02.08.2026

சேலம் ஜருகுமலை: அடிப்படை வசதிகளின்றித் துன்பப்படும்
மேலூர், கீழூர் மலைக்கிராம மக்கள்

பத்திரிகைச் செய்தி

சேலம் மாவட்டம், ஜருகுமலையில் அமைந்துள்ள மேலூர், கீழூர் ஆகிய மலைக் கிராமங்களில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இயற்கை வளம் நிறைந்த இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெறாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

குடிநீர், போக்குவரத்து, மருத்துவம், கல்வி, தெருவிளக்கு, அத்தியாவசியப் பொருள்கள், விவசாய விளை பொருள்களின் விற்பனை என அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் மக்கள் போராடி வருகின்றனர்

மேலூர் கிராமத்தில் முழுமையாக குடிநீர் கிடைப்பதில்லை. இக்கிராமத்தில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டிருந்தாலும், அங்கிருந்து தண்ணீரை வீட்டுக்குக் கொண்டு வர சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தலையில் சுமந்தே வர வேண்டியிருக்கிறது. குடிநீர் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் பைப் லைன் எதுவும் இல்லை.

கிராமத்தில் ஒரு பொதுக் கிணறும் உள்ளது. அங்கும் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மின் மோட்டார் வசதி இல்லாததால் அந்தக் கிணறு பயன்பாட்டில் இல்லை. இதனால் வீட்டுப் பெண்கள் நடந்து சென்று ஒரு கிலோமீட்டர் தூரம் தண்ணீரை தலையில் சுமந்துவர வேண்டியுள்ளது.

மேலூர் கிராமத்தில் எந்த தெருவில் சென்றாலும் எரியாத தெருவிளக்குகள் தான் உள்ளன. இரவில் அச்சத்தில் வயது முதிர்ந்தவர்கள் உள்ளிட்ட மக்கள் அனைவரும் பெரும் துன்பத்திற்கு ஆளாகின்றனர்.

கிராமத்தில் தெருவிளக்குகள் பல இடங்களில் செயல்படாமல் உள்ளன. மருத்துவமனை இல்லை… உடல்நலக் குறைவு ஏற்பட்டால் 10 கி.மீ பயணிக்க வேண்டும். இந்த கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையமோ, மருத்துவமனையோ இல்லை. குழந்தைகளுக்கோ, பெரியவர்களுக்கோ உடல்நலக் குறைவு ஏற்பட்டால், இந்த மலைக் கிராமத்தை விட்டு அடிவாரப் பகுதிக்கோ அல்லது சேலம் நகருக்கோதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

சேலத்திலிருந்து சில கிலோமீட்டர்கள்… ஆனால் வளர்ச்சியிலிருந்து பல ஆண்டுகள் பின்தங்கிய மலைக் கிராமங்களாக தற்போதும் உள்ளன. ஜருகுமலை மேலூர் – கீழூர் மக்கள் முழுமையாக அடிப்படைத் தேவை கூட கிடைக்காததால் பல மாணவர்கள் விடுதிகளில் தங்கிப் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

பொருளாதார வசதி இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த சில மாணவர்கள் மேல் நிலைக் கல்வியைத் தொடர முடியாமல், எட்டாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பையே இடைநிறுத்தும் சூழல் நிலவுகிறது.

அரளிப்பூ விவசாயம்… சந்தையை அடைவதே சவால்!

பகுதி கிராமங்களில் விவசாயம் முதன்மைத் தொழில் உள்ளது. பெரும்பாலானோர் அரளிப்பூ சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விளைவித்த அரளிப்பூக்களை விற்பனை செய்வதற்காக சேலம் நகருக்குத்தான் கொண்டு செல்ல வேண்டும். ஆனால், போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் விளைபொருட்களை சந்தைக்குக் கொண்டு செல்வதில் விவசாயிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

மேலும், இந்த மலைக் கிராமங்களில் அன்றாடம் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்குக்கூட கடைகள் இல்லை. அடிவாரப் பகுதிக்கோ அல்லது சேலம் நகருக்கோதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே, சேலம் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு போர்க்கால அடிப்படையில் மக்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

ஜருகுமலை மற்றும் மேலூர், கீழூர் மக்களின் கோரிக்கைகள்:

  • மேலூர் கிராமத்தில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் மின்மோட்டார் வசதி செய்து தர வேண்டும்.
  • மேலூர் மற்றும் கீழூர் கிராமத்தில் வீடுகளுக்கு அல்லது வசிக்கும் வீதிகளில் தண்ணீர் கிடைக்கும் படி பைப் லைன் அல்லது வாட்டர் டேங்க் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
  • மேலூர் கிராமத்தில் தெருவிளக்குகளை உடனடியாக சரி செய்து தர வேண்டும்.
  • மேலூர் மற்றும் கீழூர் மக்கள் அவசர சிகிச்சை பெற ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துத் தர வேண்டும்.
  • உடனடியாக மக்களின் தேவைக்கேற்ப போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும்.

செய்தி ஆதாரம்: விகடன்


இவண்,
தோழர் இரஞ்சித்,
மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க