மாணவர்களிடம் சாதியை வளர்க்கும் த.வெ.க. அரசு: செங்கோட்டையனுக்கு ம.அ.க. கண்டனம்!

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலை தமிழ்நாட்டு மக்கள் எப்பொழுதும் புறக்கணித்தே வந்துள்ளனர். அந்த கும்பல்களின் பாசிச திட்டங்களை கொல்லைப்புற வழியாக செயல்படுத்தும் வேலையை தவெக அரசு செய்து வருகிறது.

27.06.2026

மாணவர்களிடம் சாதியை வளர்க்கும் த.வெ.க. அரசு:
செங்கோட்டையனுக்கு ம.அ.க. கண்டனம்!

கண்டன அறிக்கை

மிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ் விவரங்களை இணைக்கும் புதிய திட்டம் குறித்த அறிவிப்பை வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார்.

பள்ளி மாணவர்கள் பல்வேறு கல்வி மற்றும் நலத்திட்டத் தேவைகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் தாலுகா அலுவலகம் சென்று சாதிச் சான்றிதழ் வாங்குவதைத் தவிர்க்க இந்த மாற்று நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் பெயர், வீட்டு முகவரி, சாதிச் சான்றிதழ் விவரம், இரத்த வகை (Blood Group), ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் ஆகிய அனைத்துத் தரவுகளும் இந்த ஒரே அடையாள அட்டையில் இணைக்கப்படும்; இந்தத் திட்டம் முதற்கட்டமாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது; முதலமைச்சரின் உத்தரவின் பேரில் இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளிகளில் மாணவர்களிடையே நிலவும் சாதிப் பிரிவினைகளையும் வன்முறைகளையும் ஒழிப்பதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு விரிவான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை ஏற்கெனவே தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

மாணவர்கள் தங்கள் சாதியை உணர்த்தும் வகையில் கைகளில் வண்ணக் கயிறுகள் (Wristbands) கட்டுவது, மோதிரங்கள் அணிவது அல்லது நெற்றியில் குறிப்பிட்ட சாதி சார்ந்த பொட்டு/திலகம் வைப்பது போன்றவற்றுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும்; மாணவர்கள் தங்களின் சைக்கிள்கள், இருசக்கர வாகனங்கள் அல்லது புத்தகப் பைகளில் சாதிப் பெயர்களையோ, சாதியைக் குறிக்கும் வண்ணங்களையோ பூசுவதற்கு அனுமதி மறுக்கப்பட வேண்டும்; சாதி அல்லது சமூகப் பெயர்களுடன் இயங்கும் அனைத்துப் பள்ளிகளையும் “அரசுப் பள்ளி” என்றே பொதுப் பெயரில் மாற்றியமைக்க வேண்டும்; பள்ளிக்கு நிலம் அல்லது நிதி வழங்கிய கொடையாளர்களின் குடும்பப் பெயர்களில் சாதி முன்னொட்டோ, பின்னொட்டோ இருந்தால் அவற்றை உடனடியாக நீக்க வேண்டும்; மாணவர்களின் சாதி குறித்த விவரங்களை வருகைப் பதிவேட்டிலோ (Attendance Register) அல்லது பொது வெளியிலோ வைக்கக் கூடாது; அதனை பள்ளித் தலைமையாசிரியர் மட்டுமே பார்க்கக்கூடிய இரகசிய ஆவணமாகப் பராமரிக்க வேண்டும் உள்ளிட்டு அவ்வறிக்கையில் பல்வேறு முக்கிய பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தன.

அப்பரிந்துரைகளை மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் வரவேற்று அமல்படுத்தக் கோரிய போது அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்ட சங்கி கும்பல்கள் நீதிபதி கே.சந்துரு குழு அறிக்கையை எதிர்த்தன.

இன்று த.வெ.க. அரசு இதற்கு ஒரு படி மேலே சென்று, சாதிய அடையாளத்தை வெளிப்படையாக தெரிவிக்கும் வகையில் அடையாள அட்டையிலேயே குறிப்பிடும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சாதி சான்றிதழ் வாங்க மாணவர்கள் கஷ்டப்படுகின்றனர் என்று அமைச்சர் இதற்கான காரணங்களை கூறுகிறார். இதைவிட இன்னும் ஓர் எளிமையான வழி என்றால், குலக்கல்வி திட்டத்தை அமல்படுத்திவிட்டால் சாதிச் சான்றிதழே தேவையில்லை, பார்ப்பனிய கும்பல்களின் மனங்களும் குளிர்ந்து விடும்.

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலை தமிழ்நாட்டு மக்கள் எப்பொழுதும் புறக்கணித்தே வந்துள்ளனர். அந்த கும்பல்களின் பாசிச திட்டங்களை கொல்லைப்புற வழியாக செயல்படுத்தும் வேலையை தவெக அரசு செய்து வருகிறது.

உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் மாணவர்கள் மத்தியில் சாதிய அடையாளங்களை திணித்து பிரிவினையை உண்டாக்கும் இந்த சதிச் செயல்களை எதிர்த்து தீவிரமாக குரல் கொடுத்து, இதை முறியடிக்க வேண்டும்.

மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க