சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார வேலை பற்றிய தேசிய மாநாட்டுரை
(1957, மார்ச் 12)
தோழர்களே !
நமது மாநாடு1 நன்றாக நடைபெற்று வருகின்றது. மாநாட்டின்போது பல பிரச்சினைகள் எழுப்பப்பட்டுள்ளன. நாம் பல விசயங்களைப் பற்றிப் படித்துள்ளோம். தோழர்கள் இங்கு விவாதித்த பிரச்சினைகள் பற்றி நான் இப்பொழுது சில குறிப்புகள் கூற விரும்புகின்றேன்.
பெரும் சமுதாய மாற்றம் ஒன்று நிகழும் காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோம். சீன சமுதாயம் நீண்டகாலமாகப் பெரும் மாற்றங்களுக்கூடாகச் சென்று கொண்டிருக்கின்றது. ஜப்பானிய எதிர்ப்பு யுத்தம் இப்பெரும் மாற்றத்தின் ஒரு காலகட்டம், விடுதலை யுத்தம் இன்னொன்று. ஆனால் இன்றைய மாற்றம் முந்தியவற்றிலும் பார்க்க இயல்பில் மேலும் ஆழமான ஒன்றாகும். இன்று நாம் சோசலிசத்தை நிர்மாணித்துக் கொண்டிருக்கின்றோம். சோசலிச மாற்றத்துக்கான இந்த இயக்கத்தில் பல பத்துக் கோடி மக்கள் பங்குபற்றுகின்றார்கள். நாடு முழுவதும் வர்க்க உறவுகள் மாறிக் கொண்டிருக்கின்றன.
விவசாயத்திலும் கைத்தொழிற்துறையிலும் உள்ள குட்டி பூர்ஷுவா வர்க்கமும் தொழில் வர்த்தகத் துறைகளிலுள்ள பூர்ஷுவா வர்க்கமும் ஒரு மாற்றத்துக்கூடாகச் சென்றுள்ளன. சமுதாய பொருளாதார அமைப்பு முறை மாற்றம் அடைந்துவிட்டது. தனியார் பொருளாதாரம் கூட்டுப் பொருளாதாரமாக மாற்றப்பட்டு விட்டது. முதலாளித்துவத் தனியுடைமை முறை சோசலிசப் பொது உடைமையாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இத்தகைய பெரும் மாற்றங்கள் மக்களின் மனதில் பிரதிபலிப்பது இயற்கையே. மனிதனின் சமுதாய வாழ்வு அவனுடைய உணர்வு நிலையை நிர்ணயிக்கின்றது.
நமது சமுதாய அமைப்பில் காணும் இந்தப் பெரும் மாற்றங்கள் பற்றி வெவ்வேறு வர்க்கங்கள், வர்க்கத் தட்டுகள், சமுதாயக் குழுக்கள் மத்தியில் வெவ்வேறு பிரதிபலிப்புகள் காணப்படுகின்றன. சீனாவைப் பொறுத்தவரையில் சோசலிசமே அதற்குரிய ஒரேயொரு வழி என்பதை யதார்த்த வாழ்வு ஊர்ஜிதம் செய்ததன் காரணமாகப் பரந்துபட்ட மக்கள் இந்த மாற்றங்களை ஆர்வத்துடன் ஆதரிக்கின்றனர். பழைய சமுதாய அமைப்பைத் தூக்கி எறிந்து ஒரு புதிய சமுதாய அமைப்பை அதாவது சோசலிச அமைப்பை ஸ்தாபிப்பது ஒரு பெரும் போராட்டம், சமுதாய அமைப்பிலும் மக்கள் ஒருவரோடு ஒருவர் கொள்ளும் உறவுகளிலும் ஒரு பெரும் மாற்றம் ஆகும்.
நிலைமை அடிப்படையில் சிறப்பாக இருக்கின்றது என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டும். இருப்பினும் புதிய சமுதாய அமைப்பு மிக அண்மையில்தான் ஸ்தாபிக்கப்பட்டது. அது ஸ்திரப்படுவதற்கு இன்னும் காலம் தேவை. ஒரு புதிய அமைப்பு ஸ்தாபிக்கப்பட்ட அதே கணத்தில் பூரணமாக ஸ்திரப்படுத்தப்பட முடியும் என்று ஒருபோதும் எண்ணிவிடக் கூடாது. ஏனென்றால், அது அசாத்தியம். அது படிப்படியாகத்தான் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும். இறுதியில் அதை ஸ்திரப்படுத்த வேண்டுமானால், நாட்டின் சோசலிசத் தொழில்மயமாக்கத்தை நிறைவேற்ற வேண்டும்; பொருளாதாரத் துறையில் சோசலிசப் புரட்சியை உறுதியாக நடத்த வேண்டும்; இன்னும் அரசியல், சித்தாந்த முன்னணிகளில் இடைவிடாது கடினமான சோசலிசப் புரட்சிப் போராட்டங்களையும், சோசலிசக் கல்வியையும் நடத்த வேண்டும்.
இவை தவிர, பல்வேறு சர்வதேசியச் சூழ்நிலைகளும் இதற்கு இசைவாக இருக்க வேண்டும். சீனாவில் சோசலிச அமைப்பை ஸ்திரப்படுத்தும் போராட்டம், சோசலிசமா, முதலாளித்துவமா ‘எது வெல்லும்’ என்பதைத் தீர்மானிக்கும் போராட்டம், இன்னும் ஒரு நீண்ட வரலாற்றுக் காலகட்டம் வரை நடந்து கொண்டே இருக்கும். ஆனால் புதிய சோசலிச அமைப்பு முறை ஸ்திரப்படுத்தப்படுவது நிச்சயம் என்பதை நாம் எல்லாரும் உணர்ந்து கொள்ள வேண்டும். நவீன தொழில் துறை, நவீன விவசாயம், நவீன விஞ்ஞானம், கலாச்சாரம் ஆகியவற்றை உடைய ஒரு சோசலிச நாட்டை நாம் நிச்சயம் கட்டியமைப்போம். இது நான் குறிப்பிட விரும்பும் முதலாவது விசயமாகும்.
படிக்க:
♦ பாட்டாளி வர்க்கமும் பாட்டாளி வர்க்கக் கட்சியும் ! | ஜே. வி. ஸ்டாலின்
♦ பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்
இரண்டாவதாக, நமது நாட்டின் அறிவுஜீவிகள் சம்பந்தப்பட்ட நிலைமையை ஆராய்வோம்.
சீனாவிலுள்ள அறிவுஜீவிகளின் தொகை பற்றி ஒரு சரியான புள்ளி விபரம் கிடையாது. உயர்தர அறிவுஜீவிகள் சாதாரண அறிவுஜீவிகள் உட்பட, பல்வேறு வகைப்பட்ட அறிவுஜீவிகளும் சுமார் ஐம்பது லட்சம் பேர் இருக்கலாம் என மதிப்பிடப்படுகின்றது. இந்த ஐம்பது லட்சம் பேரில் ஏகப் பெரும்பான்மையானவர்கள் தேசபக்தியுடையவர்கள்; நமது மக்கள் குடியரசை நேசிக்கின்றனர்; மக்களுக்கும் சோசலிச நாட்டுக்கும் சேவை செய்ய விரும்புகின்றனர். ஒரு சிறு தொகையினர் சோசலிச அமைப்பை அவ்வளவு விரும்பவில்லை; சந்தோசப்படவுமில்லை.
சோசலிசம் பற்றி அவர்கள் இன்னும் சந்தேகம் உடையவர்களாக இருக்கின்றனர். ஆனால் ஏகாதிபத்தியத்தை எதிர்நோக்கும் நிலையில் அவர்கள் தேசபக்தர்களாக விளங்குகின்றனர். நமது நாட்டின் மீது பகைமை பாராட்டும் அறிவுஜீவிகளின் தொகை மிகச் சிறியது. அவர்கள் நமது பாட்டாளி வர்க்க சர்வாதிகார நாட்டை விரும்பாமல், பழைய சமுதாயத்துக்காக ஏங்கித் துடிக்கின்றனர். சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் அவர்கள் தொல்லைகளைத் தூண்டி, கம்யூனிஸ்ட் கட்சியைத் தூக்கியெறிந்து, பழைய சீனாவை மீட்க எத்தனிக்கின்றனர். பாட்டாளி வர்க்க, பூர்ஷுவா வர்க்க மார்க்கங்களிலும், சோசலிச, முதலாளித்துவ பாதைகளிலும் அவர்கள் பின்னையவற்றிலேயே பிடிவாதமாக நிற்கின்றனர். உண்மையில் இந்தப் பாதை சாத்தியமானதல்ல. எனவே அவர்கள் ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம், அதிகார முதலாளித்துவம் ஆகியவற்றிடம் சரணடையத் தயாராய் இருக்கின்றனர்.
அரசியல் வட்டாரங்கள், தொழில், வர்த்தகத்துறைகள், கலாச்சார, கல்வித்துறைகள், விஞ்ஞான, தொழில் நுட்பத்துறைகள், மத வட்டாரங்கள் எல்லாவற்றிலும் இத்தகைய நபர்கள் காணப்படுகின்றனர். அவர்கள் கடைகோடி பிற்போக்குவாதிகளாவர். ஐம்பது லட்சம் அறிவுஜீவிகளில் அவர்களின் தொகை 1 அல்லது 2 அல்லது 3 வீதம் மாத்திரமே. மொத்தம் ஐம்பது லட்சத்தில் ஏகப்பெரும்பான்மையானவர்கள், அல்லது 90 வீதத்துக்கு மேலானவர்கள் சோசலிச அமைப்பைப் பல்வேறு அளவில் ஆதரிக்கின்றனர். அவர்களில் பலர் சோசலிசத்தின் கீழ் வேலை செய்வது எப்படி, பல புதிய பிரச்சினைகளைப் புரிந்து கொள்வது, கையாள்வது, தீர்ப்பது எப்படி என்பதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ளவில்லை.
மார்க்சியம் பற்றி இந்த ஐம்பது லட்சம் அறிவுஜீவிகளும் கொள்ளும் மனோபாவத்தைப் பொறுத்தவரையில், கம்யூனிஸ்டுகளும் கட்சிக்கு வெளியிலுள்ள ஆதரவாளர்களும் அடங்கிய சுமார் 10 வீதத்துக்கு மேலானவர்கள் மார்க்சிசத்துடன் ஓரளவு பரிச்சயம் உடையவர்கள், ஒரு உறுதியான நிலைப்பாட்டில் – பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டில் – நிற்கின்றனர் என்று கூறலாம். மொத்தம் ஐம்பது லட்சம் பேர் மத்தியில் அவர்கள் சிறுபான்மையினராக இருக்கின்றனர். ஆனால் மையக்கருவாக, ஒரு பலம் வாய்ந்த சக்தியாக விளங்குகின்றனர்.
பெரும்பான்மையானவர்கள் மார்க்சியத்தைப் படிக்க விரும்புகின்றனர். ஏற்கெனவே சிறிது படித்தும் உள்ளனர். ஆனால் அவர்கள் அதனுடன் இன்னும் பரிச்சயம் பெறவில்லை. அவர்களில் சிலருக்கு இன்னும் சந்தேகங்கள் இருக்கின்றன. அவர்களுடைய நிலைப்பாடு இன்னும் உறுதியானதாகவில்லை. அவர்கள் நெருக்கடிக் காலங்களில் ஊசலாடுகின்றனர். ஐம்பது லட்சம் அறிவுஜீவிகளில் பெரும்பான்மையாக விளங்கும் இந்தப் பகுதியினர் ஒரு இடைநிலைக் கட்டத்தில் இன்னும் இருக்கின்றனர். மார்க்சியத்தைப் பலமாக எதிர்ப்பவர்கள் அல்லது அதன்மீது பகைமை பாராட்டுபவர்கள் மிகச் சிறிய தொகையினரே ஆவர். சிலர் வெளிப்படையாகக் கூறாவிட்டாலும், உண்மையில் மார்க்சியத்துக்கு உடன்பாடானவர்கள் அல்லர். இத்தகைய நபர்கள் நீண்ட காலம் இருக்கவே செய்வர். உடன்பாடின்றி இருப்பதற்கு அவர்களை நாம் அனுமதிக்க வேண்டும்.
படிக்க :
♦ மாமேதை லெனின் : அறிவாளிகளின் அந்தரங்கம் || லெனின் – தலைவர்! தோழர்! மனிதர்!
♦ தோழர் மாவோ சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துவோம் ! தாராளவாதத்தை வீழ்த்துவோம் !
உதாரணத்திற்கு, கருத்துமுதல்வாதிகள் சிலரை எடுப்போம். அவர்கள் சோசலிசத்தின் அரசியல், பொருளாதார அமைப்பை ஆதரிக்கலாம். ஆனால் மார்க்சிய உலகநோக்கை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மத வட்டாரங்களிலுள்ள தேச பக்தர்களைப் பொறுத்தவரையிலும் இது உண்மையாகும். அவர்கள் ஈசுரவாதிகள். நாம் நாஸ்திகர்கள். மார்க்சிய உலகநோக்கை ஏற்றுக் கொள்ளும்படி நாம் அவர்களை நிர்ப்பந்திக்க முடியாது. சுருங்கச் சொன்னால், மார்க்சியம் பற்றி ஐம்பது லட்சம் அறிவுஜீவிகளும் கொள்ளும் மனோபாவத்தைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்: மார்க்சியத்தை ஆதரிப்பவர்கள், அதனுடன் ஓரளவு பரிச்சயம் உடையவர்கள் சிறுபான்மையினரே ஆவர். மார்க்சியத்தை எதிர்ப்பவர்களும் ஒரு சிறுபான்மையினரே ஆவர். பெரும்பான்மையினர் மார்க்சியத்தை ஆதரிக்கின்றனர், ஆனால் அதனுடன் பரிச்சயம் பெறவில்லை. அதைப் பல்வேறு அளவில் ஆதரிக்கின்றனர். இங்கு அவர்கள் எடுக்கும் நிலைப்பாடுகளும் உறுதியானது, ஊசலாட்டமானது, பகைமையானது என மூன்று வகையாக இருக்கின்றன. இந்த நிலைமை நீண்ட காலம் தொடர்ந்து இருக்கும் என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். இந்த உண்மையை நாம் அங்கீகரிக்கத் தவறினால், நாம் பிறருக்குப் பெரும் கோரிக்கையை முன்வைக்கும் அதேவேளையில், நமக்குச் சிறு கடமைகளை மாத்திரமே முன்வைத்தவர்கள் ஆவோம்.
பிரச்சார வேலையிலுள்ள நமது தோழர்கள் மார்க்சியத்தைப் பரப்பும் கடமை உடையவர்கள். இது சுயமாக மக்கள் அங்கீகரிக்கும் முறையில் படிப்படியாகவும் நன்றாகவும் செய்யப்பட வேண்டும். மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளும்படி நாம் மக்களை நிர்ப்பந்திக்க முடியாது. அவர்களுக்கு அறிவுறுத்த மாத்திரம் நம்மால் முடியும். சில ஐந்தாண்டுத் திட்டக் காலகட்டங்களின் போக்கில் நமது அறிவுஜீவிகளில் கணிசமான தொகையினர் மார்க்சியத்தை அங்கீகரித்துத் தமது வேலை வாழ்வு ஆகியவற்றின் நடைமுறை மூலம், வர்க்கப் போராட்டம், உற்பத்தி, விஞ்ஞான நடவடிக்கை ஆகியவற்றின் நடைமுறை மூலம் அதை ஓரளவு நன்கு கிரகித்துக் கொண்டால் அது உண்மையில் சிறப்பானது. இதுதான் நடக்கும் என்று நாம் நம்புகின்றோம்.
(தொடரும்)
குறிப்புகள் :
- சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார வேலை பற்றிய தேசிய மாநாடு, கட்சி மத்திய கமிட்டியால் 1957, மார்ச் 6-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை பீக்கிங்கில் நடத்தப்பட்டது. மத்திய, மாகாண (அல்லது மாநகர) மட்டங்களிலுள்ள கட்சியின் பிரச்சார, கலாச்சார, கல்வி பகுதிகளின் 380-க்கு மேலான தலைமை ஊழியர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். அதோடு, விஞ்ஞானம், கல்வி, இலக்கியம், கலை, பத்திரிகை, பிரசுரம் முதலிய பல்வேறு பகுதிகளிலும் நிறுவனங்களிலுமிருந்து வந்த கட்சிக்கு வெளியிலுள்ள 100-க்கு மேலானோரும் இம்மாநாட்டுக்கு வரவழைக்கப்பட்டனர்.