பா.ஜ.க ஆட்சியில் உள்ள உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள செக்டர் டி -யில் உஷா மேத்தா சாலையில் மூன்று மாடி வணிகக் கட்டடம் அமைந்துள்ளது. இக்கட்டடத்தில் ஜூன் 22 அன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இக்கோர விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தரைதளத்தில் செல்லப் பிராணிகள் விற்பனை கடை மற்றும் கிளினிக், முதல் தளத்தில் அனிமேஷன் பயிற்சி மையம், பிற தளங்களில் சில கடைகள் இயங்கி வருகின்றன. ஜூன் 22 ஆம் தேதி அன்று மதியம் 2:30 மணி அளவில் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மரத்தினால் ஆன பொருட்களினால் சிறிது நேரத்தில் கட்டிடம் முழுவதும் தீ பரவியுள்ளது.
தீ வேகமாகப் பரவியதும் மேல் தளத்தில் அனிமேஷன் கற்றுக்கொண்டிருந்த மாணவர்கள் வெளியே செல்வதற்காகக் கீழே ஓடி வந்துள்ளனர். ஆனால் கரும் புகையினால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் மற்றும் தீ வேகமாகப் பரவியதால் வெளியேற முடியவில்லை. இதனால் மாணவர்களில் ஏழு பேர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கண்ணாடி ஜன்னலை உடைத்து கீழே குதித்துள்ளனர். அதில் ஒரு மாணவர் சுற்றுச்சுவர் மீது விழுந்ததால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இக்காட்சிகள் இணையத்தில் வெளியாகி மனதைப் பதைபதைக்க வைக்கின்றன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் வேலையில் ஈடுபட்டனர். பயிற்சி மையத்தின் பிரதான கதவு இரும்பு ஷட்டராக இருந்ததால் கதவை உடைத்து உள்ளே இருந்த மாணவர்களை தீயணைப்பு வீரர்களால் மீட்க முடியவில்லை. பின்னர் கட்டடத்தின் பக்கவாட்டு சுவரை உடைத்து மாணவர்களை மீட்டுள்ளனர். சில மாணவர்கள் கழிவறைக்குள் சென்று தங்களைத் தற்காத்துக் கொண்டுள்ளனர்.
ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்து உள்ளே சென்ற தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்த 15 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். இந்த கோர விபத்து பலரின் கனவுகளையும், அவர்களுடைய குடும்பத்தையும் சிதைத்துள்ளது.
குறிப்பாக அனிமேஷன் பயிற்சி மையத்தில் ஒன்றாக பணியாற்றி வந்த நிலேஷ் குமார் – அனாமிகா சமந்தா காதல் ஜோடிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த நேரத்தில் தீ விபத்தில் இருவரும் பலியாகியிருப்பது இரு வீட்டாரின் குடும்பத்தையும் நிலைகுலையச் செய்துள்ளது.
இது குறித்து நீலேஷ் குமாரின் சகோதரர் அபிஷேக் கூறும்போது, “திருமண நிச்சயத்துக்காக கடந்த வாரம் சிறிய அளவில் நிகழ்ச்சியை எங்கள் வீட்டில் ஏற்பாடு செய்தோம். அனாமிகாவை எல்லோருக்கும் பிடித்துவிட்டது. அவர் ஒரு கள்ளம், கபடமில்லாத பெண். எப்போதும் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியாக இருப்பார். இருவரையும் இழந்ததை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
“அடுத்த வாரம் மேற்கு வங்கத்துக்குச் சென்று அவர்கள் வீட்டினரைப் பார்த்துவிட்டு வரலாம் என்று நினைத்திருந்தோம். ரயில் டிக்கெட்டும் முன்பதிவு செய்துவிட்டோம். ஆனால் எல்லாம் தலைகீழாகப் போய்விட்டது. நிச்சயம் முடிந்து ஒரு வாரமான நிலையில் இந்த சம்பவம் நடந்துவிட்டது” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த ஸ்ரீவஸ்தவா என்ற இளைஞரின் தாயார் “சுமார் இரண்டரை மணி நேரம் என் மகன் புகை மண்டலத்தில் சிக்கியிருந்தான். கொஞ்சம் முயற்சி எடுத்திருந்தால் பிள்ளைகளைக் காப்பாற்றியிருக்கலாம். வீடியோ எடுப்பதற்குப் பதிலாக உதவி செய்திருந்தால், சில உயிர்களாவது பிழைத்திருக்கும். ஒருவேளை என் மகன்கூட காப்பாற்றப்பட்டிருப்பான்” என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் குடும்பத்தின் ஒரே வருமான ஆதாரமாக இருந்த அப்துல் ரஹ்மானின் மரணம் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட தந்தையையும், தாயையும் நிர்க்கதியாக்கியுள்ளது. ”8-10 மாதங்களுக்கு முன்புதான் அவனுக்கு வேலை கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான்“ என்று அவருடைய நண்பர் ஷேக் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக “கட்டடத்தில் 20-25 ஏசிகள் பொருத்தப்பட்டிருந்தன. ஆனால் மின் இணைப்பு வெறும் 10KW திறனுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது. இது அப்பட்டமான விதிமீறல்” என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் “வெளியேற ஒரே ஒரு வழிதான் இருந்துள்ளது. அதுவும் ஷட்டர்களால் பூட்டப்பட்டிருந்தது. ஒரு கதவாக இருந்திருந்தால்கூட உடைத்துக்கொண்டு சென்றிருக்கலாம். பிள்ளைகள் உள்ளே சிக்கிக்கொண்டார்கள். ஒரு பெண், கம்பியைப் பிடித்துத் தப்பினாள், காயப்பட்டாலும் உயிர் பிழைத்தாள்” என்று அப்பகுதிவாசி கதறும் காட்சி, நிர்வாகத்தின் அலட்சியத்தை அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது.
படிக்க: சத்தீஸ்கர்: வேதாந்தா மின் நிலைய விபத்தில் 20 தொழிலாளர்கள் பலி!
விபத்து நடந்து உயிர்கள் பலியான பிறகு லக்னோ வளர்ச்சி ஆணையம், மின்சார வாரியம் மற்றும் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கட்டடத்தின் கூட்டு உரிமையாளர்களான ராம் கிருஷ்ணா உபாத்தியாய், வீரேந்திர பிரசாத் சுக்லா, துஷார் கிருஷ்ணா ஜெய்ஸ்வால், சுரேஷ் குமார் சாஹு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற கண்துடைப்பு நடவடிக்கைகள் மூலம் தன்னுடைய பச்சைப் படுகொலையை மறைக்க முயல்கிறது யோகி அரசு.
குறிப்பாக கட்டடத்தில் தீயணைப்பு பாதுகாப்பு கருவிகள், தீ விபத்து ஏற்பட்டால் வெளியேறுவதற்கு அவசரக் கால வழி, புகை போவதற்கான வழி என அனைத்து விதிமுறைகளும் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. அக்கட்டடம் குடியிருப்பு பயன்பாட்டிற்காகவே அனுமதி பெற்றிருந்தது. ஆனால் சட்டவிரோதமாக வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது தற்போது அம்பலமாகியுள்ளது. எனவே, இது விபத்தல்ல; யோகி அரசால் நிகழ்த்தப்பட்ட பச்சைப் படுகொலையாகும்.
2016-ஆம் ஆண்டே, அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் என்ற காரணத்தால் இந்த கட்டடத்தை இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வெறும் இரண்டு மாதங்களில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
தனியார் நிறுவனத்தின் லாபத்திற்காகச் சட்டவிரோதமாக வணிக நிறுவனமாக இயங்குவதற்கு அனுமதி அளித்த அதிகாரிகளைப் பதவி நீக்கம் செய்து கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும். அனைத்து தனியார் நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். சட்டவிரோதமாக இயங்கும் நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்பட வேண்டும்.
பாசிச மோடி அரசு தனியார் நிறுவன முதலாளிகளின் நலன்களுக்காக சட்டவிரோதமாக நிறுவனங்கள் செயல்பட அனுமதியளித்து மக்களைக் கொன்று குவித்து வருகிறது என்பதையே டெல்லி மால்வியா நகர் உணவக தீ விபத்தும், தற்போதைய லக்னோ தீ விபத்தும் நமக்கு உணர்த்துகின்றன.
![]()
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











