சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார வேலை பற்றிய தேசிய மாநாட்டுரை
(1957, மார்ச் 12)
பாகம் – 3

முந்தைய பாகங்கள் >>  1 2

ஐந்தாவதாக, சீர்செய் இயக்கம் :

சீர்செய் இயக்கம் என்பது ஒருவருடைய சிந்தனாமுறையைச் சீர்செய்வது, வேலை நடையைச் சீர்செய்வது என்று அர்த்தப்படும். ஜப்பானிய எதிர்ப்பு யுத்தத்தின் போதும், விடுதலை யுத்தத்தின் போதும், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட ஆரம்ப நாட்களிலும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய் இயக்கங்கள் நடத்தப்பட்டன.2 இன்று கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி இன்னொரு சீர்செய் இயக்கத்தைக் கட்சிக்குள் இவ்வாண்டு முதல் நடத்துவதாகத் தீர்மானித்துள்ளது. கட்சிக்கு வெளியிலுள்ள மக்கள் இதில் கலந்து கொள்ளலாம்; அல்லது விரும்பாவிட்டால் கலந்து கொள்ளாமல் விடலாம். இந்தச் சீர்செய் இயக்கத்தில் பிரதான விசயம் ஒருவருடைய சிந்தனாமுறையிலும் வேலைநடையிலும் காணும் மூன்று தவறுகளை, அதாவது, மானசீகவாதம், அதிகாரத்துவம், கோஷ்டிவாதம் ஆகியவற்றை விமர்சனம் செய்வதாகும்.

ஜப்பானிய எதிர்ப்பு யுத்தத்தின் போது நடந்தது போல இன்றைய முறை யாதெனில் முதலில் ஒருசில தஸ்தாவேஜுகளைப் படித்து, பின்னர் இத்தகைய படிப்பின் அடிப்படையில் ஒருவர் தனது சிந்தனையையும் வேலையையும் பரிசீலனை செய்து, விமர்சனம், சுயவிமர்சனம் செய்வதன் மூலம் குறைபாடுகளையும் தவறுகளையும் அம்பலப்படுத்திச் சரியானவற்றையும் சிறந்தவற்றையும் வளர்க்க வேண்டும் என்பதாகும்.

சீர்செய் இயக்கத்தில் ஒருபுறம், நாம் கண்டிப்பாக இருந்து, நமது தவறுகளையும் குறைபாடுகளையும் மேலோட்டமாக இல்லாமல் பாரதூரமாக விமர்சனம், சுயவிமர்சனம் செய்து, அவற்றைத் திருத்த வேண்டும்; மறுபுறம், நாம் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளாமல், கடந்த காலத் தவறுகளிலிருந்து படிப்பினை பெற்று எதிர்காலத்தில் தவறுகளைத் தவிர்ப்பது, நோயாளியைக் காப்பாற்ற நோய்க்குச் சிகிச்சை அளிப்பது” என்ற கோட்பாட்டைப் பின்பற்ற வேண்டும். ஒரே அடியில் ஆட்களை முடித்துவிடுவது” என்ற முறையை நாம் எதிர்க்க வேண்டும்.

படிக்க :
♦ கம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா? | தோழர் மாவோ
♦ தோழர் மாவோ சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துவோம் ! தாராளவாதத்தை வீழ்த்துவோம் !

நமது கட்சி ஒரு மகத்தான கட்சி, புகழ்மிக்க கட்சி, பிசகற்ற கட்சி. இது அங்கீகரிக்கப்படவேண்டிய ஒரு உண்மை. ஆனால் நம்மிடம் இன்னும் குறைபாடுகள் உண்டு. இதுவும் அங்கீகரிக்கப்பட வேண்டிய ஒரு உண்மையாகும். நாம் எல்லாவற்றையும் அங்கீகரிக்கக் கூடாது; சரியானவற்றை மாத்திரம் அங்கீகரிக்க வேண்டும். அதே வேளையில் நாம் எல்லாவற்றையும் நிராகரிக்கக் கூடாது; பிழையானவற்றை மாத்திரம் நிராகரிக்க வேண்டும். நமது வேலையில் பிரதான அம்சம் நமது சாதனைகள். ஆனால் அதில் இன்னும் பல குறைபாடுகளும் தவறுகளும் இருக்கின்றன. எனவேதான் நாம் ஒரு சீர்செய் இயக்கத்தை நடத்த வேண்டியிருக்கின்றது.

நமது சொந்த மானசீகவாதம், அதிகாரத்துவம், கோஷ்டிவாதம் ஆகியவற்றை நாம் விமர்சனம் செய்தால் நமது கட்சியின் புகழுக்கு மாசு ஏற்படுமா?

இல்லை என்று நான் எண்ணுகின்றேன். மாறாக, அது நமது கட்சியின் புகழை அதிகரிக்கச் செய்வதற்குத் துணை செய்யும். ஜப்பானிய எதிர்ப்பு யுத்தத்தின் போது நடந்த சீர்செய் இயக்கம் இதை நிரூபித்துள்ளது. அது நமது கட்சியின் புகழை, நமது கட்சி உறுப்பினர்களின் புகழை, நமது அனுபவமிக்க முதிய ஊழியர்களின் புகழை வளர்த்தது. புதிய ஊழியர்கள் பெரும் முன்னேற்றம் அடைவதற்கும் அது துணை செய்தது.

கம்யூனிஸ்ட் கட்சி, கோமிந்தாங் இரண்டில் விமர்சனத்துக்கு அஞ்சுவது யாது? கோமிந்தாங் ஆகும். அது விமர்சனத்தைத் தடைசெய்தது. ஆனால் அது இறுதித் தோல்வியிலிருந்து கோமிந்தாங்கைக் காப்பாற்றவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனத்துக்கு அஞ்சுவதில்லை. காரணம், நாம் மார்க்சிஸ்டுகள்; உண்மை நம் பக்கத்தில் இருக்கின்றது; அடிப்படை மக்கள், தொழிலாளரும் விவசாயிகளும் நம் பக்கத்தில் இருக்கின்றனர்.

நாம் வழக்கமாகக் கூறுவது போல், சீர்செய் இயக்கம் என்பது “சர்வவியாபகமான ஒரு மார்க்சியக் கல்வி இயக்கம்”.3 சீர்செய்வது என்றால் கட்சி முழுவதும் விமர்சனம், சுயவிமர்சனம் இவற்றின் மூலம் மார்க்சியத்தைக் கற்பது என்று அர்த்தம். இந்தச் சீர்செய் இயக்கத்தின் போக்கில், நாம் மார்க்சியம் பற்றிக் கூடுதலாகப் படிப்பது நிச்சயம்.

தலைமையைப் பொறுத்தவரையில், சீனாவின் மாற்றமும் நிர்மாணமும் நம்மைச் சார்ந்திருக்கின்றன. நமது சிந்தனாமுறையையும் வேலை நடையையும் நாம் சீர்செய்ததும், நமது வேலையில் நாம் மேலும் முன்முயற்சி உடையவர்களாய் மேலும் ஆற்றல் பெற்று, மேலும் நன்றாக வேலை செய்வோம். பரந்துபட்ட மக்களுக்கும் சோசலிச லட்சியத்துக்கும் முழுமனதோடு சேவை செய்கின்ற, மாற்றங்களைக் கொண்டுவர உறுதி பூண்டுள்ள மக்கள் பலர் நமது நாட்டுக்குத் தேவை.

கம்யூனிஸ்டுகளாகிய நாம் எல்லாரும் இத்தகையவர்களாக இருக்க வேண்டும். பழைய சீனாவில் சீர்திருத்தம் பற்றிப் பேசுவதே ஒரு குற்றம்; இது பற்றிப் பேசுவோர் சிரச்சேதம் செய்யப்படலாம்; அல்லது சிறையில் அடைக்கப்படலாம். இருந்தும் பலவிதமான கஷ்டங்கள் மத்தியிலும் ஒன்றுக்கும் அஞ்சாது நூல்களும், பத்திரிகைகளும் வெளி யிட்டு மக்களுக்குப் போதித்து அவர்களை ஸ்தாபனரீதியாக அணிதிரட்டி விட்டுக் கொடுக்காது போராட்டங்களை நடத்திய திடசித்தம் வாய்ந்த சீர்திருத்தவாதிகளும் அன்று இருந்தார்கள்.

மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம் நமது நாட்டுப் பொருளாதார, கலாச்சாரத் துறைகளின் துரித வளர்ச்சிக்கு வழிகோலியுள்ளது. நமது அரசு ஸ்தாபிக்கப்பட்டு ஒருசில ஆண்டுகளே சென்றுள்ளன. இருந்தும் பொருளாதாரம், கலாச்சாரம், கல்வி, விஞ்ஞானம் ஆகியவை முன் காணாத அளவில் செழித்து வளர்வதை மக்கள் ஏற்கனவே காண முடிகின்றது. நவ சீனாவைக் கட்டி வளர்ப்பதில் கம்யூனிஸ்டுகளாகிய நாம் எந்தவிதமான கஷ்டத்துக்கும் அஞ்ச மாட்டோம். ஆனால் இதை நாம் நாமாகவே நிறைவேற்ற முடியாது. சோசலிச கம்யூனிஸத் திசையில் நமது சமுதாயத்தின் மாற்றத்துக்கும் நிர்மாணத்துக்குமாக நம்முடன் சேர்ந்து அஞ்சாது போரிடக் கூடிய, உன்னத லட்சியங்களை உடைய, கட்சிக்கு வெளியில் உள்ள மக்கள் பெரும் தொகையில் நமக்குத் தேவை.

பல பத்துக் கோடிச் சீன மக்களுக்கும் சிறந்த ஒரு வாழ்வை உத்தரவாதம் செய்வதும், பொருளாதாரத்திலும், கலாச்சாரத்திலும் பின்தங்கிய நமது நாட்டைச் சுபிட்சமும், பலமும், உயர்ந்த கலாச்சாரத் தரமும் உடைய ஒரு நாடாக மாற்றுவதும் ஒரு கடினமான கடமையாகும். இந்தக் கடமைக்கு மேலும் திறமையாகத் தோள் கொடுத்து, உன்னத லட்சியங்களால் உந்தப்பட்டு, சீர்திருத்தங்களை நிறைவேற்றும் திடசித்தமுடைய, கட்சிக்கு வெளியேயுள்ள எல்லாருடனும் நன்றாய் வேலை செய்யக் கூடியவர்கள் ஆக வேண்டுமானால், நாம் இன்று மாத்திரமல்ல, எதிர்காலத்திலும் சீர்செய் இயக்கங்களை நடத்த வேண்டும்; இடைவிடாது தவறானவை எல்லாவற்றையும் நம்மிடமிருந்து நீக்க வேண்டும்.

பூரணமான பொருள்முதல்வாதிகள் அச்சமற்றவர்கள். நமது சகபோராளிகள் எல்லாரும் துணிகரமாகத் தமது பொறுப்புகளுக்குத் தோள் கொடுப்பர்; கஷ்டங்கள் எல்லாவற்றையும் வெற்றி கொள்வர்; பின்னடைவுகளுக்கோ அல்லது ஏளனங்களுக்கோ அஞ்ச மாட்டார்கள்; கம்யூனிஸ்டுகளாகிய எங்களை விமர்சனம் செய்வதற்கும், தமது ஆலோசனைகளைக் கொடுப்பதற்கும் அஞ்ச மாட்டார்கள் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.

ஆயிரம் வெட்டுகளுக்கும் அஞ்சாத ஒருவன்தான் சக்கரவர்த்தியைக் குதிரையிலிருந்து இழுத்து வீழ்த்தும் துணிவுடையவன்” — இதுவே சோசலிசத்தையும் கம்யூனிஸத்தையும் கட்டிவளர்க்கும் நமது போராட்டத்திற்குத் தேவையான தளராத உணர்வு. கம்யூனிஸ்டுகளாகிய நம்மைப் பொறுத்தவரையில், ஒத்துழைப்பவர்களுக்கு உதவியான சூழ்நிலைகளை நாம் சிருஷ்டிக்க வேண்டும். நமது பொதுவேலையில் அவர்களுடன் தோழமையான நல்ல உறவுகளை ஸ்தாபிக்க வேண்டும். நமது பொதுப் போராட்டத்தில் அவர்களுடன் ஐக்கியப்பட வேண்டும்.

(தொடரும்)

குறிப்புகள் :

2. ஜப்பானிய-எதிர்ப்பு யுத்தத்தின் போது நடந்த சீர்செய் இயக்கம் என்பது, 1942-ம் ஆண்டு, யென்ஆனிலும் இதர ஜப்பானிய-எதிர்ப்புத் தளப்பிரதேசங்களிலும் உள்ள கட்சி ஸ்தாபனங்களில் மானசீகவாதம், கோஷ்டிவாதம், கட்சியின் புளித்துப்போன எழுத்துமுறை ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்காக நடத்தப்பட்ட பெரும் சீர்செய் இயக்கமாகும். விடுதலை யுத்தத்தின் போது நடந்த சீர்செய் இயக்கம் என்பது, 1948-ம் ஆண்டு, விடுதலைப் பிரதேசங்களின் கட்சி ஸ்தாபனங்களில் நிலச் சீர்திருத்த இயக்கத்துடன் இணைத்து, பரந்த அளவில் நடத்தப்பட்ட கட்சிச் சீர்செய்தலாகும். சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட ஆரம்ப நாட்களில் நடந்த சீர்செய் இயக்கம் என்பது, தேசவிசால வெற்றி பெற்ற பின், 1950-ம் ஆண்டில் கட்சி முழுவதிலும் நடத்தப்பட்ட சீர்செய் இயக்கமாகும். அதன் நோக்கம் பெருந்தொகையான புதிய கட்சி உறுப்பினர்களுக்குப் போதனையளித்து, அவர்களது தூய்மையற்ற சித்தாந்தங்களை மாற்றுவதும், முதிர்ந்த கட்சி உறுப்பினர் மத்தியில் வெற்றியினால் வளரத் தொடங்கிய இறுமாப்பு, சுயதிருப்தி ஆகியவற்றையும் ஆணையிடும் வேலை நடையையும் சமாளிப்பதும் ஆகும்.

3. “தேர்ந்தெடுக்கப்பட்ட மாஒ சேதுங் படைப்புகள்” பகுதி 3-ல் ”ராணுவத்தில் சுய தேவைக்கான உற்பத்தி பற்றியும், மாபெரும் சீர்செய் இயக்கம், உற்பத்தி இயக்கம் இவற்றின் முக்கியத்துவம் பற்றியும்” என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க