தொழிற்சங்க இயக்கமும் – தொழிலாளர்களைப் பிளவுபடுத்தி, திசைதிருப்பி, சிதைத்து தவறான திசைவழியில் வழிநடத்தும் மதவெறி, தேசிய வெறியைக் கையாள்வது பற்றியும் !

பாகம் – 2

முதல் பாகம்

1) சாதியவாதம்:

1947-ல் பிரிட்டன் காலனியாதிக்கவாதிகள் தமது ஏகாதிபத்திய நலன்களுக்கு சேவை செய்வதற்காக இந்திய ஆளும் வர்க்கத்தினரிடம் அதிகாரத்தை மாற்றிக் கொடுத்தனர். இந்திய சமூகத்தின் உற்பத்தி முறையானது ஏகாதிபத்திய சுரண்டலுக்கு ஏற்ப அரைக் காலனிய – அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையாகவே பராமரிக்கப்படுகிறது. (இதே போன்ற நிலைமைகள் தான் ஏறக்குறைய எல்லா பிரிட்டனின் காலனிய நாடுகளிலும் நிலவியது; இரண்டாம் உலகப் போருக்குப் பின் அவற்றிலும் ‘சுதந்திரம்’ பிரகடனப்படுத்தப்பட்டது.) இந்தியத் தரகு முதலாளிகளுக்கும், அவர்களின் ஏகாதிபத்திய எஜமானர்களுக்கும், அவர்களின் சொந்த நலன்களுக்காக ‘ஒன்றுபட்ட இந்தியா’ என்பது தொடர வேண்டும் என்பது தேவையாயிருந்தது. இந்த நோக்கத்துடன், ‘இந்து-இந்தி-இந்தியா’ என்கிற கொள்கை மக்கள் மீது திணிக்கப்பட்டு, இந்தியத் துணைக் கண்டமானது பல்வேறு தேசிய இனங்களின் சிறைக்கூடமாக்கப்பட்டது.

இந்திய தொழிலாளி வர்க்கத்தின் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உணர்வுகளுக்குத் தடை போட்ட இந்த தரகு – அதிகார வர்க்க முதலாளித்துவமானது அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளை அப்படியே பாதுகாத்துப் பராமரித்தது. மனு ஸ்மிரிதியின் (பிறப்பின் அடிப்படையிலான வேலைப் பிரிவினையைக் கொண்டுள்ள இந்து மத சட்டம்) அடிப்படையில் தொழிலாளர்களைப் பிரிக்கும் தந்திரத்தைக் கையாண்டனர். இந்தியத் தொழிற்சாலைகளில் சாதி அடிப்படையில் வேலைகள் ஒதுக்கப்பட்டன. கடினமான உடல் உழைப்பைக் கோரும் வேலைகள் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு ஒதுக்கப்பட்டன. இதனடிப்படையில் இரயில்வேக்கள், துறைமுகங்கள், சுரங்கங்கள், தேயிலை – ரப்பர் தோட்டங்கள், இன்ன பிறவற்றில் கடினமான பணிகள் எனப்படும் புளூகாலர் பணிகளில் ஒடுக்கப்பட்ட சாதியினரைக் கொண்டு நிரப்பினர்; வெள்ளைக்காலர் பணி எனப்படும் வங்கிகள், காப்பீட்டுத் துறை, தொலைத் தொடர்பு போன்ற இன்னபிறவற்றில் பார்ப்பனர் உள்ளிட்ட மேல் சாதிகள், ஆதிக்க சாதியினரைக் கொண்டு நிரப்பினார்கள்.

ஆக, இவ்வாறு தொடக்கம் முதலே சாதி அடிப்படையில் தான் தொழிலாளர்கள் பிரிக்கப்பட்டனர் என்பதுதான் வாழ்க்கையின் யதார்த்தம். 1970-களில் நக்சல்பாரி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) புரட்சிகர இயக்கத்தினை எதிர்ப்பதற்காக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நக்சல்பாரி இயக்கத்தின் சமூக அடிப்படைகளாக விளங்கிய ஒடுக்கப்பட்ட மற்றும் மலைவாழ் பழங்குடி மக்களுக்கு காங்கிரசு அரசாங்கமானது வேலை வாய்ப்புகளை வழங்கியது. சிறப்பு வேலைவாய்ப்புத் திட்டங்கள் மூலம் வேலை தந்தது மட்டுமின்றி, ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவினர் தமது சாதி அடிப்படையில் தொழிற்சங்கம் அமைத்துக் கொள்ள ஊக்குவிக்கப்பட்டனர்.

ஏற்கெனவே இருக்கின்ற தொழிற்சங்கங்களில் இந்து ஆதிக்க சாதியினரே பெரும்பான்மையாகவும், சங்கத் தலைமையிலும் இருந்தனர். எனவே ஒடுக்கப்பட்ட சாதியினரைக் கொண்ட சங்கங்களுக்கென தனியாக வேலைகள் ஏதுமில்லை என்றிருந்தது. இந்தச் சூழலானது பிளவேற்படுத்தும் அடையாள அரசியலுக்கான வாய்ப்பானது மட்டுமின்றி, இது மேலும் பொருளாதாரவாதத்திற்கும், பாராளுமன்றவாதத்திற்கும் இட்டுச் சென்றது.

படிக்க :
♦ தோழர் லெனின் 150வது பிறந்தநாள் நிகழ்வு – புஜதொமு திருவள்ளூர் !
♦ முதலாளித்துவ பயங்கரவாதத்திற்குப் பாடை கட்டுவோம் | புஜதொமு மேதின பொதுக்கூட்டம் பேரணி !

2) புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர் கொள்ளும் தேசியவெறி:

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற புதிய பொருளாதாரக் கொள்கைகள் 1990களில் புகுத்தப்பட்டதன் விளைவாக புதிய தொழிற்சாலைகள் துவக்கப்பட்டன. இந்த ஆலைகளில் பணியமர்த்தப்பட்ட பெரும்பாலான தொழிலாளர்கள் அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகள் நீடித்து நிலவுகின்ற பகுதிகளிலிருந்து வந்தவர்களாயிருந்தனர். இவர்கள் கிராமப் புறங்களில் நிலவிய பாரம்பரிய விவசாயமும் கைத்தொழிலும் அழித்தொழிக்கப்பட்டதன் விளைவாக தொழிலாளர் சந்தையில் கட்டாயமாக திணிக்கப்பட்டவர்கள். தொழிற்சாலைகள் எவ்வளவு நவீனமாயிருந்தாலும், இந்தத் தொழிலாளர்கள் அரை நிலப்பிரபுத்துவ கொத்தடிமைத்தனத்தில் கட்டுண்டவர்களாகவே இருந்தனர்.

மேலே கூறப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கைகள் விவசாயம், சிறு வணிகம் மற்றும் சிறிய ஆலைகளை அழித்தது. இவற்றை நம்பியிருந்த பல்லாயிரக்கணக்கான உழைக்கும் மக்களும் தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தைத் தேடி நகரை நோக்கி புலம்பெயர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயினர். கணிம வளங்கள் மிகுந்த பகுதிகள் தனியாரின் வரம்பற்ற சுரண்டலுக்கு விரியத் திறந்து விடப்பட்டன; வனங்களும் மலைகளும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வேட்டைக் களங்களாயின. பல தலைமுறைகளாக அப்பகுதிகளில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வந்த பூர்வகுடி மக்கள் தமது பூர்வீக இடங்களிலிருந்து புலம் பெயர்ந்து பிற மாநிலங்களில் உள்ள தொலைதூர இடங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் கூட ஓட வேண்டியதாயிற்று.

அவர்கள் சென்றடைந்த பிற மாநிலங்களோ அல்லது அயல் நாடுகளோ இந்த மக்களை ஒருபோதும் தமக்கு சமமானவர்களாகவோ அல்லது சுதந்திர குடிமக்களாகவோ நடத்தவில்லை. முதலாளிகளுக்கோ இவர்கள் உள்ளூர் தொழிலாளர்களை விட குறைந்த கூலிக்கு உழைப்புச் சந்தையில் கிடைத்த உழைப்புப் பண்டம் என்பதற்கு மேலே வேறு எதுவுமில்லை. இவர்கள் வரம்பற்ற வேலை நேரம், கடின உழைப்பு மற்றும் அபாயகரமான பணிச் சூழலில் கொடூரமாக சுரண்டப்பட்டனர். இந்தக் காரணங்களுக்காகவே உள்ளூர் தொழிலாளர்களால் எதிரிகளாகக் கருதப்பட்டனர்.

உள்ளூர் தொழிலாளர்கள் தமது எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் புலம் பெயர்ந்த இந்தத் தொழிலாளர்கள் தான் காரணம் என பழி போடத் தொடங்கினர். இதுதான் தேசிய வெறிக்கான அடிப்படை. பல தேசிய இனங்களின் சிறைக் கூடமாயுள்ள இந்தியா போன்ற நாடுகளில் பல்வேறு தேசிய இனங்களுக்கிடையிலான அரசியல் வேறுபாடுகள் காரணமாக சம்பந்தப்பட்டவர்களால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுகின்றனர். பீகாரிகள் மும்பையில் தாக்கப்பட்டது, பெங்களூரில் தமிழர்கள் தாக்கப்பட்டது, ஆசியர்கள், ஆப்பிரிக்கர்கள் மற்றும் இசுலாமியர்கள் அய்ரோப்பாவில் தாக்கப்படுவது என இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன.

உலகம் முழுவதிலும் வலதுசாரி சக்திகள் அரசியல் ரீதியாக வெற்றி பெறுவதை கண்ணெதிரே பார்த்து வருகிறோம். அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப், ரசியாவில் புதின், ஜப்பானில் ஷின்ஷோ அபே, ஆஸ்திரேலியாவில் டோனி அப்பாட், இந்தியாவில் நரேந்திர மோடி என அரசியல் ரீதியாக வெற்றி பெற்ற வலதுசாரி சக்திகளில் சிலர் தான் இவர்கள். தமது நாட்டில் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம் இந்த புலம் பெயர்ந்தவர்கள் தான் காரணம் என இவர்கள் பழி போடுகின்றனர்.

இந்தப் புலம் பெயர்ந்தவர்களை அப்புறப்படுத்தி விட்டால் உள்ளூர் மக்கள் செழிப்படைவார்கள் என்று கூறுகின்றனர். தமது நாடு மட்டுமல்ல மொத்த உலகமுமே எதிர் கொண்டுள்ள நெருக்கடிக்குக் காரணம் முதலாளித்துவத்தின் லாப வெறியும் பேராசயுமே என்பதை வெற்றிகரமாக மூடி மறைத்து விட்டனர். அது மட்டுமல்ல தொழிலாளி வர்க்க இயக்கத்தை பிளவுபடுத்துவதிலும் வெற்றி பெற்றுள்ளனர். ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேற வழிவகை செய்த பிரெக்சிட் இயக்கத்திற்கு அடிப்படை குறுகிய தேசியவாதமே. பிரான்சில் வரவுள்ள தேர்தலில் அதிதீவிர வலதுசாரியான மேரி லெ பென் வெற்றி பெற வாய்ப்புள்ளதும், புதிய நாஜி கட்சி என சொல்லிக் கொள்ளும் “ஜெர்மனிக்கு மாற்று” என்ற கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு பெருகி வருவதும், இந்த வலது சாரிகளின் செல்வாக்கு தொழிலாளி வர்க்க இயக்கத்திற்குள்ளும் ஊடுருவி அதை பிளவுபடுத்தி, தவறாக வழிநடத்தும் ஆபத்துள்ளதையும் குறிக்கும் அறிகுறிகளாகும்.

கூலி விலையில் ஏற்படும் வீழ்ச்சி மற்றும் வேலையின்மையின் காரணமாக தேசிய வெறி தனது கோர முகத்தைக் காட்டுகிறது. இந்த தேசிய வெறி அற்பக் காரணங்களுக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் தொழிலாளி வர்க்கத்தின் மீது முதலாளித்துவம் கட்டவிழ்த்துவிடும் பயங்கரவாதத்தை மூடி மறைக்கும் திரையாக உள்ளது. தொழிலாளர்கள் ஒரு வர்க்கம் என்ற முறையில் ஒன்றுபடுவதற்கான அடிப்படையைத் தகர்த்து எறிகிறது. தேசிய வெறி மதம், நிறம், மொழி, பிராந்தியம் என எதை வேண்டுமானாலும் கலவரத்தைத் தூண்டுவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தும். ரசியாவில் வெள்ளை நிறவெறி புடினுக்கான அடிப்படையாக அமைகிறது. (டிரம்ப்-பும் அபே-யும் புடினை வெளிப்படையாக ஆதரித்ததையும் டிரம்ப்-பின் வெற்றிக்கு புடின் உதவியதாக சிஐஏ கூறியதையும் இங்கு நினைவு கூறுங்கள்.) இந்தியாவில் பாசிச இந்து அடிப்படைவாதம் வலதுசாரிகளின் ஆயுதமாக சேவை செய்கிறது.

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு ஒரு பெரும் நெருக்கடியின் விளிம்பில் முதலாளித்துவம் உள்ளது, அது உலகையே மிகப்பெரும் பேரிடருக்குள் தள்ளப் போவதாக உணர்கிறோம். இப்படிப்பட்ட சூழலில் மேலே கூறப்பட்ட எந்தவொரு ஆயுதத்தையும் பயன்படுத்தி முதலாளித்துவம் தேசிய வெறியைத் தூண்டலாம். இந்த பேரிடர் அழிவு சக்திகளைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் மிக்கது மார்க்சிய – லெனினியத் தத்துவம் மட்டும் தான். நாம் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தின் சக்தி மிக்க கொள்கைகளைக் கொண்டுள்ளோம். மார்க்சிய – லெனினிய பதாகையை உயர்த்திப் பிடித்துள்ள தொழிலாளி வர்க்க இயக்கமானது பாசிச சக்திகளின் திட்டங்களுக்கு எதிரான மாற்றை முன்வைத்து தொழிலாளி வர்க்கத்திலான பிளவைத் தடுத்து நிறுத்த முடியும். மார்க்சிய – லெனினியத்தை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது முக்கியமானது. அரசியல், பொருளாதாரப் போராட்டங்களின் ஆதரவோடு சித்தாந்தப் போராட்டத்தை முதன்மைப் போராட்டமாக முன்னெடுக்க வேண்டும்.

படிக்க :
♦ கம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா? | தோழர் மாவோ
♦ கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ !

வேலை நிலைமைகளிலான நடவடிக்கைகளோடு தமது நடைமுறைகளை நிறுத்தி விடுகின்ற போக்கை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மிகச் சரியான தருணம் இதுதான். தொழிலாளி வர்க்கம் வேலைத் தளத்திலான நடவடிக்கைகளை அதற்கும் அப்பாலும் தொடர வேண்டும். தனிப்பட்ட ஒரு ஆலைப் பிரச்சினைகளோடு நின்று விடாமல் ஒட்டு மொத்த உள்ளூர் பகுதி அல்லது தொழிற்சாலைகள் அல்லது மாவட்டம் அல்லது பிராந்தியத்தை உள்ளடக்கி தொழிற்சங்கம் உருவாக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட சங்கங்கள் தான் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் சமூக அடித்தளத்தை விரிவுபடுத்தி பலப்படுத்தும். குறிப்பான தொழிலாளர்களின் பிரச்சினைகளோடு நின்றுவிடுகின்ற வழமையான நடவடிக்கைகளை விட்டொழித்து குறிப்பிட்ட பகுதியில் பரந்து பட்ட மக்களை பாதிக்கின்ற அடிப்படையான பிரச்சனைகளை முன்னெடுப்பதன் மூலம் இந்த சமூக அடித்தளம் விரிவுபடுத்தப்படுகிறது.

ஏகாதிபத்திய முகாமானது தனது நலனுக்கு சேவை செய்து வந்த எந்தவொரு கொள்கையையும் அதனுடைய பணி காலம் முடிந்ததும் ஈவிரக்கமின்றி கழித்துக் கட்ட கொஞ்சமும் தயங்கியதில்லை. 1990களில் ஏகாதிபத்திய முகாமால் உருவாக்கப்பட்ட புதிய தாராளவாதக் கொள்கைகளான தனியார்மயம் – தாராளமயம் – உலகமயமானது பன்னாட்டுக் கம்பனிகள் மற்றும் தேசங்கடந்த கார்ப்பரேட் நிறுவனங்கள், வளர்ச்சி குன்றிய மூன்றாம் உலக நாடுகளுக்கு தமது மூலதனத்தை ஏற்றுமதி செய்ததன் மூலம் தமது தொழில் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்திக் கொள்ள உதவின. இந்நாடுகளின் குறைந்த கூலியுழைப்பு, அபரிமிதமான கனிமவளங்கள் மற்றும் இதுவரை சூறையாடப்படாத பரந்து விரிந்த சந்தை ஆகியவை பன்னாட்டுக் கம்பனிகள் மற்றும் தேசங்கடந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் பகாசுர வளர்ச்சிக்கு அடிப்படைகளாக அமைந்தன. சர்வதேச நிதியாதிக்க மாஃபியா குற்றக் கும்பலானது மொத்த உலகையும் ஒரு சூதாட்ட கிளப்பான கேசினோவாக மாற்றியது.

தொடர்ந்து இந்தக் கொள்கைகளைக் கடைப்பிடித்த ஏகாதிபத்தியங்களும் பிற வளர்ந்த முதலாளித்துவ நாடுகளும் இறுதியாக மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டன. பொருளாதாரக் குறியீடுகள் வளர்ச்சியைக் குறித்தாலும் பரந்துபட்ட உழைக்கும் மக்கள் வேலையிழப்பினாலும் பணமதிப்பு வீழ்ச்சியினாலும் சொல்லொணா துன்பதுயரங்களுக்கு ஆளாக்கப்பட்டனர். மான்யங்களை வெட்டியதும், மக்கள் நலத் திட்டங்களை ஒழித்துக் கட்டியதும் நெருக்கடியைக் குறைத்து முதலாளித்துவ உலகின் வீழ்ச்சியை தடுப்பதற்கு மாறாக நெருக்கடியை மேலும் ஆழமாக்கி தீவிரப்படுத்தவே செய்தன. தானியங்கிமயமாக்குதல் (Automation) மற்றும் டிஜிடல் மயமாக்குதல் மூலம் லாபத்தை அதிகரித்து நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்ள இவர்கள் எத்தனித்தனர். ஆனால் இந்த நடவடிக்கைகளானது தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில் தான் போய் முடிந்ததே தவிர நெருக்கடி தீரவில்லை. மேலும் அதிகரித்தது.

முதலாளித்துவ வர்க்கம் தனது சொந்த அழிவைத் தடுத்து நிறுத்திட முடியாது என்பதை வரலாறு உணர்த்துகிறது. 1914-19ம் ஆண்டுகளில் ஏகாதிபத்திய உலகம் எப்படி இருந்ததோ அதே நிலைமையில் தான் இன்றுள்ளது. அது அன்று நெருக்கடியிலிருந்து மீள என்ன உத்திகளைக் கையாண்டதோ அதே உத்திகளைத் தான் இன்றைய நவீன நிலைமைகளிலும் கையாள்கிறது. அன்று ருசியப் பாட்டாளி வர்க்கம் என்ன செய்ததோ, 20ம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் எப்படி எதிர்கொண்டதோ அதேதான் 21ம் நூற்றாண்டின் துவக்கத்திலும் தேவை என்பதை வரலாறு உணர்த்துகின்றது. முதலாளித்துவ வர்க்கம் வெற்றி கொள்ளப்பட முடியாததல்ல. தொழிலாளி வர்க்கம் அசைக்க முடியாததல்ல. முதலாளித்துவமானது இந்த நெருக்கடிகளுக்குத் தீர்வாக ஏகாதிபத்திய உலகமயமாக்கல் கொள்கையை முன்வைத்து, மூலதனத்தின் ஒற்றிணைவுக்குப் போராடுகிறது.

மேலே தொகுத்துள்ளவைகளின் மூலம் தொழிலாளர் வர்க்கத்தை எப்படிப்பட்ட ஆபத்துக்கள் இன்று சூழ்ந்துள்ளன என்பதைப் பார்க்கிறோம். இதை எப்படி போரிட்டு வெல்வது? தொழிலாளி வர்க்கத்தை எப்படி விடுவிப்பது? யார் இதைச் செய்வது?

மார்க்சிய-லெனினிய பதாகையை உயர்த்திப் பிடிப்போம்

சந்தேகத்துக்கிடமின்றி சரியான மார்க்சிய-லெனினிய அரசியல் நிலைப்பாட்டிலிருந்து வலது மற்றும் இடது விலகல்களை அடையாளம் காணுகின்ற ஆற்றல் மிக்க தலைமையைக் கொண்ட ஒரு அமைப்புதான் இதைச் செய்ய முடியும். அவர்கள் “21ம் நூற்றாண்டின் மார்க்சியம்”, பின் நவீனத்துவம், “அனைத்து அதிகாரங்களுக்கும் எதிராகப் போராடுவோம்”, “வேறொரு உலகம் சாத்தியம்”, அடையாள அரசியல், என்.ஜி.ஓ.க்களின் அரசியலற்ற அரசியல் போக்குகள் மற்றும் முகநூல் குழுக்கள் போன்ற மார்க்சியமற்ற அபத்தங்களையும் அடையாளம் காணக் கூடிய ஆற்றல் மிக்கவர்களாயிருக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக ”மார்க்சியத்தை புதுப்பித்தல்”, “21ம் நூற்றாண்டின் மாறிய நிலைமைகளுக்கேற்ப மார்க்சியத்தை வளர்த்தெடுத்தல்” என்ற மூடுதிரைகளின் பின்னே வரும் மார்க்சிய விரோத முதலாளித்துவ சித்தாந்தங்களான மேலே குறிப்பிட்ட தீமைகளுக்கும் உண்மையான மார்க்சிய-லெனினியத்துக்கும் இடையே தெளிவான சித்தாந்த எல்லைக் கோட்டை வரையறுக்கும் ஆற்றல மிக்க தலைமையாக இருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட தீய சிந்தனைகளுக்கு எதிராக இடைவிடாத, ஈவிரக்கமற்ற சித்தாந்தப் போராட்டத்தை நடத்துகின்ற ஆற்றல் மிக்கதாக அந்தத்தலைமை திகழ வேண்டும்.

முதலாவதாக, மார்க்சிய-லெனினியத்தில் தேர்ந்த தெளிவையும் தேர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்ட தலைமைதான் இன்றைக்குத் தேவை. இப்படிப்பட்ட தலைமை ஒன்றுதான் தொழிலாளி வர்க்கத்தை நீர்த்துப் போகச் செய்து, திசைதிருப்பி, பிளவுபடுத்தி, தவறாக வழிநடத்துகின்ற தீமைகளை இடையறாது அடித்து நொறுக்கும். 

இரண்டாவதாக, தற்போது நிலவுகின்ற அரசியல் சூழலுக்கேற்ப நாம் ஒரு மிகச் சரியான அரசியல் மற்றும் செயல் தந்திர திட்டம் வகுக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட தருணத்தில் பல்வேறு அரசியல், சமூக, பொருளாதாரப் போராட்டங்களும் மற்றும் மொத்த நாட்டையுமே பாதிக்கின்ற வேறு பல விசயங்களும், பிரச்சனைகளும், சவால்களும் நிலவலாம். இவற்றை எல்லாம் சரியாக ஆய்வு செய்து, இதில் எது மையமானது, முதன்மையானது, அதாவது, பிரச்சினையில் எதை சரி செய்தால் மொத்த பிரச்சனையும் தீரும் என்ற முதன்மையான மையமான அரசியல் பிரச்சனையைக் கண்டறிய வேண்டும்.

இதனடிப்படையில் நாம் ஒரு அரசியல் செயல் தந்திரத்தை வகுக்க வேண்டும் – அரசியல் அரங்கில் கூர்மையான, மையமான அரசியல் முழக்கம், அதற்கேற்ற சரியான போராட்ட வடிவங்கள், அதற்கேற்ப சரியான அமைப்பு முறை – இவை மூலம் இடைவிடாத அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அரசியல் செயல்தந்திர அடிப்படையிலான அரசியல் போராட்டங்கள் தான் முதன்மையான போராட்டமாக இருக்க வேண்டும். பொருளாதாரப் போராட்டங்களோ அல்லது பகுதிக் கோரிக்கைகளுக்கான போராட்டங்களோ இந்த அரசியல் போராட்டங்களுக்கு துணை செய்வதாக, இதற்கு கீழ்ப்பட்டதாக இருக்க வேண்டும்.

மூன்றாவதாக, சித்தாந்த மற்றும் அமைப்பு முறைகளில் இருந்து விலகுவதற்கு எதிராக இடைவிடாத போராட்டத்தை முன்னெடுக்கும் அதே வேளையில், பண்பாட்டுச் சீரழிவுகளை அழித்தொழிக்க முறையான, தொடர்ச்சியான, சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். பண்பாட்டுச் சீரழிவை ஒழித்துக் கட்ட தொழிலாளி வர்க்கக் கண்ணோட்டத்திலான நீதிநெறிக் கல்வியும், சீர்செய் இயக்கமும் மிகவும் தேவை. பெரும்பான்மையான தொழிற்சங்க அமைப்புகளில் பண்பாட்டு ஒழுக்கம் பற்றி கணக்கில் கொள்ளாமல் உள்ளனர். பொருளாதாரக் கோரிக்கைகளை விட இதற்குதான் முக்கியத்துவம் தரப்பட வேண்டும். அமைப்பு விதிகளில் பண்பாட்டு ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் தரப்படாமல் இருக்கலாம்; ஆனால் அது பற்றிய திட்டம் இருக்க வேண்டும்.

மூடி மறைத்தோ, வெளிப்படையாகவோ ஏற்படும் முதலாளித்துவ சித்தாந்தத்தின் தீய பாதிப்புகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்றால் இந்த மூன்று கடமைகளையும் ஒரே நேரத்தில், எந்த இடை நிறுத்தமுமின்றி தொடர்ச்சியாக நாம் மேற்கொள்ள வேண்டும். இந்த மூன்று கடமைகளையும் உண்மையாக மேற்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். தொழிலாளி வர்க்கத்தின் சிந்தனையிலிருந்து முதலாளித்துவ சித்தாந்தத்தை நீக்க வேண்டும் என்றால் இதைத் தவிர வேறு வழிமுறையோ பாதையோ கிடையாது. மார்க்சியம் என்ற போர்வையில் மறைந்து வரும் முதலாளித்துவ சித்தாந்த மறுகாலனிய ஆயுதங்களிலிருந்து தொழிலாளி வர்க்கத்தை பாதுகாப்பதற்கான ஒரே பாதை இதுவே. இதனூடாகவே பாட்டாளி வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைக்க முடியும்.

  • தொழிலாளி வர்க்க இயக்கத்தை பிளவுபடுத்தி, திசைதிருப்பி, தவறாக வழிநடத்தும் போக்குகளுக்கு முடிவு கட்டுவோம்!
  • பாட்டாளிவர்க்க சர்வதேசியத்தைக் கட்டியமைப்போம்!
  • மேல்நிலை வல்லரசின் மேலாதிக்கம் மற்றும் ஏகாதிபத்தியதிற்கு எதிராக தொழிலாளி வர்க்கமும், அனைத்து ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களும் ஒன்றிணைவோம்!


புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தமிழ்நாடு – புதுச்சேரி