
12.07.2026
சேலம்: கெங்கவல்லி ஒன்றியம் ஒதியத்தூரில்
அம்பேத்கர் சிலை திறப்பதைத் தடுக்கும் சாதிவெறியர்கள்
பத்திரிகைச் செய்தி
சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஒன்றியம், ஒதியத்தூர் ஊராட்சிப் பகுதியில் பெரும்பான்மையாக வன்னியர் சாதியைச் சார்ந்தவர்களும், குறிப்பிட்ட அளவு தலித் மக்களும் வசித்து வருகின்றனர். அங்கு பேருந்து நிறுத்தம் அருகில், கடந்த 2021 ஆம் ஆண்டு தலித் மக்கள் தரப்பில் அண்ணல் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. அண்ணல் அம்பேத்கர் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பது போல் அச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால், அம்பேத்கர் சிலை நிறுவுவதைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், சாதிய வன்மம் கொண்ட ஆதிக்கச்சாதியைச் சார்ந்த நபர்கள், அச்சிலை புறம்போக்கு இடத்தில் உள்ளதாகவும், அதனால் சிலையைத் திறக்கக் கூடாது எனக் கூறி பிரச்சினை செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சிலை மூடி வைக்கப்பட்டது. இதனால் கடந்த 5 ஆண்டுகளாக மீண்டும் சிலையைத் திறக்க முடியவில்லை. இதற்கு அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததும் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாவட்ட ஆட்சியர், அம்பேத்கர் சிலையைத் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளார். மேலும் உடனடியாக சிலையைத் திறக்க வேண்டும் எனவும், இல்லையெனில் அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜூலை 10) மாவட்ட நிர்வாகம் சிலையைத் திறந்து வைத்துள்ளது. இதனால் ஆத்திரமுற்ற ஆதிக்கச் சாதி வெறியர்கள், அண்ணல் அம்பேத்கர் சிலையை உடனடியாக மூட வேண்டும் என்று கூறி, மக்களைத் தூண்டிவிட்டு, சாலை மறியல் செய்துள்ளனர்.
சாதிவெறியோடு சிலையை மூட வேண்டும் என்று பிரச்சினை ஏற்படுத்துபவர்களைக் கைது செய்து, சிலையைத் திறப்பதை உறுதிப்படுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகம் சாதிவெறியர்களின் அழுத்தத்துக்கு அடிபணிந்து, அம்பேத்கர் சிலையை மீண்டும் தகரம் வைத்து அடைத்து விட்டது.
அதேசமயம், அம்பேத்கர் சிலையைத் திறக்க வேண்டும் என்று போராடிய தலித் மக்களின் மீது போலீசார் தடியடி நடத்தியதோடு மட்டுமில்லாமல் சிலரைக் கைதும் செய்துள்ளனர்.
இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஒதியத்தூர் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையைத் திறந்து வைக்க வேண்டும்; சட்டவிரோதமாகச் சிலையை மூடிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; சாதிய வன்மத்தோடு சிலையைத் திறப்பதற்குத் தடையாக உள்ள நபர்கள் மீது சாதிய வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்; நீதிக்காகப் போராடி, போலீசால் கைது செய்யப்பட்டுள்ள தலித் மக்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
அதோடு மட்டுமல்லாமல், சாதிவெறியை மக்களிடத்தில் தங்குதடையின்றி பரப்பிக் கொண்டிருக்கின்ற, உழைக்கும் மக்களின் ஒற்றுமைக்கு ஆபத்தாகவுள்ள ஆதிக்க சாதிவெறி சங்கங்களையும், அத்தகைய கும்பல்களுக்குப் பின்புலமாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, சங்பரிவார் கும்பல்களையும் தடை செய்யக் கோரி போராடுவது இன்றியமையாதது என்பதையும் மக்கள் அதிகாரக் கழகம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது.
![]()
இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





