1992-ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இந்துத்துவ காலிகளால் இடிக்கப்பட்டது. இவ்வழக்கில், நவம்பர் 9, 2019 அன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அடுத்த மூன்று மாதங்களுக்குள் கோவில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கி நடத்துவதற்காக ஒன்றிய அரசு ஓர் அறக்கட்டளையை (Trust) உருவாக்க வேண்டும் என்றும், நிலத்தை அந்த அறக்கட்டளையிடம் ஒப்படைத்து இராமன் கோவில் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தது.
இத்தீர்ப்பின் அடிப்படையில், பிப்ரவரி 5, 2020 அன்று பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் இதற்கான அறக்கட்டளை உருவாக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அமைச்சரவையின் ஒப்புதலுடன் “ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா” என்கின்ற தன்னாட்சி பெற்ற சுயாதீன அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இதன் தலைவராக மஹந்த் நிருத்ய கோபால் தாஸ், பொதுச் செயலாளர் சம்பத் ராய் ஆகியோர் உள்ளிட்டு 15 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
பொதுமக்களின் நன்கொடைகள் (Crowd funding) மூலமாக ரூ.3,500 கோடிக்கும் மேல் நிதி திரட்டப்பட்டு, செலவீனங்கள் உள்ளிட்டு சுமார் ரூ.1,900 கோடி முதல் ரூ. 2,150 கோடியில் இராமன் கோவில் கட்டி முடிக்கப்பட்டதாக அறக்கட்டளை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
தற்போது இக்கோவிலை இந்த அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. கடந்த ஜூன் 7-ஆம் தேதி, சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், இராமன் கோவிலுடன் தொடர்புடைய பல கோடி ரூபாய் காணிக்கை பணம் மாயமாகிவிட்டதாக எக்ஸ் தளத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.
இதைத் தொடர்ந்து ஒன்பது நாட்களில், அகிலேஷ் யாதவ் இராமன் கோவில் நிதி முறைகேடு விவகாரம் தொடர்பாகத் தனது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து எட்டு பதிவுகளை வெளியிட்டுள்ளார். “இந்த முழுச் சம்பவத்தின் கடிவாளத்தை கையில் வைத்திருக்கும் அந்த அதர்மி யார்? இந்த மோசடியின் தலைவன் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறான்?” என்றும் அதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனையடுத்து, அயோத்தியில் உள்ள இராமன் கோவிலின் காணிக்கையில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படும் விவகாரம் கடந்த சில நாட்களாகப் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
கோவில் வளாகத்திலுள்ள உண்டியல்களில் இருந்து சேகரிக்கப்படும் பணத்தை எண்ணும் அறையில் வைத்து, அங்கு பணியாற்றிய ஊழியர்கள் திட்டமிட்டு கூட்டுச் சதி செய்து கையாடல் செய்துள்ளனர். பணம் எண்ணும் பணியில் இருந்த சிலர், அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பார்வையை மறைத்துக் கொண்டு, பணத்தைத் தங்களின் ஆடைகளுக்குள் மறைத்துத் திருடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அறக்கட்டளையின் உறுப்பினர் கிருஷ்ண மோகன் அளித்த புகாரின் பேரில், ‘இராம ஜென்மபூமி’ போலீசு நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் டின்னு யாதவ் (அறக்கட்டளை பொதுச் செயலாளரின் ஓட்டுநர் மற்றும் கண்காணிப்பாளர்), அனுகல்ப் மிஸ்ரா, லவ்குஷ் மிஸ்ரா, அவினாஷ் சுக்லா, மனிஷ் யாதவ், சுபாஷ் ஸ்ரீவஸ்தவா, கருணேஷ் பாண்டே மற்றும் ராம்சங்கர் மிஸ்ரா ஆகிய எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை ரூ. 79.85 லட்சம் ரொக்கப் பணம் போலீசால் மீட்கப்பட்டுள்ளது. வெறும் ரூ.18,000 முதல் ரூ.20,000 வரை மாதச் சம்பளம் வாங்கிய தற்காலிக ஊழியர்கள், இந்தத் திருட்டுப் பணத்தின் மூலம் ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலங்கள், ஆடம்பர வீடுகள் மற்றும் கார்களை வாங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சொத்துகளை முடக்கி, பணத்தை மீட்பதற்கான சட்ட நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் ரூ.79.85 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஜூன் 29, 2026 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த முறைகேடு புகாரைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச அரசு லக்னோ பிரிவு கமிஷனர் விஜய் விஸ்வாஸ் பந்த் தலைமையில் நான்கு பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்தது. இக்குழுவினர் கோவில் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி, ஆரம்பக்கட்ட இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்த பிறகே இந்த கைது நடவடிக்கைகள் பாய்ந்துள்ளன.
இந்த ஊழல் குற்றச்சாட்டையடுத்து, அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகிய இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ராம ஜென்மபூமி இயக்கத்தின் போது பக்தர்கள் வழங்கிய ‘புனித’ செங்கற்கள் (ஸ்ரீராம் சிலாக்கள்) மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வெள்ளி ஆபரணங்களும் காணாமல் போயுள்ளதாகக் கூடுதல் புகார்கள் எழுந்துள்ளன.
பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய தங்கம் மற்றும் வைர நகைகள், மூக்குத்திகள், கம்மல்கள், கொலுசுகள், வளையல்கள் மற்றும் விலைமதிப்பற்ற இரத்தினக் கற்கள் ஆகியவை திருடப்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கோயிலுக்கு காணிக்கையாக அளிக்கப்பட்ட இரண்டு கிலோ எடையுள்ள தங்கக் கதாயுதம் மற்றும் பல கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மாயமாகியுள்ளதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. குடமுழுக்கின் போது நகை வியாபாரிகள் நன்கொடையாக வழங்கிய 60 கிலோ முதல் 200 கிலோ வரையிலான வெள்ளிக் கட்டிகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் அதிகாரப்பூர்வ பதிவேடுகளில் இல்லாமல் மாயமாகியுள்ளன. உண்டியல்களில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கப் பணம் திட்டமிட்டு, தொடர்ச்சியாகத் திருடப்பட்டுள்ளது.
மறுபுறம், எதிர்க்கட்சிகள் இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று கூறி, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவரைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
ஏழை மக்கள் தங்களின் சேமிப்பில் இருந்து வழங்கிய காணிக்கை திருடப்பட்டுள்ளது அவமானகரமானது என காங்கிரசு தலைவர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், இதில் உயர்மட்டத் தொடர்புகள் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
உள்ளூர் பா.ஜ.க. தலைவரான ரஜினிஷ் சிங்கும், இராமன் கோவில் கட்டுமானத்திற்காகத் திரட்டப்பட்ட நிதி குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை கொண்டு விசாரிக்க வேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அயோத்தியின் சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அவதேஷ் பிரசாத், “இது மிக உயர்மட்டத்தில் விசாரிக்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்றத்தால் ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்த குழு இந்த விசாரணையை நடத்த வேண்டும். அதற்கு முன்பாக, விசாரணையை எந்த விதத்திலும் பாதிக்காதவாறு அறக்கட்டளையின் அனைத்து உறுப்பினர்களையும் இடைநீக்கம் செய்ய வேண்டும். இது தர்மத்திற்கு ஏற்பட்ட இழப்பு” என கூறியுள்ளார்.
அயோத்தியைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி அரசின் முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பவன் பாண்டே பி.பி.சி. ஹிந்தியிடம் பேசுகையில், “இந்தக் கொள்ளை ஒன்றும் புதியதல்ல. இந்த அறக்கட்டளை அமைக்கப்பட்டதில் இருந்தே ஊழல் நடந்து கொண்டுதான் இருக்கிறது” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “முதலில் அறக்கட்டளையின் நில ஊழல் வெளிச்சத்திற்கு வந்தது. அதற்குப் பிறகு காணிக்கைப் பணத்தை எண்ணும் பணியை மேற்பார்வையிட்டு வந்த மகிபால் சிங், காணிக்கைப் பணம் திருடப்படுவதாகப் புகார் அளித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அயோத்திவாசி மக்களாகிய நாங்கள், கோவிலில் பத்து-பதினைந்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்தவர்கள் இன்று எந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள் என்பதை நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கோவிலுக்குள் வேலை செய்பவர்கள் இரண்டு ஆண்டிற்குள் பல அடுக்குமாடி குடியிருப்புகளையும் நிலங்களையும் வாங்கியிருக்கிறார்கள். அப்படி இரண்டு வருடத்தில் என்ன தொழில் செய்து இவ்வளவு சம்பாதித்தார்கள்? அரசு சிறப்பு புலனாய்வுக் குழு கொண்டு விசாரணை நடத்துகிறது. என்ன நடக்கும் என்று கடவுளுக்குத்தான் தெரியும். ஸ்ரீ இராமனதான் நம்மை பாதுகாக்க வேண்டும்” என்றார்.
இதற்கிடையில், உள்ளூர் பா.ஜ.க. தலைவர் ரஜினிஷ் சிங் பி.பி.சி. ஹிந்தியிடம் பேசுகையில், “ரமாசங்கர் யாதவ் என்கிற டின்னு, சம்பத் ராயின் பல வருட டிரைவர் ஆவார். இராமன் கோவிலுக்குள் யாரும் ஒரு பேனாவைக் கூட எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல முடியாது. ஆனால், டின்னுவின் கார் மட்டும் உள்ளே என்ன இருந்தாலும் எந்தச் சோதனையும் இல்லாமல் கடைசி வரை செல்லும். இந்த கொள்ளையில் டின்னுவைத் தவிர அவருடைய அண்ணன் மகன் மனிஷ் யாதவ், லவ்குஷ் மிஸ்ரா, அனில் மிஸ்ரா, அனுகல்ப் மிஸ்ரா மற்றும் அவனிஷ் மிஸ்ரா எனப் பல பெயர்கள் உள்ளன. எல்லாரிடமும் கோடிக்கணக்கில் சொத்து சேர்ந்துள்ளது, இதை விசாரிக்க வேண்டும். இவர்கள் எல்லாரும் ஒரு சங்கிலியின் கண்ணிகள் போன்றவர்கள். ஏதோ ஒரு உதவியாளரைப் பிடிப்பதால் எந்தப் பயனும் இல்லை. இதன் சூத்திரதாரியைப் பிடிப்பதுதான் முக்கியம்” என்றார்.
இந்த அறக்கட்டளையில் மகிபால் சிங் ஜனவரி 2021 முதல் மே 2022 வரை கணக்கு அதிகாரியாகப் பணியாற்றினார். இராமன் கோவில் காணிக்கைப் பணத்தை எண்ணும் பணி இவருடைய மேற்பார்வையில்தான் நடந்து வந்தது. இராமன் கோவில் நன்கொடைகளில் முறைகேடு நடந்துள்ளதாக அவர்தான் குற்றம் சாட்டினார். அலுவலகத்தின் வாராந்திரக் கூட்டத்தில் காணிக்கைப் பணத்தில் முறைகேடு நடப்பதாக அவர் புகார் அளித்தபோது, அவருக்குப் பதிலாக வேறு ஒரு கணக்கு அதிகாரி நியமிக்கப்பட்டார்; அதன் பிறகு அவராகவே இந்த அமைப்பிலிருந்து விலகிவிட்டார்.
அவர் பி.பி.சி. ஹிந்தியிடம், “எனக்குக் கொலை மிரட்டல் வந்துள்ளது. நான் மிகுந்த மன அழுத்தத்திலும் பயத்திலும் இருக்கிறேன். என்னால் இப்போது எதுவும் பேசக்கூடிய சூழ்நிலை இல்லை. நான் இதுவரை பொதுவெளியில் என்ன சொல்லியிருக்கிறேனோ, அதையே எனது கருத்தாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.
500 ஆண்டுகளுக்கு முந்தைய பாபர் மசூதியை இடித்து, இந்துத்துவக் கும்பல்களால் மதக் கலவரம் உருவாக்கப்பட்டு அயோத்தியில் இராமன் கோவில் கட்டப்பட்டது. அப்படி கட்டப்பட்ட இராமன் கோவிலில் கொள்ளை அடித்து மக்கள் பணத்தைத் தின்று சங்கி கும்பல் வயிறு வளர்த்து வருகிறது.
பக்தி என்ற பெயரில் இராமன் கோவிலை மையமாக வைத்து சுற்றுலாப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்துவிட்டுள்ளது, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிச கும்பல். இன்று இராமன் கோவிலின் பணத்திலும் கொள்ளை நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாசிச கும்பலின் பக்தி என்பது மக்களை ஏய்த்து கார்ப்பரேட்டுகள், சங்கிகள் என சிறு கும்பலின் கொள்ளைக்கான முகத்திரை என்பது இதன் மூலம் அம்பலமாகிறது.
இத்தகைய கொள்ளையை இந்தியா முழுவதும் நடத்துவதற்காகவே இந்து சமய அறநிலையத்துறை போன்ற அரசு அமைப்புகளிலிருந்து கோவில்களை விடுவிக்க வேண்டுமென்று பார்ப்பன – சங்கி கும்பல் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் கோவில்களை இந்துத்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற பெயரில் இப்பிரச்சாரம் நடந்து வருகிறது.
இதற்கேற்ப விஜய் தலைமையிலான த.வெ.க. அரசும், ஒரு பார்ப்பனரை இந்து சமய அறநிலையத்துறைக்கு அமைச்சரை நியமித்துள்ளதுடன், கோவில் பணம் வேறு எதற்கும் செலவிடப்படாது எனக் கூறி ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க. கும்பலின் திட்டத்தின் ஒரு பகுதியை நிறைவேற்றியுள்ளது. இவ்வாறு பாசிச கும்பலின் திட்டத்திற்கு அடிபணிந்து தமிழ்நாட்டில் ஒவ்வொரு நடவடிக்கையாக எடுத்துவரும் த.வெ.க. அரசு, தமிழ்நாட்டின் கோவில்களை இந்துத்துவ கும்பலிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை நோக்கி நகரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
மக்கள் பணத்தை ஒரு சிறு கும்பல் கொள்ளை அடிக்க நாம் அனுமதிக்கக் கூடாது. உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் இணைந்து இதற்கு எதிராக போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். அயோத்தியில் மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் இந்துத்துவ கும்பல்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும்.
![]()
இரஞ்சித்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











