கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் எலவனாசூர்கோட்டையில் ஆசனூர் சாலையில் உள்ள மிகவும் பழமையான நவாப் பள்ளிவாசல் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக இந்தப் பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வருகின்றனர்.
இந்தப் பள்ளிவாசலுக்கு அருகே தனிநபருக்குச் சொந்தமான 27 சென்ட் இடத்தை 1984-ஆம் ஆண்டு கிரயம் பெற்று இஸ்லாமியர்கள் அதனை சுற்றுச்சுவர் அமைத்து மயானமாக 35 ஆண்டு காலமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இடம் ஜமாஅத் பெயரில் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரத்தின் அடிப்படையில் வாங்கப்பட்ட சொத்து என்பதற்கான ஆவணங்களும் உள்ளது. ஆனால், அந்த இடம் வருவாய்த் துறையின் யூ.டி.ஆர். பதிவேட்டில் பொது பாதை எனத் தவறுதலாக உள்ளது. இதனை இரத்து செய்ய மாவட்ட ஆட்சியர் மற்றும் திருக்கோவிலூர் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாத் சார்பாக மனு அளிக்கப்பட்டு அதன் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.
இதனை அறிந்த சங்கி கும்பல் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், அவ்விடமானது அங்குள்ள சிவன் கோவிலின் தேரோடும் பாதை என வதந்திகளைப் பரப்பி வருகிறது. மயானத்தை இடிக்க வேண்டுமென மதக் கலவரத்தைத் தூண்டும் வகையிலும் சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையிலும் பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த சங்கி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க போலீசு துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
ஏற்கெனவே, திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அருகில் தீபம் ஏற்றுவதன் மூலம் மதக்கலவரத்தை ஏற்படுத்த முயன்று வரும் சங்கி கும்பல், தற்போது கள்ளக்குறிச்சியிலும் கலவர முயற்சியில் இறங்கியுள்ளது.
குறிப்பாக, சங்கி கும்பலின் கலவரத் திட்டத்திற்கு எதிராகவும் சமூக ஒற்றுமையைப் பாதுகாக்கவும் ஜனநாயக சக்திகளின் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஆகஸ்ட் 4, 2026 அன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் அதிகாரக் கழகம், இந்திய தேசிய காங்கிரசு, தேசிய முற்போக்கு திராவிட கழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட, வட்ட உள்ளூர் அரசியல் நிர்வாகிகள் மற்றும் சமூக அமைப்புகளின் நிர்வாகிகள், ஜமாஅத் முத்தவல்லிகள் கலந்துகொண்டனர். சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பது மற்றும் ஜமாத் இடம் சம்பந்தமாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தின் முடிவில், சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் ஆவணங்களைச் சரி செய்யவும் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியரை நேரில் சந்தித்து ஆகஸ்ட் 5 அன்று கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது. விசாரணை முடிவுகளைப் பொறுத்து அனைத்து ஜனநாயக சக்திகளும் இணைந்து சட்டப்பூர்வமான மற்றும் அமைதியான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது என ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
ஏற்கெனவே, எலவனாசூர்கோட்டையில் அரும்பலவாடி கிராமத்தில் பிள்ளையார் வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலின் கலவர முயற்சி முறியடிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் நீண்ட காலமாக நிலவிவரும் மத நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை எந்த விதத்திலும் பாதிக்க அனுமதிக்கக் கூடாது என்றும், பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சமூகப் பதற்றத்தைப் பரப்பிவரும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து கட்சி சார்பாக உளுந்தூர்பேட்டை வட்டாட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. வருவாய்த்துறை பதிவேட்டில் பள்ளிவாசல் நிர்வாகத்தில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் திருத்தம் செய்ய வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டது. வருவாய் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் மனுவைப் பெற்றுக்கொண்டு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் டிஜிட்டல் பேனர்கள் வைப்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து கட்சியின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதில் மக்கள் அதிகாரக் கழகத்தின் தோழர் விநாயகம் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஆகஸ்டு 5 மாலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான கூட்டத்தின் முடிவில் அனைத்து கோவில் தேர் செல்லும் பாதை உள்ளிட்ட அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அளந்து அகற்றுவது என இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனால் சங்கிகளுக்கு பலமான அடி விழுந்துள்ளது.
தோழர் விநாயகம்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம்,
7200112838
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





