2025-ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான கடுமையான அத்துமீறல்களில் (Grave violations) இஸ்ரேல் அதிகபட்ச அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டறிக்கை தெரிவிக்கிறது. மேலும், 30 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.நா-வின் “குழந்தைகள் மற்றும் ஆயுத மோதல்கள்” (Children and Armed Conflict) ஆணை நிறுவப்பட்டதிலிருந்து முதல் முறையாக, அரசுப் படைகள் இத்தகைய அத்துமீறல்களில் முக்கியக் குற்றவாளிகளாக உருவெடுத்துள்ளன என அறிக்கை கூறுகிறது.
ஐ.நா. பொதுச்செயலாளரின் ஆண்டு அறிக்கையான “குழந்தைகள் மற்றும் ஆயுத மோதல்கள்” (Children and Armed Conflict) என்ற அறிக்கை, 2025-ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிராக உறுதிப்படுத்தப்பட்ட 38,558 கடுமையான மீறல்களைப் பதிவு செய்துள்ளது. இது தொடர்ந்து நான்காவது ஆண்டாகக் கவலைதரும் எண்ணிக்கையாகவும், கண்காணிப்பு தொடங்கியதிலிருந்து பதிவான மிக உயர்ந்த எண்ணிக்கையாகவும் உள்ளது. இந்தாண்டிற்கான அறிக்கையானது பாசிச பா.ஜ.க கும்பலால் ஓரங்கட்டப்பட்ட ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி முரளிதர் தலைமையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, 24,174 குழந்தைகள் நேரடியாகக் கடுமையான அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் குழந்தைகள் கொல்லப்படுதல் மற்றும் உடல் ஊனமடையச் செய்யப்படுதல், ஆயுதக் குழுக்களால் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுப் பயன்படுத்தப்படுதல், கடத்தல், பாலியல் பலாத்காரம் மற்றும் பிற வகையான பாலியல் வன்முறைகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள், மனிதாபிமான உதவிகளை மறுத்தல் ஆகியவை அடங்கும்.
ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட அத்துமீறல்களுக்கு ஆளாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பெண் குழந்தைகள் ஆவர்.
“குழந்தைகள் மற்றும் ஆயுத மோதல்கள்” அறிக்கை தயாரிக்கப்பட்டதிலிருந்து முதல் முறையாக, குழந்தைகளுக்கு எதிரான கடுமையான மீறல்களின் முக்கியக் குற்றவாளிகளாக அரசுப் படைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மோதல்கள் தீவிரமடைதல், மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் வெடிகுண்டு ஆயுதங்களின் பயன்பாடு அதிகரித்தல் மற்றும் இராணுவ இலக்கு நிர்ணய செயல்முறைகளில் செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைக்கப்படுவது போன்ற செயல்பாடுகள் இதற்குக் காரணமாக அமைகின்றன.
கொல்லப்படுதல் மற்றும் உடல் ஊனமடையச் செய்யப்படுதல் ஆகியவை தொடர்ந்து அதிகம் உறுதிப்படுத்தப்பட்ட மீறல்களாக இருக்கின்றன.
6,266 குழந்தைகள் கொல்லப்பட்டதையும், 7,958 குழந்தைகள் உடல் ஊனமடைந்ததையும் பதிவு ஐ.நா. செய்துள்ளது. 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குழந்தைகள் கொல்லப்பட்ட எண்ணிக்கை 34 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
மனிதாபிமான உதவிகளை மறுத்தல் தொடர்பாக 8,322 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதேவேளை, மோதலில் ஈடுபட்ட தரப்புகளால் 6,607 குழந்தைகள் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் கடத்தப்பட்ட 5,129 சம்பவங்களையும் அறிக்கை பதிவு செய்துள்ளது. இவற்றில் பல, ஆட்சேர்ப்பு அல்லது பாலியல் வன்முறையுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன.
பாலியல் பலாத்காரம் மற்றும் பிற வகையான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து கவலைக்கிடமான அளவில் நீடிக்கின்றன. குறிப்பாக, கூட்டுப் பாலியல் வன்கொடுமைகள் போர் உத்தியாகப் பயன்படுத்தப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கிறது.
2025-ஆம் ஆண்டில், அதிகபட்சமாக இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் 12,445 உறுதிப்படுத்தப்பட்ட அத்துமீறல்கள் பதிவாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து காங்கோ ஜனநாயகக் குடியரசில் 4,114, நைஜீரியாவில் 2,560, மியான்மரில் 2,203 மற்றும் சோமாலியாவில் 2,195 அத்துமீறல்கள் பதிவாகியுள்ளன. இவை, பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை மட்டுமே ஆகும்.
இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் உறுதிப்படுத்தப்பட்ட மீறல்களில் பெரும்பாலானவை இஸ்ரேலியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கை கூறுகிறது.
2025-ஆம் ஆண்டில் 5,663 குழந்தைகளுக்கு எதிராக 12,445 கடுமையான அத்துமீறல்கள் நடந்துள்ளன. அவற்றில், 9,465 அத்துமீறல்கள் இஸ்ரேலிய ஆயுத மற்றும் பாதுகாப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மேலும், 326 மீறல்கள் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளால் நடத்தப்பட்டுள்ளன என அறிக்கை கூறுகிறது.
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 2,725 குழந்தைகள் கொல்லப்பட்டதை ஐ.நா. உறுதிப்படுத்தியுள்ளது. இவர்களில் 2,668 பேர் காசாவிலும் மற்றும் 57 பேர் மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமிலும் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், உறுதிப்படுத்தப்பட்ட 2,518 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவங்களுக்கு யார் பொறுப்பு என்பது குறித்த விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது.
இஸ்ரேலில் ஐந்து குழந்தைகள் கொல்லப்பட்டதையும் ஐ.நா. உறுதிப்படுத்தியுள்ளது. இதில் இரண்டு இஸ்ரேலியக் குழந்தைகளும் மூன்று உக்ரைனியக் குழந்தைகளும் ஆவர். இந்த மரணங்களுக்கு ஈரானின் ஆயுதப் படைகளும் ஒரு பாலஸ்தீன நபரும் காரணமாகக் கூறப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 2,921 குழந்தைகள் உடல் ஊனமடைந்ததையும் ஐ.நா. உறுதிப்படுத்தியுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் காசாவைச் சேர்ந்தவர்கள். இந்தச் சம்பவங்களில் 2,760 வழக்குகளுக்கு இஸ்ரேலிய ஆயுத மற்றும் பாதுகாப்புப் படைகள் காரணமாகக் கூறப்பட்டுள்ளன.
கூடுதலாக, 981 பாலஸ்தீனக் குழந்தைகள் இஸ்ரேலியப் படைகள் அல்லது பாலஸ்தீன ஆணையத்தின் பாதுகாப்புப் படைகளால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். மேலும், இஸ்ரேலியத் தடுப்புக் காவலில் இருந்தபோது உடல் வன்முறை மற்றும் தவறான நடத்தைக்கு ஆளானதாக 66 பாலஸ்தீனக் குழந்தைகள் அளித்த சாட்சியங்களை ஐ.நா. பதிவு செய்துள்ளது.
ஒரு பாலஸ்தீனச் சிறுவன் இஸ்ரேலியத் தடுப்புக் காவலில் உயிரிழந்தான். அவனது உடற்கூறு ஆய்வு முடிவுகள், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் போதுமான மருத்துவப் பராமரிப்பு இல்லாமை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட 828 தாக்குதல்களை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. அவற்றில் 773 தாக்குதல்களுக்கு இஸ்ரேலிய ஆயுத மற்றும் பாதுகாப்புப் படைகள் காரணமாகக் கூறப்பட்டுள்ளன.
அத்துடன், மனிதாபிமான உதவிகளை மறுத்த 5,946 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. அவற்றில் 5,716 சம்பவங்களுக்கு இஸ்ரேலிய ஆயுத மற்றும் பாதுகாப்புப் படைகள் காரணமாகக் கூறப்பட்டுள்ளன.
காசாவுக்குள் மனிதாபிமான உதவிகளைக் கொண்டு செல்ல மேற்கொள்ளப்பட்ட 1,684 உதவி நடவடிக்கைகளை இஸ்ரேலிய அதிகாரிகள் மறுத்ததாகவோ அல்லது தடை செய்ததாகவோ ஐ.நா. தெரிவித்துள்ளது. மேலும், 2025 மார்ச் முதல் மே மாதம் வரை 11 வாரங்கள், மனிதாபிமான உதவிகளும் வணிகப் பொருட்களும் காசாவுக்குள் நுழைவதை இஸ்ரேல் தடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகள் உணவுப் பாதுகாப்பின்மையை மேலும் மோசமாக்கியதாக அறிக்கை கூறுகிறது. ஊட்டச்சத்து குறைபாட்டுடன் தொடர்புடைய 113 குழந்தைகள் மரணமடைந்ததாகவும், 2025 ஆகஸ்ட் மாதத்தில் காசாவில் பஞ்சநிலை அறிவிக்கப்பட்டதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.
இரண்டு பாலஸ்தீனக் குழந்தைகள் இஸ்ரேலிய ஆயுத மற்றும் பாதுகாப்புப் படைகளால் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டதை ஐ.நா. உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், காசா மற்றும் மேற்கு கரையில் பாலஸ்தீனக் குழந்தைகளுக்கு எதிராக மோதலுடன் தொடர்புடைய பாலியல் வன்முறைகள் இடம்பெற்ற பல சம்பவங்களையும் ஆவணப்படுத்தியுள்ளது.
படிக்க: கொடூர ஆயுதங்களால் குத்தி கிழிக்கப்படும் காசா குழந்தைகள்
குழந்தைகள் மற்றும் ஆயுத மோதல்கள் தொடர்பான ஐ.நா. சிறப்புப் பிரதிநிதி வனேசா ஃப்ரேசியர், 2025-ஆம் ஆண்டை “கண்காணிப்பு தொடங்கியதிலிருந்து குழந்தைகள் பாதுகாப்புக்கான மிக இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாக” விவரித்தார்.
“குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுகளின் மீது இருக்கிறது. ஆனால், அதே அரசுகளே அவர்களின் துயரத்திற்குக் காரணமாகும் போது, அது சர்வதேச சட்டத்தின் மீதான மரியாதை மேலும் சிதைந்து வருவதைக் காட்டுகிறது.” என்று ஃப்ரேசியர் கூறினார்.
இந்த அறிக்கை, நிலைக்கண்ணி வெடிகுண்டுகள் (Landmines) மற்றும் போர்களின் எஞ்சிய வெடிபொருட்கள் (Explosive remnants of war) ஏற்படுத்தும் பேரழிவு விளைவுகளை எடுத்துக்காட்டியது. மோதல்கள் முடிவடைந்த பின்னரும் குழந்தைகள் இவ்வாயுதங்களால் குறிப்பாகப் பாதிக்கப்படக் கூடியவர்களாகவே உள்ளனர் என்று அது குறிப்பிட்டது.
உயிர் தப்பியவர்கள் பெரும்பாலும் வாழ்நாள் முழுவதும் உடல் ஊனங்கள், மன உளைச்சல், கல்வி பெறுவதிலும் சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைவதிலும் தடைகள் போன்றவற்றை எதிர்கொள்கின்றனர்.
2025-ஆம் ஆண்டில், மோதலில் ஈடுபட்ட தரப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி மொத்தம் 1,667 குழந்தைகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். இத்தகைய குழந்தைகள் முதன்மையாகப் பாதிக்கப்பட்டவர்களாகவே கருதப்பட வேண்டும் என்றும், ‘அவர்களைத் தடுப்புக் காவலில் வைப்பது கடைசி வழிமுறையாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்’ என்றும் ஐ.நா. வலியுறுத்தியது.
“குழந்தைகள் மற்றும் ஆயுத மோதல்கள்” ஆணையின் 30-ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அரசுகளும் ஆயுதக் குழுக்களும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தையும் மனித உரிமைச் சட்டத்தையும் நிலைநிறுத்துமாறு ஃப்ரேசியர் அழைப்பு விடுத்தார். “குழந்தைகளைப் பாதுகாப்பது ஒரு விருப்ப இலக்கு அல்ல; அது ஒரு கடமை.” என்று அவர் கூறினார்.
குழந்தைகள் மீதான வன்முறையை யாராலும் சகித்துக்கொள்ள முடியாது. அதிலும் போர் சூழல் என்றால் பெண்களும் குழந்தைகளுமே அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஐ.நா-வின் இந்த அறிக்கை குழந்தைகள் மீதான சகிக்க முடியாத வன்முறையின் அவலநிலையை எடுத்துக் கூறியுள்ளது. இதில் முதன்மை குற்றவாளிகளாக இஸ்ரேலியப் படைகள் இருக்கின்றன. கொலை, உடல் ஊனமாக்குதல், பாலியல் வன்கொடுமை, சித்திரவதை என அனைத்திலும் இஸ்ரேலிய படைகள் முதன்மையாக இருக்கின்றன.
அமெரிக்காவின் ஆசியுடன் இஸ்ரேல் காசாவில் மிகக் கொடூரமாக மனிதாபிமானமற்ற முறையில் போரை நடத்தி வருகிறது. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவது; மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் கொண்டு செல்ல விடாமல் தடுப்பது; மருத்துவர்கள், ஊடகவியலாளர்களைக் குறிவைத்துத் தாக்குவது; உணவு முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவது; மின்சாரத்தை துண்டிப்பது என அனைத்து வகையான போர் குற்றங்களிலும் இஸ்ரேல் ஈடுபட்டது.
ஆனால் கேள்வி என்னவென்றால், இஸ்ரேல் போர்வெறி ஓநாயை தண்டிப்பது யார்? இதுபோன்றே பல அறிக்கைகளை ஐ.நா. வெளியிட்டுள்ளது. அவையெல்லாம், யாரும் மதிக்காத வெற்று காகிதங்காளாக ஆக்கப்பட்டுள்ளன. நெதன்யாகுவை போர் குற்றவாளியாக அறிவித்துக் கைது ஆணையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்தது; ஆனால் கைது எதுவும் நடக்கவில்லை. மாறாக, காசாவிற்கு ஆதரவாக உலக நாடுகளில் நடைபெற்ற மக்கள் போராட்டங்கள் மட்டுமே அமெரிக்க-இஸ்ரேலை நெருக்கடிக்கு உள்ளாக்கியது என்பதே எதார்த்தமாகும்.
மேலும், அமெரிக்காவின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள டிரம்ப்-மஸ்க் பாசிச கும்பல், சரிந்துவரும் அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக உலகம் முழுவதும் போர்களைத் தூண்டி வருகிறது. இப்போர்கள் அனைத்துமே அப்பட்டமாக இன அழிப்பு தன்மையைக் கொண்டதாக உள்ளன. ஈரானில் பெண்கள் பள்ளியின் மீது தாக்குதல் நடத்தி 150-க்கும் மேற்பட்ட பிஞ்சுக் குழந்தைகளை அமெரிக்கா படுகொலை செய்தது; லெபனானில் குழந்தைகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது ஆகியவை இதனை நிரூபிக்கின்றன.
ஆகவே, அமெரிக்க – இஸ்ரேல் போர்வெறி ஓநாய்களுக்கு எதிராக உலகம் முழுவதும் மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பதன் மூலம் பிஞ்சுக் குழந்தைகள் கொல்லப்படுவதையும் உடல் – பாலியல் – உளவியல் ரீதியான வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவடையும் தடுத்து நிறுத்த முடியும்.
![]()
ஹைதர்
செய்தி ஆதாரம்: மக்தூப் மீடியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











