ஜூலை 3: காசா இனப்படுகொலையின் 1000-ஆவது நாள்!

சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா. அமைப்புகள் தொடர்ந்து போர் நிறுத்த வலியுறுத்தல்களைச் செய்து வந்த போதிலும், இந்த 1,000 நாட்களைக் கடந்தும் காசா மக்களின் மீதான பொருளாதார முற்றுகை, உணவு மற்றும் மருத்துவப் பற்றாக்குறை மற்றும் ராணுவக் கட்டுப்பாடுகள் இன்னும் முழுமையாக நீங்கவில்லை.

டந்த ஜூலை 3-ஆம் தேதியுடன் காசா மீதான இஸ்ரேலின் தற்போதைய தாக்குதல் மற்றும் இனப்படுகொலை 1,000-ஆவது நாளை எட்டியுள்ளது. அக்டோபர் 7, 2023 அன்று தொடங்கிய இந்த இன அழிப்புப் போர் 1,000 நாட்களைக் கடந்தும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த 1,000 நாட்களில் 73,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். காசா பகுதியில் மட்டும் 1,73,000-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் அல்லது நிரந்தர ஊனமடைந்துள்ளனர். போர்நிறுத்த உடன்படிக்கைக்குப் பிறகும் 1,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையான 23 லட்சம் மக்களில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் (20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்) தங்களின் சொந்த வீடுகளை இழந்து, அகதிகளாகத் தற்காலிக முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டு காசாவின் 90 சதவிகித உள்கட்டமைப்புகள் (வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள்) முற்றிலுமாக அழிக்கப்பட்டு அல்லது சேதப்படுத்தப்பட்டு காசா பகுதியானது இடிபாடுகளின் நகரமாக மாறியுள்ளது.

உணவு, தூய்மையான நீர் மற்றும் மருத்துவ உதவிக்கான எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் கடுமையான பஞ்சம் மற்றும் நோய்த்தொற்றுகள் பரவி வருகின்றன.

சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா. அமைப்புகள் தொடர்ந்து போர் நிறுத்த வலியுறுத்தல்களைச் செய்து வந்த போதிலும், இந்த 1,000 நாட்களைக் கடந்தும் காசா மக்களின் மீதான பொருளாதார முற்றுகை, உணவு மற்றும் மருத்துவப் பற்றாக்குறை மற்றும் ராணுவக் கட்டுப்பாடுகள் இன்னும் முழுமையாக நீங்கவில்லை.

காசா பகுதியின் 70 சதவிகிதத்திற்கும் அதிகமான நிலப்பரப்பை இஸ்ரேல் தனது நேரடி ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.


படிக்க: காசா: தீவிரமடையும் எரிவாயு தட்டுப்பாடு!


சர்வதேச அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் அறிக்கையின்படி, காசா பகுதியில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலை மற்றும் மனிதநேயமற்ற நடவடிக்கைகள் இன்றும் தொடர்கின்றன. அங்கு அறிவிக்கப்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தங்களுக்கு மத்தியிலும், இஸ்ரேலியப் படைகளின் கட்டுப்பாடுகள் மற்றும் தாக்குதல்களால் பொதுமக்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர்.

ஐ.நா-வின் சுதந்திரமான சர்வதேச விசாரணைக் குழு (UN Commission of Inquiry), காசா பகுதியில் திட்டமிட்டு குழந்தைகளை இலக்கு வைப்பதன் மூலம் இஸ்ரேல் இனப்படுகொலையை நிகழ்த்தி வருவதாகத் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

“அம்னெஸ்டி இன்டர்நேஷனல்” (Amnesty International) மற்றும் “பிட்செலெம்” (B’Tselem) போன்ற முன்னணி அமைப்புகள், போர்நிறுத்த காலத்திலும் காசாவில் பாலஸ்தீனியர்கள் கொல்லப்படுவதும், அவர்களின் வாழ்விடங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுவதும் தொடர்வதால் இனப்படுகொலை இன்னும் ஓயவில்லை எனத் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா தொடர்ந்துள்ள இனப்படுகொலை வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) தற்போதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெதர்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்பெயின், துருக்கி உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட நாடுகள் தென்னாப்பிரிக்காவின் வழக்கிற்கு ஆதரவாக நீதிமன்றத்தில் இணைந்துள்ளன.

இருப்பினும், இஸ்ரேல் தம்மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை அழிப்பதே தங்களின் நோக்கம் என்றும், பொதுமக்கள் மீது திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தவில்லை என்றும் இஸ்ரேலும், அதற்கு ஆதரவாக அமெரிக்காவும் சர்வதேச நீதிமன்றத்தில் பொய்யுரைத்து வருகின்றன.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் இந்த இன அழிப்பு போருக்கு ஆதரவாகவே பாசிச மோடி அரசு செயல்பட்டு வருகிறது. ஆகவே, உலக நாடுகளின் உழைக்கும் மக்கள் இப்போருக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடுவதைப் போல, பாசிச மோடி அரசுக்கு எதிராகவும், காசா மீதான இன அழிப்புப் போருக்கு எதிராகவும் உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் நாடெங்கிலும் போராட்டங்களைக் கட்டியமைத்து களத்தில் இறங்க வேண்டும்.


இரஞ்சித்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க