வெளிநாடுகளில் 37,000 இந்திய தொழிலாளர்கள் உயிரிழப்பு: வேடிக்கை பார்க்கும் மோடி அரசு!

2021 முதல் 2025 வரை 37,740 இந்திய தொழிலாளர்கள், வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர். இதில் 32,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் வளைகுடா நாடுகளில் மட்டும் நிகழ்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், வளைகுடா நாடுகளில், ஒரு நாளுக்கு 18 இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற அச்சமூட்டும் தகவலை அறிக்கை முன்வைக்கிறது.

ண்மையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், வெளிநாடுகளில் பணி புரியும் இந்திய தொழிலாளர்களின் உயிரிழப்புகளைப் பற்றிய தகவல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இத்தகவல் அறிக்கையானது வெளிநாடுகளில் எந்தப் பாதுகாப்புமின்றி வேலை செய்யும் இந்திய தொழிலாளர்களின் அவல நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

2021 முதல் 2025 வரை 37,740 இந்திய தொழிலாளர்கள், வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இதில் 86 சதவிகிதத்திற்கும் அதிகமான, அதாவது 32,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் வளைகுடா நாடுகளில் மட்டும் நிகழ்ந்துள்ளதாக இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், வளைகுடா நாடுகளில், ஒரு நாளுக்கு 18 இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற அச்சமூட்டும் தகவலை முன்வைக்கிறது.

அண்மைத்தில் கத்தாரில் உள்ள ரஸ் லாஃபன் (Ras Laffan) எரிவாயு நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் வெடி விபத்து ஏற்பட்டு 13 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் 12 பேர் இந்திய தொழிலாளர்களாவர். இந்த விபத்தினை அடுத்து இந்திய வெளியுறவுத்துறை தற்போது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

2023 முதல் 2025 வரை 800-க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் வேலை பார்க்கும் இடங்களிலேயே உயிரிழந்துள்ளனர். அதிலும் 55 சதவிகிதத்திற்கும் மேல் வளைகுடா நாடுகளில் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த ஐந்து ஆண்டுகளில் 80,985 புகார்கள் எழுந்துள்ளன. அதுவும் வளைகுடா நாடுகளில்தான் அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடுகளில் வாழும் இந்திய தொழிலாளர்கள் மத்தியில் இந்த ஐந்து ஆண்டுகளில் தற்கொலைகளும் அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. 2023 முதல் 2025 வரை, வளைகுடா நாடுகளில் வேலை செய்யும்1,300 இந்திய தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி வளைகுடா நாடுகளில் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் கட்டுமானப் பணிகள், வாகனம் ஓட்டுதல் மற்றும் மின்சாரம் சார்ந்த அபாயகரமான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வளைகுடா நாடுகளில் நடக்கும் இந்த உயிரிழப்புகளுக்கு முக்கியமான காரணம் அங்கு போதுமான அளவு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் இருப்பதே ஆகும். மேலும், வேலைக்கு வரும் தொழிலாளர்களுக்கு போதுமான அளவு பயிற்சி அளிக்கப்படாமல் அபாயகரமான வேலைகளில் பணியமர்த்தப்படுகிறார்கள். இதனால் வேலை செய்யும் இடத்தில் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.

மேலும், நெரிசலான குடியிருப்பு பகுதிகள், தரமற்ற உணவு மற்றும் மிகவும் நெருக்கடியான வேலை நேரங்கள் போன்ற காரணங்களால் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர். இதுவே இந்திய தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படும் தற்கொலைகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது என்று புலம்பெயர்ந்தோர் நலச்சங்கம் கூறுகிறது.

இதில் மிகவும் முக்கியமான விசயம், வெளிநாடுகளில் நடைபெறும் பெரும்பாலான உயிரிழப்புகள் இயற்கை மரணங்கள் என்று அந்நிறுவனத்தின் முதலாளிகளால் தட்டிக்கழிக்கப்படுகிறது. வேலை இடங்களில் தொழில்நுட்பக் கோளாறுகளாலோ அல்லது பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறையாலோ ஏற்படும் மரணங்களை கூட இயற்கை காரணங்களை கொண்டு வெளிநாட்டு முதலாளிகள் மறைக்கின்றனர். இதனால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு கூட வழங்கப்படுவதில்லை.

மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பதிலும் பல சிக்கல்கள் ஏற்படுகிறது. முறையாக அவர்களுக்கு தகவல் தெரிவித்து இறந்தவர்களின் உடலை குடும்பத்தாரிடம் வழங்காமல், உடலை வழங்குவதற்கு பணம் கேட்டு இறந்தவர்களின் குடும்பத்தாரை நிர்பந்திப்பது போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.

இந்தியாவில் தங்களுக்கு உரிய வேலையும், வேலைக்கான உரிய கூலியும் கிடைக்காததால்தான் வெளிநாடுகளை நோக்கி இந்தியர்கள் வேலை தேடி செல்கின்றனர். மேலும், இந்திய தொழிலாளர்களை நசுக்கும் வகையில் புதிய தொழிலாளர் சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டுவரப்படுவதும், அவற்றின் மூலம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதும்தான் வேறுவழியின்றி தொழிலாளர்கள் வெளிநாட்டிற்கு புலம்பெயர்வதற்கு முக்கியமான காரணமாக அமைகிறது.

அதிலும், தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு பணிக்கு அழைத்துச் செல்வதற்கென புற்றீசல்களை போல புரோக்கர்கள் உருவாகியுள்ளார்கள். வெளிநாடுகளில் சிறந்த சம்பளத்தில் சிறந்த வேலை வாங்கித் தருவதாக பல பொய்யான வாக்குறுதிகளை அளித்து இந்திய தொழிலாளர்களை இங்கிருந்து அழைத்துச் செல்கின்றனர். ஆனால் அவ்வாறு அனுப்பப்படும் தொழிலாளர்கள் அற்ப கூலிக்கு அபாயகரமான வேலையிலேயே ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்தியாவின் பல மாநிலங்களில் வட மாநிலத் தொழிலாளர்கள் அற்ப கூலிக்கு வேலை வாங்கப்படுவது போன்ற அவல நிலையில் வெளிநாடுகளில் இந்திய தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

மேலும், அத்தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி கூட முறையாக வழங்கப்படாமல் இருப்பது, அதிக நேரம் வேலை வாங்கப்படுவது, எந்தவித அறிவிப்புமின்றி பணியிலிருந்து நீக்கப்படுவது போன்ற நெருக்கடிகளையும் சந்தித்து வருகின்றனர். பெரும்பாலான நிறுவனங்கள் தொழிலாளர்களின் பாஸ்போர்ட்டுகளை கையகப்படுத்திக் கொள்வதால் வேலையை விட்டு வெளியேற முடியாமலும் தொழிலாளர்கள் தவிக்கின்றனர்.

இந்நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் மீதான அமெரிக்காவின் போர் தீவிரமடைந்து வரும் சூழலில், வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்திய தொழிலாளர்கள் மேலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகின்றனர்.


படிக்க: வெப்ப அலையில் கருகும் இந்திய தொழிலாளர் வர்க்கம்


வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்திய தொழிலாளர்களின் நலன்களை பாதுகாப்பது அதாவது, அவர்கள் வெளிநாட்டு நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்தது முதல் அவர்களின் எல்லா வகையான உரிமைகளையும் பாதுகாப்பது; அவர்களுக்கு உரிய கூலி வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்வது; பணியிடத்தில் அவர்களுக்கு போதுமான வசதிகள் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்வது; எதிர்பாராத விதத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுகிறதா என்பதையும் இறந்தவரின் உடல் குடும்பத்தினருக்கு உரிய முறையில் ஒப்படைக்கப்பட்டதா என்பதையும் உறுதி செய்ய வேண்டியது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முக்கியமான கடமையாகும். ஆனால், மோடி அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகமோ அதிகரித்துவரும் இந்திய தொழிலாளர்களின் உயிரிழப்புகள் பற்றி போதுமான விளக்கத்தை கூட அளிக்கவில்லை.

மேலும், இந்த உயிரிழப்புகள் குறித்து உரிய நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தகுந்த இழப்பீடும் வாங்கித் தருவதில்லை. இனி, இதுபோன்ற உயிரிழப்புகள் நடக்காமல் இருப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை பற்றியும் வாய்திறப்பதில்லை. போர் தீவிரமடைந்துவரும் இச்சூழலில் வெளிநாட்டில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களை எவ்வாறு பாதுகாக்கப் போகிறோம் என்பது பற்றியும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டிற்குச் சென்று அங்கு எவ்வித அடிப்படை உரிமையும், அடிப்படை வசதியும் இல்லாமல் குறைந்தபட்ச கூலிக்காக வேலை செய்யும் இந்திய தொழிலாளர்கள் அன்றாடம் ஒட்டச் சுரண்டப்பட்டு வருகின்றனர். பெயரளவில் வெளிநாட்டில் வேலை செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டாலும், வெளிநாடுகளில் மிகவும் மோசமான நிலையிலேயே தங்கள் வாழ்க்கையை கழிக்க வேண்டியுள்ளது. இது பற்றி துளியும் அக்கறை காட்டாத போக்கை பாசிச மோடி அரசு கடைபிடித்து வருகிறது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிடுவதற்கே இத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொண்டுள்ள மோடி அரசு, வெளிநாடுகளில் வாழும் இந்திய தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கும் என எப்பட்டி நம்புவது?

உலகம் முழுவதிலும் தொழிலாளர்கள் குறைந்தபட்சக் கூலியை பெறுவதற்காக அதிகபட்ச நேரம் தங்கள் உழைப்பை செலுத்தி வேலையில் ஈடுபட வேண்டியுள்ளது. ஆனால், வேலை செய்யும் இடங்களில் முதலாளிகளால் அவர்கள் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து கேள்வி கேட்காமல் அரசுகள் கள்ளமௌனம் காக்கின்றன.

இது போன்ற உயிரிழப்புகளுக்கு மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்படுவதையும் உத்தரவாதம் செய்வதுடன், மேலும் உயிரிழப்புகள் நடக்காமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். மக்களும் ஜனநாயக சக்திகளும் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு மோடி அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்.


மாயவள்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க