்றி, குறிப்பாக கிடங்கு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் தொழிலாளர்களுக்கும், பொதுவாக வட அமெரிக்கா முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கும் ஒரு முக்கியமான செய்தியைச் சொல்ல வேண்டும். உங்கள் முதலாளி யார் என்பதைக் பொருட்படுத்தாமல், அர்த்தமுள்ள ஒரு கூட்டு ஒப்பந்தத்தை வெற்றிகரமாகப் பெற முடியும்.

மிசிசாகா வால்மார்ட் ஒப்பந்தம், தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் திட்டமிட்ட முயற்சியின் மூலம் எத்தகைய முக்கியமான சாதனைகளை அடைய முடியும் என்பதற்கான ஒரு தெளிவான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

அமேசான் மற்றும் அதற்கு அப்பால் போராட்டத்தை விரிவுபடுத்துதல்

வால்மார்ட்டில் கிடைத்த இந்த வெற்றியை மற்ற நிறுவனங்களிலும் மீண்டும் பெறுவதுதான் தற்போது மிக முக்கியமான சவாலாக உள்ளது. அதில் முதன்மையான இலக்கு அமேசான் (Amazon) ஆகும். ஏனெனில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) மாகாணத்தில் யூனிஃபோர் ஏற்கெனவே அமேசான் நிறுவனத்தில் ஒரு ஆரம்ப நிலை தொழிற்சங்க அடித்தளத்தை உருவாக்கியுள்ளது.

வால்மார்ட்டைப் போலவே, அமேசானும் தனது வணிக மாதிரியை மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட லாஜிஸ்டிக்ஸ் வலையமைப்புகள் மற்றும் நவீன கிடங்கு செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள அமேசான் தொழிலாளர்கள், நிறுவனத்தின் கடுமையான உற்பத்தி இலக்குகள், எல்லா இடங்களிலும் பரவியுள்ள கண்காணிப்பு முறை மற்றும் தொழிற்சங்க எதிர்ப்பு கொள்கைகளுக்கு எதிராக தொடர்ந்து புகார் அளித்தும் போராடியும் வருகின்றனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமேசானில் யூனிஃபோருக்கு கிடைத்த தொழிற்சங்க அங்கீகாரம் ஒரு முக்கியமான முதல் படியாக இருந்தாலும், மிசிசாகா வால்மார்ட்டில் கிடைத்த கூட்டு ஒப்பந்த வெற்றி அதைவிட ஒரு படி மேலான சாதனையாகும். தற்போது, கூட்டு பேச்சுவார்த்தை மூலம் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு தொழிலாளர்களிடம் ஒரு நடைமுறை எடுத்துக்காட்டு உள்ளது.

இந்த வால்மார்ட் ஒப்பந்தம், தொழிற்சங்கங்களுக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கும் ஒரு பெரிய நிறுவனத்தின் முக்கிய லாஜிஸ்டிக்ஸ் மையத்தில் கூட தொழிலாளர்களை ஒருங்கிணைத்து, வெற்றிகரமான கூட்டு தொழிலாளர் ஒப்பந்தத்தைப் பெற முடியும் என்பதை நிரூபிக்கிறது.

இதுகுறித்து ஜஸ்டின் க்னிபோஸ்கி கூறுகையில், “வால்மார்ட், அமேசான் போன்ற நிறுவனங்களை நாம் நேரடியாக எதிர்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு இதைப் பற்றி பேசினால், “அது ஒருபோதும் நடக்காது” என்பார்கள். ஆனால் இன்று, 2026-இல், நாங்கள் முதல் கூட்டு ஒப்பந்தத்தைப் பெற்றிருப்பதோடு மட்டுமல்லாமல், உண்மையிலேயே அர்த்தமுள்ள ஒரு ஒப்பந்தத்தையும் வென்றுள்ளோம்.” என்றார்.

இருப்பினும், ஒரே ஒரு கூட்டு ஒப்பந்தம் ஒரு முழுத் துறையையே ஒரே இரவில் மாற்றிவிடாது. வால்மார்ட் இன்னும் மிகப்பெரிய வளங்களைக் கொண்ட பன்னாட்டு நிறுவனமாகவே உள்ளது. யூனிஃபோரின் இந்த வெற்றியிலிருந்து, தொழிற்சங்கங்களை எதிர்கொள்வதற்கான புதிய உத்திகளையும் அது கற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

மேலும், கிடங்கு துறை இன்னும் பல சிறு பிரிவுகளாகப் பிரிந்துள்ளது; தொழிற்சங்க அமைப்பு பரவலாக உருவாகவில்லை. வால்மார்ட் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள், தொழிலாளர்களின் பேரம் பேசும் வலிமையை குறைத்து, வேலைவாய்ப்புகளை அச்சுறுத்தும் வகையில், மனித உழைப்பை மாற்றும் புதிய தொழில்நுட்பங்களில் தொடர்ந்து முதலீடு செய்யும்.

ஆனால், ஜஸ்டின் க்னிபோஸ்கி, “வால்மார்ட்டில் கிடைத்த இந்த ஒரு கூட்டு ஒப்பந்தமும், எதிர்காலத்தில் அமேசானில் கிடைக்கக்கூடிய ஓர் ஒப்பந்தமும் மட்டும் போதாது. இந்த நிறுவனங்களில் தொழிற்சங்க உறுப்பினர் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து, பெரும்பான்மையான தொழிலாளர்களை ஒருங்கிணைக்க வேண்டும். அதுவே எங்கள் இலக்கு. இது யூனிஃபோரின் போராட்டம் மட்டுமல்ல; தொழிலாளர் இயக்கம் முழுவதற்குமான போராட்டம் என்பதால், மற்ற தொழிற்சங்கங்களும் எங்களுடன் இணைய வேண்டும் என்று நாங்கள் வரவேற்கிறோம்.” என்று தெரிவித்தார்.

யூனிஃபோர் கருதுவது போல், வால்மார்ட் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களில் கிடைக்கும் தொழிலாளர் வெற்றிகள், அந்த நிறுவனங்களைத் தாண்டியும் பரந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.

முன்னர் வாகன உற்பத்தி மற்றும் எஃகு தொழில்துறைகளில் ஏற்பட்ட முதல் கூட்டு ஒப்பந்தங்கள் தொழிற்சங்க இயக்கத்தை வலுப்படுத்தின. அதேபோல், தொலைத்தொடர்பு மற்றும் விமானப் போக்குவரத்து துறைகளில் ஏற்பட்ட முதல் ஒப்பந்தங்கள், பின்னர் அந்தத் துறைகள் முழுவதும் பின்பற்றப்பட்ட தரநிலைகளை உருவாக்க உதவின.

அதேபோல், இந்த வால்மார்ட் ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் என்பது வெறுமனே மிசிசாகாவில் உள்ள 800 தொழிலாளர்களுக்கு கிடைத்த நன்மை மட்டுமல்ல. கனடா முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான கிடங்கு தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கம் அமைத்து அர்த்தமுள்ள கூட்டு ஒப்பந்தங்களை வெல்வது சாத்தியமே என்ற நம்பிக்கையை இந்த ஒப்பந்தம் அளிக்கிறது.

நன்றி: எம்.ஆர். ஆன்லைன்


மொழியாக்கம்: அசுரன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க