ஜூன் 30: மேலவளவு படுகொலையின் 30-ஆம் ஆண்டு தியாகிகள் நாள்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
1997, ஜூன் 30-ஆம் நாள், மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மேலவளவு ஊராட்சித் தலைவரான முருகேசன், துணைத் தலைவர் மூக்கன் உள்ளிட்ட 7 பேர் ஆதிக்கச் சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட நாள்!
தென்மாவட்டங்களில் தலித் மக்கள் மீதான சாதிவெறியாட்டங்கள் தீவிரமாக இருந்த காலமது. மதுரை மாவட்டம் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நத்தமங்கலம், விருதுநகர் மாவட்டம் கொட்டகச்சியேந்தல் ஊராட்சிகள் தலித் மக்களுக்கான தனித்தொகுதிகளாக ஒதுக்கப்பட்டதற்கு எதிராக தேர்தலையே நடத்த முடியாத அளவிற்கு நெருக்கடி கொடுத்தனர் ஆதிக்கச் சாதிவெறியர்கள்.
போலி ஜனநாயகத்தைப் பயன்படுத்தி ஆதிக்கச் சாதிவெறியர்கள் ஆடிய இந்த ஆட்டத்தால், 1996 முதல் 2006 வரையிலான பத்தாண்டுகளில் பத்து முறைக்கும் மேலாக இவ்வூராட்சிகளில் தலித் மக்கள் ஊராட்சித் தலைவராக முடியாமல் தடுக்கப்பட்டனர்.
அன்று, கே.ஆர். நாராயணன் என்கிற ஒரு தலித் குடியரசு தலைவரானதைக் காட்டி, இந்த ஜனநாயகத்தின் வெற்றி என்று ஊதிப் பெருக்கின ஆளும் வர்க்க ஊடகங்கள். ஆனால், தலித் மக்கள் ஊராட்சித் தலைவராக முடியாத இந்த ஜனநாயகத்தின் அவலநிலை குறித்து அடக்கி வாசித்தன.
இவ்வாறு, தலித் மக்கள் ஊராட்சித் தலைவராவதற்கான போராட்டத்தில்தான், முருகேசன், மூக்கன் உள்ளிட்ட 7 பேர் வெற்றி பெற்றனர். தலித் மக்களின் அரசியல் அதிகாரத்திற்கான நாயகர்களாகினர்!
000
1996-இல் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் தலித்துகளுக்கென தனித் தொகுதிகள் சுழற்சி அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. தம்மீது திணிக்கப்படும் சாதி ஆதிக்கத்திற்கு எதிராக, உள்ளாட்சி அமைப்புகளில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட இந்த சட்ட உரிமையானது, தலித் மக்களை எழுச்சிக் கொள்ளச் செய்தது.
உள்ளாட்சி அமைப்புகளில் தலித் மக்களுக்கு அதிகாரத்தை உத்தரவாதம் செய்யும் இந்த உரிமையானது, நீண்ட அரசியல் போராட்டத்தின் விளைவாகும். “உழுபவருக்கே நிலம் சொந்தம், உழைப்பவருக்கே அதிகாரம்” என்ற முழக்கத்தின் கீழ், செங்கொடி ஏந்திய நக்சல்பாரி கூலி ஏழை விவாசாயிகளின் எழுச்சி இதற்கு தொடக்க நிலையாகும்.
இந்த அரசு அதிகாரத்திற்கு வெளியே, கூலி ஏழை விவசாயிகளான தலித்துகள், பண்ணையாதிக்கத்தை வீழ்த்தி அதிகாரத்தைக் கையிலெடுத்த அந்த எழுச்சி நாடெங்கும் பற்றிப் பரவியது; இது, இந்த போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பை உலுக்கியது.
அதன் விளைவாக, அரசு அதிகாரத்தில் தலித்துகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டுமென்ற குரல் எழத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாகத்தான், உள்ளாட்சிகளில் தலித்துகளுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
மேலிருந்து கொடுக்கப்பட்ட இந்த சட்ட உரிமையைக் கீழிறிந்து போராட்டமின்றி பெற்றுவிட முடியாது என்பதைத்தான், மேலவளவு படுகொலை நமக்கு உணர்த்துகிறது.
இன்று, தலித் மக்கள் குறைந்தபட்சம் சில உரிமைகளையாவது பெற்றிருக்கின்றனர் என்றால், அவை நக்சல்பாரித் தியாகிகளாலும், தலித் மக்களின் உரிமைகளுக்காகக் களத்தில் போராடிய முருகேசன் போன்ற பல தியாகிகளின் போராட்டத்தாலும் கிடைத்த உரிமைகளே அன்றி, தேர்தல் அரசியல் தானாக வழங்கிவிட்ட உரிமைகள் அல்ல.
000
மேலவளவு படுகொலை நடந்து 30 ஆண்டுகள் கடந்தாலும், இன்றைக்கும் தமிழ்நாட்டில் தலித் ஊராட்சித் தலைவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவதில்லை. தேசியக் கொடியை ஏற்றவிடாமல் தடுப்பது, ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள்ளே நுழையவிடாமல் தடுப்பது, மற்ற உறுப்பினர்களுக்கு சமமாக நாற்காலிகளில் அமர்வதைத் தடுப்பது என்று தலித் ஊராட்சித் தலைவர்கள் சந்திக்கும் அவமானங்களும் அடக்குமுறைகளும் கொஞ்சநஞ்சமல்ல.
கூலி உயர்வு கேட்டுப் போராடிய மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு துப்பாக்கிச் சூடு – தலித் மக்கள் உரிமை கேட்பதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வன்முறை!
தொடரும் ஆணவப் படுகொலைகள் – சாதி கடந்து காதலிக்க, மணமுடிக்க நினைப்பவர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வன்முறை!
வெண்மணி, உஞ்சனை, கொடியங்குளம், காரணை என தலித் மக்களின் உரிமைகளை மறுக்கும் வன்முறைகள் அனைத்தும் ஆதிக்கச் சாதிவெறியின் அடையாளங்களே!
இந்த ஆதிக்கச் சாதிவெறிக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த தியாகிகளான மாடகோட்டை சுப்பு; முருகேசன், மூக்கன்; இளவரசன், கோகுல்ராஜ், கவின்; மானாமதுரை ஆகாஷ்… தலித் மக்கள் எழுச்சியின் நாயகர்களே!
ஆம், தலித்துகள் மீதான இந்த வன்முறைகள் அனைத்தும், தலித் மக்கள் எழுச்சிக்கு எதிரான வன்முறைகளாகும்.
அன்று, ஊர் கூடி ஆதிக்கச் சாதி பஞ்சாயத்துப் பேசி நிகழ்த்தப்பட்ட வன்முறைகள், இன்று ஆதிக்கச் சாதிவெறி சங்கங்கள், அதில் ஊடுருவியுள்ள ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார பாசிச கும்பலால் அரங்கேற்றப்படுகின்றன.
சமூகத்தில் சமத்துவத்திற்கான உணர்வு மேலெழுந்தாலும் ஆதிக்கச் சாதிவெறியர்களும் சங்கப் பரிவாரக் கும்பலும் அதற்கு தடைக்கற்களாக நிற்கின்றன. இந்தத் தடைக்கற்களை உடைப்பதன் மூலமாகத்தான், சமத்துவ சமநீதியைப் பெற முடியும்.
உள்ளாட்சியில் சமத்துவத்தைக் கோரிய முருகேசன் உள்ளிட்டவர்கள் படுகொலை; கொலைக் குற்றவாளிகளான ஆதிக்கச் சாதிவெறியர்கள் விடுதலை. இதுதான், இந்த அரசு அதிகாரத்தின் உண்மை முகம்.
ஆளும் வர்க்கங்கள் உருவாக்கியிருக்கும் இந்த அரசு அதிகாரத்திற்குள் சென்று, சாதியை ஒழிக்க முடியாது, சமத்துவத்தை அடைய முடியாது என்ற உண்மையை உணரும் போது, விடுதலைக்கான பாதையும் பிறந்து விடுகிறது.
நிலவுகின்ற அரசியல் அதிகார அமைப்பிற்கு மாற்றாக, உண்மையான ஜனநாயகத்திற்கான, மாற்று அரசியல் அமைப்பை அது உருவாக்கக் கோருகிறது.
பாசிச சக்திகள், ஆளும் வர்க்கங்கள், ஆதிக்கச் சாதிகளின் அடக்குமுறைகள், வன்முறைகளுக்கு எதிரான எழுச்சியின் மூலமாகவே அது தொடங்கவும் செய்கிறது.
தமிழ் மண்ணின் உரிமையை மீட்க, ஜல்லிக்கட்டுக்காக கிளர்ந்தெழுந்தோம். விவசாயிகளைப் பாதுகாக்க, டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தோம். கல்குவாரிகள், கிரானைட் குவாரிகள், கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராகப் போராடுகிறோம்.
அந்தவகையில், சமத்துவத்தைப் படைக்க, சாதிவெறியாட்டங்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவோம்!
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











