ஜூலை 5, 2026 – சென்னகரம்பட்டி நிலவுரிமைப் போராட்டத் தியாகிகளின் 35-ஆம் ஆண்டு நினைவு நாளாகும். தலித் மக்களின் அரசியல் அதிகாரத்திற்காகப் போராடி வீரமரணம் அடைந்த மேலவளவுத் தியாகிகளின் 30-ஆம் ஆண்டு அனுசரிக்கப்படும் இச்சமயத்தில், நிலவுரிமைக்காகப் போராடி உயிர்நீத்த சென்னகரம்பட்டி தியாகிகளையும் நாம் நினைவுகூற வேண்டியுள்ளது. மதுரை மாவட்டத்தில் அருகாமை கிராமங்களான சென்னகரம்பட்டியிலும் மேலவளவிலும் 1990-களில் அடுத்தடுத்து நடந்தேறிய சாதியப் படுகொலைகள், அக்காலகட்டத்தில் தலித் மக்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சியையும் அதனை இரத்தச்சகதியில் மூழ்கடிக்க ஆதிக்கச் சாதிவெறியர்கள் வெறிகொண்டு அலைந்ததையும் நிரூபிக்கின்றன.
சென்னகரம்பட்டி சாதியப் படுகொலை
மதுரை மாவட்டத்தில் அம்பலக்காரர்கள் எனப்படும் முக்குலச்சாதியரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த கிராமம் சென்னகரம்பட்டி. அங்கு 1991 ஜூலை 30-ஆம் தேதி அம்மச்சி அம்மன் கோயிலுக்கான நிலம் ஏலம் விடப்பட்டது. 1987 முதலே குத்தகை உரிமைக் கேட்டு வந்தார்கள் தலித்(பறையர்கள்)கள். அதனாலேயே அம்பலத்தார்கள் ஏலத்தைத் தள்ளிப்போட வைத்து வந்தனர். 1991-ஆம் ஆண்டிலும் தலித்துகள் ஏலம் எடுப்பதில் முனைந்தனர்.
இதைக் கண்டித்து அம்பலக்காரர்கள் ஏலத்திலிருந்து விலகிப் போனார்கள். ஆனாலும் பூர்ண பிரகாஷ் என்னும் அம்பலக்காரர் மட்டும் கலந்துகொண்டார். தலித்துகள் தரப்பில் பெருமாள் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் ஏலம் கேட்டனர். பெருமாள் மற்றும் ஆறுமுகதிற்கே ஏலமும் கிடைத்தது. “கீழ்ச்சாதிகாரன், நம் நிலத்திலே பண்ணையடிப்பவன் நிலத்தில் உரிமைக் கொண்டாடுவதா?” என்று அம்பலக்காரர்கள் கடும் கோபமடைந்தனர். பெருமாள் மற்றும் ஆறுமுகம் எடுத்த ஏலம் செல்லாது என்று நீதிமன்றத்திற்குச் சென்றனர் அம்பலச்சாதிக்காரர்கள். ஆனால், சென்னை உயர்நீதிமன்றமோ தலித்துகள் எடுத்த ஏலம் செல்லும் என்று 1991 நவம்பர் 22-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றத்தில் தோற்றுப்போன அம்பலச்சாதியினர் கிராமத்தில் தலித்துகளை ஒடுக்குவதைத் தீவிரப்படுத்தினார்கள்.
தங்களின் நிலத்தில் இனி வேலை செய்யக்கூடாது என்று தலித்துகளுக்குத் தடைப் போட்டனர் சாதிவெறியினர். இதனால் பக்கத்து ஊர்களுக்கு உழைக்கப் போனார்கள் தலித்துகள். இதனால் மேலும் வெறியடைந்த சாதிவெறியர்கள் 1992 ஜூலை 3-ஆம் தேதி பக்கத்து ஊர்களுக்கு வேலைக்குச் சென்று வந்த அழகி, ராஜேந்திரன், சேவி, நல்லமணி போன்றவர்களை வெட்டித்தாக்கினார்கள். கொலை முயற்சி பிரிவு மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கெல்லாம் போட்டாலும் நடவடிக்கை எடுக்கவில்லை அன்றைய ஜெயலலிதா அரசின் போலீசுதுறை. போலீசுதுறையின் இந்தக் கையாலாகாத்தனம்தான் சாதிவெறியர்கள் இன்னும் தீவிரமாக இயங்கக் காரணமாகவும் ஆனது.
மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சமாதானப் பேச்சுக்காக 1992 ஜூலை 5-ஆம் தேதி இரு தரப்பையும் அரசு அழைத்தது. தலித்துகள் மட்டும் வந்தார்கள். சாதி இந்துக்கள் வரவில்லை. அப்போதாவது அவர்களின் திட்டம் அறிந்து அரசு தீவிர நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் எடுக்கவில்லை. அல்லது திட்டமே ஆளும் தரப்பின் ஆசியுடன் நடந்திருக்கலாம்தான். இரவு எட்டு மணியளவில் அதுவரை காத்திருந்த தலித்துகளைப் போகச் சொன்னார்கள் அதிகாரிகள்.
சுமார் பத்து மணி அளவில் சுந்தர்ராஜபுரத்தில் தலித்துகள் வந்த பேருந்தை வழிமறித்தது ராமர் என்னும் சாதிவெறியனின் தலைமையிலான சாதிவெறிக் கூட்டம். எல்லோர் கையிலும் ஆயுதங்கள். பேருந்தில் இருந்த போலீசுகாரர்களும் தப்பி ஓடினார்கள். மற்றவர்கள் எல்லோரும் தாக்குதல் துவங்கியவுடன் இருட்டில் ஓடி தப்பித்துக்கொள்ள அம்மாசியும் வேலுவும் மட்டும் சாதிவெறிக் கும்பலிடம் சிக்கிக்கொண்டனர். பேருந்திலிருந்து இழுத்துப்போடப்பட்ட அந்த இருவரையும் சராமாரியாக வெட்டினார்கள் சாதிவெறியர்கள். இரத்தச் சகதியில் பலியானார்கள் அந்த நிலவுரிமைப் போராளிகள்.
(முகநூலில் தோழர் ஸ்டாலின் தி எழுதிய பதிவு…)
000
சென்னகரம்பட்டி படுகொலைக்குத் தலைமை தாங்கிய ராமர் என்ற ஆதிக்கச் சாதிவெறியனின் தலைமையிலேயே 1997-இல் மேலவளவு படுகொலையும் நடத்தப்பட்டுள்ளது. அதிலும், ஆதிக்கச் சாதிவெறியர்களின் கொட்டத்தை முறையிடுவதற்காக மதுரை மேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது, பேருந்தை நிறுத்தி வெட்டிக் கொல்வது என்ற வகையிலேயே இரண்டு படுகொலைகளும் அரங்கேற்றப்பட்டுள்ளன.
உண்மையில், சென்னகரம்பட்டி கொலை வழக்கினை அரசும் போலீசுதுறையும் நேர்மையான முறையில் கையாண்டிருக்குமானால் மேலவளவு கொலை நிகழ்ந்திருக்காது. சென்னகரம்பட்டிக்கும் மேலவளவுக்கும் இடையிலான தொலைவு ஒரு கிலோ மீட்டர் தூரம்தான். சென்னகரம்பட்டி கொலை இரவு நேரத்தில் ஓடும் பேருந்தை நிறுத்தி நிகழ்த்தப்பட்டது. மேலவளவு கொலையோ, பட்டபகலில் ஓடும் பேருந்தை நிறுத்தி நிகழ்த்தப்பட்டது. சென்னகரம்பட்டி கொலை நிகழ்ந்த அதே சாலையில் கொலை நிகழ்ந்த இடத்திற்கு நூறு மீட்டர் தொலைவில் ஐந்து ஆண்டுகள் இடைவெளியில் மேலவளவு பாடுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. சென்னகரம்பட்டி கொலையைச் செய்த அதே கள்ளர் சாதியை சார்ந்தவர்களே மேலவளவு கொலையையும் செய்திருக்கிறார்கள். இரண்டு கொலைகளுமே இரண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் நிகழ்ந்திருக்கிறது. அரசின் மெத்தனபோக்கையும் போலீசுதுறை, நீதித்துறை போன்றவற்றின் சாதிய மனோபாவத்தைப் புரிந்துகொண்டும் சென்னகரம்பட்டி கொலையில் உற்சாகம் அடைந்த கள்ளர் சாதிவெறியர்கள் சென்னகரம்பட்டி கொலை நடந்த அதே முறையில் மேலவளவு கொலையை நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள்.
(“சென்னகரம்பட்டி படுகொலை வழக்கு” என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்கள்…)
இதற்கேற்பவே, வழக்கு விசாரணையின் போது பல ஆண்டுகள் வெளியில் சுற்றித் திரிந்த சென்னகரம்பட்டி படுகொலை குற்றவாளிகள் 26 பேரில் 22 பேர் போதிய ஆதாரம் இல்லையெனக் கூறி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மேலவளவு படுகொலை குற்றவாளிகள் 17 பேரும் தி.மு.க., அ.தி.மு.க. அரசுகளால் ‘நன்னடத்தை’ பேரில் விடுவிக்கப்பட்டனர். அதாவது, தி.மு.க., அ.தி.மு.க. அரசுகளின் துணையுடனும் போலீசுதுறை, நீதிமன்றத்தின் ஆசியுடனும் இவ்விரண்டு படுகொலை குற்றவாளிகளுமே உரிய தண்டனையின்றித் தப்பிக்க வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னகரம்பட்டி, மேலவளவு மட்டுமின்றி, 1990-களில் அரங்கேறிய உஞ்சனை, கொடியங்குளம், காரணை உள்ளிட்ட சாதியப் படுகொலைகளும், தலித் மக்கள் தங்களது அடிமைச் சங்கிலியிலிருந்து விடுபடுவதைச் சகித்துக்கொள்ள முடியாத ஆதிக்கச் சாதிவெறியால் நடத்தப்பட்டவையாகும்.
இன்று, தலித் மக்கள் படிப்பு, வேலைவாய்பு, பொருளாதாரத்தில் முன்னேறுவதைச் சகித்துக்கொள்ள முடியாமலும், தன்மானம், சுதந்திரம், சமத்துவத்தை விரும்புகின்ற தலித் இளைஞர்களின் எழுச்சிக்கு எதிராகவும் சங்கப் பரிவாரக் கும்பல் – ஆதிக்கச் சாதிவெறி சங்கங்கள் தாக்குதல் தொடுக்கின்றன. தமிழ்நாட்டில் சமீப ஆண்டுகளாக அரங்கேறிவரும் சாதியத் தாக்குதல்களையும் ஆணவப் படுகொலைகளையும் இந்த அடிப்படையிலேயே பார்க்க வேண்டியுள்ளது.
இதற்கெதிராகக் குரல் கொடுப்பதற்கும் போராடுவதற்கும் மேலவளவு – சென்னகரம்பட்டி உள்ளிட்ட சாதி எதிர்ப்பு போராளிகளின் தியாகத்தை வரித்துக்கொள்வது அவசியமாகும்.
சென்னகரம்பட்டி நிலவுரிமைப் போராட்டத் தியாகிகளுக்கு வீரவணக்கம்!
![]()
தொகுப்பு: சோபியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











