அண்மையில், ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தில் ஆரம்பப் பொதுப்பங்கு வெளியீடு (Initial Public Offering) அறிவிக்கப்பட்டதையடுத்து உலகத்தில் முதல் ட்ரில்லியனராக ஆகியுள்ளார் எலான் மஸ்க். இந்த பொதுப்பங்கு வெளியீட்டில் பங்குகளை வாங்கிக் கொள்ள முதலீட்டாளர்கள் போட்டியிட்டு வருகின்றனர். இதன் விளைவாக மஸ்கின் சொத்து மதிப்பு மேன்மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஒரு ட்ரில்லியன் டாலர் (ஒரு லட்சம் கோடி) மஸ்க்கின் உழைப்பின் விளைவா? முதலில் ஒரு ட்ரில்லியன் டாலர் பணத்தின் மதிப்பு என்ன?
ஒரு ட்ரில்லியன் டாலர் அதாவது, ஒரு லட்சம் கோடி என்பது ஒரு சாமானிய மனிதன் கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்டது. இந்த கட்டுரையை படிக்கும் பலருக்கு இந்த தொகையில் ஒரு சொற்பமான அளவு கூட மாபெரும் தொகையாக தெரியும். இந்த சொற்பமான தொகை கூட லட்சக்கணக்கான மக்களுக்கு ஒரு லாட்டரி வென்றது போல் தோன்றலாம். கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு லட்சம் கோடி டாலர் கிடைத்தால் என்னவெல்லாம் செய்யலாம் என்று ஒரு கற்பனைக்குள் வருவதே இயலாத ஒன்று.
ஒரு லட்சம் கோடி டாலரின் அளவை புரிந்து கொள்ள முதலில் நாம் இதனை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு ஒரு சில சான்றுகளோடு இந்த ஒரு லட்சம் கோடி டாலரை ஒப்பிட்டுப்பார்க்க வேண்டியுள்ளது.
ஒரு லட்சம் கோடி என்பது, பால்வெளியில் (Milky Way Galaxy) உள்ள மொத்த நட்சத்திரங்களின் மூன்று மடங்காகும்; ஒரு லட்சம் கோடியை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு 10 லட்சம் டாலராக பிரித்துக் கொடுத்து அவர்களை லட்சாதிபதிகளாக்க முடியும்; ஒரு லட்சம் கோடியைக் கொண்டு இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் சேதம் அடைந்திருக்கும் காசாவை 14 முறை மீண்டும் மீண்டும் புனரமைக்க முடியும்.
இந்த ஒரு லட்சம் கோடி டாலரின் மதிப்பை இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள இத்தொகையை உலகின் பிற நாடுகளின் நிதி நிலைமைக்கு பொருத்திப் பார்த்தால், இந்த தொகை உலகில் உள்ள 92 வறுமையான நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின்(Gross domestic product – GDP) மொத்தத்தை விட அதிகம்.
இந்திய ரூபாயில் ஒரு லட்சம் கோடி டாலர் என்பது 94 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய். இதனை 500 ரூபாய் தாள்களை கொண்டு செங்குத்தாக அடுக்கினால் எவரெஸ்ட் மலையை விட 23 மடங்கு உயரமான ஒரு தூணாக அது இருக்கும். ஒரு நொடிக்கு ஒரு நோட்டு என்ற விகிதத்தில் எண்ணினால் இந்த தொகையை மொத்தமாக எண்ண ஒருவர் 63 வருடங்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து எண்ண வேண்டும்.
இப்படி நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு ஒரு பெருந்தொகை இன்று உலகின் ஒரே ஒரு மனிதரிடம் குவிந்துள்ளது. இந்த சொத்து குவிப்பு பொருளாதார ரீதியிலான அதிகாரத்தை மட்டும் அந்த நபருக்கு வழங்குவதில்லை. அதையும் தாண்டி உலகின் பல நாடுகளில் உள்ள அரசியல் நிலைமைகளை தீர்மானிக்கின்ற அரசியல் அதிகாரத்தையும் சேர்த்து வழங்குகிறது.
2008 – 2009-இல் உலகப் பொருளாதார மந்தநிலை உலகில் ஏற்பட்ட போது, உலகப் பொருளாதாரத்தில் இரண்டு ட்ரில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். ஆனால், இன்று பொருளாதார மந்தம் நடந்து பல ஆண்டுகள் ஆகிய நிலையில், சொல்லப்பட்ட இரண்டு ட்ரில்லியன் டாலரில் பாதி அளவை இன்று தன்கைவசப்படுத்தியுள்ளார் எலான் மஸ்க்.
மஸ்கின் இந்த அபார வளர்ச்சி அவர் வியர்வை சிந்தி உழைத்ததால் வந்ததா? இந்த தொகைக்காக அவர் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் உழைப்பில் ஈடுபடுகிறார்? ஒரு மனிதன் ஒரு வினாடிக்கு ஒரு டாலர் என்ற விகிதத்தில் சம்பாதித்தால் ஒரு மணி நேரத்திற்கு 3600 டாலர் சம்பாதிக்க முடியும். 12 நாட்களில் 10 லட்சம் டாலரை அவரால் ஈட்ட முடியும். 32 ஆண்டுகள் ஓயாமல் உழைத்தால்தான் நூறு கோடி ( 1 billion) ஈட்ட முடியும். இந்த விகிதத்தில் எலான் மஸ்கின் இன்றைய சொத்து மதிப்பான ஒரு ட்ரில்லியன் சம்பாதிப்பதற்கு 31 ஆயிரத்து 710 ஆண்டுகள் ஓயாமல் உழைக்க வேண்டியுள்ளது. ஆனால், இன்று 54 வயதே ஆகியிருக்கும் எலான் மஸ்க் ஒரு லட்சம் கோடி டாலரின் சொந்தக்காரராக இருக்கிறார்.
இப்படியிருக்க, மஸ்கின் இந்த அபார வளர்ச்சி எங்கிருந்து வந்தது? அவரின் அபார வளர்ச்சி உலகில் உள்ள மற்ற எல்லா மக்களிடமும் பிரதிபலிக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்தால், அதற்கு பதில் இல்லை. அமெரிக்க குடிமகனான மஸ்க் வாழும் அதே நாட்டில் ஒரு சாமானிய தொழிலாளியின் ஒரு மணி நேரத்தின் குறைந்தபட்ச கூலி 2009 ஆம் ஆண்டு முதல் 7.25 டாலராகவே உள்ளது. இவ்வாறு கோடிக்கணக்கான தொழிலாளர்களின் சுரண்டப்பட்ட கூலியும், உழைப்புமே மஸ்கின் இந்த ஒரு டிரில்லியன் டாலர் சொத்துகள்.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று கொட்டமடித்துக் கொள்ளும் முதலாளித்துவத்தின் நாறிய நிலைதான் உலக மக்கள் தொகையில் 46 சதவீத மக்களின் சொத்துகள் ஒரே பெரு முதலாளி கையில் குவிந்திருப்பதாகும். உலக பொருளாதாரத்தில் 88 சதவீத சொத்துகள் வெறும் பத்து சதவீத முதலாளிகளிடம் மட்டுமே குவிந்துள்ளது. அதிலும் ஒரு சதவீதம் உள்ள பெருமுதலாளிகள் மட்டும் உலகப் பொருளாதாரத்தில் 50 சதவீத சொத்துக்களை கைவசப்படுத்தியுள்ளனர். அடிமட்டத்தில் உள்ள சாமானிய மக்கள் உலகப் பொருளாதாரத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான பொருளாதாரத்தையே பகிர்ந்து கொள்கின்றனர்.
இரத்தமும், வியர்வையும் சிந்தி உழைக்கும் தொழிலாளர்களை சுரண்டுவதன் மூலம் இந்த பெரு முதலாளிகள் தங்களின் சொத்து மதிப்பு நாளுக்கு நாள் உயர்வதை உறுதி செய்கின்றனர்; இயற்கை வளங்களை சூறையாடுவதை உறுதி செய்கின்றனர்; கோடான கோடி மக்களுக்கு தங்கள் எதிர்காலமே தெரியாமல் வாழும் ஒரு வாழ்க்கையை உறுதி செய்கின்றனர்.
தொடக்கம் முதலே முதலாளித்துவம் ஒரு அராஜகமான வடிவத்தோடே இயங்கி வந்துள்ளது. மதம், இனம், பாலினம் கடந்து உலகில் உள்ள எல்லா மக்களும் தங்கள் பொழுதுபோக்கை, தங்கள் உடல்நலத்தையும், தங்கள் உயிரையும் பெரிதாக கருதாமல் உழைத்துக் கொண்டே இருக்கின்றனர். ஆனால், அவர்களின் கடுமையான உழைப்பின் பயன் எந்த வகை உழைப்பிலும் ஈடுபடாமல் எங்கோ சொகுசு வாழ்க்கை வாழும் ஒரு பெரு முதலாளியை சென்றடைகிறது. பாடுபட்டு உழைத்த தொழிலாளிக்கு எஞ்சியிருப்பது ஒரு நாள் கூலி மட்டுமே.
இவ்வாறு, இந்த முதலாளித்துவக் கட்டமைப்பில் உள்ள எல்லா வடிவங்களும் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதையும், முதலாளிக்கு இலாபம் வருவதையும் உறுதி செய்யவும் இயங்கி வருகிறது. இந்தக் கட்டமைப்பிற்குள் நின்று கொண்டு இந்தப் பொருளாதார ஏற்றதாழ்வை சரி செய்வது சாத்தியமற்ற ஒன்று. ஏனென்றால், முதலாளித்துவத்தின் அடிப்படையே இந்த சுரண்டலும் அதில் கொழுத்து வாழும் முதலாளிகளுமே.
ஆகவே, இந்தப் பொருளாதார ஏற்றதாழ்வை சரி செய்யவும், சுரண்டலற்ற ஒரு சமூகத்தை உருவாக்கவும், இக்கட்டமைப்பிற்கு மாற்றாக பெரு முதலாளிகள் ஒழிக்கப்பட்டு, சமூகத்தில் உள்ள அனைவரும் உழைத்து, அந்த உழைப்பின் விளைவை அனைவரும் பகிர்ந்து கொள்ளும் சோசலிச கட்டமைப்பை உருவாக்கிட வேண்டும்.
நன்றி: mronline.org
![]()
தமிழில்: மாயவள்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











