25.06.2026

தனியார்மயமாகும் தூய்மைப் பணி:
தூய்மைப் பணியாளர்களை வஞ்சிக்கும் த.வெ.க. அரசு

பத்திரிகைச் செய்தி

மிழ்நாடு அரசு 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தப் புள்ளிகள் கோரியிருக்கிறது. தூய்மை பணியை முழுவதுமாக தனியார்மயமாகும் தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஆவடி, ஓசூர், தாம்பரம், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை ஆகிய மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை அரசு மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த மாநகராட்சிகளில் குப்பைகளைச் சேகரித்தல், குப்பையைக் கிடங்குகளுக்குக் கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு அரசு தனியார் நிறுவனங்களிடம் டெண்டர் கோரியுள்ளது.

தூய்மை பணியை தனியார்மயமாக்குவதில் தற்போதைய த.வெ.க. அரசின் இந்த நடவடிக்கையானது இதுவரையிலான தமிழ்நாடு அரசுகளின் நடவடிக்கையை விட மிகத் தீவிரமானதாகும்.

தனியார் நிறுவனங்களின் நவீன இயந்திரங்கள் மற்றும் மேலாண்மைத் திறனைப் பயன்படுத்தி நகரங்களின் சுகாதாரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்துவது இதன் முக்கிய நோக்கம் என்கின்றனர். இது அப்பட்டமான மக்கள் விரோத தொழிலாளர் விரோத கண்ணோட்டமாகும்.

ஏற்கெனவே கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சென்னை மாநகராட்சியில் குப்பை மேலாண்மைப் பணிகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட போது, தூய்மைப் பணியாளர்கள் தங்களின் பணி பாதுகாப்பு மற்றும் ஊதிய குறைப்பு போன்ற காரணங்களை முன்வைத்து ரிப்பன் பில்டிங் முன்பு தொடர் போராட்டங்களில் ஈடுபட்ட போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களை பனையூரில் தனது அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து போராட்டத்திற்குத் தனது ‘ஆதரவை’ வழங்கினார் த.வெ.க. தலைவர் விஜய்.

ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற 40 நாட்களுக்குள் தமிழ்நாட்டின் மிக முக்கியமான 12 மாநகராட்சிகளின் தூய்மை பணியை மேற்கொள்வதற்கு தனியாரிடம் டெண்டர் கோரி இருப்பது தனியார்மயமாக்கலில் த.வெ.க. அரசு எந்த அளவிற்கு தீவிரமாக இருக்கிறது என்பதற்கும் தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கொண்டிருக்கிறது என்பதற்குமான சான்றாகும்.

இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிப்பதுடன் தமிழ்நாடு அரசு தூய்மை பணியை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.

இப்போது வரை நிறைவேற்றப்படாமல் இருக்கும் தூய்மை பணியாளர்களின் கோரிக்கையான பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, கண்ணியமான பணிச்சூழல் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.


இவண்,
தோழர் அமிர்தா,
சென்னை மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
7358482113

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க