இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மார்க்சிய லெனினியவாதிகள் பல குழுக்களாக பிளவுபட்டு சிதைந்து இருக்கிறார்கள். அதற்கு முதன்மையான காரணம் அந்த குழுக்களின் தலைவர்களிடமுள்ள குட்டிமுதலாளித்துவ பண்பான “தான்” என்ற அகம்பாவம்தான். தமிழகத்திலுள்ள குட்டிமுதலாளித்துவ வர்க்கப் பிரிவைச் சேர்ந்தவர்களிடம் இந்த பண்பு இயல்பாக காணப்படுகிறது. இந்த குட்டிமுதலாளித்துவ வர்க்கங்களிலிருந்து வருபவர்கள்தான் இந்த குழுக்களில் தலைவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் இயல்பாக உள்ள இந்த குட்டிமுதலாளித்துவ பண்பை கைவிட்டு பாட்டாளி வர்க்க பண்பை வளர்த்துக் கொள்வதன் மூலமாகவும் பிறரிடமிருந்தும் பிற குழுக்களிலிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்து செயல்படுவதன் மூலமே பாட்டாளிவர்க்க முன்னணியில் பலரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு பொதுக்கொள்கையை உருவாக்கி ஒரு ஒன்றுபட்ட கட்சியை கட்ட முடியும்.
மற்றவரிடமிருந்து கற்றுக் கொள்ளுதல் – செருக்கையும் சுயதிருப்தியையும் ஒழித்துக்கட்டுதல் குறித்து மத்தியக் குழுவின் வழிகாட்டுதல்.
டிசம்பர் 13, 1963.
(மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் – தொகுதி ஒன்பது – பக்கம் 56)
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அறிக்கை கீழே:-
நமது தோழர்களிடம் பொதுவாகக் காணப்படும் குறைகளை இப்படிப் பட்டியலிடலாம். சுயதிருப்தி, தற்பெருமை; மார்க்சிய இயக்கவியல், பகுப்பாய்வு அணுகுமுறை – அதாவது ஒன்றை இரண்டாகப் பகுத்து ஆய்தல் (சாதனைகள், குறைபாடுகள் என இரண்டாக) இவற்றை தமது செயல்பாடுகளில் பொருத்திப் பார்க்கத் தவறுதல்; தமது தளத்தில் என்ன வேலை உண்டோ அதை மட்டும் செய்வது; சாதனைகளை மட்டுமே முன்னிறுத்திப் பேசுவது, குறைபாடுகளையும் தவறுகளையும் கண்டுகொள்ளாமல் இருப்பது; முகஸ்துதியை விரும்புவது, விமர்சனங்களை வெறுப்பது; உயர், நடுத்தர கட்சி ஊழியர்களை அவர்களது மாகாணங்கள், நகரங்கள், ஊர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த துறைகளில் மட்டும் அல்லாது, பிற மாகாணங்கள், நகரங்கள், ஊர்கள், பிற துறைகளிலும் களப்பணி ஆற்றச் செய்து தமது அனுபவங்களை தமது பிரதேசம் மற்றும் துறைகளிலும் பொருத்திப் பார்த்து ஒப்பீடு செய்து தமது பணிகளை மேலும் கூர்மைப்படுத்துவது ஒரு சிறந்த அணுகுமுறை.
படிக்க : நூல் அறிமுகம் : ஒரு கம்யூனிஸ்ட் கிராமத்தின் கதை | பொதும்பு வீரணன்
ஆனால் இத்தகைய களப்பணிகளில் ஆர்வமின்றி இருப்பது; தமது மாவட்டத்தில், தனது துறையில் மட்டும் கவனம் செலுத்துவது, (குறுகிய பிரதேசமான) அங்கே தனது பணிகளைப் பற்றித் தானே பீற்றிக்கொண்டு அகங்காரம் கொள்வது, இதனால் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே சுற்றிவருவது, வெளியே இருக்கும் ஒரு மிகப்பரந்த உலகைப் பற்றிய பார்வையோ அறிவோ இன்றி இருப்பது; மத்தியக் குழுவால் ஆங்காங்கே அனுப்பப்படுகின்ற வெளிநாட்டு விருந்தினர்கள், நாட்டின் பிற பகுதிகளிலிருந்து வரும் விருந்தினர்களுக்கு, தத்தமது சாதனைகளைப் பற்றி மட்டுமே பெருமையாக எடுத்துக் கூறுவது, குறைகளை மறைப்பது, தமது பணிகளைப் பற்றியே கூட மேம்போக்காகப் பேசுவது, ஆர்வமின்றி இருப்பது.
இதுபோன்ற குறைபாடுகளை நமது தோழர்களிடம் பலமுறை சுட்டிக்காட்டி “திருந்துங்கள்” என்று வேண்டிக்கொண்டோம். ஒரு கம்யூனிஸ்டின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்? எந்த ஒரு விசயத்தையும் மார்க்சிய இயக்கவியல் பார்வையோடு அணுகவேண்டும். சாதனைகள் இருக்கும்போது குறைபாடுகளும் இருக்கும். உண்மை இருக்கும்போது உண்மைக்கு நேர்மாறான தவறுகளும் இருக்கும்.
எல்லா விசயங்களும் இயக்கங்களும் எப்போதும் இயங்கிக்கொண்டே வளர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. பொருளாதாரம், அரசியல், தத்துவம், கலாச்சாரம், ராணுவம், கட்சி எனவும் இன்னபிற அனைத்தும். இதுதான் ஒரு மார்க்சியவாதியின் பொதுவான அடிப்படை புத்தியாக இருக்க வேண்டும். ஆனால் நடைமுறை என்னவாக இருக்கின்றது? மத்தியிலும் கீழ்மட்டங்களிலும் இருக்கின்ற பல தோழர்களுக்கு இதுபோன்ற பார்வையும் இல்லை, தமது பணிகளில் இதுபோன்ற அணுகுமுறையும் இல்லை. அவர்கள் மனங்களில் மரத்துப்போன பழங்கோட்பாடு ஆழமாக வேர்விட்டுப் பதிந்துபோய் உள்ளது.
அவர்களால் அதைப் பிடுங்கி எறியமுடியாத அளவுக்கு அது பலமாக உள்ளது. மரத்துப்போன பழங்கோட்பாட்டு எதிர்மறைக் கூறுகளின் ஒருங்கிணைவை மறுக்கின்றது, எதிர்மறைக் கூறுகளின் நேரெதிர் குணாம்சங்களை மறுக்கின்றது (ஒன்றை இரண்டாகப் பிரித்துப் பார்ப்பது), ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் இரண்டு நேரெதிர் கூறுகள் தனது குணாம்சங்களை தலைகீழாக மாற்றிக்கொள்ளும் என்ற கோட்பாட்டை மறுக்கின்றது.
விளைவு என்ன? இந்த தோழர்களுக்கு சுயதிருப்தியும், அகங்காரமும் தலைக்கு ஏறுகின்றது; தமது சாதனைகளைப் பற்றி பெருமை பேசுவார்கள், பலவீனங்களையோ குறைகளையோ கண்டுகொள்ள மாட்டார்கள்; தமக்கு இதமானவற்றை மட்டுமே மற்றவர்கள் பேசினால் கேட்ப்பார்கள், விமர்சனம் இவர்களுக்கு வேப்பங்காய்; சுயவிமர்சனமோ சுத்தமாக இல்லை (இரண்டாக பிரித்துப் பிரித்துப் பார்ப்பது); மற்றவர்கள் விமர்சித்தால் பயப்படுவார்கள். ‘அகங்காரம் தன்னை அழிக்கும் பணிவு ஒருவனை மேம்படுத்தும்’ என்ற நமது பழமொழி இன்றும் பொருந்தும். பாட்டாளி வர்க்கப் பார்வையிலிருந்தும் சாமானியர்களின் பார்வையிலிருந்தும் இந்த பழமொழி எப்போதும் சரியாகவே இருக்கின்றது.
1) அகங்காரம் எல்லாச் சூழ்நிலைகளிலும் எல்லா வடிவங்களிலும் தலையெடுத்து வளர்கின்றது. பொதுவாக, வெற்றிபெற்றவர்களிடம் அகங்காரம் தலையெடுக்கிறது. ஏன்? மிக மோசமான ஒரு சூழலில்தான் ஒருவனுக்கு தனது குறைபாடுகள் என்ன என்பது தெளிவாகத் தெரிகின்றது, எனவே அவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பான். மிக இக்கட்டான சூழலில் அடக்கமும் எச்சரிக்கையும் மட்டுமே ஒருவனை காப்பாற்றும். ஆனால் வெற்றி பெற்ற ஒருவனைச் சுற்றி மக்கள் பணிவுடன் நிற்கின்றார்கள்; எதிரிகள்கூட புகழாரம் சூட்டக் கூடும். இவையாவும் வெற்றி பெற்றவன் தலையில் அகந்தையையும் அகங்காரத்தையும் திணித்துவிடுகின்றன. “இனி எனது ராஜ்யத்தில் எல்லாம் சுகமே” என்று அவன் கனவுகளைத் தொடங்குவான். வெற்றி நமது பக்கம் இருக்கும்போது அகங்காரம் என்னும் வைரஸ் நம்மை மிக எளிதாகத் தொற்றித் தாக்கிவிடும் என்பதை நமது கட்சி நன்றாகவே உணர்ந்துள்ளது.
2) அகங்காரமும் தன்முனைவும் வெற்றிபெற்றவனைத் தழுவும்போது தற்பெருமை தானாகவே தலைதூக்கி ஆடும். இது ஒருவகை அகங்காரம். மற்றொருவகை தற்பெருமை உண்டு. அது சாதாரண சூழலில் தலைதூக்குவது. ஆரவாரமான வெற்றியுமல்ல, மோசமான தோல்வியுமல்ல என்ற சூழலில் “மிக நன்று என்று சொல்லமுடியாது; ஆனால் மிக மோசம் என்பதையும் விட பரவாயில்லை”, “இருபத்து நான்கு வருசம் மருமகளாக இருந்தால், ஒருத்தி தானாகவே மாமியார் ஆகிவிடுவாள்தானே” – இதுபோன்ற பிற்போக்குத்தனமான நொண்டிச் சமாதானங்களை நியாயப்படுத்தும் போது தற்பெருமை தலைதூக்குகின்றது.
மூன்றாவது வகை தற்பெருமை உண்டு. அது பின்தங்கியிருக்கின்ற சூழலில் தலைதூக்கும். தாங்கள் பின்தங்கியிருப்பதைக் கூட சிலர் பெருமையாகக் கருதுகின்றார்கள். “எங்களது பணிகள் அவ்வளவு சிறப்பாக இல்லை என்பது உண்மைதான்; ஆனால் கடந்தகாலத்தை விட எவ்வளவோ மேல்”, “அவர்களைப் பாருங்கள்! எங்களை விடவும் படு மோசம்!” என்று நினைத்துவிட்டால் தாங்கள் பின்தங்கியிருந்தாலும் அவர்களுக்கு தற்பெருமை தலைதூக்கிவிடுகின்றது. இவர்களிடம் பேசிப்பாருங்கள், அவர்களது செயல்பாடுகளைப் பற்றிப் பேச ஏதாவது ஒரு சந்து கிடைத்தால் போதும், “முன்னொரு காலத்தில்…..” என்று மிகப் பிரகாசமான முகத்தோடு தமது வரலாற்றைக் கதைக்கத் தொடங்கி விடுவார்கள்.
3) மக்கள் சக்தியை எப்போது குறைத்து மதிப்பிடத் தொடங்குகிறோமோ அப்போதே தற்பெருமை தலைதூக்கத் தொடங்கிவிட்டது. எதார்த்தத்தை உணராதபோதும் தமது பணிகளை அளவுக்கு அதிகமாக ஊதிப் பெரிதாகக் காட்டிப் பெருமை கொள்ளும் போதும் தற்பெருமை தலைதூக்கும்.
4) தற்பெருமை, தற்பற்றுப் (தன்நலம்) பார்வையிலிருந்து பிறக்கிறது; தற்பெருமை தற்பற்றுப் பார்வையை வளர்க்கின்றது. அது தற்பற்று சார்ந்தது.
5) வர்க்கப் பார்வையுடன் ஆய்வோமானால், தற்பெருமை அடிப்படையில் சுரண்டல் வர்க்கக் கோட்பாட்டிலிருந்து பிறப்பதாகும்; இரண்டாவதாக சிறு உற்பத்தியாளர்கள் கோட்பாட்டிலிருந்து பிறக்கின்றது.
6) தொழிலாளி என்ற நிலையில் பார்த்தால், சிறு உற்பத்தியாளர்கள் பல சிறப்பான குணங்களைக் கொண்டவர்கள்தான். அவர்கள் கடும் உழைப்பாளிகள், சிக்கனமானவர்கள், எதார்த்தவாதிகள், எச்சரிக்கை உணர்வுடன் கூடிய எதையும் எதிர்நோக்கி சமாளிக்கும் திறன் கொண்டவர்கள். ஆனால், சிறு உடமையாளர்கள் என்ற நிலையில் அவர்கள் தற்பற்றாளர்கள் (தன்நலக்காரர்கள்) என்பதும் உண்மையே. முக்கியமாக, இவர்களது பணிக் கலாச்சாரம் மற்றும் பண்டையகால உற்பத்திமுறைகளின் காரணமாக இவர்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதால், குறுகிய மனப்பான்மையும் உலக ஞானமும் இல்லாத தற்பற்றாளர்களாக இருக்கின்றார்கள். ஒன்றுபட்டு நிற்பதன் மகத்தான பொருளை உணராதவர்களாகவே இருக்கின்றார்கள். இதனால் அவர்கள் தன்னலம் பற்றிய சிந்தனையில் திளைத்தவர்களாகவே இருக்கின்றார்கள். சிறுசிறு சாதனைகளில் கூட இவர்கள் திருப்தி அடைந்து விடுகின்றார்கள். “ஆஹா, இதுவல்லவோ சாதனை”, “மிக நன்று என்று சொல்ல முடியாது; ஆனால் மிக மோசம் என்பதை விடவும் பரவாயில்லை” என்று தற்பெருமையில் மூழ்கி விடுகின்றார்கள்.
7) தற்பெருமை என்பது, முதலாளி வர்க்க, கருத்தியல்வாதக் பார்வையிலிருந்து பிறக்கிறது. (அதாவது முதலாளி வர்க்க கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்திலிருந்து பிறக்கிறது). தற்பெருமை ஒருவரை மிகமிக மோசமான மனிதராக்கிவிடும். எதார்த்தத்துடன் மோதவேண்டிய சூழலுக்கு ஒருவரைத் தள்ளிவிடும். சமூகம் வளர்ந்துகொண்டே செல்லும், நிலைத்து நிற்பதில்லை என்பதுதான் எதார்த்தம். ஆனால் அத்தகைய எதார்த்தத்துடன் ஒருவர் மோதுகின்றார் என்றால் அவர் இயற்கை விதியை மீறுகின்றார் என்றே பொருள்; விளைவு என்ன? அவர் தோல்வியையே சந்திப்பார். பொருள்முதல்வாதி வரலாற்றை எப்படிப் பார்க்கின்றான்? சமூக வளர்ச்சி வரலாறு என்பது யாரோ ஒருசில பெரிய மனிதர்களின் வளர்ச்சியைக் குறிப்பதல்ல; உழைப்பாளிகள் திரளின் வளர்ச்சிதான் சமூக வளர்ச்சி என்பதன் உண்மையான பொருள். அகங்காரம் தலைக்கேறிவிட்டால் “நான் யார் தெரியுமா”, “என்னால்தான் எல்லாமும்” என்ற போக்குகள் தானாகவே தலைதூக்கும். மக்கள் திரளின் மகத்தான சக்தியை துச்சமாக மதிப்பிடுவார்கள்.
8) எனவேதான், தற்பெருமை, தற்புகழ்ச்சி – இவை மார்க்சிய – லெனினியத்துக்கு எதிரானவை; நமது கட்சியின் இயக்கவியல் பொருள்முதல்வாத – வரலாற்றியல் பொருள்முதல்வாதப் பார்வைக்கு எதிரானவை என்று சொல்கிறேன்…………… தொடரும்.
படிக்க : வீரவணக்கம், அஞ்சலி செலுத்துவது தொடர்பாக பாட்டாளி வர்க்கக் கட்சியின் அணுகுமுறை பற்றிய சில குறிப்புகள்
குறிப்பு:- குட்டிமுதலாளித்துவ வர்க்கங்களிலிருந்துதான் அறிவுஜீவிகள் உருவாகிறார்கள். இத்தகைய அறிவுஜீவிகள்தான் புரட்சிகர கம்யூனிச அமைப்புகளுக்கு தலைமைதாங்குகிறார்கள். இவர்கள்தான் மார்க்சிய லெனினிய சித்தாந்தங்களை உள்வாங்குகிறார்கள். அதன் அடிப்படையில் சமூக அரசியல் பொருளாதாரத்தை வரலாற்றுரீதியாக ஆய்வுசெய்து சமூகத்தை மாற்றுவதற்கான கருத்துக்களை உருவாக்கி முன்வைக்கிறார்கள். அதன் அடிப்படையில்தான் சமூகத்தை மாற்றுவதற்கான அமைப்புகள் உருவாக்கப்பட்டு மக்கள் திரட்டப்பட்டு மக்கள்திரளினால் போராட்டங்கள் நடத்தப்பட்டு சமூகங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பது வரலாறு. சமூக மாற்றத்திற்கான வரலாற்றில் குட்டிமுதலாளித்துவ வர்க்கங்களிலிருந்து வரும் அறிவு ஜீவிகளின் பங்கு இத்தகையதாகும்.
இத்தகைய அறிவுஜீவிகளால் தலைமைதாங்கி வழிநடத்தப்பட்ட சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியானது புரட்சி நடத்தி சாதனைபுரிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு கட்சிக்குள் சில அறிவுஜீவிகள் அகம்பாவம் பிடித்து தற்புகழ்ச்சிக்கு ஆளாகினார்கள். அத்தகைய தோழர்களால் கட்சிக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்தே சீனக் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக்குழு இதுபோன்ற குட்டிமுதலாளித்துவ பண்புகளை கைவிடவேண்டும் என்று கூறியது.
ஆனால் சீனாவைப் போல் இங்கு புரட்சி எதுவும் நடத்தப்படாத சூழலிலும், ஒரு பலம் வாய்ந்த கட்சி இல்லாமலும் குழுக்களாகவே நீடித்துக்கொண்டுள்ள சூழலில் இந்த குழுக்களிலும் கட்சிக்குள்ளும் செயல்படும் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மத்தியில் இந்த குட்டிமுதலாளித்துவ நோயான தற்பெருமை, அகம்பாவம், பிறரை மதிக்காமல் உதாசீனப்படுத்தும் தன்மைகள் நீடிப்பது எவ்வளவு பெரிய அபாயம் என்பதை உணர்த்தி இத்தைய குட்டிமுதலாளித்துவ பண்புகளான அகம்பாவத்தை கைவிட்டு பாட்டாளிவர்க்க பண்பை உயர்த்திப் பிடித்து செயல்பட வேண்டும்.
நன்றி : இலக்கு இணைய இதழ்